ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150

முதுமைக்கு மருந்து... குழந்தைகள்!

##~##

ஒரு விடுமுறை தினத்தில், தூரத்து உறவினர்களான தாத்தா, பாட்டி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்க... என் மகன், கொழுந்தனார் பிள்ளைகள் என அனைவரும் ஆட்டம், பாட்டம் என விளையாடிக் கொண்டிருக்க... அவர்களை அதட்டி உள்ளே அனுப்பினோம். உடனே தாத்தா, பாட்டி முகத்தில் வாட்டம். ''என்னாச்சு தாத்தா..?'' என்று கேட்டபோது, ''எங்க பேரக்குழந்தைகள் வெளி நாட்டுல இருக்காங்க. பார்த்தே பல வருஷம் ஆச்சு. இந்தக் குழந்தைகள் இங்க விளையாடிட்டு இருந்ததைப் பார்த்தப்போ, மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு. அவங்களை நீங்க உள்ளே அனுப்பினதும் கொஞ்சம் வருத்தமாயிடுச்சு...'' என்றனர்.

''ஐயோ மன்னிச்சிடுங்க... அவங்க விளையாடுறது நாம பேசறதுக்கு இடையூறா இருக்கும்னுதான் உள்ளே போகச் சொன்னேன்...'' என்று நான் சொல்ல...

''எங்களைப்போல வயசானவங்க வீட்டுக்கு வந்தா... குழந்தைகளை அவங்ககூட பேச, பழக வைங்க. அதைவிட சந்தோஷம் அவங்களுக்கு வேற எதுவும் இருக்காது'' என்றனர் தாத்தாவும் - பாட்டியும்.

இப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வரும் பெரியவர்களை 'வணக்கம்’ சொல்லி வரவேற்பதில் இருந்து... தண்ணீர் கொடுப்பது, புக்ஸ் தருவது, நலம் விசாரிப்பது என வீட்டுக் குழந்தைகளையே முன் நிறுத்துகிறோம்!

- ச.செல்வியா, கீழக்காசக்குடி

அனுபவங்கள் பேசுகின்றன !

 பொம்மை போதனை !

சமீபத்தில் சென்னை, மெரினா கடற்கரைக்குச் சென்றபோது, அங்கே வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் பொம்மையிடம் ஜோசியம் கேட்டாள் என் தோழி. 'இன்னும் இரண்டு மாதங்களில் உயர்வு வரும்!’ என்று தன் பங்குக்கு ஏதோ உளறியது அந்த பொம்மை.

''பலன்களை பொத்தாம் பொதுவாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்கறதுக்கு... பத்து ரூபாய் வேஸ்ட் பண்ணுறியேடி. கம்ப்யூட்டர் பொம்மைக்கு உன்னையோ, உன் எதிர்காலத்தையோ தெரியுமா? இன்னும் ஏண்டி திருந்தவே மாட்டேங்கிறீங்க?'' என்று திட்டித் தீர்த்தேன்.

அவளோ, ''இந்தக் காலத்துல நம்மள கிண்டல் செஞ்சு குழி பறிக்கத்தான் நிறைய பேர் இருக்காங்க. 'நீ நல்லா வருவ!’னு சொல்ல யாரு இருக்கா..? வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு பொம்மை நம்பிக்கை தருதுனா, அது ஆறுதலான விஷயம்தானே?!'' என்று தன் செயலை நியாயப்படுத்தினாள்!

அவள் ஆயிரம் சொன்னாலும், 'பத்து ரூபாய் கொடுத்து நம்பிக்கையை விலைக்கு வாங்குவது, நம் பலவீனத்தைதானே காட்டும். நாமே சுயமாக வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை தான் வெற்றியும் முன்னேற்றமும் தரும்!’ என்கிற என் கருத்தை அவளிடம் வலியுறுத்தத் தவறவில்லை!

சரிதானே தோழிகளே..?!

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

படிக்காமலே டாக்டர்... வேண்டவே வேண்டாம் !

சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது தோழி வீட்டில் வேலை செய்யும் பெண், ''அம்மா, நேத்து வயிறு வலிக்குதுனு சொன்னப்போ நீங்க ஒரு மாத்திரை கொடுத்தீங்களே... இப்ப வயிறு வலி போயிடுச்சு. ஆனா, தொடர்ந்து பேதியாகுது...'' என்று சொல்ல, என் தோழியின் முகத்தில் லேசான பயரேகை. உடனடியாக அவருக்கு பணம் கொடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்.

அதைப் பார்த்ததிலிருந்து... தலைவலி, காய்ச்சல் என்று கேட்கும்போது, ஏதாவது மாத்திரைகளைக் கொடுக்கும் வழக்கம் உள்ள நான் யாருக்கும் எந்த மாத்திரைகளையும் கொடுப்பதுமில்லை, பரிந்துரைப்பதுமில்லை.

- ஜெயலட்சுமி வசந்தராசன், கல்லாவி

சந்நிதியில் ஒரு பாடம் !

சமீபத்தில் நவகிரஹ ஷேத்திரம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். மாலை சிறப்பு அபிஷேகத்துக்கு 500 ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டேன். உள் சந்நிதிக்கு சென்றபோது, வி.ஐ.பி. போல இருந்த வேறு இருவரும் அங்கே இருந்தனர். தட்டு நிறைய ஆப்பிள், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய் எல்லாம் வைத்து அவர்களிடம் பெயர், நட்சத்திரம் கேட்டு சங்கல்பம் செய்து வாங்கிப் போனார் குருக்கள். எங்களிடமோ... தட்டில் இரண்டு வெற்றிலை, வதங்கிய கறுத்த வாழைப்பழம், ஒரு சிறு தேங்காயையும் வைத்து, தொடச் சொல்லி மட்டும் வாங்கிக் கொண்டார். அர்ச்சனை முடிந்ததும் வி.ஐ.பி-க்களுக்கு மாலை போட்டு பிரசாதம் தந்தவர், உடைத்த தேங்காயை மட்டும் தட்டில் எங்களிடம் கொடுத்தார். இருபது ரூபாயை நான் தட்சணையாக தட்டில் வைத்து தர, அதை அலட்சியமாக எடுத்து அருகில் நின்றிருந்த சிப்பந்தியிடம் கொடுத்துவிட்டு, நக்கலாக எங்களைப் பார்த்தார் குருக்கள்.

மன அவஸ்தையுடன் வெளியேறியபோது, வெளிசந்நிதியில் வெறும் கைகளைக் கூப்பி, இறைவனை வேண்டிக் கொண்டிருந்தவரின் முகத்தில் இருந்த நிம்மதி, என்னிடம் இல்லாததை உணர்ந்தேன். '500 ரூபாய் சிறப்பு அபிஷேகம் இறைவனா கேட்டான்..? மனமுருகி அவனை வேண்டினால் போதாதா?' என்ற பாடம் புரிந்தது எனக்கு!

- சீர்காழி எஸ்.புவனா, தென்பாதி