மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 58

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

'நாலஞ்சு தலமொற பாத்த கெழவி... குடும்பத்துல ஒவ்வொரு புள்ள பொறக்கும்போதும் இதுதான் பாத்துக்கிச்சு... எத்தன உசுருங்க... இப்போ அதுக்கு முடியல... அதுவும் ஒரு கொழந்தையாதான் ஆச்சு. கால்ல தூக்கிப்போட்டு எடுத்துக்குறோம்!'

"எக்ஸிபிஷன் போனீங்களா குட்டி?"

 ''ஆமாம்பா!''

''எப்போ போனீங்க?''

''நாளைக்குப் போனோமே!''

- இப்படிச் சொல்லிவிட்டு விளையாட ஓடிவிட்டாள் என் அண்ணன் மகள் பொன்மலர். எனக்கு அவள் சொல்லிவிட்டுப்போன கடைசி வார்த்தைகள் புகைப்படப் புன்னகையைப் போல நிலைத்துவிட்டது. காலத்தை இப்படி அசால்ட்டாகத் தூக்கிப்போட்டு மிதிக்க ஒரு குழந்தையால்தான் முடியும். அன்றைக்கு இப்படித்தான், சின்னண்ணன் வீட்டில் குருவி கத்துகிற மாதிரி ஒரு காலிங்பெல் வாங்கிவைத்தார்கள். குகன் அடம்பிடித்தால், அதை அழுத்தி, ''குருவி வருது... குருவி வருது... சாப்பிட்ரு!'' என்றால், அவனும் பயந்து சாப்பிட்டுவிடுவான். இது ஃபார்முலா. கொஞ்ச நாள் போனது. அண்ணி சாதம் பிசையும்போது அவனே ஸ்டூலைப் போட்டு ஏறி நின்று காலிங்பெல்லை அழுத்தி, ''குவி ஆப்புட ஆ குவி ஆப்புட ஆ!'' என்றான். கணம்தோறும் இப்படி அற்புதங்களை நிகழ்த்த குழந்தைகளால்தான் முடியும்.

அப்பழுக்கு இல்லாத பிராயம். ஆசை, ஏக்கம், கனவு, வன்மம், பொறாமை, ஈகோ, காதல், மன்னிப்பு, தண்டனை ஏதும் இல்லாத இதயங்கள். உண்மையில் பரிசுத்தம் என்றால் அது குழந்தைமைதான். எங்கிருந்தது என்றே தெரியாமல் ஒரு மழைக் காலையில் ஜன்னல் விளிம்பில் நெளிந்த மரவட்டை, ரயில் பூச்சியானது ஒரு குழந்தைக்காகத்தானே? அய்யனார் குண்டில் ஊளையிடும் நரிகள் கதைகளானதும் ஒரு குழந்தைக்காகத்தானே? மரக்கிளை தூளியாவதும் சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குதப்பித் துப்பும் ஒரு சொல் காவியமாவதும் குழந்தைகளால்தானே? பிள்ளைகளின் உலகத்தில் அசிங்கம் என்பதே இல்லை. அதனால்தான் அநேகமான உலக சினிமாக்களும் கவிதைகளும் கதைகளும் குழந்தைமையையே பேசுகின்றன. தூய்மையாக வருகிற மழைத்துளி கூரையில் பட்டதும் அழுக்காக வடிவது மாதிரி ஆகிவிடுகின்றன குழந்தைமையைக் கடந்து வரும் நம் பருவங்கள்.

ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துகிடக்கும் ஒரு குழந்தைதான் மனித மனத்தின் பேரழகு இல்லையா? வந்து சேர்ந்துவிட்ட உணர்ச்சிகளை எல்லாம் எரித்துவிட்டு, குழந்தையாகிவிடத்தானே தவிக்கிறோம் எல்லோரும்? குரு அண்ணன் சிவகாசிக்குப் போய் நூறு இருநூறு காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி வந்து பாதி அறையை அடைத்து வைத்திருக்கிறான். ''மாயாவி, லக்கி லுக், டெக்ஸ்வில்லர்னு படிக்க ஆரம்பிச்சாலே சின்ன கொழந்தை ஆகிட்ட மாரி இருக்குடா!'' என்கிறான். நண்பன் வெங்கடேஷ் டாம் அண்ட் ஜெர்ரி கலெக்‌ஷன்ஸ் மொத்தமாக வாங்கி வைத்திருக்கிறான். தமிழில் ஓர் அட்டகாசமான கார்ட்டூன் அனிமேஷன் படம் எடுப்பதுதான் அவனது லட்சியம். எல்லோரும் தூங்கிவிட்ட மதியம் சமையல்கட்டு கதவில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, ''ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க... வந்து சொல்லாத ஒறவ!'' எனப் பாடிக்கொண்டு இருந்த பெரியம்மா சட்டென்று குழந்தையாகிவிட்ட மாதிரி இருந்தது. ரவுண்டு கழுத்து டிஷர்ட் வாங்கிப் போனபோது, அதைப் போட்டுப் பார்த்து அப்படி இப்படி இழுத்துவிட்டபோது சிவராஜ் சித்தப்பா குழந்தையாகித்தான் இருந்தார்.

55 வயசு கதிரேசன் பாத்ரூம் கண்ணாடியில் நின்று உதட்டைக் குவித்துக் குவித்து ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். சட்டென்று நான் உள்ளே நுழைந்ததும் வெட்கப்பட்டு ஒரு சிரிப்புச் சிரித்தாரே... அப்படியே குட்டிப் பையன் மாதிரியே இருந்தது. பெல் குவாட்டர்ஸில் பாலாஜியைப் பார்க்கப் போயிருந்தபோது டி.வி-யில் 'அன்பே வா அருகே வா... அலையே வா தலைவா வா’ என சுசீலா பாட்டு போட்டான். ''இப்போ பாரு எங்கப்பா ஓடி வருவாரு!'' என பாலாஜி சொன்ன கணத்தில் சாப்பாட்டுக் கையோடு உள்ளேயிருந்து ஓடிவந்து நின்றார் அவன் அப்பா ஒரு குழந்தை மாதிரியே. கீரந்தங்குடி திருவிழாக் கூட்டத்தில், ''போங்க போங்க... பின்னால வர்றேன்'' எனச் சொல்லிவிட்டு, போஸ்டர் தட்டிக்குப் பின்னால் நின்று கலர் பாயசம் குடித்துக்கொண்டு இருந்த சம்பத் குழந்தை இல்லாமல் வேறென்ன? அநேக உணர்ச்சிகளை, நியாய அநியாயங்களைக் கடந்து வந்துவிட்ட பிறகு, அழுகையும் சிரிப்பும் காற்றும் இசையும் மட்டும் நிறைந்திருக்கிற பரிசுத்தத்துக்குள் போய் ஒருகணம் ஒளிந்து கொள்கிற கைக் குழந்தை நம் ஒவ்வொருவருக்குள்ளும் தூங்கிக்கொண்டு இருக்கிறது.

கடலூர் ஜெயிலிலில் இருந்து ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்த பாலு, ''மனசுல ஒண்ணுமே இல்லைங்க... புதுசா ஒரு வாழ்க்கை வாழணும்னு ஆசப்படறேன். எங்கேயாவதுகூடப் போயிடறேங்க!'' என அழுதபோது எவ்வளவு குழந்தைமை இருந்தது அவருக்குள்? ஆஜானுபாகுவாக இருக்கிற ரத்தினம் அர்த்த ராத்திரியில் வந்து, ''அவரு என்னை மன்னிச்சா போதும்ரா... மன்னிச்சா போதும்ரா!'' என அழுதபோது பச்சப்புள்ள மாதிரிதான் தோன்றியது.

ஒரு டாக்குமென்டரிக்காக திருச்சியில் இருக்கிற முதியோர் இல்லத்துக்குப் போயிருந்தபோது, அவ்வளவு பேரும் சாயங்காலம் செஸ் விளையாடிக்கொண்டும் பஜனை பாடிக்கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொன்றும் குழந்தைதான். பாதம் வெடித்து, தசைகள் சுருங்கி, கண்கள் இடுங்க ''ஒன்னப் பாக்க கொணாளன் மாரியே இருக்கு!'' என்றது ஒரு குழந்தை. ''மதுர போறன்னா திண்டுக்கல்ல தாண்டித்தான    போவ... இத எங்கூட்ல குடுத்துட்றியா?'' என்றபடி ஒரு பாலிதீன் பையில் அங்கே பறித்த கீரையைக் கொண்டுவந்து கொடுத்தது ஒரு குழந்தை. என்னவோ வீட்டைப் பற்றிப் பேச, கோடிட்ட கன்னமெல்லாம் ஈரம் படர்ந்து நின்றது இன்னொரு குழந்தை. வெளியே வந்த பிறகு உள்ளே கோரஸ் குரலில் பஜனை கேட்டது, 'கண்ணா எனதருமை கண்ணா... ஏழை நெஞ்சம் குழந்தையல்லவா... ஏந்திக்கொள்ள வாடா!’

எனக்கு ராமநாதபுரத்தில் பார்த்த ஒரு காட்சி, அடி மனதில் ஆயுளுக்குமான பெயின்டிங்போலத் தங்கிவிட்டது. நண்பனின் குழந்தை காது குத்துக்குப் போனபோது, கோயில் மண்டபத்தில் தொண்ணூறு வயசுக்கு மேல் இருக்கும் ஒரு பழுத்த ஆத்தா உட்கார்ந்திருந்தது. புருவம் எல்லாம் நரைத்து பஞ்சு பஞ்சாகச் சுருங்கிய உடலோடு நடுங்கியபடி உட்கார்ந்திருந்த அதன் மடியில், பூப்போலப் பிறந்து ஒரு மாதமான  குழந்தையைக் கிடத்தியிருந்தது. சாதாரண விஷயம்தான். ஆனால், அந்தக் காட்சி ஏதேதோ செய்துவிட்டது.

'நாலஞ்சு தலமொற பாத்த கெழவி... குடும்பத்துல ஒவ்வொரு புள்ள பொறக்கும்போதும் இதுதான் பாத்துக்கிச்சு... எத்தன உசுருங்க... இப்போ அதுக்கு முடியல... அதுவும் ஒரு கொழந்தையாதான் ஆச்சு. கால்ல தூக்கிப்போட்டு எடுத்துக்குறோம்!'

- என்றார் நண்பனின் சொந்தக்காரர். அந்த ஆத்தாவின் கண்களில் இன்னும் ஏழு ஜென்மத்துக்கான குழந்தைமை இருந்தது. குழந்தையாக வந்து குழந்தையாகப் போகும் நெடுநாளில் எல்லோரும் மறுபடியும் நமது அறிவற்ற பிராயத்தைத்தான் தேடிக்கொண்டே இருக்கிறோம் இல்லையா?

வட்டியும் முதலும் - 58
வட்டியும் முதலும் - 58

'அந்தக் குட்டிப் பாப்பா விடும் பேப்பர் கப்பலில் கரை சேர்ந்துவிடக்கூடும் இந்த மானுடம்!’ என்ற ரெஸ்வானின் கவிதை இப்போதும் நினைவில் கிறுக்கலாகிறது.  

திருப்பூரில் நண்பர் ஜெயபாலுக்கு உடல்நிலை சீரியஸாகி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தபோது பார்க்கப் போயிருந்தேன். பனியன் கம்பெனியில் என்னோடு வேலை பார்த்தவர். மதியங்களில் அவர் வீட்டில் இருந்து எப்போதும் எனக்கும் சேர்த்துச் சாப்பாடு எடுத்து வருவார். ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டுப் போய்விடுவார். ''வூட்ட விட்டு தனியா இருந்தோம்னு வையி... வெறுமையா கெடக்கும். அதான் இங்க ஒன்ன கொண்டு வந்துர்றேன்!'' என்றபடி வீட்டிலேயே தண்ணியடிப்பார். அவர் மனைவி எதாவது கொண்டுவந்து வைத்துக்கொண்டே இருப்பார். அவ்வளவுதான் அந்தக்காவைப் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை கோயில் வாசலில்வைத்து, ''நீ போய் சாமி கும்பிட்டுக் கௌம்பு... நான் முருகன்கூட மன்றம் வரைக்கும் போயிட்டு வாரேன்!'' என்றபோது கொஞ்சம் கோபமாக முறைத்துவிட்டுப்போனது அக்கா. இப்போது ஆஸ்பத்திரியில் அவரைப் பார்த்தபோது என்னைப் பக்கத்தில் அழைத்தவர் பொசுக்கென்று என் கையைப் பிடித்துக்கொண்டு, ''ஒங்கக்காவுக்கு நான் ஒண்ணுமே பண்ணலைடா... ஒண்ணுமே பண்ணலைடா... அது மட்டும்தான்டா பாரமாக் கெடக்கு!'' என அழ ஆரம்பித்துவிட்டார். அப்போதுதான் அந்தக்கா உள்ளே வந்தது. இவர் அழுவதைப் பார்த்ததும் பதறிப்போய் வந்ததை, சட்டென்று இழுத்து உட்கார்த்தி, அது மடியில் படுத்து விசும்ப ஆரம்பித்துவிட்டார். அது அவர் தலையைக் கோதிக்கொண்டு, ''ச்சூ... என்னது...'' என அதட்ட ஆரம்பித்தது. நான் பட்டென்று வெளியே வந்துவிட்டேன்.

ஒருமுறை தடாலென உள்ளே நுழைந்தபோது, அடுப்பங்கரை இருட்டில் கணபதி சித்தப்பா மடியில் கண்ணீரோடு கிரிஜா சித்தி சாய்ந்திருந்த காட்சி நினைவில் எழுந்தது. இப்போது ஜன்னலில் ஜெயபால் அந்தக்கா மடியில் கிடந்த சித்திரம் உறைந்துவிட்டது. காதல், காமம் எதிர்பார்ப்பு வேறெதுவும் இல்லை. அது குழந்தைமை. ஏதுமற்ற குழந்தைமையின் கண்ணீர். ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் குழந்தைமையை மீட்டுக்கொள்கிற அநேக தருணங்கள் வாய்த்துக்கொண்டே இருக்கின்றன. சந்தோஷங்களிலும் துயரங்களிலும் அது நிகழ்வதற்கான கணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. பல நேரங்களில் அறிவும், கோபமும், ஈகோவும் நமது குழந்தைமையின் மேலே ஏறி நின்றுகொள்கின்றன பெரிய மனிதர்களின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு!

இப்போது வீட்டுக்குள் நுழையும்போது பொன்மலர் விளையாடிக்கொண்டு இருக்கிறாள்...

''ஏய்! காலைல ஸ்கூல்தானே? போய் சீக்கிரம் படு!''

''இல்லையே... ஸ்கூல் இல்லையே... நேத்திக்கு லீவாச்சே!'' என்றபடி ஓடுகிறாள். நாளையையும் நேற்றையும் சர்வ சாதாரணமாக இடம் மாற்றிப் போட்டு பொம்மைகளைப் போல விளையாடும் அவளைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. என்னதான் செய்ய முடியும்... ஒருக்காலும் நேற்றைக்குள் நுழையவே முடியாத நம்மால்!

- போட்டு வாங்குவோம்...