மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அலைகள் ஏன் ஓய்வதில்லை?

##~##
எல்.எஸ்.வாசன், சென்னை-31.

 கங்காரு இறைச்சியை ஆஸ்திரேலியர்கள் சாப்பிடுவார்களா?

ஆஹா! மனிதன் எதை விட்டுவைத்தான்? அங்கே 'கங்காரு வால் சூப்’ பிரபலம்.தொன்றுதொட்டு பழங்குடி மக்களும் கங் காருவைக் கொன்று, கொதிக்கும் கற்களால் மூடி, மட்டைகளால் சுருட்டி, மண்ணில் புதைத்து, மேலே நெருப்பு வளர்த்து தந் தூரி ஸ்டைலில் சமைத்துச் சாப்பிடுவார்கள். ஒரு எக்ஸ்ட்ரா தகவல் - பெண்கள் கங்காரு 'பை’யை (Pouch) அப்படியே கத்தரித்து எடுத்து, அதில் குழந்தையை உட்காரவைத்துத் தோளில் மாட்டிக்கொண்டு செல்வார்கள். இது ரெடிமேட் தூளி!

பொ.பொன் மணிகண்டன், பல்லடம்.

a, e, i, o, u ஆகிய அனைத்து vowels-ம் வரும் வார்த்தைகள் Education மற்றும் Evaluation.இதுபோன்று ஆங்கிலத்தில், சிறப்புத் தன்மைகள்கொண்ட வார்த்தைகள், வாக்கியங்கள் தொகுப்பாக எதுவும் புத்தகமாக வந்திருந்தால், அதன் பெயர் சொல்லுங்கள்?

நீங்கள் சொல்வது இரண்டு வார்த்தைகள்! ஐந்து vowels-ம் உள்ள (ஒரே) வார்த்தை களே உண்டு! abstemious, facetious என்று! (முதலாவதன் அர்த்தம் - மிகவும் எச்சரிக்கை யாக, குறைவாக உணவு - மது -கேளிக்கை களில் ஈடுபடுவது. இரண்டாவது, - ஜாலியாக, 'ஜோக்’கடித்துப் பேசுவது!) சரி, இந்த வாக்கியத்தின் தனித் தன்மை என்ன சொல்லுங்கள்? - The quick brown fox jumps over a lazy dog விடை: இந்த வாக்கி யத்தில் A to Z அத்தனை ஆங்கில எழுத்துக்களும் அடங்கி இருக்கின்றன! இப்படி எல்லா எழுத்துக்களும் வரும் வாக்கியத்துக்கு பான்க்ராம் (Pangram) என்று பெயர். இப்படிப்பட்ட விசித்திரமான விஷயங்கள்கொண்ட புத்தகங் கள் நிறைய உண்டு. ஆரம்பத்துக்கு Richard Le Derer எழுதிய Crazy English வாங்கிப்படியுங்கள்!

ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம்.

மலைப் பாம்பை புலி வேட்டையாடுமா சார்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

வேட்டையாடாது! ஆனால், எதேச்சையான மோதல்கள் நிகழலாம். பாம்பு நல்ல உணவு! சீனர்களே சாப்பிடுகிறார்கள், புலி சாப்பிடாதா? ஒரு வேளை மோதிக்கொண்டால், இரண்டில் கவனக் குறைவாக இருப்பது செத்துப்போகும்.எடுத்த எடுப் பில் மலைப் பாம்பின் தலைப் பகுதியை புலி கவ்விக் கடித்துப் போட்டால், புலி தப்பிக்கும். மலைப் பாம்பு, புலியை முதலில் சுற்றி வளைத்துக்கொண் டால், புலி அதோகதிதான். நெருக்க நெருக்க... புலியின் நுரையீரல் விரிய முடியாமல் மூச்சுத் திணறி... புலி காலி! இது எப்படியோ புலிக்கு (அல்லது சிறுத்தைக்கு)த் தெரிகிறது! 'அன கோண்டா’ போன்ற மலைப் பாம்பைப் பார்த்தவுடன், சிறுத்தை சற்று எகிறிப் பின்வாங்குவதை நான் 'நேஷனல் ஜியாகரஃபி’ சேனலில் பார்த்திருக்கிறேன்!

முத்துப்ரியன், கோயம்புத்தூர்-37.

எந்த ஒரு மனிதனாவது தன் வாழ்நாளில் sex வைத்துக்கொள்ளாமல் இருந்தது உண்டா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஏன்? நிறையப் பேர் இருக்கலாம்! ஆனால், கனவு மூலம்கூட ஒருவர் பரவச நிலையை அடைந்தது இல்லை என்றால்... எங்கோ, பிறப்பி லேயே பெரிய தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அர்த்தம்! மாபெரும் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் 85 வயது வரை வாழ்ந்தார். வாழ் நாளில் அவர் செக்ஸ் அனுபவித்தது இல்லை என்று தீர்மானமாகப் பல புத்தகங்கள் தெரிவிக் கின்றன! (டூய்லியர் என்கிற கணிதத்தில் தேர்ந்த ஒரு சுவிஸ் இளைஞரை மட்டும் நியூட் டன் உயிருக்கு உயிராகக் காதலித்ததாகக் கிசுகிசு உண்டு!) மற்றபடி, சிறுவர்களுக்குக் கதைகள் எழுதிய லூயி கரோல் (Lewis Carrol), இசை மேதை சோப்பின், முதலாம் எலிசபெத் மகாராணி, இலக்கிய மேதை ரஸ்கின் என்று செக்ஸ் அனுபவிக்காதவர்களின் பட்டியல் உண்டு. இந்தியாவில்... ஸாரி, தெரியாது!

பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

வாழ்வின் சுவை எது... சுவாரஸ்யம் எது?

வாழ்வதுதான் சுவை. அந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது சுவாரஸ்யம்!

விஸ்வநாதன் ரவிச்சந்திரன், ஆழ்வார்பேட்டை.

நடுக்கடலில் அலைகள் காணப்படுவது இல்லை. பின் அலைகள் எங்கிருந்து, எவ்வாறு உருவாகின்றன?

நியூட்டன் விதிதான்! Every action has a reaction. நிலம் தோன்ற, முதன்முறையாகக் கடல் அதோடு மோத, ஒரே ஒரு முதல் அலை உருவானது. அது பின்னோக்கிப் போனபோது, நீரோடு மோதி இரண்டாவது அலையை உருவாக்கியது. நிலம் இல்லாமல், குறிப்பாகக் கரை இல்லாமல் அலை இல்லை. அடுத்த பிரளயம் ஏற்பட்டு, அத்தனை நிலமும் கடலில் மூழ்கிய பிறகு அலைகளும் நின்றுவிடும்!

கே.முருகேஷ்குமார், கோயம்புத்தூர்.

ஒவ்வோர் ஆண்டும், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியை டி.வி-யில் பார்த்துஎன்னைப் போலவே நீங்களும் பரவசப்படுவது உண்டா?

பரவசப்பட்டது உண்டு! தூய்மையானதலைவர் களும், தியாகிகளும் பார்வையாளர்களாக உட்கார, அணிவகுப்பு நிகழ்வது பெருமிதமான விஷயம்தான். ஆனால், பல கொள்ளைக்காரர்களும், ஊழல்வாதிகளும், மோசடி உயர் அதிகாரிகளும், மக்கள் பணத்தைச் சுருட்டுபவர்களும், ஊழல் அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாதவர் களும் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு, சொகுசான இருக்கைகளில் வரிசையாக அமர்ந்திருக்க, உன்னதமான ராணுவ வீரர்கள் சல்யூட் அடித்தவாறு அவர்கள் முன்னே அணிவகுத்துச் செல்வதைப் பார்க்கும்போது... இப்போது எல்லாம் ரொம்பவே நெருடுகிறது!

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் என்பார்கள். அப்படிப் பார்த்தால், ஒரு சாமியாரைவைத்து எல்லா சாமியார்களையும் எடை போட முடியுமா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

சாமியார் - 'சாது’வாக இருப்பது வேறு, சாத மாக ஆக்கிவிட்டீர்களே?! நிச்சயமாக எல்லா சாமியார்களையும் அப்படி (சோறு மாதிரி) எடை போட முடியாதுதான்! ஒருவேளை, ஓர் 'ஆசிர மத்தை’ மட்டும் பானை என்று வைத்துக்கொள் வோம். அங்கே ஒரு தலைமைச் சாமியார்மோசம் என்றால், 'பானை சோறு’ முழுவதும் மோசமாக இருக்க வாய்ப்பு உண்டு!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

கடவுளுக்கு எல்லாமே தெரியும் என்றால், மனிதனை அவர் ஏன் தேடவிடுகிறார்?

தெரியலையே! கடவுள் ஒருவேளை நம்மைவைத்து 'வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டு இருக்கிறாரோ?!