மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 06

Moongil Moochu series by Suga
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா

ள்ளியில் படிக்கும்போது வைகாசி மாதத்தின் துவக்கத்திலேயே எங்களுக்கு மனசுக்குள் மகிழ்ச்சி பரவத் தொடங்கும். திருநெல்வேலியின் முகம் மெள்ள மாறத் துவங்கும் நேரம் அது. முதலில் கீழ ரத வீதியில் மூடி வைத்திருந்த சுவாமி, மற்றும் அம்மன் தேர்களைப் பிரிக்கத் துவங்குவார்கள். நாங்கள் படித்த ஷாஃப்டர் ஸ்கூலுக்கு நேர் எதிரில் உள்ள பொருட்காட்சி மைதானம் சுத்தப்படுத்தப்படும். கண் மூடித் திறப்பதற்குள் குறுகிய காலத்திலேயே அரசுப் பொருட்காட்சி தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய வரும். மற்ற நேரங்களில் எப்போதுமே இருட்டாக இருக்கும் பொருட்காட்சி மைதானம், சட்டென்று வெளிச்சமாக மாறிவிடும். சாலை ஓரம் தூவிஇருக்கும் வெள்ளைப் பொடி, பொருட்காட்சி வந்தேவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லும். நெல்லையப்பர் கோயில் களைகட்ட ஆரம்பிக்கும். எங்களுக்குக் காய்ச்சல் வரும். காரணம், அதுவரை வெளியே அவ்வளவாகத் தென்படாத பெண் பிள்ளைகள், ஆனித் திருவிழாவை முன்னிட்டு கொஞ்சம் தாராளமாகத் தெருக்களில் நடமாடத் தொடங்குவார்கள்.

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

நெல்லையப்பர் கோயிலின் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும். திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் சேக்கிழார் புராணம் பாடிக்கொண்டு இருப்பார். ஒரு கண் மேடையிலும், மறு கண் பெண்கள் உட்கார்ந்து இருக்கும் பகுதியிலுமாக நாங்கள் எல்லோரும் நின்றுகொண்டு இருப்போம். குஞ்சு மட்டும் கவலையே படாமல் பெண்கள் இருக்கும் பக்கமே திரும்பி, வாகாக உட்கார்ந்துகொள்வான். 'செய்வன திருந்தச் செய்யணும்ல. எதுக்கு ஒளிவுமறைவு?’ என்பான். 'சரி, நீ யாரைப் பாக்கறதுக்கு உக்காந்திருக்கே’ என்று கேட்டால், 'எல்லாரையும்தான்’ என்று தயங்காமல் பதில் சொல்வான். அது உண்மைதான். 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துப் பின்தொடரும் அறிவு எல்லாம் எப்படி இருக்கும்?

மூங்கில் மூச்சு!
மூங்கில் மூச்சு!

அடுத்த ஓரிரு வருடங்களில் 'அலைகள் ஓய்வதில்லை’ படப் பாடல்களுக்கு அர்த்தம் தெரிய ஆரம்பித்தது. இப்போது கொஞ்சம் துணிச்சல் வந்து, நாங்கள் எல்லோருமே பெண் கள் வரிசையைப் பார்த்து வெளிப் பிராகாரத்தில் உட்கார ஆரம்பித்தோம். சிவ மந்திரமோ, கந்த சஷ்டிக் கவசமோ சொல்லியபடி, கையில் தூக்கு விளக்குடன் வேகமாக நடந்து வரும் பெண்கள் அனைவருமே எங்களைக் கடந்து செல்லும்போது மட்டும் அநியாய ஸ்லோமோஷனில் செல்வார்கள்.

அப்படி ஒரு முறை தேங்காய்க் கடைக்காரர் மகள் மகேஸ்வரி எங்களைக் கடந்து செல்லும்போது, குஞ்சு அவளைப் பார்த்து 'ஏ வீட்டுக் கிளியே, கூண்டைவிட்டு தாண்டி வந்தியே...’ என்று பாடினான். காதில் போட்டு இருந்த ஜிமிக்கி ஆடச் சிரித்தபடி மகேஸ்வரி சென்றுவிட, அவள் பின்னால் வந்துகொண்டு இருந்த கம்பவுண்டர் வீட்டம்மாள் சண்டைக்கு வந்து விட்டார். 'எல அம்பி, ஒடம்பு என்னமா வருது? ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் நான் வெளிய வாரதக் கேலி பண்ணுதியோ? ஒங்க வீட்ல சொல்லட்டுமால?’ என்றார். குஞ்சு பதறிப்போய், 'ஐயையோ, ஒங்கள இல்ல அத்த’ என்று சொல்லிச் சமாளிக்க வர, அதுவும் பிரச்னையாகிவிட்டது. 'என்னது... அத்தையா? நான் என்ன ஒங்க அப்பாகூடவால பொறந்தேன்? அத்தையாம்லா... அத்த?’

தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின்போது அநேகமாக எங்கள் எல்லோருக்கும் ஒரு தைரியம் வரும். பெரிய தேரின் பின் பக்கம் அமர்ந்திருக்கும் பெரியவர், கை மைக்கில் 'ஓரங்களில் நிற்கும் அன்பர்கள், பக்தர்கள் எல்லோரும் வந்து அம்மையப்பன் தேரின் வடம் பிடித்து இழுங்கள்... ஆங்... தடி போடுகிறார்கள்... அடிய்யா... ஆங் ஆங்’ என்று உற்சாகப்படுத்துவார். கண்களில் தென்படும் மனதுக்குப் பிடித்த பெண்களைப் பார்த்துக் குதூகலமாகச் சிரித்துக் கை அசைத்தபடி நாங்கள் தேர் இழுக்க ஆரம்பிப்போம்.

தேரோட்டத்துக்கு என்றே தைக்கப்பட்ட வட்டக் கழுத்து ஜிப்பா போட்டு, மைனர் செயின் வெளியே தெரிய குஞ்சு ஏதாவது ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து பக்திப் பரவசத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டே தேர் இழுப்பான். சாயங்காலம் பொருட் காட்சிக்கு நாங்கள் கிளம்பிச் செல்லும்போது, குஞ்சு முற்றிலும் வேறு ஓர் ஆளாக ஸ்டைலான பேன்ட் சட்டையில் வருவான்.

பொருட்காட்சித் திடலின் வாயிலில் நுழைவுச் சீட்டைக் கிழிக்கும்போதே, கண் வலை வீசி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துவிடுவான். பிறகு, அவளைப் பின் தொடர எங்களைப் பணிப்பான். மூன்று மணி நேரம், அவள் பின்னாலேயே அவள் போகும் எல்லா ஸ்டால்களுக்கும் நாங்களும் செல்வோம். அவள் டெல்லி அப்பளம் வாங்கினால், நாங்களும் வாங்கித் தின்போம். 'உறவுப் புதிர், மனச் சங்கிலி’ போன்ற நாடகங்களைப் பொறுமையாக அவளுடன் பார்ப்போம். நாடகத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் கபாலி மாமா, நாங்கள் அவருக்காக வந்து நாடகம் பார்ப்பதாக நம்பிக்கொண்டு, ஸ்க்ரிப்ட்டில் இல்லாத வசனங்களாகப் பேசி, சோகமான காட்சிகளிலும் சந்தோஷச் சிரிப்புடன் நடித்துத் தள்ளுவார். அந்தப் பெண் நகரத் தொடங்கியவுடன், கபாலி மாமாவை அம்போவென்று விட்டுவிட்டு, அவளுடனே ராட்சஸ ராட்டினம் ஏறி, பயப்படாத மாதிரி மூச்சைப் பிடித்துக்கொண்டு நடிப்போம். கடைசி வரை அந்தப் பெண் எங்களைத் திரும்பியே பார்க்காமல், அவள் அப்பா அம்மாவுடன் வெளியே சென்றுவிடுவாள்.

யோசித்துப் பார்த்தால், எனக்கென்று ஒரு காதல் அனுபவம் பிரத்தியேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குஞ்சுவின் காதலே என் காதலாக இருந்தது. அவனும் கணக்கு வழக்கு இல்லாமல், கண்ணில்படுகிற பெண்கள் பின்னால் எல்லாம் அலைந்துகொண்டு இருந்தான். என்னால் அவன் இழுத்த இழுப்புக்கு அலைய முடியவில்லை. பொறுமை இழந்து ஒருநாள், 'ஆயிரத்தில் ஒருவன்’ (எம்.ஜி.ஆர்) படத்து அடிமைகள்போல, 'இப்படியே எத்தனை நாள்தான் இருக்கிறது?’ என்று கோபமாகக் கத்திவிட்டேன். கோபத்தின் பலனாக உடனே ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான் குஞ்சு.

அப்படித்தான் சந்திராவை நாங்கள் இருவருமே காதலிக்க ஆரம்பித்தோம். தினமும் பத்திரமாக அவளைக் கல்லணை ஸ்கூலில் கொண்டுபோய்விட்டுக் கூட்டி வந்தோம். எங்கள் இருவரையும் பார்த்தாலே அவள் ரகசியமாகச் சிரிக்கத் தொடங்கிவிடுவாள். அவளது சிரிப்பு தந்த நம்பிக்கையில், துணிச்சலாக ஒரு புத்தாண்டு வாழ்த்து அட்டையை வாங்கி, ஜோடியாக நாங்கள் இருவருமே கையெழுத்திட்டு அவளுக்கு அனுப்பிவைத்தோம். மாறாத சிரிப்புடன் அவள் அதைக் கிழித்து எங்கள் முன்னால் போட்டுவிட்டுப் போனாள். நொறுங்கிப்போன மனதுடன் இருவரும் ஜோடியாக கன்னியாகுமரிக்குச் சென்று கடலைப் பார்த்தபடி உட்கார்ந்து அழுதோம். அதற்குப் பிறகு 'காதல்ங்கிறது வாழ்க்கைல ஒரு தடவைதான் பூக்கும்’ என்று எனக்கு நானே தலையை ஆட்டி வசனம் பேசிக்கொண்டு சமாதானமாகிவிட்டேன். ஆனால், குஞ்சு தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

ஒரு மாலையில் அவசர அவசரமாக வந்தான். 'சீக்கிரம் வா. ஒரு லிஸ்ட் போடணும்’. தாமிரபரணி ஆற்றுக்குச் செல்லும் வழியான குறுக்குத் துறை ரோட்டுக்கு என்னை இழுத்துக்கொண்டு சென்றான். பூமாதேவி கோயில் திண்டில் உட்கார்ந்துகொண்டு, 'நல்ல லவ் ஸாங்க்ஸா சொல்லுலெ. ரெக்கார்ட் பண்ணணும்’ என்றான். கையில் புத்தம் புது ஜிஞிரி

கேசட் வைத்திருந்தான். 'சின்னத் தம்பி பெரிய தம்பி’ திரைப்படப் பாடலான 'ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது’ பாடலை ஆரம்பப் பாடலாக எழுதினேன். பிறகு, 'கோழி கூவுது’ படத்தின் 'பூவே இளைய பூவே’, 'நினைவெல்லாம் நித்யா’வின் 'நீதானே எந்தன் பொன் வசந்தம்’ என்று பல பாடல்கள். இந்தப் பாடல் லிஸ்ட் பெரிய அளவில் வொர்க் - அவுட் ஆனதாக பின்பொரு முறை சந்«தாஷப்பட்டுச் சொன்னான்.

பிறகு, காதலிகள் மாற மாற... புது கேசட்டுகள் கொண்டு வர ஆரம்பித்தான். வேறு வேறு பாடல்களை நான் எழுதினாலும், முதல் பாடலாக 'சின்னத் தம்பி பெரிய தம்பி’ படத்தின் 'ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது’ பாடலையே எழுதச் சொன்னான். 'ரொம்ப ராசியான பாட்டுல. கச்சேரில எல்லாம் 'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு’ப் பாடி ஆரம்பிப்பாங்கல்லா. அந்த மாதிரி இந்தப் பாட்டுதான் நமக்குப் புள்ளையார் சுழி’.

சென்னைக்கு வந்த பின் நான் பார்த்த பல காதல்கள் முற்றிலும் வேறாக இருந்தன. மிகவும் நெருங்கிய ஒரு பணக்கார மனிதரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கல்லூரிக்குக் கிளம்பிக்கொண்டு இருந்த அவர் மகனை அறிமுகப்படுத்தினார். அந்தப் பையனை ரொம்பச் சிறு வயதில் பார்த்திருந்தேன். வணக்கம் சொல்லிவிட்டு, அவனது அறைக்குச் சென்றுவிட்டான் அந்தப் பையன். சிறிது நேரத்தில் அவனது அறையில் இருந்து அவனுடன் ஓர் இளம் பெண் வெளியே வந்தாள். குளித்து முடித்த ஈரம் அவள் தலையில் சொட்டிக்கொண்டு இருந்தது. அவள் போட்டிருந்த டி-ஷர்ட்டில் 'R U AWAKE?’ என்று எழுதியிருந்தது. எங்களுடனே அமர்ந்து டிபன் சாப்பிட ஆரம்பித்தாள். 'டேய், ஸ்வேதாவ இன்ட்ரடியூஸ் பண்ணு’ என்றார் தகப்பனார். 'ஷி இஸ் மை உட்பி’ என்றான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த மகன். அந்தப் பெண் உப்புமாவைத் தின்றுகொண்டே என்னைப் பார்த்து 'ஹாய்’ சொல்லவும், எனக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இரவு அந்தப் பெண் அங்குதான் தங்கியிருக்கிறாள். அவளது பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதாகச் சொன்னார்கள். மண மேடையில் தாலி கட்டும்போதுதான் என் மனைவியைப் பார்த்தேன் என்ற உண்மையை அந்தச் சமயத்தில் சொன்னால், சாப்பிட்டுக்கொண்டு இருந்த உப்புமாத் தட்டைப் பிடுங்கிவிடுவார்கள் என்பதால், அமைதியாகவே இருந்துவிட்டேன்.

மூங்கில் மூச்சு! - 06

'நெஜமாத்தான் சொல்றீங்களா? தாலி கட்டும்போதுதான் ஒங்க வொய்ஃபைப் பாத்தீங்களா? என்னங்க இது, இந்தக் காலத்துல போய் இப்பிடி? நம்பவே முடியலியே!’ என்று பல நண்பர்கள், பல முறை கேட்டிருக்கிறார்கள். 'நான் வளர்ந்த சூழல் அப்படிங்க. எங்க குடும்பங்கள்ல அப்படித்தான். போன்லகூடப் பேசலைங்க’ என்று நான் சொல்வதை அவர் களால் ஏற்றுக்கொள்ள முடியாமல், ஒரு ஜந்துவைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்ப்பார்கள். இன்னும் சிலர் பொறுக்க மாட்டாமல், ஏதேதோ சொல்வார்கள். 'ஏங்க, கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவையாவது பார்த்திருக்கலாம்ல?’ விடாமல் இப்படி கேட்டுத் துன்புறுத்துபவர்களுக்கு... 'முன்னாடியே பார்த்திருந்தா அப்புறம் எப்பிடிங்க அவ கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருப்பா?’ என்று சொல்லி, அவர்கள் வாயை அடைப்பேன்.

திருநெல்வேலி மாதிரி பழமையான ஒரு சிறு நகரத்தில், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி சூழலில் வளர்ந்த ஒருவனால், நினைத்த மாத்திரத்தில் ஒரு பெண்ணுடன் பேசவோ, பழகவோ வாய்ப்பு இல்லை. வீதிகளில் எப்போதும் ஜன நடமாட்டம் இருக்கும். தனியாக ஒரு பெண்ணையும் பார்க்க முடியாது. சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனாலும் அவர்களுடன் குடும்பத்தில் மூத்தவர்களோ, அண்டை வீட்டுப் பெண்களோ பாதுகாப்பாகச் செல்வார்கள். ஆனித் திருவிழா, தேரோட்டம், பொருட்காட்சி என வருடத்துக்கு ஒரு முறை அவர்களை ஆசைதீரப் பார்க்கக் காத்துக் கிடக்க வேண்டும். அவர்களின் மனதிலும் இந்த எண்ணம் இருக்கும்தான்.

இப்படி ஒரு சூழலிலும் குஞ்சுவைப் போன்றவர்கள் உற்சாகமாக வளைய வருகிறார்கள். மனதில் இருக்கும் அந்தக் காதல் தீயை இன்னும் அணையவிடாமல் அவ்வப்போது எண்ணெய் ஊற்றி,

மூங்கில் மூச்சு! - 06

உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பன் குஞ்சுவின் மகன் இப்போது 10-ம் வகுப்பு படிக்கிறான். சமீபத்தில், நான் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது, காரை எடுத்துக்கொண்டு குஞ்சு என்னைப் பார்க்க வந்தான். 'எல, வாயேன், அப்பிடியே ஒரு டிரைவ் போயிட்டு வரலாம்’ என்றான். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் ஏதேதோ பழைய கதைகளைப் பேசிக்கொண்டே சென்றோம். குறுக்குத் துறை ரோடு வழியாகக் கார் சென்றபோது வேகத்தை மெள்ளக் குறைத்து, ஓரமாக வண்டியை நிறுத்தினான் குஞ்சு. 'என்னல, நிறுத்திட்டே?’ என்றேன். கொஞ்சம் தயங்கியபடி காரின் டேஷ்போர்டில் இருந்து ஒரு சோனி சி.டி-யை எடுத்தான். கூடவே, ஒரு பேப்பரும் பேனாவும்.

எதுவுமே சொல்லாமல், பேப்பரை வாங்கி 1 என்று போட்டு 'சின்னத் தம்பி பெரிய தம்பி’ படத்தின் 'ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது’ என்ற பாடலை எழுத ஆரம்பித்தேன்!

- சுவாசிப்போம்...