Published:Updated:

உயிர் மொழி - 27

உயிர் மொழி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மொழி ( டாக்டர் ஷாலினி )

பெண்ணின் திறமை... ஆணின் ஆளுமை!டாக்டர் ஷாலினி

##~##
ங்க காலத்தில் முல்லைக்குத் தேர் கொடுத்து, கிரேக்கம், மிஸ்ரத்துடன் வியாபாரம் செய்து, செல்வம் கொழித்துக்கொண்டு இருந்த தமிழ் கூறும் நல் உலகம், பிறகு ஏன் ஆரியர், மங்கோலியர், பாரசீகர், துருக்கியர், மொகலாயர், போர்ச்சுக்கீசியர், ஆங்கிலேயர், ஃபிரெஞ்ச் என்று வரிசையாகப் பல வெளிநாட்டினருக்கு அடிமைப் பட்டுக்கிடக்கும் நிலை உருவானது?

காரணம், பெண் அடிமையானால் அங்கே ஆணின் ஆளுமையும் அடிபட்டுப் போய்விடுகிறது. அதனால், பிறர் அவனை எளிதில் அடக்கி ஆளுகிறார்கள். உதாரணத்துக்கு, தாலிபான் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானை எடுத்துக்கொள்வோம். அங்கே பெண் களுக்கு எதற்குமே சுதந்திரம் கிடையாது. கல்வி கற்கவோ, வருமானம் ஈட்டவோ, வேலைக்குப் போகவோ, சொத்துக்களை உடைமை

உயிர் மொழி - 27

கொள்ளவோ பெண்களுக்கு உரிமை இல்லை. தாலிபான் ஆண்களைப் பொறுத்தவரை, பெண்கள் வீட்டை நிர்வகித்து, கலவி கொண்டு, பிள்ளை பெற்று வளர்த்து ஆளாக்கினாலே போதும். சரி... பெண்களை இப்படிக் கட்டுப்படுத்திவைத்திருக்கும் மகா கெட்டிக்காரத்தனம் இருக்கும் இந்த ஆண்கள், வேறு ஏதாவது துறையில் சொல்லிக்கொள்வது போலச் சாதித்து இருக்கிறார்களா என்றால், ம்ஹூம்... இன்னும் கடந்த நூற்றாண்டின் பின் தங்கிய சமூக அமைப்பில்தான் வாழ்கிறார்கள்.

இதற்கு நேர் எதிராக ஸ்வீடனை எடுத்துக்கொண்டால், அங்கே ஆண் - பெண் இருவரும் சமமாக வாழ்கின்றனர். அடக்குமுறை என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. பாதி வருடம் இருட்டிலேயே வாழ்ந்தாலும், இந்த ஊர் ஆண்கள் எல்லாத் துறைகளிலுமே சாதிப்பது மிக அதிகம். செல்வம் செழிப்பதால்தான், ஸ்வீடன் மற்ற நாட்டவரின் சாதனைகளுக்கும் நோபல் பரிசு கொடுத்துப் பாராட்டி ஊக்குவிக்கும் உயர் ஸ்தானத்தில் இருக்கிறது. ஆக, எங்கெல்லாம் பெண்கள் சுதந்திரமாகக் கலவியல் தேர்வு செய்கிறார் களோ, அங்கே அதிக திறமையான ஆண்கள் உருவாகிறார்கள். இதனால், ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேறிவிடுகிறது.

உதாரணத்துக்கு, 1490-களில் இந்தியாவில் வாழ்ந்த கல்வி வாய்ப்பு இல்லாத ஏதாவது ஒரு தாய், தன் மகனைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, காத்து கருப்பு படாமல் தடுக்கத் தாயத்து கட்டி, எல்லா சாமிக்கும் நேர்ந்துகொண்டு, மகனைத் தன் கண் பார்வையில் இருந்து விலகாமல் பத்திரமாகப் பார்த்துக்கொண்டு இருந்த சமயம், வாஸ்கோடகாமா திக்குத் தெரியாத கடலில் புது வழி தேடிப் போகிறேன் என்றபோது, அவன் அம்மா தடுக்கவில்லை. கொலம்பஸ் இந்தியாவுக்குப் போகிறேன் என்று நிதி உதவி கேட்டபோது, அவனுக்கு நிதியுதவி அளித்ததே அவன் நாட்டு ராணி இசபெல்லாதான். பெண்கள் சுதந்திரமாக இயங்கும்போது, அங்கே ஆண்களின் வாழ்க்கைத் தரமும், வீரியமும் அதிகரிக்கிறது. இந்தச் சுதந்திரம் பெண்களுக்கு இல்லாதபோது, மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், தரத்தில் தாழ்ந்துவிடுகிறார்கள். இப்படி எக்கச்சக்கத்துக்கு reproductive wastages- ஆக மனிதர்கள் இல்லாமல், சமூகத்துக்கு உபயோகமாக இருக்க வேண்டுமானால், அவர்களது தாய்கள் கெட்டிக்காரத்தனமாக அவர்களை வளர்த்தாக வேண்டும். இதற்கு முதலில் தாய்க்குலம் தன் அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இருந்தால்தானே?

உயிர் மொழி - 27

ரொம்பவே சிம்பிளான லாஜிக். பெண்கள் ஆண்களுக்கு நிகராக அறிவுசார்/ பொருளாதாரப் பங்கேற்பு கொண்டால்தான் சமூகம் இரட்டிப்புச் செழிப்பாகும். ஆனால், அதிசயம் என்னவெனில், சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலான ஆண்களுக்கு இது புரியவே இல்லை. புரட்சிகரமாகச் சிந்திக்கக்கூடிய கோடியில் ஓரிரு ஆண்களுக்கு மட்டுமே இந்த லாஜிக் புரிந்தது. ராஜாராம் மோகன் ராய், பாரதியார், பெரியார், நேரு போன்ற இந்தப் புரட்சியாளர்கள் பெண்கள் நிலையை மாற்றிட முயல, எல்லோருக்கும் கல்வி வழங்க ஐக்கிய நாட்டு சபையும் அறிவுறுத்த, எல்லா நாட்டுப் பெண்களும் அறிவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார்கள். கூடவே, சொத்துரிமை, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, வருமானம் ஈட்ட வழிகள் எனப் புரட்சிகள் பல உண்டாக, பல நூற்றாண்டுகளாக வெறும் ஆடு, மாடு மாதிரி வாழ்ந்து வந்த பெண்களின் நிலை ஒரே தலைமுறையில் மாறிப் போனது!

பெண்கள் மீண்டும் தாமே தம் துணையைத் தேர்வு செய்ய ஆரம்பித்தார்கள். துணை சரியாக அமையாவிட்டால், அவனைக் கழற்றிவிடவும் தயாரானார்கள். காட்டுவாசி மனுஷி, வெறும் காம சுகம் தரும் விகிதத்தைவைத்து ஆண்களைத் தேர்ந்தெடுத்தாள். குகைவாசி மனுஷி, வேட்டுவ வீரியத்தை வைத்து ஆணைத் தேர்ந்தெடுத்தாள். ஆதிவாசி மனுஷி, பாதுகாப்பு விகிதத்தை வைத்து ஆணைத் தேர்ந்தெடுத்தாள். ஆரம்ப நாகரிக மனுஷி, அறிவு விகிதத்தை வைத்தும் ஆணின் செல்வாக்கு மற்றும் செல்வத்தை வைத்தும் அவனைத் தேர்ந்தெடுத்தாள். இந்த அறிவை வைத்து ஆண் அவளையே அடக்கி ஆண்டுவிட, சில ஆல்ஃபா ஆண்களின் கைங்கர்யத்தால் மீண்டும் பெண்கள் சுதந்திரம் பெற்றிட, நவீன யுகப் பெண்கள் மீண்டும் ஆண்களைத் தாமே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், இம்முறை பெண்கள் பயன்படுத்தும் தேர்வு வரையறை மிகவும் வித்தியாசமாக இருந்தது.

காலமும் ரொம்பவே மாறிவிட்டுஇருந்தது. வேட்டை என்பது இப்போது சட்ட விரோதமான செயலாகிவிட்டது. பாதுகாப்புக்குத் தனியாக போலீஸ் என்கிற ஓர் அமைப்பு இருக்கிறது. பணம் இருந்தால் ஒரு தனி பூனைப் படையைக்கூட வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். அந்தக் காலத்து ஆயுதங்கள் மிகக் கனமானவை. அதனால், பெண்கள் அவற்றை லேசில் பயன்படுத்த முடிந்திருக்காது. ஆனால், இன்று பெண்களும் சுலபமாக உபயோகிக்கக்கூடிய ஆயுதங்களும், தற்காப்புக் கலைகளும் வந்துவிட்டன. இப்போது பெண்கள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். பெண்களுக்கும் அறிவை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்கள் பெருகி உள்ளதால், ஆணின் அறிவை மட்டும் பார்த்துப் பெண்கள் இனி மயங்குவதாக இல்லை. இன்றைய பெண் சுயமாகச் சம்பாதித்து, தானே சொத்துக்கள் சேர்க்க ஆரம்பித்துவிட்டதால், வெறும் பணத்துக்காக ஆணை அண்டிப்பிழைக்க வேண்டிய அவசியமும் அவளுக்கு இல்லை.

அப்படி என்றால், இன்றைய காலத்தில் பெண்கள் எதைத்தான் வரையறையாக வைத்து ஆண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்? வழக்கம்போல இப்போதும் பெண்கள், survival-க்கு முக்கியமான அம்சங்களை வைத்துதான் ஆண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இன்று ஓர் ஆண் பிழைத்துக்கொள்ள அவனுக்கு மிகவும் அதிகமாகத் தேவைப்படும் ஆற்றல் எது என்று யோசியுங்களேன். முன்பு வில்லுக்கு நாண் பூட்டுவதும், குறி தவறாமல் அம்பு எய்துவதும், காளையை அடக்கிக் காட்டுவதும் எனப் பல hard skills-கள்தான் ஆணின் பிழைப்பு விகிதத்தை அதிகரித்தன.

ஆனால், இது மென்பொருட்களின் காலமாயிற்றே... இன்று ஓர் ஆண் ஜெயிக்க வேண்டும் எனில், நாசூக்காகப் பேசுவது, பிறர் மனம் புரிந்துகொண்டு நடப்பது, அதிகாரம், ஆணாதிக்கம், அடக்கு முறை மாதிரியான முந்தைய காலத்து முறைகளைவிட்டு, diplomatic talks மூலமாகப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடும் லாகவம், என்பது போன்ற soft skills இருந்தால்தான் முடியும்.

இதில்தான் சிக்கலே. நமக்குத்தான் ஏற்கெனவே தெரியுமே, ஆணின் மூளையில் மொழிக்கு உண்டான மையம், முக பாவங்களைக் கண்டறியும் மையம், குரல் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளர்த்தம் உணரும் மையம் ஆகிய மூன்றுமே ரொம்பவே சின்னது. இதை வைத்துக்கொண்டு எப்படிக் குறிப்பறிந்து லாகவமாகப் பேசுவது? ஒரு சராசரி ஆணுக்கு இது ரொம்பவே கஷ்டமான காரியம் இல்லையா..? exactly! எல்லாக் காலத்திலும் பெண்கள் extraordinary capacity உள்ள ஆண்களைத்தானே தேர்ந்தெடுத்து வந்திருக்கிறார்கள்! இத்துனூண்டு மூளை மையத்தை வைத்துக்கொண்டு மனம் கவருமாறு பேசி, பழகும் ஆணைத்தான் பெண்கள் இன்று அதிகம் விரும்புகிறார்கள். ஏன்? இந்தக் குணங்கள் இருந்தால்தான் நாளை அவர்களின் பிள்ளைகளும் வெற்றிகரமாகப் பிழைத்துக்கொள்ள முடியும். இதில் மிகப் பெரிய விசித்திரம் என்ன தெரியுமா? உலகம் முழுக்க, மனித ஆண்களின் உடலில் ஊறும் டெஸ்டோஸ்டீரானின் அளவு வர வரக் குறைந்துகொண்டே வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். டெஸ்டோஸ்டீரான் குறைவதால் ஆக்ரோஷம், ஆதிக்கம் மாதிரியான குணங்கள் நீங்கி, அனுசரித்துப்போதல், அன்பால் காரியம் சாதித்தல் என்பது மாதிரியான தன்மைகள் ஆணுக்குள் தலை எடுக்கின்றன.

மனித வரலாறு முழுக்கப் பெண் பெரிதாக மாறி இருக்கவில்லை. அவளுக்குச் சூழலும், வாய்ப்புகளும்தான் மாறி வந்திருக்கின்றன. ஆனால், ஆண் தொடர்ந்து காலத்துக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறான். இப்படித் தன்னை மீண்டும் மீண்டும் மீட்டுருவாக்கி, பரிணமித்துக்கொண்டே போகிறவன்தான் மரபணு ஆட்டத்தில் ஜெயிப்பான். அதெல்லாம் முடியாது, நான் எப்பவுமே கற்கால பாணியிலேயேதான் இயங்குவேன் என்று அடம் பிடித்தால், இயற்கை

உயிர் மொழி - 27

சந்தடிஇன்றி deselect செய்து ஆட்டத்தில் இருந்து அகற்றிவிடும். காரணம் இயற்கைக்கு நல்லவன், கெட்டவன், வேண்டியவன், வேண்டாதவன் என்ற பாரபட்சம் கிடையாது. ஒரே ஒரு விதிதான்... சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட்!

இந்த சர்வைவலைக் குறிவைத்துத்தான், மனித நடத்தை எல்லாவற்றையுமே நம் மரபணுக்கள் முடிவு செய்கின்றன. வெவ்வேறு காலச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மரபணுக்கள் நம் நடத்தையை மாற்றிக்கொண்டே வருகின்றன. இந்த மாற்றங்கள் மூலமாக மரபணுக்கள் பேசும் மௌனமான உயிர்மொழி உணர்வதற்குக் கொஞ்சம் கடினமானதுதான். மதம், நிறம், இனம், மொழி, வர்க்கம், பாலினம், சாதி, மரபு, நம்பிக்கைகள், நான் எனும் உணர்வு... இப்படி நம் மனத் தெளிவை மறைத்துக்கொண்டே இருக்கும் மாயத் திரைகளை நீக்கி, நிர்வாணப் பார்வையால் நோட்டமிட்டால் ஒழிய, இந்த உயிர்மொழி நமக்குக் கேட்காது. இந்த நிர்வாணப் பார்வையைக் கொஞ்சம் சுவீகரித்து, இந்த உலகை மீண்டும் ஒரு தரம் பாருங்கள். உயிர் பேசும் மொழி உங்களுக்கும் தெள்ளத் தெளிவாகக் கேட்கும்!

- நிறைந்தது