மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 16

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஒவியம் : மணி, படம் : கே. ராஜசேகரன்

அம்மா!

##~##

த்திரப்பிரதேசத்தின் உந்திக் கமலத்தில் உள்ள ஒரு குக்கிராமம்.

காணி நிலத்தை வைத்துக்கொண்டு, காலட்சேபம் செய்துகொண்டிருக்கும், ஜகஜீத்சிங் ஜாட் இனத்தைச் சேர்ந்தவன்.

'தேனாறு பாயுது;
செங்கதிரும் சாயுது;
ஆனாலும் ஏழை வயிறு
காயுது!’

-என்று 'படித்த பெண்’ என்னும் படத்தில் பட்டுக்கோட்டை எழுதிய பாட்டைப்போல் -

மெய் வருத்தி மேழி செலுத்தி, செய்திருத்திச் செந்நெல் விளைத்தபோதும் -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 16

ஜகஜீத்சிங்கின் வருமானம், வாய்க்கும் கைக்கும்தான்; அது, தாய்க்கும் மகனுக்கும் அரை வயிற்றுக் கஞ்சி ஊற்றியது.

மகன் மணமாகாதவன்; தாயைத் தினம் சம்ரட்சிப்பதையே, தன் பிறவிப் பேறாய் எண்ணி, தனி மரமாகவே நாள்களை நகர்த்திவிட்டான்.

அம்மா என்றால் அவனுக்கு அளவு கடந்த பிரியம். தன் வாயைச் சுருக்கி வயிற்றைச் சுருக்கி, தாய் எது கேட்டாலும் தட்சணமே வாங்கித் தருவான்.

தள்ளாத வயதில் அந்தத் தாய் மனத்தில் தளிர்விட்டது ஓர் ஆசை. அந்த ஆசை அரும்பியபோது - முடக்குவாதத்தில் அடிபட்டு முழங்கால்களுக்குக் கீழே இரண்டு கால்களும் விளங்காமல் போயிருந்தன, அந்தத் தாய்க்கு!

'மரிப்பதற்குள், நான் ராமேஸ்வரம் சென்று - கடலில் குளித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்; அழைத்துப் போவாயா, மகனே?’

- இப்படித் தாய் வினவியதும், மகன் தளரவில்லை மனம். வடக்கிலிருந்து தென் கோடிக்கு வந்துபோகும் அளவு, அவனுக்குப் பொருளாதார வசதி இல்லை. இல்லாவிட்டால் என்ன?

'டோலி’ கட்டித் தாயைத் தோளில் சுமந்துகொண்டு, கால் நடையாகவே புறப்பட்டான் ஜகஜீத்சிங்.

தாயைச் சுமந்து வரும் தனயனை, வரும் வழியெல்லாம் வியந்து பார்த்து விழுந்து வணங்கியது, மன்பதை.

அப்போதைய தமிழ் ஏடுகளில், புகைப் படத்தோடு, 'டோலி’யில் தாயைச் சுமந்து ராமேஸ்வரம் போகும் தனயனின் படம் வெளியாகியிருந்தது.

வயோதிகத் தாயை, முதியோர் இல்லத்தில் விட்டுவைத்தவனெல்லாம் -

வெட்கிப் போய்த் தாயை வீட்டுக்கு அழைத்து வந்தான்!

து போல், இன்னொரு செய்தி - தாய் தனயன் சம்பந்தப்பட்டது.

மலையாளத் திரைப்படத்தில் மகாக் கவிஞனாகப் பிரகாசித்தவர் அவர். சிவப்புச் சிந்தனைக்காரர்.

தாயின்றி பிறிதொரு தேவு இல்லை எனத் தெளிந்து, அன்றாடம் காலையிலும் மாலையிலும் - அந்தப் பெருங்கவிஞன்...

தொந்தி சரியச் சுமந்தவளின் திருமுன் குனிப்பான் சிரம்; கூப்புவான் கரம். மணம் செய்துகொண்டால், மாதாவிற்கும் மனையாளுக்கும் இடையே -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 16

பாசத்தைப் பங்கு போட நேருமென்று இப்பிறவியில் இல்லறமே ஏற்பதில்லை என உறுதி பூண்டான்.

இதுகூட வியப்பில்லை; இதனினும் வியப்பான விபரீதமான ஒரு முடிவுக்கு வந்தான் அந்த மாமேதை.

தாயிறந்து, அவள் பிரேதத்தைத் தன்னால் பார்க்க ஏலாது என்று -

தாய்க்கு முன் தான் மரிக்க எண்ணினான்; எண்ணியதுபோலவே பண்ணினான்!

அவனது தாய்ப் பாசம் ஆராதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவன் இழப்பை அவனது தாய் என்னணம் தாங்குவாள் என எண்ணாதுபோனானே.

அது, அவன் தாய்க்கு இழைத்த அநீதி அல்லவா? அநீதிதான். இருப்பினும் இயற்கை நியதி யாதெனில்-

அறிவு எதையும் ஆராயும்; அன்பு எதையும் ஆராயாது என்பதுதான்!

மாதா விஷயத்தில் சில மகா ஞானிகள் நடந்துகொண்டது, என் மனதிற்கு ஒப்பவில்லை!

ஆதிசங்கரர் அன்னையை முதலையின் மூலம் நிர்ப்பந்தித்துத் துறவு பூண்டார்!

பகவான் ரமணர், மகன் போன இடம் தெரியவில்லையே என்று மாதாவைப் பிரலாபிக்கும்படி விட்டுவிட்டு - குகை புகுந்தார்!

பட்டினத்தார் ஊர்ப்புறத்தே இருந்துகொண்டே -

ஈன்றவளுக்கு ஈமக்கடன் செய்ய மட்டும் கொள்ளியோடு நின்று - 'முன்னையிட்ட தீ; பின்னையிட்ட தீ; அன்னையிட்ட தீ என்றெல்லாம் இரங்கற்பா பாடி அரற்றினார்!

இவற்றையெல்லாம் எண்ணுங்கால், மாதா வைப் புறக்கணித்துவிட்டு இந்த மார்க்கதரிசிகள் - அறம் கூறப் புகுந்தது, எனக்கு அர்த்தம் உள்ளதாய்ப்படவில்லை!

தாயைக் காப்பாற்றாதவனா, தரணியைக் காக்கப்போகிறான் என்று என்னுள் ஒரு வினா எழுகிறது. இது என் அறியாமையாகவும் இருக்கலாம்.

பெரிய தர்மத்தின் பொருட்டு - அதாவது உலக க்ஷேமத்தின் பொருட்டு - சிறிய தர்மத்தை, அதாவது தாயைப் பேணுவதை விடுதல் - அறத்தின்பாற்பட்டதாய் ஆன்மிகவாதிகள் சமாதானம் சொல்லலாம்.

என்னைப் பொறுத்தவரையில், தண்ணளிமிக்க  தகவுகளை வைத்துப் பார்க்கையில் -

தாய் - அசல்;

தெய்வம் - அதன் நகல்!

திரைப்படங்களில் தாயின் மேன்மையைத் தமிழ் எப்படியெல்லாம் போற்றியிருக்கிறது, தெரியுமா?

- 'தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!’ - இது 'மனோகரா’வில் கலைஞர் வசனம்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 16

'அய்யோ! அம்மா! உன்னை உதைத்த கால் ஓரடி எடுத்துவைக்க முடியாது இருக்கிறதே

இப்போது!’

'ரத்தக் கண்ணீர்’ படத்தில், திருவாரூர்     தங்கராசுவின் வசனம்.

கண்ணதாசன் தன் வனவாசத்தில் எழுதுகிறார்;

'தமிழகத்தில் மூவர். தன் தாயை வணங்கியதால் - குறைபாடுடைய குணங்களைத் கொண்டிருந்தும் - புகழ்க் குன்றேறி நின்றார்!’ என்று.

சென்னை வீதிகளில் ஓடும் சில ஆட்டோக்களின் முதுகுகளில் நீங்கள் பார்க்கலாம் கீழ்க்கண்ட வாசகத்தை.

'தாயிருக்கும் காரணத்தால்
கோயிலுக்குப் போனதில்லை!’

'சின்னத்தம்பி’ படத்தில் இது அடியேன் எழுதியது.

திருச்சி மாநகரில் - தாகூரின் சாந்தி நிகேதன் போல் - அமைதியும் அருளும் அழகும் பிறங்க - ஸ்ரீஐயப்ப ஸ்வாமி ஆலயம்.

'மன்னன்’ படத்தில் நான் எழுதிய 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பாடல் - அந்தக் கோயில் பிராகாரத்தில் கல்வெட்டில் பதிவு செய்யப் பெற்று இருக்கிறது. பக்தர்கள் பக்கத்தில் உள்ள பொத்தானை அமுக்கினால் அந்தப் பாடலைக் கேட்கலாம்.

கேட்கிறார்கள்; கண்ணீர் மல்கக் கரம் கூப்பி நிற்கிறார்கள்!

லம்புரி ஜான் அவர்களை ஒரு வாசகர் கேட்டார், 'நீங்கள் சம்பாதித்து, உங்க அம்மாவுக்கு அனுப்பியதுண்டா?’ என்று.

வலம்புரி ஜானின் பதில்.

'அம்மாவை அனுப்பிவிட்டுத்தான், நான் சம்பாதிக்க ஆரம்பித்தேன்!’

ன் கதையும் அதேதான்; தாய் எனக்குச் சோறு போடும்போது, தமிழ் எனக்குச் சோறு போடவில்லை! தமிழ் எனக்குச் சோறு போடும்போது - தாய்க்கு நான் சோறு போடத் தாயில்லை!

விளக்கை ஏற்றிவைத்துவிட்டு, தீக்குச்சி தீய்ந்து போய்விட்டது!

- சுழலும்...