
தொண்டர்களின் ரத்தமும், உயிரும், கண்ணீரும்தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொடி மரத்து வேர்கள் இல்லையா? கலவரத்தில், போராட்டத்தில், அடிதடியில், தீக்குளிப்பில் உருவான கல்லறைகளின் மேல் எத்தனை எத்தனை சபதங்களும் வெற்றிகளும் கட்டப்பட்டன?
"காமராஜர் கை நனைச்ச கடையப்பா!'' - கருப்பு பெரியப்பாவின் பன்ச் இது. 'நாங்க ரயில்வே கேட்லயே எம்.ஜி.ஆரைப் பாத்தவய்ங்க...’ வசனத்துக்கு கொஞ்சமும் இளைத் தது அல்ல இது. வாழ்விலே நான் பார்த்த முதல் தொண்டன் கருப்பு பெரியப்பாதான்.
அவரே பாதி காந்தி; பாதி காமராஜர்தான். உள்ளூரில் இருக்கும்போது பேர்பாடி. வெளியூர் கிளம்பினால், முழங்கை தாண்டிய கதர்ச் சட்டை, காங்கிரஸ் துண்டு காஸ்ட்யூம். ஒரு கடை வைத்திருந்தார். சாயங்காலம்தான் திறப்பார். இரண்டு நெல் மூட்டை கிடக்கும். இரண்டு வாழைத் தார் தொங்கும். மத்தபடி அது அவருக்கு கட்சி ஆபீஸ். வந்தவுடன் ரேடியோவைத் திருகி நியூஸ் வைத்துவிட்டு உட்கார்ந்துவிடுவார்.
''தெருவுக்குத் தெரு ஆயிரம் சாமிங்க இருக்கலாம்... ஆனா, ஊருக்கு மத்தில உக்காந்துருக்கானா... அது காளியம்மா தான? காங்கிரஸ் அப்படித்தான்... இந்தியாவுக்கு நேரு குடும்பம், தமிழ்நாட்டுக்கு மூப்பனார் குடும்பம்... அதான் கரெக்ட்டு'' என்பார் சத்தியமூர்த்தி தாத்தாவிடம். தேர்தல் வந்தால் கூட்டணிக் கட்சிகளுடன் கும்மியடிக்க மாட்டார். ஊருக்குள் காங்கிரஸுக்கு ஒரு ஈ, காக்கா கிடையாது. 'வின்னர்’ கைப்புள்ள மாதிரி ரெண்டு பேரைச் சேர்த்துக்கொண்டு, தனியே கேன்வாஸ் பண்ணுவார்.
கூட்டணிக் கட்சிக்காரர்களிடம், ''தம்பி நாங்க சென்ட்ரலு, நீங்க ஸ்டேட்டு... தட்டி கட்டிட்டு வந்து பாத்துட்டுப் போங்க' என வெறி ஏற்றுவார். ஊருக்குள் முதன்முதலில் விஜயகாந்த் ரசிகர் மன்றம் வந்தபோது, கொந்தளித்துவிட்டார். ''ஏங்க... காமராஜர் கால் பட்ட மண்ணுல இதெல்லாம் நடக்கலாம்ங்களா...' என ஒரு வாரம் ரவுசு கட்டினார். ஓர் ஓட்டு வீடு, பழைய சைக்கிள், வெத்தலைப் பெட்டி... இவ்வளவுதான் கருப்பு பெரியப்பா, தன் குடும்பத்துக்குச் சேர்த்துவைத்த சொத்துகள். ''ஏங்க... மூணு பொம்பளப் புள்ளைகள வெச்சுக்கிட்டு எதாவது சொத்துக்கித்து சேக்க வேணாமா?' என யாராவது கேட்டால், ''உண்மையான காங்கிரஸ்காரன்னா இப்பிடித்தான் இருக்கணும். காமராஜர், கக்கன், அப்புறம் இந்தக் கருப்பு' என்பார் வெற்றிலை வாயோடு. ராஜீவ் காந்தி இறந்தபோது கதறிவிட்டார். ஒரு வாரத்துக்கு கறுப்புக் கொடியைக் குத்திக்கொண்டு திரிந்தார்.
20 வருடங்கள் போய்விட்டன. சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோதுதான் அவரைப் பற்றி நினைத்தேன். ''செந்திலு ஃபாரீன் போய் கொஞ்சம் குடும்பத்த எடுத்துக்கிட்டான்டா... அவரு ரொம்பல்லாம் பேசறதில்ல' என்றான் அண்ணன். அவரைப் போய்ப் பார்த்தேன். அதே காங்கிரஸ் கரை வேட்டியோடு வந்துகொண்டு இருந்தார். ''காமராஜர் போயிட்டாரு... மூப்பனா ரும் போயிட்டாரு... இன்னும் கருப்பு போகலில்ல...' என்றார் அதே பழைய சைக்கிளில் நின்றபடி!
முதன்முதலில் நான் 'முரசொலி’ பார்த்தது செல்லூர் ராஜேந்திரன் சைக்கிள் கடையில்தான். ஏரியாவிலேயே அவர்தான் 'முரசொலி’ சந்தாதாரர். திராவிடக் கட்சிகளை ஊருக்கு ஊர் வளர்த்த சைக்கிள் கடைகளில் இவருடையதும் ஒன்று. கர்லிங் ஹேர், தி.மு.க. டர்க்கி டவல் எனக் கலைஞர் மாதிரியே கரகரப்பாகப் பேசிக்கொண்டு திரிவார். ''ங்க பாரு... கலைஞர் மாரி ஒரு ராஜதந்திரி ஒலகத்துலயே கெடையாது. மூளக்காரன்யா... அவரு மட்டும் அமெரிக்கால பொறந்துருந்தார்னு வையி, ஒலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிருப்பாரு' என எப்போது பார்த்தாலும் பாராட்டு விழா போடு வார். ''அப்பறம் எதுக்கு அவரு தோக்குறாப்ல?'' என வம்புக்கு இழுத்தால், ''முட்டாப்பய சனம்... யேசுவக் கொன்ன சனம்ரா இது. இந்தக் கமல் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறான்... எவனாவது பாக்குறானா?
ரஜினி ஒடம்பு வளையாம வந்து இந்தா இப்பிடி இப்பிடிச் சிலுப்பிக்கிட்டு நடந்தான்னா பாக்குறானுவோள்ல... அதான் இந்த சனம். ங்க பாரு நாங்கெல்லாம் உசுரு நிக்கிற வரைக்கும் கலைஞரு கட்சிதான். அவரு வந்து உக்காந்து சோடா குடிச்சுட்டுப்போன கடைடா இது. அந்தப் புகழ் போதும்ரா நமக்கு' என்பார். ஒரு முறை திருக் கொள்ளம்புதூருக்கு ஒரு கல்யாணத்துக்கு வந்தி ருந்தார் கலைஞர். நான் சுப்ரமணி தாத்தாவோடு போய், பின்னால் இருந்து கலைஞரின் சட்டையைப் பிடித்து இழுத்தேன். அவர் திரும்பிப் பார்த்து சிரிக்கும்போதே, தடதடவென வந்த ராஜேந்திரன்... அவர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நின்ற காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது.
தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணத்தில் ஏதாவது கட்சி மீட்டிங் என்றால் கட்டாரி மாமாவும் சோமு மாமாவும்தான் ஊரில் இருந்து வேன் எடுத்துக்கொண்டு கிளம்புவது. செல்லூரில் ராஜேந்திரன் ஏறினால் போய் வருகிற வரைக் கும் சோலோ மீட்டிங் போட்டுக்கொண்டு இருப்பார். தேர்தல் வந்துவிட்டால், மண் கொட்டிப் பானையில் தண்ணீர் வைத்த பூத்திலேயே நிற்பார். நாங்கள் சின்னப் பிள்ளைகள் பல்டி அடித்துப் போய் தண்ணீர் மொண்டு குடிப்போம். ''டேய் கலைஞர் வாழ்க... கலைஞர் வாழ்கனு கத்துங்கடா' என்பார் துண்டை விசிறியபடி. இப்போது போகும்போது பார்த்தால் சைக்கிள் கடை இருந்த இடத்தில் மளிகைக் கடை போட்டு அவர் மனைவி உட்கார்ந்திருந்தார். தி.மு.க. கொடி கட்டிய டி.வி.எஸ். எக்ஸெல் ஓரமாகக் கிடந்தது. ''ராஜேந்திரன் எப்பிடிறா இருக்காரு..?' என்றதற்கு அண்ணன் சொன்னான், ''அதே வெறியோட இருக்காரு... போன வாரம் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சீட்டு கேட்ருக்காரு. அவரு ஒய்ஃப் மாவட்டத்துட்ட போயி 'அவருக்கு சீட்டே குடுத்துராதீங்க.
ஏற்கெனவே கட்சி கட்சினு இருக்கற சொத்தை எல்லாம் அழிச்சது போதும். இப்போ புள்ளைங்க சம்பாதிக்கறதையும் அழிச்சிருவாரு. வீட்டை அடமானம் வெச்சாலும் வெச்சுருவாரு...’னு அழுதிருச்சாம். அதனால சீட்டுக் குடுக்கலபோல இருக்கு. ஆனாலும், வேகம் குறையலடாமனுஷனுக்கு'' என்றான். அப்போது உள்ளே இருந்து டி.வி. நியூஸ் சத்தம்... ''கிரானைட் வழக்கில் தலைமறைவான துரை தயாநிதியை போலீஸார் தீவிரமாகத் தேடுகின்றனர்!’ என்றது.
இரட்டை இலையையும் எம்.ஜி.ஆரையும் பச்சைக் குத்திக்கொண்டு திரியும் ஆயிரமாயிரம் பேரில் சௌந்தர்ராஜன் மாமாவும் ஒருவர். என் தாய் மாமன். 'கோழி’ சௌந்தர்ராஜன் என்றால், ஏரியா பப்ளிக்குட்டி. பஞ்சாயத்து எலெக்ஷனில் கோழி சின்னத்தில் நின்றதால், இந்தப் பெயர். அ.தி.மு.க. வெறியர். ''எம்.ஜி.ஆர நாலடி தூரத்துல பார்த்தேன் மாப்ள... என்னா கலருங்கற... அப்பிடியே பச்சக் குத்தின மாரி இருக்குல்ல' என்பார். எம்.ஜி.ஆர். செத்தபோது லாரி பிடித்து மெட்ராஸ் போன பார்ட்டி. அவ்வப்போது கல்யாணம், காட்சி, கருமாதிகளில்தான் அவரைப் பார்ப்பேன். கரை வேட்டி கட்டிக்கொண்டு பழ வாசத்தோடு பப்பரக்கா என வருவார். ''நம்ம என்னைக்கும் எம்.ஜி.ஆர். விசுவாசி, இப்போ அம்மா விசுவாசி. கட்சிக்காக என்ன வேண்ணா பண்ணுவோம். சாலியமங்கலம் கடத் தெருல தீக்குளிக்கக்கூட ரெடி. கட்சி வரலாற்றுல ஒரு ஓரமா சௌந்தர்ராஜன் பேரு இருந்தா போதும் மாப்ள' என்பார் 'என்னுயிர்த் தோழன்’ பாபு மாதிரி.
ரொம்ப காலத்துக்குப் பிறகு சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் பார்த்தேன். அதே கரை வேட்டி, பழ வாசம், பேச்சு மெலிந்து வயசாகி இருந்தது மட்டும்தான் மாற்றம். அத்தையிடம் கேட்டபோது, ''கட்சி கட்சின்னுதான் அலையுறாரு, என்னா சொல்லி என்னா? ஒண்ணும் கேக்க மாட்டேங்குறாரு. போஸ்ட்டு கீஸ்ட்டு வாங்கலாம்னா, அதுவும் கெடையாது. ஆமா, மெட்ராஸ் வந்தா நெசமா அம்மாவப் பாக்க முடியுமா முருகா?'' என்றது அப்பாவியாக!
'காம்ரேட்’ என்ற வார்த்தையை நான் முதன்முதலில் கேட்டது யுகபாரதி அண்ணன் வீட்டில். அவர் அப்பா த.க.பரமசிவம், மார்க்ஸிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர். அண்ணனின் வீடு எப்போதும் தோழர்களால் நிறைந்திருக்கும். ''சூளையப் போய் ஒரு எட்டு பாத்துட்டு வாங்கன்னா, அது நடக்க மாட்டேங்குது. கச்சி கச்சினு நின்னா, அதான வந்து சோறு போடப் போவுது? நான்தான் போய் வேவணும்'' என வசந்தாம்மா புலம்பிக்கொண்டே இருக்கும். புரட்சி என்கிற வார்த்தை சகஜமாகப் புழங்கிய காலம் அது.

''தோழர்... புரட்சி வரும். அடிப்படைப் பொருள்முதல்வாதத்தை நீங்க புரிஞ்சுக்கணும்'' எனத் தேநீர்க் கடை தோழர் பேசப் பேச, எனக்கு சி.ஜி-யில் நரம்புகள் முறுக்கும். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முதல் ஏ.கே.கோபாலன் வரைக்கும் படிக்கப் படிக்க இதயம் சிலிர்க்கும். அதே வேகத்தோடு திருப்பூர் போனபோதுதான் சே குவேராவும், செந்தில்வேலனும், அருளானந்தமும் அறிமுகமானார்கள். ''சே குவேரா சொல்ற போர்த் தந்திரம் என்னன்னா தோழர்... 'எதிரிகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்.
அவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளவிடாதீர்கள்’னு சொல்றாரு தோழர்.'' ''உலகமயமாக்கலை எதிர்க்கணும்னா, உள்ளூர்த் தொழில்களைப் பெருக்கணும் தோழர்' என எந்த நேரமும் சுருட்டிவைத்த தீக்கதிர் பத்திரிகையோடு டீக்கடைகளில் நிற்போம். திடுதிப்பென்று வந்து ''வாங்க தோழர், நிதி சேர்ப்பு இருக்கு' என அழைத்துப் போவார்கள். சாலைகளில் அங்கங்கே நின்று உண்டியல் குலுக்குவார்கள். இரவோடு இரவாக காசு சேர்த்து, 'அதிகார வெறியும் சாதி வெறியும் ஒழிக’ என போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள். எப்போதும் கட்சி, புரட்சி, கனவுகள்தான்.
ஒரு நாள் திடுதிப்பென்று அருளானந்தம் செத்துப்போனார். சல்லிக் காசு இல்லாமல் குடும்பத்தை விட்டுவிட்டு போனார். பாரதியாரைவிடப் பரவாயில்லை. அவர் இறுதிப் பயணத்தில் 20 பேருக்கு மேலிருந்தோம். அங்கிருந்து நான் வந்த பிறகு, ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு சென்னை யில் செந்தில்வேலனைச் சந்தித்தேன். ''ஈழப் பிரச்னையில உங்க கட்சி என்ன ஸ்டாண்ட் எடுத்துருக்கு? இவ்வளவு அப்பாவித் தமிழ் மக்கள் சாவுறாங்க, கம்யூனிஸ்ட்டுங்க என்ன ஆணி புடுங்குனீங்க?' எனக் காரசாரமான விவாதம் நடந்தபோது, இரண்டு பேரிடமும் கையில் காசு இல்லை. இன்னொரு நண்பர்தான் ஹோட்டல் பில் கொடுத்து, காசு தந்து கோயம்பேட்டில் செந்திலை பஸ் ஏற்றிவிட்டார்.
இப்போதும் செந்திலோடு அவ்வப்போது போனில் பேசு வேன். போன வாரம் பேசிய போது, ''என்னங்க... உங்க தலைவர் பர்த் டேக்கு அம்மா நேர்லயே போய் வாழ்த்திருக்காங்க' என்றேன். உடனே அவர் மிகுந்த சலிப்புடன் சொன்னார், ''அட போப்பா... வர்ற வெள்ளிக்கெழம என் ரெண்டாவது பையன் ஜீவாவுக்குப் பொறந்த நாளு. அதுக்கு ஒரு பெரிய செலவு இருக்குன்னு நானே கவலைல இருக்கேன்!''
தொண்டர்களின் ரத்தமும், உயிரும், கண்ணீரும்தான் ஒவ்வொரு கட்சிக்கும் கொடி மரத்து வேர்கள் இல்லையா? கலவரத்தில், போராட்டத்தில், அடிதடியில், தீக்குளிப்பில் உருவான கல்லறைகளின் மேல் எத்தனை எத்தனை சபதங்களும் வெற்றிகளும் கட்டப்பட்டன?
தொண்டர்களின் உயிரிழைகளை இழுத்து இழுத்துத்தான் இத்தனை சிலந்திகளும் உருவாகின. காமெடியாக, கலாட்டாவாக, உணர்ச்சிப்பூர்வமாகக் கடந்துபோய்விடுகிற தொண்டர்களைப் பற்றி யாருக்கும் எப்போதும் கவலை இல்லை. கட்சிகள் கம் பெனிகளாகி, தலைவர்கள் அதன் எம்.டி-களாகிவிட்ட பிறகு, தொண்டர்களாவது குண்டர்களாவது? இப்போதும் உணர்ச்சிகளில் சிக்கிக்கிடக்கிற தொண்டர்களைப் பாவமாக நினைத்துக்கொள்கிறேன்!
20 வருடங்களுக்கு முன்பு செல்லூரில் கால்நடை மருத்துவராக அப்பா வேலை பார்த்த நேரம். ஒரு மதியம் அவசரமாக வீட்டுக்கு வந்து, ''ஒரு ஆளுக்கு சாப்பாடு கட்டு, டேய் நீயும் வா' என அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனார். அதற்குள் கொஞ்சம் ஊர்க்காரர்கள் அங்கே திரண்டு இருந்தார்கள். ஆஸ்பத்திரியின் கொல்லையில் உடம்பில் ஒரு போர்வையைச் சுற்றியபடி ஓர் இளைஞர் உட்கார்ந்திருந்தார்.
அப்பா அவருக்கு சாப்பாடு கொடுத்ததும் சாப்பிட்டார். போர்வையை விலக்கினால் தோள்பட்டையில் ரத்தம் வடிந்து காயமாகக் கிடந்தது. அப்பா அதற்கு வைத்தியம் பார்த்தார். அதற் குள் ஊர்க்காரர்கள் சேர்ந்து கொஞ்சம் பணம் திரட்டிக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார்கள். ''நைட்டு இங்க தங்கிட்டு போங்க' எனச் சொல்ல சொல்ல, அந்த இளைஞர் மறுத்துவிட்டு, எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு நடந்தே அங்கிருந்து போனார்.
''யாருப்பா அது..?' எனக் கேட்டதற்கு அப்பா சொன்னார்... ''விடுதலைப் புலிடா... வேதாரண்யத்து லேர்ந்து நடந்தே வந்துருக்காரு. குண்டடிச்சு கையெல்லாம் டேமேஜா இருக்கு. பாஸ்கர் பார்த்து விசாரிச்சதும்தான் எல்லாம் சொல்லிருக்காரு. ரெண்டு நாளா சாப்பிடலை போலருக்கு. இப்பதான் கொஞ்சம் தெளிச்சியாகிருக்காரு. சீர்காழி போறாராம்' என்றார்.
அன்று நான் பார்த்ததுதான் ஒரு தொண்டனின் உலரவே உலராத ரத்தம்!
- போட்டு வாங்குவோம்...