மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 59

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

கடவுள்கள் பிச்சை எடுக்கும் ஒரே தேசம் இந்திய தேசம்தான். நேற்றுகூடப் பார்த்தேன். வடபழனி சிக்னலை ஒட்டி அனுமாரும் கிருஷ்ணரும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்காக ப்ரே பண்றீங்களா..?' - போனை வைப்பதற்கு முன்பு பொசுக்கென்று கேட்டாள் கோமதி. துபாயில் வேலை பார்க்கிற புதுக்கோட்டைத் தோழி. விவசாயம் பொய்த்து, அப்பாவும் இறந்த பிறகு, குடும்பத்தைச் சுமக்க வெளிநாட்டுக்கு வீட்டு வேலை பார்க்கப் போனவள்.

த.மு.எ.க.ச. கலை இரவு, தஞ்சாவூர் புத்தகக் கடை என நாலைந்து தடவைதான் நேரில் பார்த்திருப்போம். அப்புறம் எல்லாம் அலைபேசி நட்புதான். ஒருமுறை ஏகப்பட்ட மூன்றுகளோடு வந்த விசித்திர எண்ணை எடுத்தபோதுதான் அவள் துபாய் போனதே தெரியும். இலங்கைத் தமிழ்ப் பெண், இந்தோனேஷியப் பெண் இருவருடன் அங்கே அறை எடுத்துத் தங்கி இருக்கிறாள். அவளுடைய அத்தனை கஷ்டங்களும் எனக்குத் தெரியும். ஆனால், கஷ்டங்களைக்கூட சிரிக்கச் சிரிக்கத்தான் பேசுவாள். போன வாரம் பேசும்போது ஏதேதோ பேசிவிட்டு ஒரு மௌனத்துக்குப் பிறகு சம்பந்தமே இல்லாமல் இப்படிச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்: ''எனக்காக ப்ரே பண்றீங்களா..?'

ஊத்துத் தண்ணீர் மாதிரி குபுக்கென வந்துவிட்டன அந்த வார்த்தைகள். இமைகளில் ஒட்டிக்கொண்ட கண்ணீரைப் போல பிசுபிசுக்கின்றன இன்னும். கொஞ்ச நேரம் கண்களை மூடி அவளை நினைத்துக்கொண்டேன். அவள் பெயர் எழுதிய ஒரு துண்டுச் சீட்டைக் கடவுளின் முன்பு வீசுகிற மாதிரி. கோடிக் கோடித் துண்டுச் சீட்டுகள் அனுதினமும் கொட்டிக்கொண்டே இருக்கும் கடவுளின் பால்வெளியில் அது எங்கே விழுந்திருக்கும்? எங்கெங்கோ இருக்கிறவர்களுக்காக எங்கெங்கோ இருக்கிறவர்களின் பிரார்த்தனைகள்தான் காற்றெங்கும் நிறைந்திருப்பதாக இக்கணம் உணர்கிறேன்.

'ஐ ப்ரே ஃபார் யூ’ என்ற முகமறியாத் தோழியின் குறுந்தகவல் ஒவ்வொரு காலையிலும் என் மொபைலில் ஒளிர்கிறது. சாலையில் ஆம்புலன்ஸ் கடக்கும்போதெல்லாம் சடுதியில் கண்களை மூடி முணுமுணுக்கும் வண்டிக்காரர்கள் எத்தனை பேர் இருக்கிறோம்? பெசன்ட் நகர் சர்ச் வாசல் அடைத்து எவ்வளவு பிரார்த்தனைகள் உருகிக்கிடக்கின்றன ஒவ்வொரு மாலையும்? வனக் கோயில் புலச்சி மடியில் நிறைந்துஇருந்த பன்றிக் கறித் துண்டுகளுக் குள் எவ்வளவு வேண்டுதல்கள் கிடந்தன? சென்னியாண்டவர் கோயில் நடையை அடைக்கிற நேரம் லோகம்மா கூட்டி அள்ளுகிற மலர்ச் சருகுகள் எவரெவருடைய பிரார்த்தனைகள்? குழந்தைகளும் பெண்களும் சிதறிக்கிடந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், ரத்தத்தோடு ஒரு சகோதரி வானம் பார்த்துக் கும்பிட்டு அழும் புகைப்படத்தை எனது அறையில் வைத்திருக்கிறேன்; தீரவே தீராத ஒரு பிரார்த்தனையின் கொடும் நினைவுகளோடு.

வட்டியும் முதலும் - 59

ஜெமினி லிட்டில் ஃப்ளவர் ஸ்கூலில், 'இதயத்தால் பேசுவதைக் கடவுள்கூட புரிந்துகொள்வார்’ என எழுதப்பட்ட சுவருக்குப் பக்கத்தில் ஒரு தாய் கை தட்டும் ஓசைகளுக்கு எல்லாத் திசைகளிலும் வந்து சாப்பாடு வாங்கிக்கொண்டு இருந்தாள் பார்வையற்ற சிறுமி ஒருத்தி. வாசலில் எஃப்.எம். கேட்டுக்கொண்டு இருந்த வாட்ச்மேனுக்கு கொய்யாப் பழம் பறித்துக் கொடுத்தான் செவிகேளா ஒரு சிறுவன். பார்க் ஹோட்டலின் கீழே பிளாட்ஃபார்மில் கையில் செருப்பை மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ஒரு பைத்தியக்காரி. பாம்குரோவ் பக்கம் ஒரு குரோட்டன்ஸ் அடியில் மழைச் சேற்றில் சுருண்டுகிடந்தான் ஒருவன். எக்மோர் ஜி.ஹெச்சில் உயிருக்குப் போராடும் இரண்டு மனிதர்களின் கட்டில்களுக்கு நடுவே கைகளை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் ஒரு தேவகுமாரி. பரங்கிமலை ஸ்டேஷனில், மரப் பலகையை உருட்டிக்கொண்டு வந்த ஒரு ரோகி, ''வேண்டுதலை வாங்கிக்கொள்ளப்பா... எங்கள் வாழ்வுக்கொரு வழியைச் சொல்லப்பா...' எனப் பாடிய பாடலை எடுத்து வந்துவிட்டேன்; எல்லோருக்குமான பிரார்த்தனையாக.

கடவுள்கள் பிச்சை எடுக்கும் ஒரே தேசம் இந்திய தேசம்தான். நேற்றுகூடப் பார்த்தேன். வடபழனி சிக்னலை ஒட்டி அனுமாரும் கிருஷ்ணரும் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

இது ரொம்பவும் பழக்கப்பட்ட விஷ§வல்களாகிவிட்டன. அவர்கள் சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய பிளாட்ஃபார்மில் படுத்து உறங்கி, கூவக் கரையில் ஒதுங்கி, கட்டணக் குளியலறையில் குளித்து, அதிகாலையில் கடவுள்கள் ஆகின்றனர். ''உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி' என ஒலிக்கும் மொபைலை எடுத்து, ''லூஸுச் செறுக்கி... டூட்டில இருக்கேன்' எனக் கிசுகிசுக்கின்றனர். தேவர் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, வடபழனி முருகன் கோயில் வாசலில் சாய்ந்து, ''யப்பா முருகா...' என அவர்கள் கையெடுத்துக் கும்பிட்ட காட்சியை ஒரு முறை பார்த்தேன். அப்போதே மனம் தறிகெட்டு யோசித்தது... எல்லோருக்குமான பிரார்த்தனைகளைச் சுமக்கும் கடவுளின் பிரார்த்தனை என்னவாக இருக்கும்? 'ஆளை விடுங்கடா சாமீ...’ என்பதா?

ஒரு நாள் செந்தில்நாதன்தான் சொன்னார்: ''என்னவா இருக்கும்? 'மனிதர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று... மதங்களை நானே பார்த்துக்கொள்கிறேன்’கிறதா இருக்கும்.''

உண்மையிலேயே வேண்டுதல் என்பது என்ன? பாவம் செய்துவிட்டு ஜாமீன் கேட்பதா? அதைச் செய்... இதைச் செய்... என மனுப் போடுவதா? பிறத்தியாருக்கு நல்லது நினைப்பதும் செய்வதும்தானே வேண்டுதலும் பிரார்த்தனையும்?

உண்மையில் பிரார்த்தனை என்பது பக்தியா என்ன? அது நம்பிக்கை. நல்லவைக்கான தவிப்பு. பெரியாரின் பிரார்த்தனை... சமூக மீட்பு. பிரபாகரனின் பிரார்த்தனை... சுதந்திரம். இளையராஜாவின் பிரார்த்தனை... இசை. தெரசாவின் பிரார்த்தனை... மனிதநேயம். புதுமைப்பித்தனின் பிரார்த்தனை... எழுத்து. ஜீவாவின் பிரார்த்தனை... சமத்துவம். ஃபூகோவின் பிரார்த்தனை... இயற்கை. மேதா பட்கரின் பிரார்த்தனை... உரிமை.

இப்போது இடிந்தகரையில் மாதா கோயிலின் முன்பு கைகளை விரித்தபடி வேண்டுகிற ஏழைத் தாய்களின் பிரார்த்தனைகள் என்னவாகும்? தங்கள் மண்ணை, உயிரை, தலைமுறைகளைக் காப்பாற்றிக்கொள்ளும் எளிய மக்களின் பிரார்த்தனைகளை எப்போதுதான் கேட்கப்போகிறாய் சாமி? காலங்காலமாக இவர்களின் பிரார்த்தனைகளைக் கசக்கி எறிந்துவிட்டு, அதிகாரம் தரும் தங்கக் கிரீடங்களைத்தானே சூடிக்கொள்கிறாய்? பணத்தையும் அதிகாரத்தையும் முன்வைத்து எளியவர்களின் உயிர்களை நசுக்கும் அரச பயங்கரவாதத்தின் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கடவுளே நீ யார்? திருப்பதி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு புன்சிரிப்போடு போன ராஜபக்‌ஷே உன்னிடம் என்ன பிரார்த்தித்தார் பெருமாளே? மூன்று லட்சம் அப்பாவி உயிர்களை உன் உண்டியலில் போட்டாரா? ஏழைகளின் வேண்டுதல்கள் இறைந்துகிடக்கிற பெரும் பிராகாரத்தில், நிராசைகளே கற்பூரங்களாக எரிகின்றன எப்போதும்.

அய்யப்பன் கோயிலுக்குப் போகும்போது, ''இத உண்டியல்ல போட்ருடா... பதிக்குப் பொண்ணு தகைஞ்சுரணும்னு...' என நச்சோனையாத்தா மஞ்சள் துணியில் முடிந்து கொடுத்த காசை சபரிமலை உண்டியலில் போடும்போது, எவ்வளவு கைகள் நீண்டன? திருப்பதி போகும்போது விவேக் கொடுத்த பத்து ரூபாய், அம்முவின் புற்றுநோய்க்காக. அவ்வளவு அழகான அம்மு? மொட்டைத் தலையோடு கேன்சர் இன்ஸ்டிட்யூட் வாசலில் வைத்துப் பார்த்தபோது புன்னகை தளும்ப, ''மண்டைலயே குட்டுவேன்...' என்ற அம்முவுக்கான பத்து ரூபாயை உண்டியலில் போட்டபோது மனசு தவித்தது.

''அவ நல்லாருக்கணும்... போற எடத்துல சந்தோஷமா இருக்கணும்' என நன்முல்லைக்காகத் தமிழ்ச்செல்வன் வேண்டிக்கொண்டு நின்றது காதலின் மகா சமுத்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாத பிரார்த்தனை உப்பு. உடல் முழுவதும் தொட்டில் கட்டிக்கிடந்த பிராகார மரத்தை, தாயத்துகள் குவிந்துகிடந்த தர்ஹா குளக் கரையை, ரத்தம் தோய்ந்துகிடந்த ஆணிப் படுக்கையை, தோல்கள் ஒட்டிக்கொண்டு இருந்த ஒரு கசையை, நீர்க் கரை எல்லாம் இறைந்துகிடக்கும் முடிகளை ஒவ்வொரு நாளும் கடந்து போய்க்கொண்டே இருக்கின்றன தெய்வங்கள்!

வட்டியும் முதலும் - 59

யார் யாருக்கோவான பிரார்த்தனைகள் நம்மிடமும் நமக்கான வேண்டுதல்கள் யாரிடமோ இருப்பதும்தான் இந்த ஜீவிதத்தின் அழகு. ''இன்னைக்கு உங்களுக்காக வேண்டிக்கிட்டேம்ப்பா' என தாரிணி காலையில் சொன்னபோது, ''கோமதிக்காகவும் வேண்டிக்க' எனச் சொல்லத் தோன்றியது.

ஒரு நண்பனின் மனைவிக்கு மனநலன் குன்றிவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, கை கால்களை முறுக்கிக்கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொள்கிறார். தெருவே எழும்பக் கத்துகிறார். மாறி மாறி ஆஸ்பத்திரிகளுக்குப் போயும் சரியாகவில்லை. யாரோ சொல்லி கேரளத்தில் பகவதி அம்மன் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான். அங்கே சாட்டையால் அடித்து, நெருப்புவைத்து ஏதேதோ செய்திருக்கிறார்கள். இவன் கண் முன்னாலேயே துவண்டுகிடந்தவரை வீட்டில் கொண்டுவந்து போட்டிருந்தார் கள். நான் போய்ப் பார்த்துவிட்டு கண்டபடி திட்டினேன். ''நீயெல்லாம் மனுஷனாடா... என்னடா பண்ணிட்டு வந்திருக்க?' என்ற தற்கு அவன் சட்டென்று என் கையைப் பிடித்துக்கொண்டு அழுதான்.

''என்ன பண்றதுனு தெரியலைடா. எல்லாம் பண்ணியாச்சு. ஒண்ணும் நடக்கலை. பாக்க முடியல. அதான் இதையும் பண்ணிப்பார்த்துரலாம்னு...' அவன் பெரியப்பா வந்து அவனை ஓங்கி ஓர் அறைவிட்டார். ''கம்னாட்டி அந்தப் புள்ளைய நா கொண்டுபோறண்டா...' என அவரே ஊருக்கு அழைத்தும் போய்விட்டார். சமீபத்தில் அவனைப் பார்த்தபோது தெளிந்து இருந்தான். ''அவளுக்கு நல்லாயிருச்சுறா... ஊர்லதான் இருக்கா. தெனமும் போன் பண்ணிப் பேசுறா. முந்தாநேத்திக்குத்தான் ஊருக்குப் போய் நேர்த்திக்கடன் பண்ணிட்டு வந்தேன்' என்றான் சிரிப்போடு. நல்லதுகளையும் கெட்டதுகளையும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் விட்டுவிட்டு நம்மால் எங்கே போக முடியும் என நினைத்துக்கொண்டேன்!

நியூஸ் பேப்பரின் 'டீசல் விலை உயர்வு’ செய்தியில் இருந்து தொடங்கும் இந்த நாள், இன்னும் பல இம்சைகளை வைத்திருக்கக்கூடும். ஆனால், ஒவ்வொரு நாளும் டெலிட் செய்தாலும் அடுத்த விடியலிலும் அந்தக் குறுந்தகவல்தான் என்னை எழுப்பிவிடுகிறது... 'ஐ ப்ரே ஃபார் யூ!’

- போட்டு வாங்குவோம்...