மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 62

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

அபூர்வமாக இந்தப் பெருநகரத்தில் எலந்தப் பழம் விற்கும் தள்ளுவண்டி யைக் கடக்கும்போது வரும் வாசனை மணி மேகலையை அழைத்து வந்துவிடுகிறது.

நேற்று இரவு 'வாசனை’ என்ற சிறுகதையைப் படித்தேன். ஸ்யாம் ராய் எழுதிய வங்காளக் கதை. தன் மனைவியின் வாசனைபற்றி ஒரு கணவன் சொல்லும் கதை. அற்புதம்.

பெண் பார்க்கப் போனபோது முற்றத் தில் குவிந்துகிடந்த மண் உதிரா உருளைக் கிழங்குகளும் புறா எச்சங் களும் தந்த வாசனைதான் அவள் நினைவுகளை எழுப்பிடும் முதல் வாசனை எனத் தொடங்குகிறது கதை. கல்யாணமான நொடிகளில் பூச்சரமும் வியர்வையும் கலந்த அவளது அக வாசனையில் இருந்து ஒவ்வொன்றாகச் சுழன்று சுழன்று எழுகிறது. அதிகாலையில் அவள் தரும் வாசனை, சமையலின் ருசி மணம், காமத்தின் அந்தரங்க மணம், புடவை கட்டியபோது, குளித்துவிட்டு வரும்போது, குழந்தை சுமந்தபோது, தாய்ப்பால் சுரந்தபோது, காய்ச்சலில் கிடந்தபோது, வயதானபோது என எல்லா வாசனைகளையும் சொல்லிக்கொண்டே போகிறார். 'பல நேரங்களில் அவளது வாசனைதான் எனக்கும் இருந்தது’ என்ற வரிகளில்தான் அத்தனை காதலும் இருக்கிறது.

கடைசியில் அவள் இறந்து தூக்கிப்போன பிறகு, கூடத்தில் பூக்கள் குவிந்துகிடக்கும். அந்த வாசனை எழுதவே முடியாத வெறுமையின் வாசனை என்கிறார். கடைசியில் இப்படி முடிகிறது கதை... 'வாழ்நாள் முழுதும் எவ்வளவோ வாசனைகளை அவள் தந்தாள். ஆனால், அவளுக்கு மட்டுமேயான ஒரு பிரத்யேக வாசனை எனக்கு மட்டுமே தெரியும்... எனது கல்லறையில் பூக்கும் ஒரு பூவுக்கு அந்த வாசனை இருக்கக்கூடும்!’

இதைப் படித்து முடித்த கணமே நினைவுகளில் ஏதேதோ வாசனைகள் நிரம்புகின்றன. 'ஒவ்வோர் அம்மாவுக்கும் ஒரு வாசனை இருக்கிறது. ஒவ்வொரு அப்பனின் கக்கத்துக்கும்’ என்ற தஞ்சை ப்ரகாஷின் வரிகள் புளியம் பூ மாதிரி உதிரத் தொடங்குகிறது.

புளியம் பூக்கள் உதிர்ந்த தார்ச் சாலைக்கும் இலுப்பைப் பூக்கள் உதிர்ந்த தார்ச் சாலைக்கும் வெவ்வேறு வாசம். அலுஞ்சி பழங்கள் நசுங்கிய கொல்லை, பனம் பழங்கள் விழுந்த ஒற்றையடிப் பாதை, செம்பருத்திப் பூக்கள் உதிர்ந்த கிணற்றடி, எள்ளுருண்டை காயும் திண்ணை, காளான் பூத்த குப்பைமேடு, துளசி வைத்த அகல் மாடம், கரும்புக் காடு எரியும் மாசி ராத்திரி, பொங்கல் மணக்கும் மார்கழிக் காலை, திரிகள் கருகும் கார்த்திகை கர்ப்பக்கிரகம், புதுத் தண்ணி வரும் ஆடி மணல், கதிர் இறைந்த பத்தாயம், மரிக்கொழுந்து படர்ந்த வேலிப்படல், கோரை மணக்கும் மணியாத்துப் புதர், சாணி மணக்கும் எரு வயல், கோழிப் பீ அப்பிய பஞ்சாரம், புழுக்கை மண்டிய ஆட்டுப்பட்டி, பட்டாசு புகையும் தீபாவளித் தெரு, புதுப் புத்தகம் பிரிக்கும் வகுப்பறை, பெட்ரோல் நெடியேறும் டிராஃபிக் சாலை, குப்பை லாரி கடக்கும் தெருமுனை, கூவம் கடக்கும் ரயில் பாலம், இஞ்சிமொரப்பா விற்கும் அழுக்குக் கிழவன், முன் இருக்கையில்  மல்லிகையோடு உட்கார்ந்திருக்கும் பெண், ரூம் ஃப்ரெஷ்னரும் பெர்ஃப்யூம்களும் மூச்சடைக் கும் விழாக் கூடம், சிகரெட் புகைந்து சாராயம் எரியும் பார் இரவு என வழி எல்லாம் எத்தனை எத்தனை வாசனைகள்!

வட்டியும் முதலும் - 62

குழந்தை பிறந்த வீட்டுக்குப் போனால் ஒரு வாசனை இருக்கும் இல்லையா? ஆய்த் துணிகளும் பால் வீச்சமும் பவுடர் வாசமும் நிறைந்துகிடக்கும் வீடு எல்லோரது நினைவிலும் இருக்கிறது. தொட்டிலில் குனிந்து முத்தமிடும்போது எடுத்து வந்துவிடுகிற வாசம். ஒவ்வொருவரின் மூச்சுக் காற்றும் அம்மாவின் வாசத்தில் தான் தொடங்கும். தாய்ப்பாலின் பச்சை வாசனையைப் போன்ற ஓர் உண்மையைத்தானே நாம் வாழ்க்கை முழுக்கத் தேடிக்கொண்டே திரிகிறோம். மஞ்சள் குழைத்துக் காய்ந்த அம்மாவின் கை வாசனை மூச்சிலேயே கிடக்கிறது. கழுத்து மடிப்பில் கிடக்கும் பாண்ட்ஸ் வாசமும். எங்கேயாவது சாப்பிடும்போது, 'இது அம்மா வைக்கிற கொழம்பு மாதிரி இருக்கு... சாந்தி சித்தி வைக்கிற கொழம்பு மாதிரி இருக்கு’ என வாசம் பிடித்துவிட்டால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது?

தனிமையில் இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில், கீழ் வீட்டில் இருந்து வரும் மீன் குழம்பு வாசனை எத்தனை நினைவுகளைக் கிளறிவிடுகிறது? அப்பாவைப் பற்றி நினைக்கும்போது மருந்து வாசமும் சாராய வீச்சமும்தான் வரும் எனக்குள். ஆஸ்பத்திரியில் வேலை முடித்துவிட்டு வரும்போது அந்த வாசங்களோடுதான் வீட்டுக்குள் நுழைவார். மருந்தும் வியர்வையுமாக ஹேங்கரில் தொங்கும் ஒரு சட்டை. கக்கத்தில் இடுக்கிக் கொண்டு கை பிடித்துவிடும் வாசனை அப்பாவை வரைந்துவிடுகிறது இப்போதும். கார்த்திகையில் மாலை போடும் 48 நாட்கள் மட்டும் விபூதியும் கற்பூரமுமாக

வட்டியும் முதலும் - 62

ஒரு வாசத்தில் கிடக்கும் வீடு. சந்தன வாசம் எப்போது வந்தாலும் மீராக்கா ஞாபகம்தான் வருகிறது. சாண்டல் சோப் போட்டுக் குளித்துவிட்டு, வெயில் விழுந்த ஜன்னலோரம் வந்து தலைஉலர்த்தும் மீராக்கா. வெத்தலை வாசம் வந்தாலே பத்மநாபன் வாத்தியார்தான். குளித்துவிட்டு வந்தாலும் தனபாலிடம் கரியும் கிரீஸுமாக ஒரு வாசம் நிரந்தரமாகிவிட்ட மாதிரி தோன்றும். புதுச் சட்டை போட்டு வந்தாலும் பிச்சையிடம் வெங்காயமும் பூண்டுமாக சமையலுக்கு நிற்கிற வாசம்தான் வரும். குட்டிக்கூரா பவுடரும் மெழுகு அணைந்த வாசமும் ரோஸி சிஸ்டர் விட்டுப்போனவை.

அபூர்வமாக இந்தப் பெருநகரத்தில் எலந்தப் பழம் விற்கும் தள்ளுவண்டி யைக் கடக்கும்போது வரும் வாசனை மணி மேகலையை அழைத்து வந்துவிடுகிறது.

ஒரு தேன் மிட்டாய் வாசனை பள்ளிக்கூடத்தையும், காபி வாசனை கும்பகோணம் சுந்தரேசனையும், ஒரு கறித்துண்டு வாசனை முபாரக் அலி வீட்டை யும், ஃப்ரூட்டி வாசனை கீர்த்தனாவையும் கொண்டுவந்துவிடுகிறது. கீர்த்தனாவோடு வண்டியில் போனபோது உணர்ந்த வாசனைஎல்லாம் காற்றில் அப்படியேதான் இருக்கிறது. சின்ன மழைக்கு வருகிற மண் வாசனை எவ்வளவு செய்துவிடுகிறது? அதுவும் மழையில் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு வாசனை. சென்னையில் நான் இருக்கிற தெருவில் மழைபெய்த்தால் குப்பையும் சாக்கடையுமாகக் கப்படிக்கிறது. ''தஞ்சாவூர்ல ஜன்னலைத் தொறந்தா இப்பிடியா இருக்கும்... தூத்தல்லயே கும்முனு மண் வாசம் அடிக்க ஆரம்பிச்சுரும்ல...'' என்பான் அண்ணன். மனிதர்களையும் ஊர் களையும் அன்பையும் பிரிவையும் ஒரு வாசனை எப்படி அள்ளியெடுத்துக்கொண்டு வருகிறது?

எல்லா வீடுகளிலும் கொஞ்சம் ஆஸ்பத்திரி வாசமும் கல்யாண வீட்டு வாசமும் எப்போதுமாகத் தங்கிவிடுகிறது. யாரையாவது பார்க்க ஆஸ்பத்திரி போய்விட்டு வந்தால், அந்த வாசம் போகவே சில நாட்கள் ஆகின்றன. கோபால் அண்ணன் உடலை வாங்க மார்ச்சுவரிக்குப் போய் வந்த பிறகு ரொம்ப நாட்களாயிற்று அந்த வாசத்தை உதற. ஏதேதோ சென்ட் அடித்து வந்த புகாரியண்ணன் பாடியோடு விழித்திருந்த இரவின் வாசம் போக எவ்வளவு நாட்களாயிற்று? கல்யாணத்துக்குப் போனால் சந்தனமும் பன்னீரும் காய்ந்த பூக்களுமாக நம்மோடு வீட்டுக்கு வந்துவிடுகிறது ஒரு வாசம். ஒரு வார்த்தை, எழுத்து, இசை எல்லாமும்கூட இப்படிச் செய்துவிடுகிறது.

'தீப தீபங்கள் ஓயும் நேரம், நீயும் நெய்யாக வந்தாய். இந்தக் கண்ணீரில் சோகம் இல்லை, இன்று ஆனந்தம் தந்தாய்’- யேசுதாஸின் குரலில் இந்த வரிகளைக் கேட்கும்போது எல்லாம் புறங்கையால் கூந்தலை ஒதுக்கிக்கொண்டு, பிராகாரத்தில் விளக்கு போட்டுக்கொண்டு இருக்கும் மகேஸ்வரியும் மாவிளக்கு வாசமும் வந்துவிடுகிறது. ஒவ்வொரு வாசமும் நம் நினைவுகளை நூலில் பூக்கள் மாதிரி எடுத்துத் தொடுத்துக்கொண்டே இருக்கின்றன.

'பெர்ஃப்யூம்’ படத்தில் சாக்கடையும், பன்றிகளும், மீன்களும் நிறைந்துகிடக்கும் ஓர் இடத்தில் அந்த ஹீரோ பிறப்பான். பிறந்தவுடன் அவன் அம்மாவைக் கொன்றுவிடுவார் கள். அப்படி ஒரு இடத்தில் பிறந்தவன், அப்புறம் நுணுக்கமான நுகர்வு சக்தியோடு வெவ்வேறு வாசனைகளைத் தேடித் திரிந்துகொண்டே இருப்பான். அவன் முதலில் கண்டு பிடித்த பெர்ஃப்யூமை கர்ச்சீப்பில் தெளித்து அவன் காற்றில் வீசும்போது மொத்தக் கூட்டமும் மயங்கித் திளைத்துக்கிடக்கும் காட்சி... மறக்கவே முடியாத விஷ§வல். இந்த வாழ்க்கையும் பிழைப்பும் தருகிற வாசனைகள்தான் எனக்கு எப்போதும் ஆச்சர்யங்கள்.

நாம் சில நிமிடங்கள்கூட நிற்க முடியாத இடத்தில் பலர் வாழ்க்கை முழுக்க வேலை பார்க்கிறார்கள். நண்பன் ஒருவனைப் பார்க்க அவன் வேலை பார்க்கிற தோல் தொழிற்சாலைக்குப் போயிருந்தேன். ஒரு நிமிஷம் நிற்க முடியவில்லை. '' எப்பிடிறா இங்க வேல பாக்குற?'' என்றேன். ''மச்சான்... பழகிட்டன்னா பூ மார்க்கெட்ல வேல பாக்குற மாதிரி ஆகிரும்றா...'' என் றான் சிரித்துக் கொண்டே. இறைச் சிக் கடையில் பாட்டு பாடிக்கொண்டே வேலை பார்ப்பவர்களை, குவித்துவைத்த மீன் களுக்கு நடுவே நாளெல்லாம் உட்கார்ந்திருப்பவர்களை, நடு ரோட்டில் சாக்கடைக் குழியில் இருந்து எட்டிப்பார்ப்பவர்களை, மார்ச்சுவரியில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு இருப்பவர்களைப் பார்க்கும்போது எல்லாம் நண்பன் சொன்னதைத்தான் நினைத்துக்கொள்வேன்.

வட்டியும் முதலும் - 62

அன்றைக்கு சைதாப்பேட்டை ரயிலடியில் ரமேஷைப் பார்த்தேன். அவர் துப்புரவுத் தொழிலாளி. மனிதக் கழிவுகள் அள்ளும் வேலை பார்க்கிறவர். சாயங்காலங்களில் அவ்வப்போது சைதாப்பேட்டை ரயிலடியில் தான் அவரைப் பார்ப்பேன். எப்போது பார்த்தாலும் சத்தம் போட்டுப் பழைய பாடல்களைப் பாடிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். அங்கு இருக்கிற பழக்கடையிலோ டி.வி.டி. கடையிலோ உட்கார்ந்து வம்பு பேசிக்கொண்டு இருப்பார். நான் எழுதிக்கொண்டு இருக்கிற திரைக்கதைக்காக ரயில்வே ஸ்டேஷனில் சிலரைப் பார்க்க உதவியிருக்கிறார். அன்றைக்கு என்னைப் பார்த்ததும், ''சார்... உங்க பேர மறுக்கா சொல்லுங்க...'' என்றபடி ஒரு கல்யாணப் பத்திரிகையை எடுத்து பேர் எழுதிக் கொடுத்தார்.

''சார்... பொண்ணுக்குக் கல்யாணம்... இங்க பல்லாவரத்துலதான்... வந்துருங்க'' என்றார்.

பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தேன். நாற்புறமும் ரோஜாக்கள் வரைந்துஇருந்தது. கிளம்பும்போது அவரிடம், ''வேலையெல்லாம் எப்பிடிப் போகுது..?'' என்றேன் வழக்கமாக. அவர் பெரிதாகச் சிரித்துக்கொண்டே சொன்னார், ''நமக்குஎன்ன சார்... நல்லா நாறுது!''

- போட்டு வாங்குவோம்...