மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 63

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

திருவிழாக் கடைத் தெருவில் முதல் ஆளாக வந்து படுதா விரித்து, 10 ரூபாய் சாமான்களைக் குவித்துவைத்து துடைப்பவன் மாதிரி இந்த மனம் தினம் ஏராளமான முகங்களைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறது.

முகங்கள்... முகங்கள்... முகங்கள்! - நேற்று தி.நகர் நெரிசலில் எதிரே வந்தவர் வணக்கம் வைத்தார். யார் என்று தெரியவில்லை. மறுபடியும் வணக்கம் வைத்தார். உற்றுப் பார்த்தேன்.

''என்ன சார்... யார்னு தெரியலியா? சாயங்காலம்தான் சார் ஆபீஸாண்ட உங்களுக்கு சல்யூட் வெச்சேன். அதுக்குள்ள மறந்துட்டீங்களே சார்...'' எனச் சிரித்தபோதுதான் அவரது முகமே பிடிபட்டது. விகடன் ஆபீஸ் செக்யூரிட்டி. ஆறேழு மாதங்களாகப் பார்க்கிற முகம்தான். யூனிஃபார்மிலேயே பார்த்துப் பழக்கப்பட்டவர், திடுதிப்பென்று கலர் சட்டையில் வரும்போது அடையாளமே தெரியவில்லை. யூனிஃபார்மைக் கழற்றினால் ஒரு மனிதனின் முகமேவா தொலைந்து போகும்? அதுவரை அந்த யூனிஃபார்ம் தான் அவரது முகமா? கறுத்த உதடுகளும் டை அடித்த மீசையும் சிரிக்கையில் இடுங்கி வரி விழும் கண்களுமாக மஞ்சள் பூப் போட்ட சட்டையில் எதிர்க் காற்றில் வந்தார். இப்போது அவர் கடந்து போய்விட்டார், 'அதுக்குள்ள மறந்துட்டீங்களே சார்...’ என்றபடி சிரித்த முகத்தை என்னிடம் கழற்றித் தந்துவிட்டு.

கரகரவென நிறைய முகங்களைக் கிறுக்கத் துவங்குகிறது நினைவு. நிலா டிபன் சென்டர் பரோட்டா மாஸ்டர், பெஸ்ட் ஹாஸ்பிடல் கீதா நர்ஸ், ஹவுஸிங் போர்டு லாண்டரிக் கடை அண்ணன், கைத்தடியும் விசிலுமாக வந்து சில்லறை கேட்கும் கூர்கா, ஒவ்வொரு முறையும் ஜன்னல் தட்டி தீப்பெட்டி கேட்கும் பாரா கான்ஸ்டபிள், கிரே கலர் தொப்பியில் பேப்பர் போட வரும் செபாஸ்டின், காக்கிச் சட்டையில் ஃப்யூஸ் போட வரும் ரவி, 'இன்னிக்கு எந்த ஆபீஸ் சார்?’ எனப் பார்த்ததும் காக்கிச் சட்டையைப் போட்டுக்கொள்கிற தெருமுனை ஆட்டோக்காரர், 'சமந்தா நம்பர் கேட்ருந்தேன்ல சார்...’ எனப் பளிச்சென்று வந்து நிற்கிற சரவண பவன் சப்ளையர் ராம்குமார்... இவர்களை எல்லாம்கூட எங்கேயாவது கலர் டிரெஸ்ஸில் பார்த்தால் அடையாளம் தெரியாமல் தான் நிற்பேன். அவரவர்க்கு அவர்களது இடத்தையும் வேலையையுமே முகங்களாக்கி வைத்திருக்கிறோமோ?

வேலையில் பார்க்கும்போதும் சாலையில் பார்க்கும்போதும் எல்லோர்க்கும் வெவ்வேறு முகங்கள்தான் எப்போதும்.

நாலைந்து வருடங்களுக்கு முன்பு ஊருக்குப் போவதற்காக பஸ் ஏற கோயம்பேட்டில் நின்றேன். அது வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் எகிறிஅடித்தது. வம்பாடுபட்டு ஒரு அரசுப் பேருந்தில் இடம் பிடித்தேன். பஸ் கிளம்பிய பிறகுதான் கவனித்தேன். எனக்குப் பக்கத்து சீட்டில் ஒருவர் ஃபுல் மப்பில் உட்கார்ந்திருந்தார். நாப்பது ப்ளஸ் வயசிருக்கும். போதையில் தலை தொங்கிய படி ஏதேதோ அரற்றிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார். 'நமக்குனு வந்து சிக்குறாய்ங்களே...’ என டென்ஷனாக இருந்தது. வண்டி சென்னை யைத் தாண்டும்போதே அவரது அட்ராஸிட்டி கிறுகிறுக்க ஆரம்பித்தது.

ஹை டெசிபலில் பினாத்திக்கொண்டு, மொத்த பஸ்ஸின் தூக்கத்தையும் கெடுக்க ஆரம்பித்தார். 'இல்லடி... இன்னிக்கு ஒரு முடிவு எடுத்துருவோம்டி... இப்பப் பேசு... இப்பப் பேசு... இப்பப் பேசு’ என்கிற மாதிரி வார்த்தைகளையே மாறி மாறிக் கத்தியபடி ரவுசு கட்டினார். 'ஏய்... பேசாம வாப்பா...’ என ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் மொத்த பஸ்ஸும் கொந்தளிக்க ஆரம்பித்தது. அவர் கேட்கிற மாதிரியே இல்லை. வழியில் பஸ் இரவு உணவுக்காக ஒரு மோட்டலில் நின்றது. எல்லோரும் முணுமுணுத்தபடி இறங்க, அவர் தள்ளாடியபடியே இறங்கினார். கொஞ்ச

வட்டியும் முதலும் - 63

நேரத்தில் வண்டி கிளம்பியது. அவரைக் காணோம். அதற்குள் வண்டி வேகம் எடுத்துக் கிளம்பிவிட்டது. மற்றவர்கள் கிசுகிசுவெனப் பேசிக்கொண்டார்கள். ''ஏங்க... என் பக்கத்து ஸீட்காரரு இன்னும் வரலீங்க...'' எனக் கத்தினேன். கண்டக்டர் உள்ளே வந்தார். என் காதில் மெதுவாக, ''தம்பி... யூரின் போற எடத்துல அந்தாளு அப்பிடியே மட்டையாகி விழுந்துட்டாப்ல... மண்டைலாம் ரத்தம்... தூக்கி ஓரமாப் படுக்கவெச்சுட்டாங்க... என்னாச்சுனு தெரியல... டிரைவரு வண்டிய எடுத்துட்டாப்ல...'' என்றார். இன்னொருவர், ''கண்டிஷனப் பாத்தா போய்கூடச் சேந்துருப்பாரு... வந்து சேர்றாய்ங்க பாரு...'' என்றார். எனக்குத் திடுக்கென்றது. யார்..? என்ன..? அங்கே என்னாவார் அந்த மனுஷன்..? எனத் திகிலாக இருந்தது.

காலையில் கும்பகோணத்தில் இறங்கும்போது, சீட்டுக்குக் கீழே குனிந்து செருப்பைத் தேடினேன். ஒரு பர்ஸ் கிடந்தது. எடுத்துப் பார்த்தேன். அதில் நைந்த இருபது ரூபாய் நோட்டும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் இருந்தது. கறுப்பு - வெள்ளையில் சுடிதாரில் ஒரு பெண் புன்னகைக்கும் போட்டோ. அதைப் பார்த்தஉடனே மனம் சொல்ல முடியாத துயரத்துக்குப் போனது. என்ன செய்வதுஎன்றே தெரியவில்லை.

'திருடப்பட்ட பர்ஸில் புன்னகைப்பது யார்? அவனது மனைவியா... அம்மாவா?’ என எங்கோ படித்த கவிதை நினைவில் சுருண்டது. 'பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே/ பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை’ என்ற பாரதி வரிகள் சுடு வெயிலானது. அந்த பர்ஸை அங்கு இருக்கும் போக்குவரத்துத் துறை பூத்தில் கொடுத்துவிட்டு வந்தேன். அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகம் அப்படியே மனதில் படிந்துவிட்டது. குடித்துப் புலம்பி வழியில் காயம்பட்டுக்கிடக்கும் ஒருவனது நேசத்துக்குரிய முகம். அந்த முகத்தைக் காணத்தான் அவன் இந்தப் பயணமே வந்தானா? அவனது சந்தோஷத்துக்கும் துன்பத்துக்கும் அந்த முகமே காரணமாயிருக்கக்கூடுமா? கோடிக் கோடி முகங்களிலும் எல்லோருக்கும் சுமந்து திரிய ஒரு முகம் இருக்கிறது. இன்பமும் துன்பமும், அன்பும் வெறுப்பும் மழை வெயிலாக மாறி மாறி அடக்கவிடாமல் சுமந்து திரிய ஒரு முகம். ஆற்றில் கிடக்கும் சூரிய பிம்பம்போல் கலைந்து கலைந்து ஒளியாகி ஊடுருவும் ஒரு முகம். உயிர் விலகும் நொடியில் இதயத்தில் உறையும் ஒரு முகம்... எல்லோரிடமும் இருக்கிறது.

'பள்ளிக்குத் திரும்புகையில் ஆசிரியர்கள் அவர்களை அதிசயிக்கிறார்கள் அடையாளம் தெரியாமல். ஆசிரியர்களை அவர்கள் அதிசயிக்கிறார்கள் அடையாளம் தெரிந்து’ என்ற தேவதச்சனின் கவிதை மறுக்க முடியாத ஒரு புகைப்படம்போல அசைகிறது. எனது பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு குரூப் போட்டோவை எடுத்துப் பார்க்கிறேன். ஏழாம் வகுப்பில் எடுக்கப்பட்டது. தேவாலயத்தின் படிக்கட்டுகளில் வலது ஓரம் நான்காம் வரிசையில் விழித்தபடி நிற்கிற முகம் நானா? தரையில் ரெட்டை ஜடையோடு உர்ர்ரென்று இருப்பது சோலையம்மா முகம். ரோஸி சிஸ்டரை நெருக்கியபடி சிரிக்கிற முகம் விட்டல்.

எண்ணெய் வழிய குரோட்டன்ஸ் செடிக்குப் பக்கத் தில் இருப்பது குளோரி. எந்த முகமும் இப்போது நான் பார்க்கிற தொலைவில் இல்லை. இப்போது எந்த முகமும் இப்படி இருக்கப்போவதும் இல்லை. புகைப்படங்கள் வைத்திருக்கும் இந்த முகங்கள்... ஏழு கடல், ஏழு மலை தாண்டி நாம் தொலைத்துவிட்ட முகங்கள். உங்கள் அம்மா - அப்பாவின் கல்யாண போட்டோவைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் அம்மாவின் முகம் இப்போது அம்மாவிடமும் இருக்கிறதா? பறவைகள் பறக்கும் பின்புலத்தில், பூ ஜாடிகள் வைக்கப்பட்ட ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட எனது அம்மா - அப்பாவின் முகங்களில் மீட்க முடியாத புன்னகையும் வெட்கமும் உறைந்திருக்கிறது. சரவணன் அண்ணனின் கல்யாண ஆல்பத்தைப் புரட்டும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. 10 வருடங்களில் பல முகங் கள் எப்படி மாறிவிட்டன? முகம் என்பது புறம் மட்டும்தானா? அகமும்தான் இல்லையா?

நண்பனின் கல்யாண ஆல்பத்தைப் புரட்டி ஒரு போட்டோவைப் பார்த்தபோது பகீரென்றது. அந்த போட்டோவில் சிரித்தபடி கூடி நிற்கிற முகங் களில் யாருமே இப்போது நண்பர்களாகக்கூட இல்லை. அந்த நண்பனும் அவன் மனைவியும் உட்பட!

வட்டியும் முதலும் - 63

எத்தனையோ மொபைல் கேமராக்கள் வந்துவிட்ட பிறகும் புகைப்படங்கள் தருகிற பரவசமும் கூச்சமும் போகவே இல்லை. பத்தாவது பரீட்சைக்காக கொரடாச்சேரி மணி ஸ்டுடியோவில் வெட்கமும் வேர்வை யும் வழிய நின்றதைப் போலத்தான் இப்பவும் இருக்கிறது. இப்போதும் போட்டோ எடுக்கும்போது முகத்தை எப்படி வைத்துக்கொள்வது..? கைகளை எங்கே வைத்துக்கொள்வது எனத் திணறலாகிறது. 'சிலுவைப் போர்’ பற்றிய ரூஸ்காவின் ஓவியம் ஒன்றில் துண்டிக்கக் காத்திருக்கும் கில்லட்டினில் தலை வைத்த படி நிற்கிற ஒருவனது முகம் நினைவில் பயங்கரமாக இருக்கிறது.

நாஜிப் படைகளின் வதை முகாமுக்குப் போக வரிசையில் நிற்கும் யூதர்களில் மிரண்டு விழிக்கும் ஒரு பெண்ணின் முகம், கோத்ரா ரயில் எரிப்புக் கலவரத்தில் கண்கள் கலங்கி கை கூப்பிக் கெஞ்சும் ஒரு இஸ்லாமியரின் முகம், ஈழப் போரில் கண்கள் உறைந்து சிதைந்துகிடந்த இசைப் பிரியாவின் முகம், குண்டு துளைத்திருந்த சார்லஸ் ஆண்டனியின் முகம், முள் வேலி முகாமில் ஒரு கை இல்லாமல் இன்னொரு கையில் தட்டுடன் நிற்கிற ஒரு சிறுவனின் முகம், இராக்கில் பர்தா விலக்கி புகையடர்ந்த தெருவைப் பார்க்கும் ஒரு பெண்ணின் முகம், சூடானில் பள்ளிக்கூடம் எதிரே போதைப் பொருள் விற்கும் ஒரு சிறுவனின் முகம், தண்டகாரண்யா காட்டில் துப்பாக்கியோடு பேசும் ஒரு முகம்... எல்லா முகங்களும் மனதில் குவிந்துகிடக்கின்றன... மாறி மாறி மேலெழும்பியபடி.

திருவிழாக் கடைத் தெருவில் முதல் ஆளாக வந்து படுதா விரித்து, 10 ரூபாய் சாமான்களைக் குவித்துவைத்து துடைப்பவன் மாதிரி இந்த மனம் தினம் ஏராளமான முகங்களைத் துடைத்துத் துடைத்துப் பார்க்கிறது.

போன வாரம் சேரன் எக்ஸ்பிரஸில் மேல் பெர்த்தை தட்டி, ''தம்பி கோய்ம்புத்தூர்தானுங்கெளே...'' என்று கேட்டவரின் முகம் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. அஞ்சு வருஷம் சொல்லிக்கொடுத்த பத்மா டீச்சரின் முகம் நினைவின் பனி மூட்டமாகவே இருக்கிறது.

''இப்படியே போனா பழந்தின்னி வவ்வாக் கொக வரும்... இந்த பாலத்துல ஏறி மேக்கால போங்க...'' - முண்டாசு கட்டிக்கொண்டு குன்னூர் மலை மேல் வழி சொன்ன ஒரு முதியவர் முகம் கோட்டோவியம் மாதிரி தங்கிவிட்டது. கீர்த்தனாவின் முகத்தை நினைத்துப் பார்த்தால் சலனச் சித்திரமாகவே இருக்கிறது பல நேரங்களில். ஓர் இசையோ, சுடரோ, பேச்சோதான் அந்த முகமாக வருகிறது. இசை, ஓவியம், எழுத்துக்கும்கூட முகம் இருக்கிறதுதானே.

அரை இருட்டில் எட்டு கைகளும் நாக்குதள்ளி கண்கள் உருண்டு, ஒரு முகமுமாக இருந்த மாகாளியைப் பார்த்தபோது முதலில் பயமாகவும் பின்பு பேரன்பாகவும் இருந்தது. அச்சத்தை அடித்து நொறுக்கிய பெண்மையும் பெருமுகமுமாக மிளிர்ந்தது. கொல்லிமலையில் சிதிலம் அடைந்த ஒரு கோயிலில் கைகள் உடைந்துகிடந்த துர்க்கை அம்மனின் முகத்தில் மாகாளியின் சாயல் தெரிந்தது. இவளின் முகத்தில் அன்பு வேறு விதமாக ஒளிர்ந்தது. அவரவரின் இதயத்தின் ஜீவன் ஒளி - விளக்கு. அவ்வளவுதான். புன்னகையும் அழுகையும்தான் முகம்.

ஒவ்வொரு குரலுக்கும் நாம் நினைத்த முகம் வேறு. கிடைத்த முகம் வேறுதானே..? ஓவியர் ம.செ. சார் வீட்டுக்குப் போனபோது அவர் வரைந்த ஒரு சிவன் ஓவியம் பார்த்தேன். அந்த சிவனுக்கு முகமும் இல்லை. வரையாத முகம்தான் எவ்வளவு அழகு... எவ்வளவு அர்த்தம். அப்புறம் அழகு என்பது முகமா என்ன? காதலிக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்துச் சிதைக்கும் செய்திகள் எவ்வளவு குரூரமானவை? அழகு என்பது இதயத்தின் ஒளி அல்லவா... நாலு தலைமுறை ஆக்கிப் போட்டு உயிர்கள் வளர்த்த அப்பத்தாவின் முதிர்ந்த உள்ளங்கைச் சுருக்கங்களைவிட அழகு ஒரு முகத்துக்கு வந்துவிட முடியுமா?

வட்டியும் முதலும் - 63

ஓவியர் மருது சார் கொடுத்த கோட்டோவியத்தில் இருந்தவனுக்கு அவ்வளவு பரிச்சயமான முகம். பறவைக் கூடு மாதிரி முகம். ''என்ன சார்... வெயில் ஜாஸ்தியா இருக்குல்ல...'' என்றபடி ஒரு கிளாஸ் மோரை நீட்டுகிற முகம். கூடத்தில் உட்கார்ந்து பேசிவிட்டு சற்று முன்தான் சட்டத்தில் போய் உட்கார்ந்துகொண்ட ஒரு முகம். வான்காவின் ஓவிய முகங்களில் எப்போதும் இருக்கிற காதலின் ஆதித் துயரம் அறை முழுவதும் வழிகிறது.

வீட்டுச் சட்டங்களில் வரிசையாக சின்னதும் பெரிது மாக மாட்டப்பட்டு இருக்கும் படங்கள்... அதன் முகங்கள்... ஒன்று தோன்றியது... இடுப்பைத் தாண்டி ஆடும் வாழை மட்டை சடை கட்டி, கண்ணாடியில் பிம்பம் காட்டிச் சிரிக்கும் நம் அக்கா தங்கச்சிகளின் புகைப்படங்கள். எல்லா வீடுகளிலும் எங்கோ கிடக் கின்றன. கனவுகள் உதிர்ந்த கண்களோடும் தன் பிள்ளைகளோடும் எப்போதாவது பிறந்த வீட்டுக்கு வரும் அக்கா தங்கச்சிகள் அந்த புகைப்படங்களைத் தடவிப் பார்க்கின்றனர்... தனியே சிரிக்கின்றனர்.... ஏனோ அழுகின்றனர்!

- போட்டு வாங்குவோம்...