
என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன. விதவிதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும் ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.
இன்னமும் பாஸ்போர்ட் எடுக்கவில்லை நான். சிறு வயதில், ஊருக்குள் வந்த கிளி ஜோசியக்காரனிடம் எங்கள் குடும்பமே சீட்டு எடுத்தது.
அப்போது எனக்கு வந்த சீட்டைக் காட்டி, 'தம்பி உலகம் சுற்றும் வாலிபன்... தம்பி உலகம் சுற்றும் வாலிபன்’ என நாலு தடவை சொன்னார் கிளி ஓனர். விவசாயம் பொய்த்ததால் ஊரில் பாதிக்கு மேல் இளைஞர்கள் சவுதி அரேபிய நாடுகளில்தான் வேலை பார்க்கிறார்கள். அதை வைத்து அம்மா, 'எந்த சேக்குக்குக் குடுத்துவெச்சுருக்கோ’ என்றது. உடனே ஜோசியக்காரன், 'சேக்கா? அதில்லையம்மா... தம்பி ஆல் ரவுண்ட் உலகம் சுற்றும் வாலிபன்’ என்றார் மறுபடி ராகம் போட்டு. ஆனால், நான் உலகம் சுற்றிப் பார்த்தது ஊர் பள்ளிக்கூடத்தில் பத்மநாபன் சார் டேபிளில் இருக்கும் நீல கலர் உலக உருண்டையில் தான். சார் வருகிற கேப்பில் அதை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு ஓடி வந்துவிடுவோம். மேலும், பூகோளத்திலும் நான் ரொம்ப வீக்காகவே இருந்தேன். பூகோளத்திலும் என்பதை அடிக்கோடிடுக.
ரொம்ப நாளைக்கு லண்டன் என்பது அமெரிக் காவின் தலைநகரம் என்றே நினைத்திருந்தேன். டெல்லி மெட்ராஸில் இருந்து 10 கிலோ மீட்டரில் இருக்கிறது, பம்பாய் என்பது சுவிட்சர்லாந்து மாதிரியான இடம் (முதன்முதலில் தாராவி போட்டோக்களைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்), நியூயார்க் என்பது தனி நாடு, ஆப்பிரிக்கா என்றாலே 'ஜும்மாரே ஜும்மாரே’ என மனிதர்களை பாயில் பண்ணிச் சாப்பிடும் காட்டுவாசிகள் இருக்கும் இடம் என்றெல்லாம்தான் நினைத்திருந்தேன். வரலாறு வாத்தியார் ரமணி சார்தான் முதன்முதலில் இந்த உலகத்தின் ஜன்னல்களைத் திறந்துவிட்டார்.
மிக எளிய வார்த்தைகளில் சடசடவெனத் திரைகளை விலக்கிக் காட்டியபடி போய்க்கொண்டே இருப் பார். ''வெள்ளைக்காரன் குசு போட்டா மட்டும் மணக்குமா? இருக்கறதுல அவந்தான் மோசமான பண்டி. பார்த்துக்க. குளிக்காமக் கொள்ளாம பப்பரக்கானு திரிவான். இங்க திரியறவன்லாம் அவனவன் ஊர்ல பால் போடுறவன், மசாஜ் பண்றவன், லோடு அடிக் கிறவன். நம்மளவிட கஞ்சப் பிசினாரிங்க. அஞ்சு ரூவா பேராது. அவங்களைப் போய் சினிமாக்காரன் மாரி 'ஆ’னு பாக்காத. நம்மளதான் இந்த உலகமே 'ஆ’னு பாக்கணும். தமிழனும் கிரேக்கனும்தான் 'ஆ’னு பாக்கற அளவுக்கு ஆதி மனுஷங்க... புரியுதா?'' என்பார். அப்படியும்கூட தஞ்சாவூர் பெரிய கோயிலில் தோளில் கேமராக்களோடு திரிந்து, சாந்த பிள்ளை கேட்டு சூப் கடையில் முட்டை போண்டா சாப்பிடும் வெள்ளைக்காரப் பெண்கள் அதிசயம்தான் எங்களுக்கு.
மூலங்குடி ஸ்கூலில் ஆறாவது படிக்கும்போது, தனி பஸ் பிடித்து தஞ்சாவூருக்கு வந்ததுதான் என் வாழ்க்கையில் நடந்த முதல் சுற்றுப்பயணம். அதற்காக வருட ஆரம்பத்தில் இருந்தே சிறுசேமிப்பில் காசு சேர்க்க வேண்டும். தினமும் நாலணா, அம்பது காசு எனப் போட்டு தபால் அட்டையில் 'டிக்’ வாங்க வேண்டும். பள்ளியின் பெயர் எழுதிய பேனர் கட்டிய பஸ்ஸில் அதிகாலையில் கிளம்பும்போதே மனசு பறக்கும். பெரிய கோயில், அரண்மனை, மணி மண்டபம் என க்யூ கட்டி போய்ப் பார்க்க வேண்டும். மதியம் சிவகங்கைப் பூங்காவில் உட்கார்ந்து வீட்டில் இருந்து கட்டிவந்த சாப்பாட்டைச் சாப்பிட்ட வாசத்தை மறக்க முடியுமா? அடுத்த வருஷம் தொடங்கும்போதே, ''இந்த வருஷம் டூர் மெட்ராஸுக்கு.

காசு அதிகமாவே ஆகும். ஒழுங்கா சேத்துவைங்க'' என்றார் ரோஸி சிஸ்டர். ஆளாளுக்குப் போட்டி போட்டுக் காசு சேர்த்தோம். எனில், மெட்ராஸைப் பார்க்க அவ்வளவு பேருக்கும் ஆசை. காரணம், சினிமா. ''எல்லாப் படத்துலயும் காட்றாங்களே மாப்ள... சிஸ்டர்ட்ட சொல்லி எப்பிடியாவது ரஜினியைப் பாத்துட்டு வந்துரணும்றா!'' என்றான் விட்டல். ''அப்ப கமலும் சிலுக்கும்! அவங்களையும் பாத்துட்டுதான் வரணும்!'' என்றான் சந்திரமோகன். ''டேய்... எங்க மெட்ராஸ் மாமா சொல்லிருக்கு. எல்லாரும் ஏவி.எம். ஸ்டுடியோலதான் தங்கிருப்பாங்களாம். போனா, மொத்தமா பாத்துரலாம்!'' என்றது தாஸ்.
டூர் பஸ் சென்னைக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்துக்குஎல்லாம் மோகன் சொன்னான், ''மாப்ள, என்னா இது ஊரு? நம்ம கும்மோணம் மாரிதான் இருக்குது. பஸ்ஸெல்லாம் பாரு அழுக்குப் புடிச்சவனுங்க. அடுத்த வருஷம் சிங்கப்பூர் போணும் மாப்ள!'' எல்லோரையும் கொண்டுபோய் பிர்லா கோளரங்கத்தில் உட்கார வைத்தார்கள். சட்டென்று ஃபுல் ஏ.சி-யில் அப்படி ஓர் உலகத்துக்குள் போனதில் அத்தனை பேரும் பரவசமானோம். மகாபலிபுரம் போய்விட்டு சாயங்காலமாக அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதி பார்க்க மெரினா பீச் வந்தோம். கடல் பார்த்த பரவசத்தில் நானும் விட்டலும் பெப்பேவெனத் திரிந்து திரும்பினால்... கூட வந்தவர்கள், பஸ் எதையும் காணோம். ஒருபக்கம் அவர்கள் எங்களைத் தேடி திரிந்திருக்கிறார்கள்.
ரெண்டு மணி நேரமாக 'ஸ்லம்டாக் மில்லியனர்’ பசங்க மாதிரி பீச்சிலேயே திரிந்தோம். ''எங்கம்மா வந்தோடனே இட்லிக்குப் போட்றேன்னுச்சு... அய்யய்யா!'' என விட்டல் அழ ஆரம்பித்துவிட்டான். காந்தி சிலைக்குக் கீழே டயர்டாகி உட்கார்ந்தபோது, ''சிஸ்டர் இங்க இருக்காங்க'' என ஜமீல் ஓடிவந்தான். பின்னாலேயே ஒரு கான்ஸ்டபிளோடு ஆவேசமாக வந்த ஹெச்.எம்., சிஸ்டர், அங்கேயே வைத்து ரெண்டு பேரையும் வெளுத்து எடுத்தார்கள். உலக அடி. கண்ணீரும் கம்பலையுமாகப் பஸ் ஏறி ஊர் மீண்டோம். எல்லாப் பள்ளிச் சுற்றுலாக்களிலும் ஒரு பையன் காணாமல் போய்த் திரும்புவது, ஒரே கேமராவின் வெவ்வேறு புகைப்படங்களைப் போல் நடந்துகொண்டே இருக்கிறது.
இன்னொரு டூருக்கு மைசூர் போயிருந்தோம். 'ஒரு மணி நேரம் டைம். எதாவது வாங்கறதுன்னா வாங்கிக்கங்க!’ வண்டி மலை மேல் ஓர் இடத்தில் நின்றுவிட்டது. ஒரு கடையில் ஒரு குட்டிப் பெண் மட்டும் உட்கார்ந்திருந்தாள். அது இனிஷியல்கள் பொறித்த சங்குகளும் மரப் பலகைகளும் விற்கிற கடை. எல்லோரும் சாப்பிடவும் மலை பார்க்கவும் போய்விட்டார்கள். நான் அந்தக் கடையிலேயே உட்கார்ந்துவிட்டேன். அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே ஏதோ ரொம்ப நாட்களாகப் பார்த்து வந்தவள்போலத் தோன்றியது. மஞ்சக்குடியில் ஓர் அக்ரஹார வீட்டில் பார்த்த முகமாகவோ, கூத்தாநல்லூரில் பள்ளிவாசல் தெரு வீடொன்றின் கொல்லையில் கண்ட முகமாகவோ, ஒரத்தநாடு ஓட்டு வீடொன்றில் அப்பாவின் சட்டையைப் போட்டுக்கொண்டு வந்து நின்ற ஒருத்தியைப் போலவோ தோன்றியது. அவள் ''உன் பேரென்ன..?'' என்றாள். சொன்னதும் ''எம் பேரு மல்லிகா'' என்றாள். அது என் அம்மாவின் பெயர். அங்கேயே தங்கிவிடலாமா எனத் தோன்றியது. அவளுடன் அந்த மலைக் கடையிலேயே இருந்து இப்படிச் சங்குகள் விற்றுக்கொண்டே வாழ்ந்துவிடலாம் எனத் தோன்றியது. கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
மறுநாள் ஊருக்கு வரும்போது அந்த வழியாக வந்தோம். அங்கே வண்டி நின்றது. மறுபடி அவளைப் பார்த்தேன். ''என்ன வேணும்?'' என்றாள். நான் 'எம்’ என்ற மரத் துண்டை எடுத்துக்கொண்டேன். அக்கணம் அவள் பூத்த குறுநகை இருக்கிறதே... அப்படியே இருக்கிறது. வாழ்வின் காலத்துளிகளில் அது மிகச் சொற்ப துளிதான். ஆனால், இந்த நொடி வரை அந்தப் பெண்ணின் முகம் அழியாமல் கொள்ளாமல் அப்படியே இருக்கிறது. ரமணர் ஆஸ்ரமத்தில் கண்டெடுத்த ஒரு மயில் பீலியைப் போல!

இதுதான் பயணங்களின் பேரற்புதம். மறுபடி கண்டடைய முடியாத மனிதர்கள், முகங்கள், சொற்கள், நினைவுகள், காட்சிகள்! நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் மீள் உருவாக்கம் செய்பவை பயணங்கள்தான். பயணங்களில் யாரோ நீட்டுகிற ஒரு வாட்டர் பாட்டில், புளியோதரைப் பொட்டலம், பாதி சிகரெட், ஒரு புன்னகை, விசாரிப்பு, சினேகம், காதல்... எல்லாவற்றுக்குமே ஒரு காவியத்தன்மை வந்துவிடுகிறது. ''தலவலியா சார்... நமக்கும் பனிக் காத்து ஒவ்வாது பாருங்க. இந்தாங்க ஜண்டுபாம். கல்கத்தால மிர்தாஸ் ஸ்ட்ரீட்ல ஒரு தமிழ் ஆள் கடை நடத்துறான். தேவக்கோட்ட ஆளுதான். முன்னாடி ஒரு ஃபேன்ஸி கடையைத் தாண்டும்போதே வாசம் கண்டுக்கும்.
மூணு மாசம்னா அங்கயே சாப்பிட்டுக்கங்க'' என யாரோ ஒரு மனிதர் அதுவரை தெரியாத யாரிடமோ பேசிக்கொண்டே வரும்போது அந்த ரயில் ஏதோ உறவினர் வீடு மாதிரி ஆகிவிடுகிறது. ''என்.சி.சி. ட்ரிப்புக்காக இந்தியா முழுக்க ஒரு டிரெயின்ல போனோம். கோரக்பூர்ல கிலோ மீட்டர் கணக்கா நீளுது ரயில்வே பிளாட்ஃபார்ம். இந்தியாவிலேயே நீளமான பிளாட்ஃபார்ம். இந்தக் கடைசில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் பேசிட்டே நடந்தோம். அந்த பெங்களூரு பொண்ண மறக்கவே முடியாது. கரெக்ட்டா தாஜ்மகால்ல வெச்சு ஃபுல்லா இளையராஜா பாட்டா பாடினேன். துள்ளி எழுந்தது பாட்டு!'' - 20 வருடங்களுக்குப் பிறகும் அதே பரவசத்தோடு, அபூர்வத்தோடு ஒரு பயணத்தை விவரிக்கிறார் நண்பர். ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலுக்கவே அலுக்காத வார்த்தைகள் பயணங்கள்பற்றியதாகவே இருக்கின்றன.
என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடன்தான் கழிந்திருக்கின்றன. விதவிதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும் ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.
கவலைகளையும் எதிர் காலம்குறித்த பதற்றங்களையும் கடக்க முடியாத பிரிவு களையும் துடைத்து வீசிவிட ஒரே ஒரு புதிய நிலப் பரப்பின் காட்சியால் முடிந்துவிடுகிறது. மூணாறு மலையில் போய் பஸ் திரும்புகிற நொடியில் ஒரு பெரிய அன்னாசித் தோட்டமும் நடுவில் நிற்கிற ஒற்றை மனுஷியும் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பிவிடுகிறார்கள்.
தடதடத்துப் போகும் பெரும் தேயிலைக்காடு, திருச்சியைத் தொடும்போது வரும் ரசாயனத் தொழிற்சாலையின் துர்நாற்றம், வேலூர் மண்ணுக்குள் நுழையும்போது அடிக்கும் தோல் பதனிடும் நாற்றம், நீடாமங்கலத்தைத் தாண்டியதும் ஒரு பாழ் மண்டபச் சுவரில் கடக்கும் 'கோல்டு ஸ்பாட்’ விளம்பரம், கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி, பாளையங்கோட்டையை கடக்கும்போதெல்லாம் பாதி உதிர்ந்த பைபிள் வாசகங்களோடு கடக்கும் மேரி மாதா, கோயம்புத்தூர் எல்லை வந்ததுமே பஜாஜ் எம்80-யில் பஞ்சு மூட்டை கட்டிக்கொண்டு கடக்கிற ஒருவர், ராத்திரி எப்போது கடக்கும்போதும் இட்லிப் பானை மூடியைத் தூக்கிக்கொண்டு ஒரு ஆத்தா பேசிக்கொண்டிருக்கிற மதுரை டவுன்ஹால் ரோடு, அதிகாலையில் 'சரவணப் பொய்கையில்’ பாடல் ஒலிக்கும் மினி பஸ்ஸில் பச்சைப் பசேலெனக் கறிவேப்பிலை வாசம் தூக்க வாழை இலைக்கட்டுகளுக்கு நடுவே உட்கார்ந்துஇருக்கும் நாஞ்சிக்கோட்டை ரோடு, 'சூடா சமோசே... சூடா சமோசே’ என ஒருவர் ராகம் போட ஒவ்வொரு முறை மின்சார ரயிலில் கடக்கும்போதும் புதிதாக வரும் செங்கல்பட்டு ஏரி, மூட்டைப் பூச்சிகள் மண்டிய மரப்படுக்கையும் காரை உதிர்ந்த சுவர்களும் 'ஆந்திரா மால் சார்... நருவுசு சார்... போலீஸ் பிராப்ளம்லாம் இல்ல. வேணுமா..?’ என்கிற சித்தூர் லாட்ஜ், கொல்லை முற்றத்தில் குளமும் பேரழகு இருளில் பொசுக்கென்று விளக்கெரியும் கோயில் கொண்ட திருச்சூர் என வெயிலும் மழையும் ஒளியும் இருளும் ஒவ்வொரு பயணத்துக்கும் புதிது புதிதாக இருக்கின்றன!
மும்பை தாராவியில் பார்த்த அரியலூர்க்காரர் செல்வத்தை அப்புறம் பார்க்கவே இல்லை. தாராவியில் வீடியோ கிளப் நடத்துகிறார். வீடியோ கிளப் என்றால், தமிழ்ப் படங்களும் செக்ஸ் படங்களும் ஓட்ட ஓர் இடம். ஒரு படத்துக்கு ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா என டிக்கெட். இந்தியாவில் அவர் வேலை பார்க்காத நகரமே இல்லை. அப்படி இடம்பெயர்ந்து போய்க்கொண்டே இருப்பதுதான் செல்வத்தின் வாழ்க்கையே. ''எட்டு வயசுல வீட்டை விட்டு ஓடி வந்தேன். ஊட்டில ஒரு ஆப்பிள் லாரில ஏறி வந்துட்டேன். டெல்லில கம்பளி வித்ததுதான் மொதல் வேலை. கோவால பிம்ப் வேல வரைக்கும் பார்த்துருக்கேன்'' என அவர் சொன்னது அத்தனையும் இதுவரை எடுக்கப்படாத சினிமா. செல்வம் எனக்குப் பரிசாகக் கொடுத்த ஒரு வங்க மொழி கிராமபோன் ரெகார்டை இப்போதும் வைத்திருக்கிறேன். ஒரு நள்ளிரவுப் பயணத்தில் பெங்களூரைத் தாண்டி பஸ்ஸை மறித்த போலீஸ், நாலு சீட் தள்ளி ஒருவரை நக்சலைட் என அடித்து இழுத்துப்போனது.
இன்னொரு பயணத்தில் பக்கத்து சீட் இளைஞனை ஒருவர் நோண்டியதில் மாறி மாறி அவரை அறைந்து இருட்டில் இறக்கிவிட்டார்கள். திருவண்ணாமலை போகும்போது செஞ்சியில் வைத்து ஒரு பெண்மணி மயங்கி விழ... மொத்த பஸ்ஸும் ஆஸ்பத்திரிக்குப் போனது. ஈரோடு பக்கம் அப்போது தான் அடிபட்டுக்கிடந்த ஒரு அரைபாடி வேனில் ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த இரண்டு பேரை அள்ளிக்கொண்டு ஓடியது ஒரு பயணம். குடித்துவிட்டு ஏறிய ஒரு கும்பல் வழிநெடுக பழைய பி.பி. ஸ்ரீனிவாஸ் ஹிட்டாகப் பாடிக்கொண்டு வந்தது ஒரு தடத்தில். ஒரு கணவனும் மனைவியும் திடீரெனப் பெருஞ்சண்டை போட்டுக்கொண்டு பஸ்ஸை நிறுத்தி அவள் மட்டும் இறங்கிப்போனாள் ஒருமுறை.
அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் அட்ரஸ் வாங்கி, அதன் பிறகு ரொம்ப நாளைக்கு அவளோடு கிட்டத்தட்டக் குடும்பமே நடத்தினான் ஒரு நண்பன். எல்லாப் பயணங்களிலும் யாரோ ஒருவர் வீட்டைவிட்டு ஓடி வருகிறார். யாரோ ஒருவருக்குக் காதல் பூக்கிறது. யாரோ ஒருவருக்கு மரணம் நிகழ்கிறது. யாரோ ஒருவன் கலைஞனாகிறான். யாரோ ஒருவன் குற்றவாளியாகிறான். யாரோ ஒருவன் திருந்துகிறான். யாரோ ஒருவன் தன்னையே கண்டுபிடித்துக்கொள்கிறான் வெகுநாட்களுக்குப் பிறகு!
நான் இதுவரை இரண்டு முறைதான் விமானத்தில் போயிருக்கிறேன். இரண்டுமே ஓசி ட்ரிப்புகள்தான். ஒரு முறை விகடனுக்காக ஹைதராபாத்துக்கு. இன்னொரு முறை கதை சொல்வதற்காக நண்பருடன் மும்பைக்கு. ஏறி உட்கார்ந்து ஃப்ளைட் கிளம்பும் நொடியில் மனதில் வருகிற எண்ணம், 'இந்த ஃப்ளைட் கவுந்துருமோ?’ என்கிற திகில்தான். மேகக் கூட்டங்களுக்கு நடுவில் மிதக்கும்போது, 'நம்ம ஊரு எங்கடா இருக்கு?’ என்று எட்டிப் பார்க்கச் சொல்லும். நண்பர்கள் பலர் நம்மைப் பார்த்ததும் கேட்பது, ''உன் படத்துல ஃபாரின்ல சாங் இருக்கா? ரெண்டு ட்ரீம் சாங் வையி... போயிட்டு ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்ல.'' ''இல்லைங்க... யதார்த்த படம்ங்க...'' என்றால் அனிமேஷன் மாதிரியே பார்க்கிறார்கள்.
என் முதல் தலைமுறை நண்பர்கள் பலருக் கும் இருக்கிற பொதுக் கனவு... ''அம்மாவை ஒரு தடவை ஃப்ளைட்ல ஏத்திக் காட்டிரணும்'' என்பது. சில நண்பர்கள் அதைச் செய்தும் விட்டனர். உண்மையில் அது அற்புதமான கனவுதான்.
''பேரமவுன்ட்ல மூவாயிரம்தான் டிக்கெட்டு. மதுரைக்கு ஒரு ட்ரிப் அடிச்சுரலாம்ல!'' என்கிறார்கள். போன வாரம் என் அம்மாவிடம் இதைப் பற்றிச் சொன்னதற்கு பட்டென்று சொன்னது: ''மொதல்ல நீ ஊருக்கு வாடா!''
- போட்டு வாங்குவோம்...