தலையங்கம்

சாதனைகள்தான் வேண்டும்!

தமிழக முதல்வர் கருணாநிதி வாதப் பிரதிவாதங்களுக்குச் சளைக்காதவர்! அதில் அவருக்கு ஒரு ரசிப்பேகூட உண்டு! ஆனால், இப்போதெல்லாம் அவருக்குக் கூடவே 'பொசுக்’கென்று கோபமும் கொஞ்சம் அதிகமாகவே பொத்துக்கொண்டு வருகிறது. இது சற்று ஆச்சரியமான விஷயம்!
ஆட்சியில் உள்ள குற்றம் குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டும்போதெல்லாம் இந்தக் கோபம் வெளிப்படுகிறது. முதலில் பத்திரிகைகள்; இப்போது, தேர்தலில் தோளோடு தோள் நின்று போட்டியிட்ட தோழமைக் கட்சி த.மா.கா.! தி.மு.க. ஆட்சியை அக்கட்சி ஏதேனும் விமரிசனம் செய்தால், உடனே சீறுகிறார் முதல்வர்.
பத்திரிகைகள், எதிர்க்கட்சி இரண்டுமே ஜனநாயகத்தைத் தாங்கும் முக்கியத் தூண்கள். தயவுதாட்சண்யமின்றிக் குறைகளைச் சுட்டிக்காட்டுவது என்பது ஜனநாயகத் தில், பத்திரிகைகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் இட்டிருக்கும் கட்டளையாகும்! ஆட்சியைப் பற்றிக் கேள்விகளையோ, சந்தேகங்களையோ முன்வைத்தால் பொறுமை யுடன் விளக்கங்கள் தருவதே முறையானது. உடனே உள்நோக்கம் ஏன் கற்பிக்க வேண்டும்?
சொல்லப்போனால், 'உறவுக்குக் கைகொடுப்போம்; ஆனால், குற்றம் குறைகளுக்கு ஜால்ரா தட்டமாட்டோம்’ என்று த.மா.கா. முடிவு செய்திருப்பதை மக்கள் வரவேற்கவே செய்கின்றனர்.
ஆம்! ஆளுங்கட்சியிடம் மக்கள் எதிர்பார்ப்பது நிறைய சாதனைகளைத்தான்! 'பதிலடி’களை அல்ல!