
வலைதளம் உருவாக்கி இருக்கும் கட்டற்ற சுதந்திரம் உண்மையிலேயே ஓர் அற்புதம். பல பேருக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளிகளை வெளியே கொண்டுவந்திருக்கிறது இந்தச் சுதந்திரம்.
வரவர புரட்சிக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. 'வெரைட்டி ரைஸ்’ மாதிரி இதிலும் பல வகைகள் உண்டு.
டாஸ்மாக் புரட்சிக்காரர்கள், ஆன்லைன் புரட் சிக்காரர்கள், ஆன் தி வே புரட்சிக்காரர்கள், அகஸ்மாத்து புரட்சிக்காரர்கள், புதிய புரட்சிக்காரர்கள், பழைய புரட்சிக்காரர்கள், ஏ ஒன், ஏ டூ, ஏ த்ரீ!
இதில் 'டாஸ்மாக்’ புரட்சிக்காரர்கள் தீவிரவாதிகள். ஆயுதப் போராட்டமோ, அஹிம்சை நீரோட்டமோ, அதன் எக்ஸ்ட்ரீமுக்குப் போய்... விடிவதற்குள் புரட்சியை வென்றெடுக்கத் துடிக்கும் தீவிரவாதிகள். இவர்களிடம் இருக்கிற அணு ஆயுதம்... செல்போன்! அந்தி சாயும்போதே போன் பண்ணி, ''டெசோ... என்னடா டெசோ... கோபாலபுரத்துல குண்டு வைப்போம் வழ்ழியா... வழ்ழியா...'' என வம்படிப்பார்கள்.
''ஈழம்கிற வார்த்தைக்குத் தட போட்டா... ழும்மா வுட்ருவமா... நாளைக்கு டெல்லி போற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல ஆயிரம் பேழு கெழம்புழம்டா... லீவு போடு... லீவு போடு...'' எனப் பம்ப்படிப்பார்கள். ''பில்லா ட்டூ பார்த்தல்ல... எவ்வளவு செலவு..? கோட்டுக்கு ஆவுற செலவ மட்டும் குடு... நாப்பது லச்சம்... மெக்பல்பஃப்... டேய் எக் பஃப் இல்லடா... மெக்பல்பஃப்... ஒரு வேனும் டிஜிட்டல் கேமராவும் குடு... உலக சினிமா கொண்டாந்து ஓம் மூஞ்சில வீசுழேன்...'' எனச் சொம்படிப்பார்கள். இவர்களோடு பார்களுக்குப் போய்விட்டால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். வீச்சு பரோட்டா வோடு வந்து படுப்பதற்கும் ரத்த வீச்சத்தோடு வந்து படுப்பதற்கும் சம அளவு வாய்ப்புகள் உண்டு. குடும்பம் குட்டி, வேலை எனத் தொடங்குகிற பேச்சு மூன்றாவது ரவுண்டில் ''ஆண்ட்ரியா லிப் கிஸ் அடிச்சா என்ன தப்பு? ஒனக்கு ஏன் எரியுது?'' என ஆரம்பிக்கும்.
''அருந்ததி ராய் ஒரு போலிப் புரட்சிவாதி... அதப் புரிஞ்சுக்கோ...'' எனத் திகுதிகுக்கும். திடீரென வெறியேறி ஒருவர் கோக் பாட்டிலை எடுத்து சம்பந்தமே இல்லாமல் நாலாவது டேபிளுக்கு எறிய, அப்புறம் 'கலாசலா... கலசலா... கல்லாசா...’தான். மறுநாள் காலையில் பார்த்தால், இவர்கள் அவ்வளவு பேரும் புரட்சியின் சிறு சுவடும் இல்லாமல் தட்கல் டிக்கெட்டுக்கு நிற்கிற குடும்பஸ்தர்கள் மாதிரியே கடந்துபோவார்கள்.
போன ஆயுத பூஜை அன்றைக்கு இப்படிச் சில புரட்சிவாதிகள் ஒன்றுகூடி பாருக்குப் போனோம். அன்றைக்கு சீஃப் கெஸ்ட்டாக வந்திருந்தவர்கள் எந்நேரமும் அரசால் தேடப்படக்கூடியவர்களின் லிஸ்ட்டுக்கு போகக்கூடிய அதிபயங்கரவாதிகள். எப்படியும் கருத்துக் கலவரம் வெடிக்கும் என்பதை யூகித்து, அதைத் தடுக்கும் பொருட்டு நானும் இன்னொரு மிதவாத நண்பரும் பாதுகாப்பு நடவடிக்கை பிளான் பண்ணினோம். இரண்டாவது ரவுண்டில் நமீதாவைப் பற்றிப் பேச ஆரம்பித்து, தொடர்ந்து ஹீரோயின்களைப் பற்றியே பேசி அவர்களைத் திசை திருப்புவது என்பதே திட்டம். அதன்படியே இரண்டாவது ரவுண்டில் நமீதாவைப் பற்றி பேச ஆரம்பித்தால், அடுத்த நிமிஷமே ஒரு நண்பர், ''நமீதா... சிதைக்கப்பட்ட திராவிடக் கலாசாரத் தின் குறியீடு...'' எனக் கொளுத்திப் போட்டார்.
அப்புறம் அப்படியே எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் எனக் கொழுந்து விட்டெறிய... பீர் பாட்டில் உடைந்தது. ஒரு வழியாக அவர்களை அசமடக்கி வெளியே வந்தோம். நள்ளிரவு 12 மணி இருக்கும். ரோட்டுக் கடையில் தோசைகள் சொல்லிவிட்டு நின்றால், குரூப்பில் ஒரு நண்பரைக் காணவில்லை. எங்கே எனத் தேடினால், தெருமுக்கில் ஒரு கலவரத்துக்கான சத்தங்கள். ஓடிப் போய்ப் பார்த்தால் நாலைந்து பேர் நண்பரை ரவுண்டு கட்டி நின்றார்கள். பதறித் தடுத்து விசாரித்தால், அங்கே ஆட்டோ ஸ்டாண்டை ஒட்டி ஒரு பிள்ளையார் சிலை வைத்து, குட்டியாக ஒரு கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். தெருவை அடைத்துக் கோலம் இருந்தது. நண்பர் சாவகாசமாகப் போய் கோலத்தின் நடுவே நின்று உச்சா போக ட்ரை பண்ணியிருக்கிறார்.

கிட்டத்தட்ட மதக் கலவரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா. ஆட்டோக்காரர்கள் ஓடிவந்து ரவுண்டு கட்டிவிட்டார்கள். சமாதானப்படுத்தி ஒருவழியாக நண்பரை மீட்டோம். ''ஏய்யா அப்பிடிப் பண்ண?'' எனக் கேட்டதற்கு, நண்பர் தன் கண்ணாம் முழியை உருட்டி, ''இந்தச் சமூகத் துக்கு எதிரான என் பதிவுகள்ல இதுவும் ஒண்ணு...'' என்றார். தெறித்து ஓடிவந்தோம்.
ஆன்லைன் புரட்சிக்காரர்கள்தான் இப்போதைக்கு 'ரூட்டு தல!’ இன்றைய தேதிக்கு ஃபேஸ்புக்கில் ஐ.டி. வைத்திருப்பவர் ஆக்ட்டிவிஸ்ட், ஃபேக் ஐ.டி. வைத்திருப்பவர் டெரரிஸ்ட் என்பதுதான் ஸ்டேட்டஸ். டீ பிரேக்கில் 'பெரியார் தலித்தியத்துக்கு எதிரானவர்...’ என யாரோ ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிட்டுப் போய்விட, ஆபீஸ் அவர்ஸ் முடிகிற வரைக்கும் கமென்ட்டுகள் குவிகின்றன. ''செங்கொடிக்கு நினைவேந்தல்... வீர வணக்கம்... வீர வணக்கம்...'' என கீ-இன் பண்ணிவிட்டுப் பல பேர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்.
'அட்ட கத்தி’ விமர்சனத்தில் இருந்து மன்மோகன் சிங் வரை எல்லாவற்றையும் வறுத்தெடுக்கிறார்கள். 'புரட்சி... புரட்சி...’ எனக் கிளம்பி வருகிறவர்கள் வகை தொகை இல்லாமல் அத்தனை டவுசர்களையும் கிழிக்கிறார்கள். இன்றைக்கு 50 லைக்ஸ் வாங்கியே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, புரட்சி ஸ்டேட்டஸ்களை வீசுகிறார்கள். கெட்ட வார்த்தைகளால் சண்டையிடுகிறார்கள். வார்த்தைகளுக்கு நடுவே புகுந்து நுணுக்கமான அரசியலைக் கண்டுபிடித்து உலுக்கி எடுக்கிறார்கள். நைன் டு சிக்ஸ் அத்தனை பேருமே ருத்ரன் மாதிரி சைக்காலஜிஸ்ட்டாகவோ, சுப்ரமணிய சுவாமி மாதிரி ஜித்தர்களாகவோ, பவர் ஸ்டார் மாதிரி பப்ளிசிட்டி கோவிந்துகளாகவோ, ராம்ஜெத்மலானி மாதிரி கிரிமினல் லாயர்களாகவோ இருந்தால் என்னதான் செய்வது?
வலைதளம் உருவாக்கி இருக்கும் கட்டற்ற சுதந்திரம் உண்மையிலேயே ஓர் அற்புதம். பல பேருக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளிகளை வெளியே கொண்டுவந்திருக்கிறது இந்தச் சுதந்திரம்.
அதிகாரத்துக்குப் பயப்படாமல் தனது அடையாளத்தை மறைக்காமல் துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பதுதான் பலரது இருப்பை அர்த்தப்படுத்துகிறது. உலகத் தமிழர்களிடையே ஒரு விஷயத்தை முன்னெடுக்கவும் அன்பையும் நட்பையும் பகிரவும் இது ஆரோக்கியமான களம். ஆனால், இந்தக் கட்டற்ற சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஸ்டேட்டஸ் போடுவதே போதும் என்கிற இன்ஸ்டன்ட் புரட்சியாளர்களும் எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் யாரையும் எதையும் அசிங்கப்படுத்துவதும் எல்லை மீறிய வார்த்தைகளைப் போட்டுத்தாக்குவதும்... நல்ல விஷயம் இல்லையே நண்பர்களே!

தஞ்சாவூரில் மக்கள் கலை இலக்கியக் கழகத்து நண்பர்களோடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்து நண்பர்களோடும் அவர்களது பாடல்களோடும் எனக்கு நல்ல நட்பு உண்டு. கிராமம் கிராமமாகப் போய் பறையடித்தபடி அவர்கள் பாடுவதும் பேசுவதும் அவ்வளவு அதிர்வை உண்டாக்கும். 'போராட்டம் இல்லைஎன்றால் வாழ்க்கையா... இதை ஏற்காதவர் யாரும் மனிதரா...’ என்ற ஒரு பாடலில் வருகிற, 'தாய் மடியினில் சேய் அழுவது பாலருந்திட அல்லவா, மான் கொம்புகள் கூர்வாளென இருப்பதை நான் சொல்லவா...’ என்கிற வரிகள் இப்போதும் சிலிர்ப்பைத் தருகின்றன. ஒருமுறை இப்படிக் கலைக் குழுவினரோடு சேர்ந்து ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தபோதுதான் அரியலூரில் தாயன்பனைச் சந்தித்தேன்.
'தாயு’ என நண்பர்களால் அழைக்கப்படுபவர். அரியலூர் பக்கம். அவருக்கு இடது கால் பாதி கிடையாது. கட்டைக்கால் வைத்து விந்தி விந்திதான் நடப்பார். ''முப்பது வருஷத்துக்கு முன்னாடி... துப்பாக்கியால போலீஸ் சுட்டுப்புட்டான்... தப்பிச்சு ஓடினப்போ காலக் காட்டி மூணு குண்டவுட்டான்... ஆஸ்பத்திரில வெச்சு கால அறுத்த கையோட செறைக்குப் போயிட்டம்ல...'' எனச் சிரித்தபோதே அவரை எனக்குப் பிடித்துவிட்டது. அப்படியும் இப்படியுமாகத் தன் வாழ்வில் 15 வருடங்களைச் சிறையிலேயே கழித்தவர். ''17 வயசுல குண்டு தயாரிச்சேன்னு புடிச்சுட்டுப்போனதுதான் மொதல்ல... அப்புறம் ஏதேதோ கேஸுங்க... கல்யாணம்கூடப் பண்ணிக்கலை... ஜெயில்லயே போயிருச்சு பாதி வாழ்க்கை... எதையும் எதுத்துக் கேக்காம போராடாம நம்மளால இருக்க முடியாது... என்ன பண்றது..?
இதுவரைக்கும் நம்மள வெளிக்காட்டிக்கணும்னு நெனச்சதில்ல... அதுல நமக்கு விருப்பமும் இல்ல...'' என்றவர் தனது வீட்டுக்கு அழைத்துப்போனார். அது வீடு அல்ல... அறை. ஒரு சின்ன அறை முழுக்கப் புத்தகங்களைத் தவிர எதுவும் இல்லை. அவரது கிராமத்தில் மந்தையில் கச்சேரி நடந்தது. 'தேன் மணக்குது பால் மணக்குது குடம் குடமாய்ப் பேச்சிலே, ஊர் மனதினில் கூன் விழுந்திடும் காட்சியடா நாட்டிலே...’ எனப் பாடல் ஒலிக்க அதிர்ந்த பறைகளுக்கு தாயு தோழர் அந்தக் கட்டைக் காலோடு ஆவேசமாக ஆடியது இப்போ தும் நினைவில் இருக்கிறது. அன்றைக்கு இரவு சொன்னார், ''தோழர்... சே குவேராவும் பிரபாகரனும்தான் போராளிகளா..? நல்லதை நினைக்கிறது மட்டும் இல்லாம, அதைச் செஞ்சுகாட்றவன் எல்லாமே போராளிங்கதான். இங்க தாசில்தார் ஆபீஸ்ல எல்லார் பிரச்னைகளுக்காகவும் மனு எழுதித் தர்றான் பாரு, அவனும் போராளிதான்.
ஜி.ஹெச்ல புள்ள பொறக்குற வார்டக் கழுவிவுட்டுட்டுக் கெடக்கு பாரு ஒரு அம்மா... அதுவும் போராளிதான்... மனுஷன் பேண்ட்டு மனுஷனே அள்றான் பாரு... அந்த மனுஷனும் போராளிதான்... சாதி மறுப்புக் கல்யாணம் பண்றவனும், கட்டுசெட்டாப் பொம்பளைப் புள்ளைகளுக் குச் சொத்து பிரிச்சுத் தர்றவனும், பசின்னதும் சாப்பாடு போடுறவனும், எதிர்பார்ப்பு இல்லாம அள்ளி அணைச்சுக்குறவனும், எவன் மேலயும் அதிகாரம் செலுத்தாதவனும், மத்தவனுக்கும் சேர்த்து உழைக்கறவனும், எல்லாரும் போராளிங்கதான்... சொல்றது சரிதான?''
வெகு நாட்களுக்குப் பிறகு போனபோது பார்த்தால்... தாயு இல்லை. ''தோழர் இறந்துட் டார்ல... அது எட்டு மாசம் இருக்கும்...'' என்றார் கள் நண்பர்கள். ''உடம்புக்கு முடியல... ஆஸ்பத்திரி போனா கிட்னி ஃபெயிலியர்னுட்டாங்க...'' என்றார்கள்.

அவரது அறையை நண்பர்கள் பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். அவரது புத்தகங்களைப் புரட்டியபோது ஒரு டைரி இருந்தது. தாயுமானவன் எழுதிய டைரி. அதன் முதல் பக்கத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார், 'ஒவ்வொருவர் வாழ்க்கையும் அரசியல்தான்... நாம் ஒவ்வொருவரும்அரசியல் வாதிதான்... ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்... ஒவ்வொருவரும் போராளிதான்... போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையா... இதை அறியாதவர் யாரும் மனிதரா..?’
- இந்த வாசகங்களை என்னால் மறக்கவே முடியாது. இவை தாயு தோழரின் டைரியில் இருந்தவை என்கிற ஒரே காரணம்தான். உண்மைதானே... இரவு போகும்போது தெரு நாய்க்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிப் போகிறவன் எவ்வளவு அற்புதன்!
யாரோ காசில்லாத முகம் தெரியாதவருக்கும் சேர்த்து பஸ்ஸில் டிக்கெட் எடுக்கிறவர், யார் யாருக்கோவான கோபங்களைச் சுமந்துகொண்டு உச்சி வெயிலில் கோஷமிட்டுக்கொண்டு இருப்பவர், ஒரு கி.மீ. துரத்திப் போய், 'சைடு ஸ்டாண்டை எடுத்துவிடுங்க சார்’ எனச் சொல்லிவிட்டுப் போகிறவர், விபத்தில் கிடந்தவரைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு நள்ளிரவு வரை அலைந்து திரிகிறவர், ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதிக்கிறவர், தன் இடத்தில் பிறரை வைத்துப் பார்க்கிறவர்... அத்தனை பேருக்கும் ஆயிரமாயிரம் லைக்ஸ் பாஸ்!
-போட்டு வாங்குவோம்...