மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 05

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

##~##
ஷா
ஃப்டர் ஸ்கூலில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சுதந்திரம் சார்தான் ஆங்கிலம் எடுத்தார். ஆங்கில இலக்கணம் மட்டும் அல்லாமல் உச்சரிப்பையும் திருத்திக் கொடுத் தவர் அவரே. மட்டன், பட்டன் போன்ற சொற்களை மட்ன், பட்ன் என்றே உச்சரிக்க வேண்டும் என்பார். நானும் வைத்தியநாதனும் பட்டனைச் சரியாகச் சொல்லி, மட்டனை முகம் சுளித்தபடி சொதப்பி, சுதந்திரம் சாரி டம் பிரம்படி வாங்குவோம்.

'சார்... சார், நாங்க சைவம் சார்.’

'அதுக்கும் இதுக்கும் என்னல சம்பந்தம்?’

பளீர் என்று உட்காரும் இடத்தில் அடி விழும்.

மூங்கில் மூச்சு! - 05

எட்டாம் வகுப்பு வாத்தியாரான பத்மனாபன் சார்வாளும் ஆங்கிலத்தில் கெட்டிதான். சுதந்திரம் சாரைப் பார்த்தால் வருகிற பயம், பத்மனாபன் சார்வாளைப் பார்த்தால் இருக் காது. காரணம், பத்மனாபன் சார்வாள் தமிழி லேயே ஆங்கிலம் நடத்துவார். அதுவும் திருநெல்வேலித் தமிழில். ஒவ்வொரு ஆங்கில வாக்கியத்துக்கு முன்னும் கண்டிப்பாக ஒரு திருநெல்வேலி 'ஏல’ இருக்கும். 'ஏல, ஹூ இஸ் மேக்கிங் நாய்ஸ்? என்று அவர் கேட்கும்போது, கண்ணை மூடிக்கொண்டால் எங்கள் காதுகளில் 'எல, எவம்ல அங்கெ சத்தம் போடுதான்? என்றுதான் கேட்கும். இந்த அந்நியோன்யத்தினாலேயே பத்மனாபன் சார்வாளுடன் எங்களால் எளிதாக, பயம் இல்லாமல் ஆங்கிலத்தில் பேச முடிந்தது. சுதந்திரம் சாரை 'சார்’ என்று அழைக்கும் நாங்கள், பத்மனாபன் சார்வாளை சார்வாள் என்று சொல்வது இந்த அந்நியோன்யத்தினால்தான்!

ட்டப் படிப்புக்காக சதக்கத்துல்லா கல்லூரிக்குச் சென்ற புதிதில் மலைப்பாக இருந்தது. பெரும்பாலாவை புதிய முகங்கள். பரிச்சயம் ஏற்பட்டுப் பழக ஆரம்பிக்கவே ஆறு மாதங்கள் ஆகின. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு ஊர் களில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்தனர். கல்லூரி வாழ்க்கை, அவர்கள் அறியாமல் அவர்களது பேச்சு வழக்கத்தை மாற்றியது. அப்படித் தன் வித்தியாசமான பேச்சு மொழி யினால், நண்பன் செந்தாமரைக் கண்ணன் எங்கள் உள்ளம் கவர்ந்தான். செந்தாமரைக் கண்ணன் நிறைய ஆங்கில வார்த்தைகள் போட்டு ஒரு தமிழ் வரி பேசுவான். அவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்தது Plural, Singular ஆக எதையுமே அவன் சொல்வது இல்லை.

மூங்கில் மூச்சு! - 05

'ஷூஸஸ் எங்கே வாங்குன மக்கா? பாட்டா வுலயா?’

'எங்கெதான் இப்பிடி நல்ல நல்ல ஷர்ட்ஸஸ் லாம் எடுக்கேங்களோப்பா? நம்ம ஊர் ஷாப் ஸஸ்ல இதுல்லாம் கெடைக்க மாட்டெங்கே?’

ஒருமுறை கல்லூரி ஆண்டு விழாவின்போது நடத்த இருக்கும் கலை நிகழ்ச்சிகள்பற்றி பிரின்ஸிபாலின் அறையில் மாணவர்கள் அனைவரும் அவருடன் பேசிக்கொண்டு இருந்தனர். பிரின்ஸிபால் 'அதெல்லாம்தேவை தானா?’ என்னும் தொனியில் ஏதோ சொல்ல வரும்போது, செந்தாமரைக் கண்ணன் பொங்கியெழுந்தான்.

'என்ன சார் இது? இது எங்க ரைட்ஸஸ் சார்.’

ஒரு கணம் அதிர்ந்து, பின் வெடித்துச் சிரித்த பிரின்ஸிபால், 'என்னமோ பண்ணுங்கடே, போங்க’ என்றார்!

ண்பன் குஞ்சுவுக்கு கோவை வேளாண்மைப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒன்றாகவே வளர்ந்த நாங்கள், முதன்முதலாகப் பிரிந்த சோகத் தில் இருந்தோம். பொங்கி வரும் கண்ணீருடன் வாழ்க்கை யிலேயே முதன்முதலாக ஒருவருக்கு ஒருவர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக்கொண்டோம். ஒரு வாரத்துக்கு இரண்டு கடிதங்கள். எங்களின் ஆங்கிலம் எங்கள் இருவருக்குமே புரியவில்லை. அடுத்த முறை குஞ்சு விடுமுறைக்கு திருநெல்வேலி வரும்போது, அவன் எழுதிய கடிதங்களுடன் காத்துக்கொண்டு இருந்தேன். அவனும் நான் எழுதிய கடிதங்களுடன் என்னைப் பார்க்க வந்தான். இருவருமே எங்கள் கடிதங்களைக் கையில் வைத்துக்கொண்டு அர்த்தம் கேட்டுக்கொண்டோம். ஒரு நீண்ட போராட் டத்துக்குப் பிறகு, இருவருமே ஒரு முடிவுக்கு வந்து, அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக 'அன்புள்ள நண்பா’ என்று எழுத ஆரம்பித்தோம்!

மூங்கில் மூச்சு! - 05

சென்னைக்கு வந்த புதிதில், வாத்தியார் பாலுமகேந்திராவின் அலுவலகத்தில் ஒரு டிப்-டாப் மனிதர் இருந்தார். புரொடக்ஷன் மேனேஜர் சுந்தர்ராஜன் என்று அறிமுகம் ஆனார். எல்லோரும் அவரை 'மாமா’ என்றே அழைத்தார்கள். சுந்தர்ராஜன் மாமா 'புதிய பறவை’ சிவாஜிபோல ஸ்டைலாக சிகரெட் பிடிப்பார். வாசலில் யாராவது கதவைத் தட்டினால், 'யேஸ்ஸ், கம் இன்’ என்பார். டெலிபோன் மணி அடித்தால் எடுத்து, 'ஹெல்லோ’ என்பார். ஆபீஸ் பாய் வந்து டீ கொடுக்கும்போது தான் எடுத்துக் கொண்டு, நம்மைப் பார்த்து 'வாட் எபௌட் யூ?’ என்பார். அவரது இந்த ஆங்கில வாக்கி யங்கள் அனைத்துமே சர் மௌன்ட் பேட்டன் சொல்வதுபோல் அப்படி ஓர் ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்பில் இருக்கும்.

யாராவது முக்கியமான ஆட்களைப் பார்க்கச் செல்வதாக இருந்தால், சுந்தர்ராஜன் மாமாவை முன்னே போகவிட்டு அவருக்குப் பின்னாலேயே ஒட்டிக்கொள்வேன். 'மே ஐ கம் இன் ஸ்ஸார்?’ என்று மாமா கேட்கும் தொனியிலேயே எவ்வளவு பெரிய கதவும் படாரெனத் திறந்துவிடும். No என்ற ஆங்கிலச் சொல்லை 'நா’ என்று சுந்தர்ராஜன் மாமா சொல்லும் அழகே அழகு.

ஒருமுறை எங்கோ வெளியூரில் இருந்து 'வாத்தியார்’ பாலுமகேந்திராவைப் பார்ப்பதற்குச் சில இளைஞர்கள் அலுவலகத்துக்கு வந்தனர். சுந்தர்ராஜன் மாமா ஸ்டைலாக சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தபடியே எழுந்து 'யேஸ்ஸ்’ என்றபடி அவர்களிடம் பேசப் போனார். வந்தவர்கள், புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள். படபடவென ஆங்கிலத்தில் அவர்கள் ஏதோ கேட்க, சுந்தர்ராஜன் மாமா மலையாளிகளின் உடல் மொழியில், தோள் குலுக்கலுடன் ஆங்கில vowels எழுத்துக்களான 'a, e, i, o, u’  என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்க முயன்று வெளிறிக்கொண்டு இருந்தார். அவர்களிடம் சென்று 'வாத்தியாரை’ மாலையில் வந்து பார்க்குமாறு விவரம் சொல்லி அனுப்பிவிட்டு, மாமாவைத் திரும்பிப் பார்த் தேன். 'போய்ட்டானுகளா? பாவம்டா, அவனு களுக்கு இங்கிலீஷே தெரியல’ என்று சொல்லி விட்டு, நடுங்கும் கரங்களால் அடுத்த சிகரெட் டைப் பற்றவைத்தார்.

மேற்சொன்ன சம்பவத்துக்குப் பின், மாமா வின் ஆங்கிலப் புலமை எனக்கு அசாத்தியத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் மாமாவின் ஆங்கிலம் பார்த்துக்கொண்டது. அவர் சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில், ஓர் உதவி இயக்குநர் பெண் அவரிடம் 'மாமா, இன்னிக்கு எனக்கு birthday’ என்று சொல்ல, சட்டென்று வேறு ஆங்கில வார்த்தைகள் கிடைக்காமல் திணறிய மாமா 'congratulations’ என்று சொல்லி அந்தப் பிறந்த நாள் குழந்தையை மிரளவைத்தார். பின்பு, தான் செய்த கோளாறைச் சமாளிக்கும் விதமாக அன்றைக்கு முழுதும் 'சிரிக்காதெடா, கம்னாட்டி, Congratulations is not a bad word’  என்று சொல்லிக்கொண்டே இருந்தார்!

சென்னைக்குப் புதிதாக வரும் இளைஞர் களை முதலில் மிரட்டும் ஆங்கிலம் என்னையும் மிரட்டியது. அதுவும் சினிமா துறையில் இருப் பவர்கள் தும்மினாலும் ஆங்கிலத்தில்தான் தும்முவார்கள். தூய தமிழ்ச் சொல்லான மயிர் என்னும் சொல்லை bad word என்பவர்கள், நொடிக்கு ஒருதரம் 'மலம்’ என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் கூசாமல் சொல்லிக்கொண்டே இருந்தது எனக்கு ஒரு மாதிரி அயர்ச்சியைக் கொடுத்தது. அந்த மாதிரி சமயங்களில் 'நாயர் ராமன்’ சார் ஆறுதலாகப் பேசுவார்.

'இவனுகளை எல்லாம் பாத்து அப்செட் ஆகாதே. இங்கிலீஷ் ஒரு மொழி. அவ்வளவுதான். அதைக் கத்துக்கிட்டா சில சௌகரியங்கள் இருக்கு. இல்லைங்கல. ஆனா, அதுக்கும்அறிவுக் கும் முடிச்சுபோட்டுக் கொளப்பிக்கக் கூடாது. I met a lot of English speaking fools in my life’.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சம அளவு புலமை உடைய 'நாயர் ராமன்’ சார் சொல்லும்போது மனதுக்குத் தெம்பாக இருக்கும். சமயம் கிடைக்கும் போது எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசி நம் தவறைச் சரி செய்வார்.

'சினிமால வர்ற மாதிரி By the byன்னு சொல்லக் கூடாதுப்பா. By the wayன்னுதான் சொல்லணும்’.

நான் குடியிருக்கும் வீட்டுக்குப் பக்கத்து ஃப்ளாட்டில் ஒரு வட நாட்டுக் குடும்பம் வந்து குடி யேறியது. சென்னைக்குப்போனால் ஆங்கிலம் பேசியே சமாளித்துவிடலாம் என்று அவர்கள் ஊரில் யாரோ சொல்லி அனுப்பி இருப்பார்கள்போல. ஒட்டுமொத்தக் குடும்பமும் ஆங்கிலத்திலேயே காய்கறி வாங்குவதும், ஆட்டோ பேரம் பேசுவதும், அண்டை வீட்டாருக்கு முகமன் சொல்வதுமாக இருந்தனர். நாளாக நாளாக அவர்களுக்குத் தமிழ் பிடிபட ஆரம்பித்தது. ஆனாலும் அவர்கள் ஆங்கி லத்தை விடுவதாக இல்லை. அதாவது ஆங்கிலத் திலேயே முழுவதுமாகப் பேசுகிறார்களா என்றால், அதுவும் இல்லை. ஒரு வார்த்தை, இரண்டுவார்த்தை கள்தான். இத்தனைக்கும் அவர்கள் வீட்டுத்தொலைக் காட்சியில் எப்போதும் ஓடிக்கொண்டு இருப்பது தமிழ் சேனல்கள்தான்.

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதாலும், குடும்பத் தலைவர் அலுவலகம் செல்வதாலும் மெள்ள தமிழ் பக்கம் வர ஆரம்பித்தனர். கல்லூரிக்குச் செல்லும் பையன் எப்போது என்னைப் பார்த்தாலும் பணிவு டன் சிரித்து, 'அங்கிள், நல்லா இருக்கியா?’ என்று கேட்பான். அவன் தகப்பனார் சம்பந்தமே இல்லா மல் 'எங்கே போயிண்டிருக்கேள்?’ என்று பிராமண பாஷையில் கேட்பார். குடும்பத் தலைவி மட்டும் தமிழில் பேசுவதே இல்லை. தமிழில் நாம் பேசினால் புரியவந்ததற்குப் பிறகும்கூட, ஒரு வார்த்தை  என்றாலும் ஆங்கிலம்தான்.

இடையில் இரண்டு மாதங்கள் அவர்கள் ஊருக் குச் சென்றிருந்தார்கள். ஊரில் இருந்து திரும்பியதும் அக்கம்பக்கத்தில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று அவர்களது ஊரில் இருந்து வாங்கி வந்த பலகாரங்களைக் கொடுத்தார்கள். அப்படி என் வீட்டுக்கும் வந்து கொடுத்துவிட்டு அந்த அம்மாள் திரும்பும்போது, நான் வெளியிலிருந்து வீட்டுக்கு வந்தேன். மாடிப்படியில் அந்த அம்மாள் இறங்குவதற்கு வசதியாக ஒதுங்கி நின்று, 'ஊர்ல இருந்து எப்போ வந்தீங்க?’ என்று கேட்டேன்.

'டுமாரோ’ என்று சொல்லி சிரித்தபடி பலகாரத் தட்டுடன் கீழே இறங்கிச் சென்றார்கள்!

- சுவாசிப்போம்...