மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

முத்தத்துக்கு ஏன் உதடு... டூயட்டுக்கு ஏன் மழை?

 ##~##
த.சத்தியநாராயணன், சென்னை-38.

முத்தத்துக்கு உதடுகளைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்?

நாம் தேர்ந்தெடுக்கவில்லை. இயற்கை தேர்ந்தெடுத்தது!

எந்த உயிரினத்துக்கும் (குரங்குகள் உள்பட)  வெளியில் துருத்திக்கொண்டு இருக்கும் உதடுகள் கிடையாது. மனிதனுக்கு மட்டும்தான். ரொம்ப முதுமையில் 'லிப்ஸ்’ மீண்டும் உள்பக்கமாக மடிந்துவிடுகிறது. 'குரங்குக் குட்டிகள் தாய்ப் பாலை உறிஞ்சிக் குடிக்கும். மனிதக் குழந்தை மட்டுமே சப்பிக் குடிக்கிறது. இதில் சுவை அதிகம். இந்த சுவைதான் முத்தத்தின் ஆரம்பம்!’ என்று சில விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். உடலின் வேறு எந்தப் பகுதியையும் தொடாமல், முத்தப் பரிமாற்றம் மூலமாகவே ஒரு பெண் பரவச நிலையை (orgasm) அடைய முடியும் என்று புகழ்பெற்ற

ஹாய் மதன் கேள்வி - பதில்

செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் கின்ஸே (Dr.Kinsey) குறிப்பிடுகிறார். செக்ஸுக்கு ஆண் - பெண் இருவரையுமே மிகப் பெரிய அளவில் தயார்படுத்துவது முத்தம். 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஒரு எகிப்திய ஓவியத்தில், விறைப்போடு அவசரத்துடன் ஓர் ஆண் காத்து இருக்க, பெண் சாவகாசமாகத் தன் உதட்டுக்கு சிவப்புச் சாயம் (லிப்ஸ்டிக்) பூசிக்கொண்டு இருக் கும் காட்சி, எகிப்திய மியூஸியத்தில் உண்டு. முத்தம், உடல் உறவுக்கு முந்தைய படிக்கட்டு! (செம்மொழி லத்தீனில் உதடுகளுக்கு Labia என்று பெயர்!) இருப்பினும், உலகெங்கும் உடல் உறவை ஏற்றுக்கொள்ளும் விலை மாதர் கள், முத்தம் கொடுப்பதை அனுமதிப்பது இல்லை. இது குறித்து அவர்களை 'இன்டர்வியூ’ செய்ததில், எல்லோரும் சொன்ன ஒரே பதில் 'ஸாரி, முத்தம் மிகவும் பிரத்யேகமானது (Too Personal)’!

ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

படுக்கையறைக்கு Bed room.  அந்தப்புரத்துக்கு?

Pet's room!

தாரிணி கோபால், செகந்திராபாத்.

காதலில் அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டு?

பெரிய விஷயத்தை ஒரே வரியில் நீங்கள் கச்சிதமாகக் கேட்டதற்குப் பாராட்டுக்கள்!

அழகு என்பது பெரிதும் கவித்துவமானது என்றாலும், காதல் என்பது தனித்துவமானது. எப்போதுமே காதலிக்கப்படுபவர் அழகாகத்தான் மற்றவர் கண்ணுக்குத் தெரிவார். அது போதும்! மிகவும் அழகான பெண்ணுக்கு ஒரு சிறு 'காம்ப்ளெக்ஸ்’ உள்ளுக்குள்ளே நெருடக் கூடும். 'இவர் என்னை என் அழகுக்காகத்தான் விரும்புகிறாரா? நாளைக்கு என் அழகு போய்விட்ட பிறகும் இதே காதல் தொடருமா?’ என்கிற காம்ப்ளெக்ஸ்! அவ்வளவாக அழகு இல்லாத பெண்ணுக்கு 'இவர் என்னை, எனக்காகவே காதலிக்கிறார்!’ என்கிற தன்னம்பிக்கை இருக்கும். 'பர்ஃபெக்ட் அழகு’ என்று எதுவும் கிடையாது. அப்படியே ஒரு பெண் இருந்தாலும், உடல் முழுவதும் ஏதோ ஒரு Mask - முகமூடி அணிந்ததுபோல அந்த அழகு இருக்கும்! சின்னஞ்சிறு குறைகள்(Blemishes)தான் உண்மையிலேயே அழகு!

சி.ஆர்.நாகராஜன், பொள்ளாச்சி.

நீங்கள் கல்லூரி நாட்களில் மன்'மதன்’அம்பு விட்டிருக்கிறீர்களா?

விட்டுப் பார்த்தது உண்டு. ஆனால், எதிர்த்தரப்பில் பலர், அதை ராவணன் அம்பாகவே எடுத்துக்கொண்டதுதான் கடுப்பான விஷயம்!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

ஒரு கல்... ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? (உடையாமல் மோதிக்கொண்டால்தான் காதலாம்!)

அது ஓர் உவமை (Metaphor)! 'அந்த மானைப் பார்த்து சிங்கம் மெய்மறந் தது!’ என்றால் 'எப்படி?’ என்பீர்கள் போல! கல்லைப் போன்ற முரட்டு ஆண், மென்மையான ஒரு பெண்ணோடு மோதினால் (எதுவும்) உடையாமல் காதல் பிறக்கும் என்று கவிஞர் மெனக்கெட்டுச் சொன்னால்... ஒப்புக்கொண்டு போவீர்களா?!

அ.உமர், கடையநல்லூர்.

காதல் டூயட் பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் மழை பெய்ய வைக்கிறார் களே, ஏன்?

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹீரோ, வில்லன் சண்டை போடுகிறார்கள். திடீர் என மழை பெய்கிறது. உடனே, இருவரும் ஓடிப்போய் கூரைக்கு அடியில் நிற்கிறார்கள். பார்க்க நன்னாவா இருக்கு?! அடாத மழையிலும் விடாது மோதிக்கொண்டு, ரத்தம் நீரோடு கலந்து ஓட, சேற்றில் புரள... அப்போதுதான் மோதலில் 'வயலன்ஸ் எஃபெக்ட்’ அதிகம் தெரியும். டூயட்டில் மழை பெய்தால் ஹீரோயின் நனைந்து, புடவை ஈரமாகி, உடல் பாகங்கள் மெள்ள உதயமாக, கவர்ச்சி அதிகரிக்க, பார்க்க 'கிக்’காக இருக்கும்! இப்போது மழை பெய்யும்போது காட்சிகளைத் துல்லியமாகக் கூர்மைப்படுத்த 'கிராஃபிக்ஸ்’ எல்லாம் வந்துவிட்டது. அந்தக் காலத்தில் இந்த வசதிகள் எல்லாம் இல்லாததால் அநேகமாக கொளுத்துகிற வெயிலில் டூயட் பாடினார்கள்!

வி.நித்யானந்த், சென்னை-18.

காதலித்தவளையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துவிட்டேன். 'வொர்க்-அவுட்’ ஆகாவிட்டால் நீங்கள்தான் பொறுப்பு 'ஓ.கே’-வா?

நல்ல கதை!

உங்கள் இருவரையும் நான் பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால், சத்தியமாகக் காதல் வேறு, மண வாழ்க்கை வேறு. சில சமயங்களில் ரொம்ப 'டல்’ ஆன, மகா போரடிக்கும் புத்தகத்தில் முன்னுரை ரொம்ப ஜோராக இருப்பது உண்டு. உஷார்!

ஓ.ஜெயகுமார், கோயம்புத்தூர்-9.

என் கேர்ள் ஃபிரெண்டைச் சந்திக்கும்போது எல்லாம் (பயம் காரணமாக!) அவள் கையை மட்டும் முத்தம் இடுகிறேன். அவள் ஏதாவது நினைத்துக்கொள்வாளா? அதாவது, என் மீது மதிப்பு கூடும்தானே?

கூடாது! 'என்ன இது? தினமும் இப்படி 'டார்கெட்’டை இந்த அசடு மிஸ் பண்ணிக் கொண்டே இருக்கு என்று நினைப்பாள்!

கண்.சிவகுமார், திருமருகல்.

மெய் சிலிர்ப்பது - மெய் மறப்பது - என்ன வித்தியாசம்?

காதலி உங்களை ஏறிட்டுப் பார்க்கும்போது ஏற்படுவது முதலாவது. அவளை இறுக அணைத்துக் கொள்ளும்போது ஏற்படுவது  இரண்டாவது. திருப்தியா?!

கே.வெங்கட், விழுப்புரம்-2.

கன்னம், இடுப்பு - எந்த இடத்தைக் கிள்ளினால் காதலிக்கு 'கிக்’ அதிகம்?

இரண்டுமே அல்ல!