மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 60

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு 48 நாட்களும் அதிகாலையில் எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு ஒரு வாழ்க்கை வாழ்வோமே... அது அத்தனை போதையானது.

ரு நண்பன்... நான்கு வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்தேன். நேற்று அவனுக்கும் எனக்கும் நடந்த சீன் இது.

 ''டேய்... நான்தான் பேசறேண்டா...''

''ஹேய் மச்சான்... இப்ப யோகா க்ளாஸ்ல இருக்கேன்... கூப்பிடுறேன்...''

அதிகாலையில் போன் அடித்தவனுக்கு, என் பதில் ஷாக் அடித்தது. ''என்னது, யோகா க்ளாஸா... நீயா..?'' என அடுத்த தெரு வரைக்கும் அலறினான். ''வில் கால் யூ பேக்டா...'' என கட் செய்தேன் (இந்த இங்கிலீஸுக்கு இன்னும் டர்ர்ர்ராகி இருப்பான்). கொஞ்ச நேரம் கழித்துக் கூப்பிட்டால், ''காலைல 6 மணிக்கு யோகா க்ளாஸா? என்னடா சொல்றே?'' என மறுபடி பதறினான். நண்பர்கள் 'நல்லவர்கள்’ ஆவதை நண்பர்களால் ஜீரணித்துக்கொள்ள முடிவதே இல்லை.

ஃபாஸ்ட் கட்டில் அவனது மண்டைக்குள் திருவல்லிக்கேணி மேன்ஷன், கம்ஃபர்ட் பார், பீஃப் கறி, பாண்டி பஜார் நெய் பரோட்டா, நைட் ரவுண்ட்ஸ், மொட்டை மாடி நடனங்கள்... எல்லாம் சடசடத்து மறைந்திருக்கும்.

''இன்னைக்குத்தான் சென்னை வந்தேண்டா... ஈவினிங் எங்க பாக்கலாம்?''  

''நீ எங்க இருக்க?''

''மயிலாப்பூர்ல...''

''இன்னைக்கு வியாழக்கெழம... மயிலாப்பூர் சாய்பாபா கோயில் வந்துரு...'' என்றேன் வேண்டும் என்றே. ''எது சாய்பாபா கோயிலா..? அதான் லேண்ட் மார்க்கா..? பக்கத்துல என்ன பார் இருக்கு..?''

''மொதல்ல அங்க வாடா...'' எனில், எனக்கும் அவனுக்குமான பூர்வஜென்ம பந்தம் அப்படி. கூடுவதே குடிப்பதற்காகத்தான் என்பதே எங்களின் ஒரு வரி ஃப்ளாஷ்பேக். ''நண்பா... ஒரு பேபா...'' என்பான் அடிக்கடி ஒரு சிகரெட்டை உருவிக்கொண்டு. 'பேபா’ என்றால் பேருக்குப் பாதி... ஒன் பை டூ!

அவன் என் மேன்ஷன் தோழன். நான்கு வருடங்கள் கூடிக் கும்மியடித்தோம். சரக்கு, சிகரெட், காதல்கள் பகிர்ந்துகொண்ட நட்பு. அதன் பிறகு வேலைக்கு நைஜீரியா பக்கம் போனவனை நான்கு வருடங்களுக்குப் பின் இன்றுதான் பார்க்கிறேன்.

சாயங்காலம் சாய்பாபா கோயிலில் பார்த்ததும், ''டேய்! ஆளே மாறிட்ட... வெய்ட் லாஸாகி... ப்ரைட்டாகிட்டடா...'' என்றான் ஆச்சர்யமாக. அவன் எக்கச்சக்கமாக வெயிட் போட்டு இருந்தான். கண்களில் ஒரு நிரந்தரப் போதை சுழித்திருந்தது. ஓரமாக தள்ளிக்கொண்டு வந்து, ஒரு ஃபாரின் சிகரெட்டை உருவி, ''நண்பா... பேபா...'' என்றான். ''ஸாரி மச்சான்... சிகரெட் பிடிக்கறதில்ல...''

''காமெடியா..? இந்தா அட்றா...''

''இல்ல மச்சான்... சீரியஸாத்தான்... ஃபோர் இயர்ஸ் ஆச்சு...''

சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தால், ''பக்கத்துலயா தூரமாடா... ஆட்டோ பிடிச்சுருவோமா..?'' என்றான் ஆர்வம் மினுங்க. ''பக்கத்துலதாண்டா...'' என்றபடி சுகநிவாஸுக்கு அழைத்து வந்து, ''ரெண்டு காபி...'' என்றேன்.

''இப்ப எதுக்குரா காபி... டைம் ஆகிருச்சு... பாருக்கே போயிரலாம்...''

வட்டியும் முதலும் - 60

''பாரா..? நான் தண்ணியடிக்கிறது இல்லடா... ஒரு காபி சாப்பிட்டு பக்கத்துல ராமகிருஷ்ணா மிஷன் இருக்கு... அங்க போவோம்... நல்ல வைப்ரேஷன் இருக்கும்!''

''வேணாம்... வேணாம்... நா அடிக்கிறேன்... சும்மா கம்பெனிக்கு வந்து உக்காரு...'' என்றான் கொலை வெறியாகி. பாரில் கடைசி வரை நான் சாலட்டையும் ஜூஸையும் ருசிக்க, அவன் மப்பில் என் உள்ளங்கையை ஏந்தி எக்கச்சக்கமாகக் கிஸ் அடிக்க ஆரம்பித்தான். ''மச்சான்... எப்டிடா..? எப்பிட்றா விட்ட..? நானும் ட்ரை பண்ணி ட்ரை பண்ணிப் பாக்குறேன்... முடிய மாட்டேங்குதே... ம்...'' என்றவன் ஏழாவது ரவுண்டில், ''த்தா... ஆஸ்காரு... ஆஸ்காரு வாங்கிட்டு நீ வரும்போது நான் ஒரு ட்ரீட் குடுப்பேன்... அன்னைக்கு ஒரு நாள் மட்டும் நீ குடிக்கணும்!'' என்றவன், சட்டென்று அழ ஆரம்பித்தான். ''குடிக்கலைன்னா தூக்கம் வர மாட்டேங்குது... நெனப்பு அரிக்குது... அத்தனையும் ஞாபகத்துக்கு வருது... மண்டை கொய்ய்ங்குது... என்னாடா பண்றது..?''

நள்ளிரவுக்கு மேல் அவனை ஆட்டோ பிடித்து அனுப்பிவிட்டுத் திரும்பினேன். அப்போதுதான் தோன்றியது... இப்படி எத்தனை எத்தனை இரவுகளை வெற்றுக் கூச்சல்களோடும் நம்பிக்கைகளோடும் தொலைத்திருக்கிறோம்? உடலை யும் மனதையும் வதைத்திருக்கிறோம்? எவ்வளவு இதயங்களை இம்சித்து இருக்கிறோம்? விடியல் களை இழந்து இருக்கிறோம்? அவற்றில் இருந்து மீண்டுவிட்ட இந்த இரவுக்குள் அந்த நண்பனும் வர வேண்டும் என நினைத்துக்கொள்கிறேன்.

''கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல... பட்டெனத் தூக்கி வீசிவிடு'' என்கிறார் பரமஹம்சர். நானும் அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் புகையையும் மதுவையும் தூக்கி வீசினேன். அந்த நண்பன் சொன்னதைப் போல அப்போது எனக்கு முன்பு வந்து நின்ற பெரும் சவால்... இந்த வெற்றிடம்தான்! நேரமே போகாமல், மனதைத் தவிக்கவைக்கும் வெற்றிடம். அடுத்து என்ன செய்வது எனப் புரியாத தவிப்பும் குழப்பமும். ஏக்கம், பிரிவு, கவலை, கண்றாவி என நமது அத்தனை உணர்ச்சிகளையும் லாகிரி வஸ்துக்களிடம் அடகுவைத்துவிட்டோம் என்பதே அப்போதுதான் புரிந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கும் அடுத்து நாம் செய்வதற்கும் எத்தனை எத்தனை அற்புதங்கள் இருக்கின்றன? எழுத்து, வாசிப்பு, இசை, சினிமா, நல்ல உரையாடல்கள், பயணங்கள், வேலை, உணவு, யோகா, உடற்பயிற்சி என எவ்வளவோ விஷயங்கள்... அத்தனையும் போதைதான் என்பதை இப்போது உணர்கிறேன்!

''நாம பண்ண சீனுக்கு தியேட்டர்ல ஆடியன்ஸ் கை தட்னாங்கன்னா... அப்ப ஜிவ்வ்வுனு இருக்கும் பாருங்க... அதான் உண்மையிலேயே போதை...'' என்பார் லிங்குசாமி சார். ''உதவி பண்றதே ஒரு போதைதாங்க... யாருக்காவது எதாவது பண்ணிட்டா கிறுகிறுனு சந்தோஷமா இருக்கும். யாராவது வாழ்த்திட்டா பொசுபொசுனு பூத்துக்கும். அதை உணர்ந்துட்டா நாலு பேருக்கு எதாவது பண்ணிக்கிட்டே கெடப்போம்ங்க!'' எனத் தோழர் அருளானந்தம் ஒருமுறை சொன்னபோது, அடடா... இதெல்லாம்தானே போதை என உணர்ந்தேன். ''த்தா... வலியை மறக்கக் குடிக்கிறியா... உங்கம்மாவுக்கும் எங்கம்மாவுக்கும் இல்லாத வலியாடா...'' என எப்போதோ சரோ சிம்பிளாகச் சொல்லிவிட்டுப் போனது, இப்போதும் எக்கோ அடிக்கிறது. எங்கோ, யாருக்கோ நாம் உருவாக்கும் கண்ணீரும் புன்னகையும்கூடப் போதைதான்.

வட்டியும் முதலும் - 60
சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு 48 நாட்களும் அதிகாலையில் எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு ஒரு வாழ்க்கை வாழ்வோமே... அது அத்தனை போதையானது.

இருமுடி கட்டிக்கொண்டு பரதேசியாகக் கிளம்பும் பயணம்... ஆன்மிகம் தவிர்த்தும் ஓர் அற்புதம். இந்த மனசையும் மனிதர்களையும் இருமுடியாகக் கட்டிக்கொண்டு ஆயுசுக்கும் பரதேசியாக வாழ்வதே ஆகச் சிறந்த போதைதான்! ''சுரண்டல் அரசே சுரண்டல் அரசே... அந்நிய சந்தையில் மக்களை விற்காதே...'' எனத் தகிக்கும் தார் சாலையில் கோஷம் போட்டுத் திரும்பும்போது வரும் ஒரு சின்ன நிறைவும், போதைதான்.

ரயில் பயணத்தில் எதிரே இருப்பவரின் பையில் சட்டென்று கிடைத்துவிடும் அசோகமித்திரன் புத்தகம் எல்லா வெற்றிடங்களையும் நிரப்பிவிடும். அதுவும் இல்லை என்றால், ஜன்னல் மரங்கள். ஆரஞ்சு வானம். நிலையத்தில் கடக்கும் மனித முகங்கள். பாடல்கள் கரையும் குரல்கள். இந்த எழுத்தும் கலையும் மனிதர்களும் எனக்குள் நிறைந்துகொண்டே இருக்கிறார்கள்... என் எல்லா வெற்றிடங்களையும் முழுமையாக்கிக்கொண்டே!

மதுவும் புகையும் தரும் போதை... கொண்டாட்டமும் விளையாட்டுமாகக் கடந்துபோகிறது... சட்டென்று ஒரு நிறுத்தத்தில் நிகழும் மரணம்தான் எவ்வளவு கொடூரமானது? நெசப்பாக்கத்தின் ஒண்டுக்குடித்தன வீட்டின் பாத்ரூமில் இறந்துகிடந்த தமிழ்மணி அண்ணனை இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்டெடுத்த கணம் எத்தனை பயங்கரமானது? 'கிருஷ்ணா எக்ஸ்பயர்டு’ என ஒரு குறுந்தகவல் என் மொபைலில் ஒளிர்ந்த நொடி எத்தனை கோரமானது?      தஞ்சாவூர் பெரியாஸ்பத்திரியில் மூச்சற்ற அப்பாவின் முகம் பார்த்து, 'தங்கமே...’ என அம்மா அழ ஆரம்பித்த கணம் எவ்வளவு கனமானது? கண் முன்னே வாழ வேண்டிய உயிர்களை வாரிக்கொண்டுபோன காலம்... உயிர்களின் உன்னதத்தை உணர்த்திக்கொண்டே இருக்கிறது!

கெட்ட பழக்கங்களை விடுவதே ஒரு போதை தான். ''அவரு இப்போ தண்ணி எல்லாம் அடிக்கறது இல்ல...'' ''ஆமாமா... மொகத்தைப் பாத்தாலே தெரியுதே... இப்பத்தான் தெளிவா இருக்கு...'' என யாராவது பேசும்போது மனசு உற்சாகமாகும். ''நான் அப்போலாம் அப்பேர்ப்பட்ட பொம்பளப் பொறுக்கிங்க... 'எம் பொண்டாட்டிய விட்டுர்றா’னு ஒரு ஆளு நடுரோட்ல என் கால்ல விழுந்தான். எனக்கு எல்லாம் மன்னிப்பே கெடையாது... எங்கம்மா அவ்ளோ அழுதுருக்கு, என்னை நெனைச்சு. பாலகுமாரன் சார் எழுத்தைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எல்லாத்தையும் விட்டு வெளில வந்தேங்க... ஒருத்தி கூப்பிட்டானு அப்பிடி ஒருநாள் போனேன்.

தெரு முக்கு திரும்பினப்போ மனசு வரட்டுனு புடிச்சு நிறுத்துச்சு. சைக்கிளைத் திருப்பிக்கிட்டு ரெண்டு கிலோ மீட்டர் தூரம் மூச்சிரைக்க வந்து நின்னு பாத்தேன்... அப்பிடியே காலரைத் தூக்கிவிட்டு உள்ள ஒரு பெருமை பொங்கிட்டு வந்துச்சு... நீ கரெக்ட்ரானு ஒரு பெரும... இன்னைக்கு வரைக்கும் ஒய்ஃப் மட்டுந்தான்... உண்மையா இருக்கேங்க!'' என்றார் ஒரு நண்பர் டீக்கடையில் வைத்து.  

கெட்ட பழக்கங்கள் என்றால் லாகிரி வஸ்துக்கள்தானா? சொல்லப்போனால், கொண்டாட்டங்களைத் தாண்டி குடும்பங்களையும் மனசையும் கெடுக்கும்போதுதான் அவை அப்படி ஆகின்றன. சுரண்டலும், திருட்டும், பொய்யும், வன்மமும், வஞ்சமும் எவ்வளவு பெரிய கெட்ட பழக்கங்கள்? காலையில் எழுந்ததும் பவர் ஸ்டார் கைதும் 'மன்மோகன் சிங் அறிக்கையும்தான் கண்ணில் படுகின்றன. கீழ் ஃப்ளாட் சண்டையும் எஃப்.எம். கடிகளும் காதில் கேட்கின்றன. யார் யாரிடமோ எப்படியும் சில, பல பொய்கள் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது. காந்தி சொன்ன குரங்குகளாக வாழ்கிற வாழ்க்கை எல்லோருக்குமா வாய்க்கிறது?

வழி எங்கும் கெட்டதுகளை நம் ஐம்புலன்களிலும் ஏற்றிக்கொண்டே இருக்கிறது இந்தச் சமூகம். கூட்டம் பிதுங்கும் பேருந்தில் ஒரு திருநங்கையை நாலைந்து பையன்கள் ஆபாசமாகக் கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள். ''போன் நம்பர் கேள்ரா மாமு...'' என அசிங்கமாகச் சைகை செய்கிறார்கள். அங்கே எதுவும் பேசாமல் நிற்பதும் கெட்ட பழக்கம்தான். கந்து வட்டிக்குக் காசு வாங்கியவனை அபார்ட்மென்ட் வாசலில் விட்டு நாலைந்து பேர் வெளுத்துக் கொண்டு இருக்க, போலீஸுக்குகூட போன் பண்ணாமல் டி.வி. சவுண்டைக் கூட்டுவதும் கெட்ட பழக்கம்தான். மிக நுணுக்கமாக நுழைந்து சாதி பார்ப்பதும், ஆள் அம்பு பார்த்து அன்பு வைப்பதும், எளியவர்களிடம் அரசியல் செய்வதும், அடுத்தவன் உழைப்பில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக்கொள்வதும், விருப்பமில்லா இதயத்தை எடுத்துக்கொள்வதும், சிரிக்கச் சிரிக்க வதந்தியும் சீரியஸுமாகப் பொரணி சொல்வதும்... எல்லாம் எவ்வளவு பெரிய கெட்ட பழக்கங்கள்? புகை, குடி மாதிரி மனதின் எல்லா அழுக்குகளையும் தூக்கி தூர வீசி விடுகிற ஒரு தருணம் ஆயுசுக்குள் வந்து விடுமா?

எதற்காக இந்தப் போதைப் பழக்கங்கள்? எல்லாவற்றையும் மறக்க என்கிறது எல்லாக் குரலும். எல்லாவற்றையும் மறந்துவிட முடியுமா? எதையுமே மறக்க முடி யாது... கடக்கத்தான் முடியும் என்பதை உணர்ந்துகொள்ளவே இத்தனைக் காலம் ஆயிற்று. நினைத்துக்கொள்வதும் ஒதுக்கிக் கொள்வதுமே நிதர்சனம் எனப் புரிகிற போது எந்தப் போதையும் தேவையில்லை. கெடையில் ஆடு திருடி, வீட்டிலேயே சாரா யம் காய்ச்சி, ஆத்தாவைத் துன்பித்து, கூத்தியாள் வைத்து வாழ்நாளெல்லாம் கொண்டாட்டமாக வாழ்ந்தார் ஜம்பு தாத்தா. ஒரு சின்ன வயல் பூச்சி கடித்து, குஷ்டம் வந்து, கடைசியில் யாரும் தீண்டா மல் தனியே குடிசை போட்டுக்கிடந்தார். சாப்பாடு கொடுக்கப் போகும்போது, ''மறக்க முடியலைய்யா... ஒண்ணுத்தையும் மறக்க முடியலைய்யா...'' என அரசு தாத்தாவிடம் அவர் புலம்பிக்கிடந்ததை மறக்க முடியுமா?

அன்றைக்குப் பேசிக்கொண்டு இருக்கும்போது நண்பர் சுரேஷ் சந்திரா சொன்னார், ''சின்ன வயசுல எங்க அப்பாவோட போகும்போது ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்ல தினமும் பார்ப்பேன்... ஸ்டேஷன் கட்டைல உக்காந்து ஒருத்தர் படிச்சுட்டே இருப்பார். மொத்த மொத்தமா புத்தகம்... இலக்கியப் புத்தகங்களா படிச்சுட்டு இருப்பார். இல்லைன்னா அங்கே வர்ற பயணிகளுக்கு பொட்டி தூக்கறது, தண்ணி பாட்டில் கொடுக்கறது, குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுக்கறதுனு எதாவது பண்ணிட்டே இருப்பார். அவர்ட்ட பேசிரணும்னு எனக்கு ஆசையா இருக்கும். பல வருஷம் கழிச்சு, ஊருக்குப் போனப்போ அதே ஸ்டேஷன்ல அவரைப் பார்த்தேன். இப்ப வும் அவர் அப்படியே உக்காந்து ஒரு புத்தகத்தைப் படிச்சுட்டு இருந்தார். நான் ஃபர்ஸ்ட் டைம் அவர்ட்ட போய் பேசி னேன்... எதோ ஒண்ணு கேட்டேன். அவர் சட்டுனு 'ப்ப்ர்ர்ர்... ப்ப்யான்... ப்ப்பா...’னு சைகைலயே பேச ஆரம்பிச்சுட்டார். அப்ப தான் அவருக்குப் பேச முடியாதுங்கிறது தெரியும். சட்டுனு மனசு கனத்துப் போச்சு!''

அந்த ரயில் நிலைய ஆசாமி எனக்குள் சித்திரமாகிவிட்டார். அவரைப் போலத் தான் இருக்க வேண்டும். வெளிப்படுத்திக் கொள்வது அல்ல... செயல்கள்தான் நல்ல பழக்கம் இல்லையா?

- போட்டு வாங்குவோம்...