
விஞ்ஞானமும் அதன் வளர்ச்சி விகிதமும் நாளும் எகிறுகிற காலத்தில், மனதால் மிகவும் பூஞ்சையான, பலவீனமான ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிவருகிறோம்.
இன்று காலையில் வெளியே வரும்போது முதலில் கண்ணில்பட்டது பி.ராஜாவுக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!
இது அஞ்சாவது வருஷம். அவசர அவசரமாக எங்கேயாவது ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு காலையில் இப்படி போஸ்டர்கள் கண்ணில்படும். ஒரு பைக்கில் சாய்ந்து பி.ராஜா நிற்கிற அதே புகைப்படம். 'பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ் மாதிரி ஒரு முகம். கட்டம் போட்ட மெரூன் கலர் சட்டை, கையில் சில்வர் வாட்ச், உதடு சுழித்து ஒரு புன்னகை. முன்பு பி.ராஜாவை இந்த ஹவுஸிங் போர்டு டாஸ்மாக் பக்கம் அவ்வப்போது பார்ப்பேன். குப்பென்று பெர்ஃப்யூம் தூக்க, மொபைல் பேசியபடி கடந்துபோவான். பார்க்கிங்கில் கிடக்கிற ஏதாவது கார் பேனட்டில் ஸ்டைலாக உட்கார்ந்திருப்பான். ''ஒரு பாக்கெட் கிங்ஸ்...' என்றபடி பெர்முடாஸோடு எதிர்க் கடையில் நிற்பான். ஓர் அதிகாலையில் கைலியில் சுருக்கிட்டு, நாக்கு தள்ள, நிர்வாணமாக இவன் தொங்குவான் என்ற காட்சியை யாராலும் நினைத்துப்பார்க்க முடியுமா? அப்படித்தான் தொங்கினான் பி.ராஜா.
அவன் வசித்த ப்ளாக்கில் கூட்டம் கூடி, போலீஸ் வந்திருந்தது. ''த்தா கல்யாணமாகி ஒரு வருஷம்கூட இல்ல... இன்னா பிரச்னையோ எழவோ... நைட்டுகூட சிரிச்சினேதான் விஷ் பண்ணினு போனாரு!'' என்றார் வாட்ச்மேன். ''தொங்குனவன் இன்னாத்துக்கு நியூடா தொங்குனான்? என்னா சொல்லவர்றான்? எவ்ளோ எமோஷனலா இருந்துருப்பான் பாத்துக்க'' என்றார் சிவராமன். கொஞ்ச நேரத்தில் பாடியைத் தூக்கிப் போனார் கள். ''ஒய்ஃப் மேட்ருதாம்ப்பா' ''கடன் பிரச்ன... அஞ்சு லச்சம் வட்டிக்கு வாங்கிருக்கான்' என்றெல்லாம் கொஞ்ச நாளைக்கு ஏதேதோ சொன்னார்கள். அதன் பிறகு இரவுகளில் யதேச்சையாக பார்க்கும்போது அவனதுஃப்ளாட் டில் யாரும் இல்லாமல் பல்பு எரியும் மஞ்சள் வெளிச்சம் திடுக்கிடவைக்கும். இப்போதுகூட வேறு ஏதோ குடும்பம் குடிவந்து குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கும் அந்த ஃப்ளாட் டின் பால்கனியைக் கடக்கும் போது நினைவில் நறுக் என்று ஒரு முள் குத்துகிறது!

இப்படித்தான் சில நேரங்களில் நாம் யோசிக்கவே முடியாத அமானுஷ்யங்களை நிகழ்த்திவிடுகிறது மனித மனம். நண்பன் பாக்கியம் சங்கரின் வண்ணாரப்பேட்டை ஏரியாவில் கட்டித் தங்கத்தைக் காதலித்த ஸ்ரீதரனின் கதை தெரியுமா? ஸ்ரீதரன் கட்டித்தங்கத்தை அப்படிக் காதலித்தான். டவுன் பஸ்ஸில் அவளுக் காக சீட் பிடித்து, அவளுக்காக வண்டி வாங்கி, அவளுக்காக வேலையை மாற்றி, கல்யாணத்துக் குக் காசு சேர்த்தான். அவளுக்காக ஒரு சுடிதார் வாங்கிவைத்திருந்தான் அவன். மறுநாளே ஏதோ விபரீதமான விஷக்காய்ச்சல் தாக்கி ஆஸ்பத்திரி யில் சேர்ந்த கட்டித்தங்கம் இரண்டு நாட்களில் செத்துப்போனாள். யாரிடமும் பேசாமல்கொள்ளாமல் திரிந்த ஸ்ரீதரன், அடுத்த மாதமே தற்கொலை செய்துகொண்டான். கட்டித்தங்கத்துக்காக வாங்கிவைத்திருந்த சுடிதாரை அணிந்துகொண்டு தூக்கில் தொங்கினான்.
சுடிதாரைப் போட்டுக் கொண்டு ஓர் ஆண் தொங்கியதைப் பார்த்தவர்களால் ஆயுசுக்கும் மறக்க முடியுமா? என்னவிதமான நினைவின் பயங்கரம் இது? ''கட்டித்தங்கம் டீக்கடையை கிராஸ் பண்ணும்போது எல்லாம் ஸ்ரீதரன் இதே பாட்டைத்தான் பாடுவான். அதுக்குப் புடிச்ச பாட்டு 'என் இனிய பொன் நிலாவே, பொன் நிலவில் உன் கனாவே’ '' என பாக்கியம் சங்கர் பாட ஆரம்பிக்கும்போதே மனசு கட்டித் தங்கத் திடம் இருந்து ஷோபாவிடம் போய்விடுகிறது.
ஷோபா என்றால் ஷோபா மட்டுமா? கலா அத்தையும்தான். ஒரு நள்ளிரவில் பொய்யாமொழி மாமா போன் செய்து, ''கலா மருந்து குடிச்சுருச்சு. பெரியாஸ்பத்திரியில போட்ருக்கு... ஒண்ணும் சொல்ல முடியல...'' என அழுதார். அதிகாலை யில் போனபோது உடம்புதான் கிடந்தது. முதல் நாள் கார்த்திகை. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தில் தெருவெல்லாம் அகல் எரியும் கார்த்திகை ராத்திரியில் இப்படி மருந்து குடித்து, குடல் அறுந்துகிடக்க ஒருத்திக்கு மனசு வருமா? மனசு வந்துதான் கலா அத்தை செத்துப்போனாள்.
போன வாரம் ஒரு கையால் முந்திக்குள் தாம்பூலப் பையை மடித்துக்கொண்டு, இன்னொரு கையால் என் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ரயில்வே கல்யாண மண்டப வாசலில் ரொம்ப நேரம் நின்ற கலா அத்தையை, இப்படி பெரியாஸ்பத்திரி மார்ச்சுவரி வாசலில்வைத்துப் பார்ப்பது எவ்வளவு விசித்திரம்? முதுகுப் பக்கம் கிழிந்த சட்டையில் எம்ப்ராய்டரி ரோஜாவை மலரவிட்ட, ஒரு மழை சாயங்காலம் மரவல்லிக் கிழங்கு அவித்துவைத்த, அடுத்த வீட்டுக் கோழிகளுக்கும் குருணை இறைத்த, கல்யாண மண்டப வாசலில் இறுக்கிக்கொண்ட கைகள் அதற்குள் இப்படி விறைத்துக்கிடப்பது எவ்வளவு பயங்கரம்? பிழைத்து வந்தால் ஓங்கி ஓர் அறைவிட்டு, கைகளைக் கட்டிக்கொண்டு அழலாம். ''ஏண்டி ஒனக்காக எவ்வளவு உசுருங்க இருக்கு. எவ்வளவு அன்பு இருக்கு?' எனப் புரியவைக்க லாம். இப்போது என்ன செய்வது? இந்தக் கையறு நிலையும் பயங்கரமும்தான் தற்கொலை செய்துகொள்கிறவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுப்போக நினைப்பதுவா?
போன வாரம் ஐ.ஐ.டி-யில் நண்பனைப் பார்க்கப் போயிருந்தபோது கேம்பஸில் ஒரே கூட்டம். போலீஸ். ''இங்க சரயூ ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு சூஸைட் பண்ணிக்கிச்சுமச்சான். பாக்கவே ரொம்பக் கஷ்டமா இருக்குடா'' என்றான் நண்பன். போன மாதம்தான் பக்கத்தில் இருக்கிற அண்ணா யுனிவர்சிட்டியில் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டான். கல்வி, காதல், சமூகம், குடும்பம் தரும் மன அழுத்தம் என ஏதேதோ காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களைப் பற்றிய செய்திகள் சமீப காலமாக அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.
விஞ்ஞானமும் அதன் வளர்ச்சி விகிதமும் நாளும் எகிறுகிற காலத்தில், மனதால் மிகவும் பூஞ்சையான, பலவீனமான ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிவருகிறோம்.
கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்கிறவர் கள், ஏதேனும் சுற்றுலாத் தலங்களில் அறை எடுத்து ஜோடியாக செத்துப்போகிறவர்கள், எங்கெங்கோ அபார்ட்மென்ட் அறைகளில் சுய மரணம் எய்தும் இளம்பெண்கள் என ஒரு தற்கொலை செய்தியாவது இல்லாத நாள் இருக்கிறதா?
ஒருமுறை நம்மாழ்வார் அய்யாவுடன் இதுபற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார், ''இயற்கை மேல இருக்கிற நேசம் குறைஞ்சது தான் இந்தத் தலைமுறைகளோட பெரிய சாபம். இயற்கையைக் காதலிக்கிற எவனுக்கும் சாகணும் என்கிற எண்ணம் துளியும் வருமா? இன்னும் இன்னும் வாழணும்கிற கனவுகள்தான் வரும். இயற்கையோட பிரமாண்டங்களையும் அற்புதங்களையும் உணர்ந்துட்டா, இந்த வாழ்க்கையோட இன்ப, துன்பங்கள்லாம் சாதாரணம். ஒவ்வொருத்தரும் புள்ளை மாதிரி ஒரு மரமாவது வளருங்க... செடி கொடிகளை நேசிங்க... பறவைகளோட பேசுங்க... இயற்கையை அனுபவிக்க ஆரம்பிச்சிட்டா, தனிமை, பிரிவு எதுவும் உன்னை அண்டாது!''
அந்த அற்புதத்தின் உண்மையை நான் உணர்கிறேன். ஊரில் இயற்கை விவசாயம் பார்க்க வேண்டும் என்கிற எனது ஆசை அன்றுதான் கிளர்ந்தது!
பொறுக்கிகளும், பேமானிகளும், சுரண்டல் பேர்வழிகளும் வாழ்வாங்கு வாழும் இந்த தேசத்தில்தான் இன்னமும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அலைபேசி, கணினிப் புழக்கம் ஏகத்துக்கும் எகிறிவிட்ட நாட்டில்தான், இன்னமும் வறுமையும், பசியும் அவமானமும் துரத்த... நமக்குச் சோறு போடும் விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான். ஒரு விவசாயியின் மரணம் என்பது ஒரு நாட்டின் இறையான்மையின் மரணம் என் பதை இந்தச் சமூகமும் அதிகார மையங்களும் உணர வேண்டும்!
சமீபத்தில் இளைய அப்துல்லாஹ் எழுதிய 'அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்ற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது, ''அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன். என்னாலை இனியும் வாழ முடியாது. அகதி அந்தஸ்தும் நிராகரிக்கப்பட்டு விட்டது. எனக்கு பதினைந்து இலட்சம் கடன். வீட்டிலை இரண்டு தங்கச்சிமார். அவை யளுக்கு உழைக்கத்தான் வந்தனன். ஆனால், இப்படி ஆயிட்டுதே...'' திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் லண்டன் அகதிகள் முகாம் ஒன்றில் இதைச் சொல்கிறார். அந்தத் தமிழன் இலங்கையில் இருந்து லண்டனுக்கு அகதியாக வந்த பயணம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

சிங்கப்பூர், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான் என நீளும் அந்தப் பயணம் மிகக் குரூரமானது... பயங்கரமானது. நினைத்துப்பார்க்க முடியாத பசி, தாகம், வலி, கொடுமைகள் நிறைந்தது. இவ்வளவையும் தாண்டி லண்டன் வந்துவிடுகிற அந்த அகதி, இப்போதும் அங்கே இருக்கிற முகாமில் கையெழுத்திட்ட படி ஒவ்வொரு விடியலுக்குமான நம்பிக்கையோடு வாழ்கிறான் என்பதோடு முடிகிறது அந்தக் கட்டுரை.
இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் நான் எப்போதும் நினைத்துக்கொள்கிறேன். போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு? தனிமை, பிரிவு, விரக்தி... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒருபோதும் வற்றிப்போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. உண்மையான அன்பும், அறமும், கோபமுமே அனுதினம் என நினைக்கிற யாரும் சாக நினைக்க மாட்டார்கள். எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு 'மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்கிற மனசு மட்டும் போதும்... போதும்!
ஒரு மாதமாக நண்பர் ஜெயராமன் மருத்துவ மனையில் கோமாவில் இருக்கிறார். முப்பது சொச்சம் வயசுதான் இருக்கும். தினம் தினம் அவரது குழந்தையைக் காதருகே பேசவிடுகிறார்கள். மனைவி தன் அன்பைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். பாட்டுவைக்கிறார்கள். ஒரு கண் அசைவும் விரல் அசைவும் பெரும் நம்பிக்கையைக் கிளர்த்திவிடுகிறது. இன்னமும் அவர் கண் விழிக்கவில்லை. திறந்த ஜன்னலில் வெயிலும், காற்றும், நிழலும் பரவிக்கொண்டே இருக்கிற அந்த அறைக்குள் காத்திருக்கும் ஜீவன் களைப் பார்த்தபோது, உயிர் எவ்வளவு அற்புதமானது, மகத்தானது, உன்னதமானது என்பதை சிறுகணத்தில் உணர்ந்தேன். அதைவிடவும் பெரிதென்று ஏதும் இல்லை.
செயற்கைக் கால்களை வைத்துக்கொண்டு ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய பிஸ்டோரி யஸின் ஒரு வியர்வைத் துளி, மூங்கிலில் விரல் தடவி விரல் தடவி ஒரு தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம், இடுப்புக்குக் கீழே எதுவும் செயல்படாமல் கணினியில் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கும் ஒரு சகோதரியின் விரல்கள், கல்யாணமே பண்ணிக்கொள்ளாமல் புற்று நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ரோகி களுக்குச் சேவை செய்வதையே வாழ்க்கையாக்கிக் கொண்ட அமுதாம்மாவின் ஒரு புன்சிரிப்பு, தூக்குக் கைதியாக நிற்கும் மகன் பேரறிவாள னையும் மற்றவர்களையும் மீட்க, சதா அலைந்து திரியும் அற்புதம்மாளின் வார்த்தைகள்... இதற்கு எல்லாம் முன்பு நமது சோகங்களும் விரக்திகளும் எவ்வளவு தூசியானது?
சமீபத்தில் பார்த்த ஓர் ஆங்கிலப் படத்தில் இரண்டு நண்பர்கள் இருப்பார்கள். ஒருவன் வாழ்க்கையில் எப்போதும் விரக்தியை மட்டுமே பேசுகிறவன். இன்னொருவன் நம்பிக்கையை மட்டும் நினைக்கிறவன். க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக புலம்பிக்கொண்டு இருப் பான் முதல் நண்பன். அவனை ஆறுதல்படுத்தி விட்டு இன்னொருவன் கிளம்புவான்.
காலையில் வந்து அவன் நண்பன் வீட்டுக் கதவை திறப்பான். திறந்தவனின் பார்வை சட்டென்று மேலே போகும். அவ்வளவுதான்... மறுபடி கதவைச் சாத்திவிட்டு அவன் போய்விடுவான். அதோடு படம் முடிந்துவிடும். உண்மையில் இந்த உலகம் அப்படித்தான் போய்விடும். 'மூடிக்கிடக்கும் மனங்களின் உள்ளே விரக்தியின் இருட்டும்; திறந்துகிடக்கும் மனங்களின் வெளியே நம்பிக்கையின் விடியலும் எப்போதும் இருக்கும்’ என்பதை அந்தக் காட்சி சொல்லிக் கொண்டே இருக்கிறது. துன்பம் அதிகமாகும் போதெல்லாம் எனக்கு பாரதியின் இந்த வரிகள்தான் உள்ளே ஒலிக்கும்...
'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா!’
- போட்டு வாங்குவோம்...