மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 64

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

ராஜுமுருகன்ஓவியங்கள் : ஹாசிப் கான்

"போய்யா போ... நமக்கெல்லாம் காலுதான் காரு!'' - இப்படிச் சொல்லிவிட்டு விடுவிடுவெனப் போய்விட்டார் அந்த முதியவர். தேய்ந்த செருப்பில் வெடித்து மண் உதிரும் பாதங்களைப் பார்த்தபடி அப்படியே கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன்.

அவர் எங்கள் குடியிருப்பின் வாட்ச்மேன். மதுரைப் பக்கம் ஏதோ ஒரு கிராமத்துக்காரர். பிள்ளைகள் எல்லோரும் கைவிட, இந்த வயதில் மனைவியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். இவர் வாட்ச்மேனாக வேலை பார்க்க, அந்தம்மா ஏதோ ஒரு ஆபீஸில் பினாயில் போடுகிற வேலை பார்க்கிறது. தாம்பரம் தாண்டி எங்கோ ஒரு வீடு எடுத்து இருக்கிறார்கள். சாயங்காலத்துக்கு மேல் இரண்டு பேரும் சேர்ந்து பஸ் பிடித்து, நகரத்தைத் தாண்டிப்போகிறார்கள். அன்றைக்கு அவர் கிளம்பிக்கொண்டு இருந்தபோதுதான் நான் காரில் வந்தேன்.

அவரைப் பார்த்ததும் ''என்ன தாத்தா கௌம்பியாச்சா... ஏறுங்க நான் ரோட்ல ட்ராப் பண்றேன்...'' என்றேன் சாதாரணமாக. ஒரு கணம் உற்றுப் பார்த்தவர், ''இன்னிக்கு நீ விட்ருவ... நாளைக்கும் நீயா வருவ...'' என்றார் படபடவென. சட்டென்று காரில் ஒரு தட்டு தட்டிவிட்டு, ''போய்யா போ... நமக்கெல்லாம் காலுதான் காரு...'' என வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டார். வார்த்தைகள்கூட இல்லை... அந்தப் பாதங்கள் என்னை என்னவோ செய்து விட்டன.

 மறு நாள் சாப்பாட்டு நேரத்தில் அவரைப் பார்த்தேன். ''என்னங்க நேத்து நீங்க பாட்டுக்கு அப்பிடிச் சொல்லிட்டுப் போயிட்டீங்க..?'' என்றதும், ''மன்னிச்சுக்க தம்பி... நம்ம வாழ்க்கைல வாகன பாக்கியம் இல்லப்பா...'' என்றபடி சிரித்தார்.

''நாப்பது வயசு வரைக்கும் எல்லாம் கால்நடதான்... இந்தக் காலுங்க எம்புட்டு நடந்துருக்கும்கிறீங்க..? கொள்ளத் தூரம். நாப்பது வயசுக்கு அப்புறம்தான் ஒரு சைக்கிள் வாங்குனேன் தம்பி. நீங்க நம்ப மாட்டீங்க... முப்பது வருஷமா புத்தம் புதுசா ஓட்டிட்டு இருந்தேன் தம்பி. குடும்பத்துல ஒரு ஆளு மாரி... போன வருஷம் ஒரு தகராறுல மூத்தவன் அதப் போட்டு ஒடச்சுப் புட்டான். அப்பிடியும் கொண்டு போயி ரிப்பேர் பண்ணிக் கொண்டாந்துட்டேன். அடிச் சோம் பிடிச்சோம்னு இங்கிட்டுக் கௌம்பி வரும்போது அதத் தூக்கிட்டு வர முடியல.... அங்ஙனயே போட்டுட்டு வந்துட்டேன். இப்பமும் கிணிங்... கிணிங்னு பெல் சத்தம் கேட்டாத் தூக்கிவாரிப் போடுது. ஐப்பசி முடிஞ்சதும் போய் பயலத் தூக்கியாந்துரணும்...'' என்றபோது அவரது கண்களில் அவ்வளவு ஆசை.

விதவிதமாக, ரகரகமாக இவ்வளவு கார்கள் ஓடும் இந்தப் பெருநகரத்தில், இன்னமும் நினைவில் ஒரு சைக்கிளைச் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு முதியவரைப் பார்க்க எப்படியோ இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், எண்பதுகள் வரை பிறந்த எல்லோரது ஞாபகத்திலும் கை, கால், முகம் முளைத்த ஒரு சைக்கிள் உட்கார்ந்திருக்கிறது.

வட்டியும் முதலும் - 64

பாஸ்கரண்ணன் ஹெர்குலிஸ் சைக்கிள் வைத்திருந்தார். அதே ஹெர்குலிஸ் லேடீஸ் சைக்கிள் வைத்து இருந்தது சுனிதாக்கா. குடவாசல் டைப்ரைட்டிங் வகுப்பு வாசலில் இரண்டு சைக்கிள்களும் ஒட்டிக் கொண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். அவை வெறும் சைக்கிள்கள் அல்ல... பாஸ்கரண்ணன் சைக்கிளை அப்படிப் பராமரிப்பார். உலகத்தி லேயே அவருக்குப் பிரியமான இரண்டாவது விஷயம் அந்த சைக்கிள்தான். (முதல் விஷயம் சுனிதாக்கா என்பது அப்போது எனக்குத் தெரியாது!) காலையில் எழுந்ததும் அரை மணி நேரத்துக்கும் மேல் அந்த சைக்கிளை எண்ணெய் போட்டுத் துடைத்து எழும்போதுதான் அவரது நாள் துலங்கும். கிழித்த கைலித் துணியை ரிம், மட்கார்ட் உள்ளே எல்லாம் விட்டு கிரிச்... கிரிச் எனத் துடைப்பதைப் பார்த்து எதிர் திண்ணை தாத்தாவே டென்ஷன் ஆவார். திடீரென ஹேண்ட்பாரில் கலர் குஞ்சங்கள் கட்டிக்கொண்டு கலவரமாகப் பறப்பார். மட்கார்டில் மாசத்துக்கு ஒரு கலரில் எழுதுவார்.

எம்.பாஸ், சூப்பர்மேன், மும்மதச் சின்னங்கள், ஆட்டின் என ஸ்டிக்கர்கள் வாங்கி ஒட்டு வதே தனி வேலை. முன்னால் டைனமோ லைட் வைத்து, கரன்ட் போகும்போது நிறுத்திவைத்த சைக்கிளில் கரகரவென பெடல் போட்டுத் தெருவுக்கே வெளிச்சம் காட்டுவார். அது அவர் வசிக்கும் கிழக்குத் தெரு இல்லாமல் சுனிதாக்காவின் தெற்குத் தெரு என்பதுதான் விசேஷம்.

''ஏண்டா, எப்போ பாத்தாலும் இந்த சைக்கி ளைக் கட்டிக்கிட்டே மாரடிக்கிற... வந்தன்னா மோரையப் பேத்துப்புடுவேன் பாத்துக்க... வந்து வெக்க அள்ளிப் போடு. கம்னாட்டி...'' என அத்தை கிடந்து கதறுகிற அளவுக்கு இருக்கும் பாஸ்கரண்ணனின் சைக்கிள் அட்ராஸிட்டி. காலையில் ஏழு மணிக்குப் பார்த்தால் ரோட்டில் ஸ்கூல் யூனிஃபார்மில் சுனிதாக்கா சைக்கிளில் போகும். பத்தடி பின்னால் காலேஜுக்கு பாஸ்கரண்ணன் போவார். அம்மையப்பன் வரைக்கும்தான் இந்த பத்தடி. அப்புறம் சோடி போட்டுக்கொண்டு போகும் சைக்கிள்கள்.

அவ்வப்போது ராக்க பெருமாக் கோயில், எண்கண் பஸ்ஸ்டாண்ட், கமலாலயம் குளக்கரை என இரண்டு பேரும் பேசிக்கொண்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அண்ணனின் சைக்கிள் கேரியரில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு உட்கார்ந்தபடி பேசிக்கொண்டு இருக்கும் சுனிதாக்கா. அது ஏதோ அந்த சைக்கிளை லவ் பண்ணுகிற மாதிரியே இருக்கும். தைலம்மை தியேட்டர் பக்கம் அண்ணனுடைய சைக்கிளில் முன்னால் சுனிதாக்கா உட்கார்ந்தபடி வந்ததைப் பார்த்தேன்.

வட்டியும் முதலும் - 64

ஒரு நாள் சுனிதாக்கா திருச்சிக்கு வாக்கப்பட்டுப் போனது. வீட்டு முன்னால் நின்ற அரபாடி வேனில் சீர் செனத்திப் பண்ட பாத்திரம் எல்லாம் நின்றது. ''எல்லாத்தையும் ஏத்தியாச்சா?'' என்றார் பெரிய மாமா. மாப்பிள்ளையோடு நின்ற சுனிதாக்கா, திண்ணையில் கிடந்த சைக்கிளைப் பார்த்தது. அதைப் பார்த்துவிட்ட பெரிய மாமா, ''என்னாத்த பாக்குற... அத அருளு பய ஓட்டிக்கட்டும்... அங்க ஒனக்கெதுக்கு சைக்கிளு. மாப்ளதான் பைக்கு வெச்சுருக்காப்லய்ல... பதவுசா ஒன்ன ஏத்தி எறக்கிருவாப்ல... என்னா கம்னாட்டி...'' எனச் சிரித்ததும் வண்டி கிளம்பிவிட்டது.

அதன் பிறகு, பாஸ்கரண்ணனின் சைக்கிள் துடைக்கப்படாமல் துருப்பிடித்து க்க்க்ர்ர்ரீச்... க்க்ர்ர்ரீச்சென அழுதபடி சாலைகளில் சுற்றியது. பெரும்பாலும் அவர் சைக்கிளையே எடுப்பது இல்லை. அயன் பண்ணாத சட்டையோடு பஸ்ஸில் போக ஆரம்பித்தார். மன்னார்குடியில் பெண்ணெடுத்த பிறகு, சீதனமாக வந்த டி.வி.எஸ்-50-ல் பொண்டாட்டியோடு போனபோதுதான் பாஸ்கரண்ணன் பழைய மாதிரி சிரித்தார். அந்த இரண்டு ஹெர்குலிஸ்களும் அப்புறம் எங்கே போயின... என்ன ஆகின?

ஏழாவது படிக்கும்போது உண்ணாவிரதம் இருந்து அப்பாவிடம் வாங்கிய கறுப்பு நிற பி.எஸ்.ஏ. எஸ்ஸெல்லார் இப்போது எங்கே போனதென்றே தெரியவில்லை. ஆத்தங்கரையில் குரங்குப் பெடல் கற்று அடிபட்ட தழும்புகள் எல்லோரிடமும் இருக்கின்றன, மனதுக்குப் பிடித்த, மறக்க முடியாத ஒரு பாடலைப் போல.

முதன்முதலில் நாங்கள் மோட்டார் சைக்கிளைப் பார்த்தது நன்னிலம் நடராஜன் தாத்தா விடம்தான். காட்டெருமை மாதிரி கனத்த என்ஃபீல்ட். அதுதான் தாத்தாவின் அடையாளம். 'டபுடபுடபு’வென புல்லட் சத்தத்தில் தெருவே தெறிக்கும். அந்த புல்லட்டைப் பார்த்தால் எங்களுக்குச் சொல்ல முடியாத பரவசமாக இருக்கும். பின்னாலேயே கொஞ்ச தூரம் ஓடிவிட்டு வருவோம். வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டு அவர் உள்ளே போனதும் ஓடிப்போய் அதில் ஏறி விளையாடுவோம். ''போங்கடா... போங்கடா... ராஸ்கோலுங்களா...'' எனத் துண்டாலேயே விசுறுவார் தாத்தா. பளபளவெனச் சிவப்பு கலரில் எம்.டி.சாதிக் ஹீரோ ஹோண்டா வாங்கி வந்தபோது ஆச்சர் யமாக இருந்தது. அதற்கு முன்பு சினிமாவில் மட்டுமே பார்த்த பைக் அது. கெஞ்சிக் கூத்தாடி பின்னால் உட்கார்ந்துபோவதே அவ்வளவு பரவசம். சைக்கிளைக் கடாசிவிட்டு அப்பா டி.வி.எஸ்-50 வாங்கிய நாளில், அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துச் சந்தோஷப்பட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதைத் தொட்டாலே அப்பா டென்ஷனாகிவிடுவார்.

அவர் தூங்கிவிட்ட மதியங்களில் மெதுவாகத் திண்ணையை விட்டு இறக்கி, கொண்டுபோய் ரெண்டு ரவுண்டு அடித்துவிட்டு வந்து வைத்து விடுவோம். ''வண்டின்னா, ஒன் ஹாண்ட்ல இருக்கணும்றா...'' என்பார் சிவராஜ் சித்தப்பா. அப்புறம் நாங்கள் தலையெடுத்த பிறகு, அந்த வண்டியைப் பலப் பல ஹாண்டுகள் அடித்துத் துவைத்து, காயலாங் கடையில் போட்டோம். அண்ணன்களின் கல்யாணங்களில் மண்டப வாசலில் மாலை போட்டு ஒரு பைக் நிற்கிற போட்டோ ஆல்பங்களில் இருக்கிறது.

ஊரில் கல்யாணப் பேச்சு எடுத்ததுமே, ''மாப்ளைக்கு ஒரு பைக்கு வாங்கித் தந்துருங்க...'' என்பதுதான் முதல் பேச்சு. கல்யாணமாகி முதல்முறையாக அந்த பைக்கில் மாமியார் வீட்டுக்குப் போய்விட்டு தம்பதிகள் வந்து இறங்கும்போது, அவர்கள் முகங்களைப் பார்க்க வேண்டுமே... அடடா! இப்போது ஊரில் பெரும்பாலும் பைக் இல்லாத வீடுகளே இல்லை. வேலையைப் பொறுத்து, ''மாப்ளைக்கு ஒரு கார் வாங்கித் தந்துருங்க...'' எனப் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நான் முதன்முதலில் கார் பார்த்தது இலாஹி வீட்டில். வெள்ளை கலர் அம்பாஸடர். அப்புறம் குமரகுரு மாமா வீட்டில் சென்னையில் இருந்து வந்து நிறுத்திக்கிடந்த ஃபியட். அஸ்கானோ டையில் நாட்டாரத்த வீட்டில் சிவப்பு கலரில் டாப்பே இல்லாமல் கப்பல் கணக்காக ஒரு கார் நின்றுகொண்டு இருந்தது. ''சிவாஜி வூட்லேருந்து வந்துருக்காங்க... எப்புடி இருக்கு பாத்தியா காரு... சினிமா காரு. அந்த டிரைவர ஆரன் அடிக்கச் சொல்லிக் கேக்குறோம். அடிக்க மாட்றான்... பொரி உருண்ட வாங்கித் தருவமா..?'' என்றான் சுந்தர். கறுப்பும் மஞ்சளுமாக ஒரு கார் வந்தபோது, '' 'படிக்காதவன்’ல ரஜினி ஓட்ன கார்றா...'' என்றான் செந்தில். அப்போது எல்லாம் கறுப்பு-வெள்ளை கலர் அம்பாஸடர்கள் மட்டும்தான் கார்கள். மாருதி காரை முதன்முதலில் பார்த்தபோது, ''ஐ... சோப்பு டப்பா கார்றா...'' என ஆச்சர்யமாக இருந்தது. இப்போது மொபைல் போன்கள் மாதிரி கலர் கலராக ஏதேதோ மாடல்களில் கார்கள் குவிந்துவிட்டன.

போன வாரம் ஒரு நண்பன் புது காரில் வந்து இறங்கினான். போன வருஷம் பார்த்தபோதுகூட பழைய கைனடிக்கில் சுற்றிக்கொண்டு இருந்தான். இப்போது வந்து இறங்கி ஒரு ரிமோட்டை அழுத்தினான். கார் இரண்டு பக்கமும் றெக்கை விரித்தது. ''மச்சான்... ட்வென்டி சிக்ஸ் லேக்ஸ் தான்... எப்பிடி இருக்கு?'' என்றவன் போகும் போது, ''டேய்... கார் வாங்குறது எல்லாம் இப்போ காய்கறி வாங்குற மாதிரி... ஃபிஃப்டி தௌசண்ட் ரெடி பண்ணு... ஒண்ணு வாங்கிர லாம்...'' எனப் போட்டுவிட்டுப் போனான். நேற்று போன் பண்ணி, ''தம்பி... செக்ரெட்டரி யேட்ல யாராவது தெரியுமா? புது காருக்கு ஒரு ஃபேன்ஸி நம்பர் வாங்கணும்... அது ராசியான நம்பரு...'' எனக் கேட்டது பாஸ்கரண்ணன்!

எல்லோருக்கும் ஏதாவது ஒரு பஸ் நம்பர் முக்கியமாயிருக்கிறது. எனக்கு 45-ம் நம்பர் பஸ். எத்தனை எத்தனை காதல்களை, நட்புகளை, உறவுகளைப் பேருந்துகள் தந்திருக்கின்றன. சேகரும் மேரியும் 'அரண்மனைக் கிளி’ பஸ்ஸில்தான் காதல் வளர்த்தார்கள். அதே பஸ்ஸில்தான் அவளைச் சீமந்தத்துக்கு அழைத்துப் போனவனைப் பார்த்தேன். ஒரு நாள் அந்த பஸ் விபத்துக்கு உள்ளானபோது ஏழெட்டுப் பேர் பலியானார்கள். சேகருக்குக் கால் முறிந்து சில மாதங்கள் வீட்டிலேயே கிடந்தான். அவனைப் பார்க்கப் போனபோது சொன்னான், ''நமக்கு இப்பிடி ஆகிப்போச்சு... ப்ச்... அந்த பஸ்ஸும் சுத்தமா செதஞ்சுபோச்சுறா... திரும்பவும் அதைப் பாக்கவே முடியாதுல்ல!'' ஏதேதோ வாசங்களோடும், பாடல்களோடும், பார்வைகளோடும், வியர்வைகளோடும், பேச்சுக்களோடும், பிரியங்களோடும், சண்டைகளோடும் எல்லோருக்கு உள்ளும் ஒரு பேருந்து இருக்கிறது.

சென்னையில் மீட்டர் கேஜில் இருந்து பிராட் கேஜுக்குச் சில தடங்கள் மாறியபோது, 100 ஆண்டுகள் ஓடிய ஒரு ரயிலுக்கு மூடுவிழா நடத்தினார்கள். அதன் கடைசிப் பயணத்தை விகடனுக்காகக் கட்டுரை எழுத நான் போயிருந்தேன். அப்போது நான் பார்த்ததும் கேட்டதும் மறக்கவே முடியாது. ஒரு ரயிலுக்குப் பின்னால் எவ்வளவு கதைகள்... உணர்ச்சிகள்... அனுபவங் கள். ''சார்... நான் இந்த ரயில்லதான் பொறந்தேன் சார். கோஷா ஆஸ்பிட் டலுக்குப் போறதுக்காக அம்மா ஏறிருக்கு... வலி அதிகமாகி இங்க நாலாம் நம்பர் பொட்டியிலயே பொறந்துட்டேன். அதான் கடைசியா இதைப் பாக்க வந்துருக்கேன் சார்'' என்றார் ஒருவர். தம்பதிகள், காதலர் கள், நண்பர்கள் என அவ்வளவு பேர் அவ்வளவு நினைவுகளோடு வந்திருந்தார்கள். அந்த ரயிலை செட்டில் விட்டுவிட்டுத் திரும்பும்போது எனக் குத் தோன்றியது, நம் நினைவுகளோடும் உணர்வு களோடும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக் கும் உயிர் இருக்கிறது.  

எனது தேசிய வாகனம்... ஆட்டோ. 10 வருடங்களாக என் பிக்கப் அண்டு டிராப்புகள் ஆட்டோக்கள்தான். ''நீ ஆட்டோக்குக் குடுத்த காசுல ஒரு ஹம்மர் எறக்கிருக்கலாம்றா...'' என்பான் எழிலன்.

சீப்பு, பேஸ்ட், பிரஷோடு நாள் முழுக்க ஆட்டோவில் சுற்றிய கதை எல்லாம் உண்டு. கையில் காசே இல்லாமல் ஆட்டோ பிடித்து எங்காவது போய், அப்படியே நள்ளிரவு வரை டூர் போடுகிற கிராதகன். எல்லா ஏரியாக்களிலும் எதாவது ஒரு ஆட்டோக்காரர் என்னைப் பார்த்து, ''தல... எங்க? மவுன்ட் ரோடா, வளசர வாக்கமா..?'' என பிரைட் ஆவார். ஆட்டோ ஜாகிர், ஆட்டோ தென்னவன், ஆட்டோ எட்வின் என எனது மொபைலில் ஒரு கான்டாக்ட் லிஸ்ட் இருக்கிறது.

வட்டியும் முதலும் - 64

டிரஸ்ட்புரம் ஆட்டோ ஸ்டாண்டில் எப்போது பார்த்தாலும் பதற்றமாக, ''சார்... கார்லாம் வாங்கிரலைல்ல...'' என்பார்கள். ஆட்டோவில் போவது ஓர் அனுபவம். போகும்போதே திசைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம். வருகிற ஆட்டோக்காரர் ஒரு சந்தானமாகவோ, சாக்ரடீஸாகவோ இருப்பார். எதிர்பார்க்காத கருத்துகளை எல்லாம் வீசி விட்டுப் போவார்கள்.

சமீபத்தில் ஸ்கூல் பஸ்ஸில் இருந்து விழுந்து ஒரு சிறுமி இறந்தாளே... அன்றைக்கு ஒரு ஆட்டோவில் போய்க்கொண்டு இருந்தேன். அப்போ அந்த ஆட்டோக்காரர் சொன்னார்:

''அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி சார்... அரசாங்கம் எதையாவது ஒழுங்காப் பராமரிக்  குதா..? எதாவது நடந்துட்டா மட்டும் வரிஞ்சு கட்டிட்டு நிப்பானுங்க... அப்புறம் அதே அலட்சியம்தான்.

மக்களுக்கு ஒழுங்காப் பாதுகாப்பும் இல்ல... அப்பறம் என்னா சார்? மொதல்ல இந்த பிரதமர், ஜனாதிபதி, மொதலமைச்சர்... எல்லார்ட்ட இருந்தும் குண்டு தொளைக்காத கார்களப் புடுங்கணும் சார்!''

- போட்டு வாங்குவோம்...