மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 07

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 07

எல்லாம் நன்மைக்கே!

##~##

நாகூர் அனீபாவின் நா கூர்; ஆம்! அவரது தமிழ் உச்சரிப்பு அவ்வளவு ஷார்ப்!

அவர் பாடிய ஓர் அற்புதமான பாட்டு; இன்னும் ஈரப் பசையோடு இருக்கிறது.

'இறைவனிடம் கையேந்துங்கள்; அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை!’

இரக்கும் கைகளுக்கு இல்லையென்னாது இடுபவன் இறைவன்தான்; ஆனால், எப்போது சோறூட்டினால் சேயின் குடல் செரிக்கக்கூடும் என்றுணர்ந்து ஊட்டுகின்ற-                        

ஓர் அனை அனைய அனை அவன்!

நாகூரின் பாட்டுபோல், தாகூரின் பாட்டு ஒன்று கீதாஞ்சலியில்.

ஒரு பக்தன் கேட்கிறான் தாகூரை, 'அய்யா! கடவுள் கருணைக் கடல் என்கிறீரே! அவன் கருணை எனக்குக் கொஞ்சம்தானே கிட்டியது!’ என்று.

அதற்குத் தாகூர், 'அவன் கருணைக் கடல் என்பதில் அய்யமில்லை; ஆனால், அதனின்று மொண்டுவர நீ கொண்டுவரும் பாத்திரத்தைப் பொறுத்தது அது!’ என்று, பக்தனின் பக்குவமின்மையைச் சுட்டுகிறார்!

டக்கும் என்று நினைத்தது, நடக்காது போகுமாயின், உன் நினைப்பை ஈசன் நிராகரிக்கிறான் - அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.

   'வாளால் அரிந்து சுடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொளும் நோயாளன்’ போல் இரு -

   'எல்லாம் நன்மைக்கே!’ என்று.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 07

பெரிய கம்பெனி; பெரிய படம்; அதற்கு இசையமைக்கும் வாய்ப்புகிட்டியது அந்த இளைஞருக்கு.

வாழ்க்கையில் வெளிச்சம் வந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் அற்புதமாக இசை அமைத்தார். விடிந்தால் பூஜை ரிகார்டிங்!

முதல் நாள் இரவு மாற்றப்பட்டார்; அஞ்சு ஆண்டுகளுக்குப் பின் அவர் வெற்றியைத் தொட்டபோது -

'எல்லாம் நன்மைக்கே’ என எண்ணிக்கொண்டார்!

வர் வளரும் நடிகர்; ஒரு கார் விபத்தில் பயங்கரமாகச் சிக்கி, தஞ்சாவூர் ஆஸ்பிடலில் தொண்ணூறு தையல்களோடு கிடந்தார். ஏற்கெனவே அவர் முகத்தில், அம்மைத் தழும்புகள் உண்டு.

இவ்வளவு பின்னடைவுகளோடு அவர் தன் எதிர்காலம்பற்றி என்ன எண்ண இருக்கிறது? அவர் சொன்னார் 'எல்லாம் நன்மைக்கே’ என்று தன் கண்களால் என்னிடம்; வாயெல்லாம் ப்ளாஸ்திரிகள்!

சொன்னபடி திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார்!

சார்மினார் சிகரெட்டே எனக்கு சாப்பாடாக இருந்த காலம். எழுத்தாளர் திரு.ம.ரா. அவர்களால், ஒரு படத்தில் பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது - பாலைவனத்தில் ஒரு பசுஞ்சுனையைக் கண்டாற் போல்!

அரைகுறை மனதோடு அதை ஒலிப்பதிவு செய்தார் அந்தப் படத்தின் இசையமைப்பாளர். அவர் மிக மிகப் பிரபலமானவர்.

என் காதுபட, அவர் தயாரிப்பாளரிடம் 'எவன் எவனோ பாட்டெழுதறதா? உங்களுக்கெல்லாம் படம் ஓடணும்கிற எண்ணமே இல்லையா?’ என்று இரைந்தார்.

எனக்கது என் முகத்தில் எச்சில் துப்பியதுபோல் அப்போது இருந்தாலும் -

'எல்லாம் நன்மைக்கே’ என்று இருந்தேன்.

ஓரிரு வருடங்களில் நான் ஓஹோ என வளர்ந்தேன். ஒரே வருடத்தில் ஒன்பது எம்.ஜி.ஆர். படங்கள்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 07

அதில் ஒன்றுக்கு அந்த இசைஅமைப்பாளரோடு பணி செய்ய நேர்ந்தபோது, மறுத்துவிட்டேன்.

எம்.ஜி.ஆர். சமாதானம் செய்துகூட நான் ஏற்கவில்லை.

கடைசியில் அந்த இசையமைப்பாளர் என் கைகளைப் பற்றிக்கொண்டு நடந்ததை மறக்க வேண்டினார்.

அதன் பின் அவரிடம் ஆயிரம் பாடல்கள் எழுதினேன்!

ரு ராஜாவுக்கு ஒரு மந்திரி. அந்த மந்திரி எது நடந்தாலும் 'எல்லாம் நன்மைக்கே’ என்பான்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 07

வார இறுதியில் வழக்கம் போல் - மன்னன் மந்திரியோடு வேட்டையாடப் புறப்படுகையில், தரை விரிப்பில் மன்னனுக்குக் கால் தடுக்கி நகம் பெயர்ந்து ரத்தம் கொட்டியது.

'எல்லாம் நன்மைக்கே’ என்றான் மந்திரி. சினம்கொண்ட மன்னன், சிறையில் அடைத்தான் மந்திரியை.

'எல்லாம் நன்மைக்கே’ என்று அப்பவும் சொல்லிவிட்டு, சிறை புகுந்தான் மந்திரி.

வேட்டைக்குத் தனியாகப் போன ராஜா, ஆதிவாசிகளிடம் சிக்க -

வன தேவதைக்கு மன்னனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தான் ஆதிவாசிகளின் தலைவன்!

அப்போது ஓர் ஆதிவாசி, 'தலைவா! இந்த ஆள் காலில் ஊனமுள்ளவன்; நம் குல வழக்கப்படி, ஊனமுள்ளவனை பலி கொடுக்கக் கூடாது!’ என்றான்.

'ஆமாம்’ என்று ஆதிவாசிகளின் தலைவன் மன்னனை விடுவித்து அனுப்பிவிட்டான்!

உயிர் பிழைத்து வந்த மன்னன், மந்திரியைச் சிறையிலிருந்து விடுவித்து மன்னிப்பு கேட்டான்.

பிறகு, மந்திரியிடம், 'மந்திரியே! உன்னை நான் சிறையில் அடைத்த போது, அப்போதும் 'எல்லாம் நன்மைக்கே’ என்றாயே, அது ஏன்?’ என்று மன்னன் வினாவினான்.

மந்திரி சொன்னான். 'அரசே! என்னை நீங்கள் சிறையில் அடைக்காவிட்டால், நானும் உங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன். ஊனமுள்ள உங்களை விட்டுவிட்டு, ஊனமில்லாத என்னை -

ஆதிவாசிகள் நரபலி கொடுத்திருப்பார்களே!’

'எல்லாம் நன்மைக்கே’ என்றிருந்ததால்தான்...

அய்ந்தாண்டுகள் கழித்து இசைஅமைப்பாளராகி - திசைகளை வென்றார் இளையராஜா!

அஃதே போல் - தொண்ணூறு தையல்களோடு படுத்திருந்தவர் பிழைத்தெழுந்து -

இல்லாத படமில்லை என்று நிறைந்து நின்றார் நாகேஷ்!

அடியேனை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்திப் பின் ஆரத் தழுவியவர் - கே.வி.மகாதேவன்!

  - சுழலும்...

ஒவியம் :மணி, படம்: கே. ராஜசேகரன்