
ராஜுமுருகன்ஓவியங்கள் : ஹாசிப் கான்
''தீபாவளி முடியறதுக்குள்ள நீ மல்டி மில்லியனர்டா... ஒரு பத்தாயிரம் ரூவா ஷேர் போடு!''
திருப்பூரில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சிங்கியடித்துக்கொண்டுஇருந்த போது, சிவா அண்ணன் இப்படி ஓர் ஐடியாவோடு வந்தார். பட்டாசுக் கடை ஐடியா. ஐந்து பேர் ஆளுக்கு பத்தாயிரம் போட்டு, தெருவோர வெடிக் கடைக்கு வித்திட்டோம். என்னிடம் டிபன் காசு மட்டுமே இருந்ததால், எனது ஷேரையும் சிவாவே போட்டார். ஆகவே, கம்பெனியின் ஓடும் பிள்ளையாக இருக்க விதிக்கப்பட்டேன். ஒரு ராத்திரி, ஆளுக்கு ரெண்டு பீர் போட்டுவிட்டு சிவாவும் நானும் சிவகாசிக்கு பஸ் பிடித்தோம்.
''அது நமக்கு பேஸிக்கா பிசினஸ் மைண்டு பாத்துக்க. எல்லாம் கெரகம்... சனியன் பனியன் கம்பெனில கலர் ஊத்தவெச்சிருக்கு. இந்த வெடி பிசினஸ்ல என் ட்ரிக்ஸ நீ பாக்கத்தான போற. தம்பி, இப்ப பிசினஸ்ல ஸ்டிராங்காப் பிடிச்சம்னு வையி... இப்பிடியே பிரின்ட்டிங், டெக்ஸ்டைல்னு போய், இன்னும் நாலஞ்சு வருஷத்துல 'வணக்கம் தமிழகம்’ பேட்டி குடுத்துரலாம். அம்பானிலாம் எப்பிடி வந்தாங்குற..? கொங்கு மண்டலத்துல பாதிப் பேரு எப்பிடி வளர்ந்தாங்குற..? பொட்டுனு ஒரு சொட்டுதான்... இடி, மின்னல், பேய் மழை எல்லாம் அப்புறம்தான்.
ஸோ... இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம். ஹெலிபேட் வெச்சு ரெண்டு வீடு கட்றம்டா... அண்ணன் இருக்கேண்டா...'' என சிவா அப்போதே பேட்டி தட்ட ஆரம்பித்தார். சிவகாசியில் ஒரு கோடவுனுக்கு அழைத்துப் போய், ஐம்பது ஆயிரத்துக்கு வெடி பர்ச்சேஸ் பண்ணினார். ராத்திரி சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கொத்து பரோட்டா கட்டியபோதே பாதி அம்பானி ஆகிவிட்ட மாதிரி இருந்தது. வரும்போது எனக்கு ஒரு சந்தேகம். ''சிவாண்ணே... திருப்பூரே துணிகளுக்குத்தான் ஃபேமஸு... பேசாம துணி யாவாரம் போட்ருக்கலாம்ல. எதுக்கு வெடி யாவாரம்..?''
''அடேய்... மொதல்ல சிந்தனைய மாத்து. எதிர் திசைல யோசி... அப்பதான் உருப்படுவ!''
மறு நாளே சூர்யா தியேட்டர் பக்கம் படுதா விரித்து, கடையைப் போட்டோம். 'அதிரடி வெடிக் கடை’ என ஒரு பேனர் எழுதிவைத்தார் மணியண்ணன். நான் கம்பெனிக்குப் போய் சாயங் காலம் கடைக்கு வந்துவிடுவேன். சிவாண்ணன்தான் ஃபுல் டைமாகக் கடையிலேயே கிடந்தார். நான் வந்தவுடனே, ''டேய்... ஐநூறு ரூவா பார்சல் அஞ்சு கட்டு... கேட்லாக் பாத்துக்க...'' என்பார் பரபரப்பாக. பொட்டு வெடியில் இருந்து அணுகுண்டு வரைக்கும் சில்லறை வியாபாரமே எகிறியது. மூணே நாள்தான்... சோல்டு அவுட்.
தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் கூடியது. சிவா அண்ணன் மட்டும் ஆப்சென்ட்.
''டேய்... எல்லாம் சோல்டு அவுட்டு. ஆனா, போட்ட காசே வரலியே... என்னடா சங்கதி..? நான்லாம் மோசமானவன்...'' எனச் சூடானார் மணியண்ணன். ஆளாளுக்குப் போட்ட காசே கைக்கு வரவில்லை. விசாரணை கமிஷன் வைத்ததில் சார்லிதான் உண்மையைத் தோண்டிஎடுத்தார், ''பாதி வெடிகளை கம்பெனில வேலை பார்க்குற பொம்பளைகளுக்கு ஓசிலயே குடுத்துருக்கான் சிவா பய... அதான் டோட்டல் லாஸு!''

சிவா அண்ணனைத் தூக்கி வந்து விசாரித்தபோது அலட்சியமாகச் சொன்னார், ''அதெல்லாம் அக்கௌன்ட்டு. அடுத்து பொங்கலுக்கு பாத்தர யாவாரம் பண்ணப்போறம்ல... அதுக்கெல்லாம் பொம்பளைக ஆதரவு வேணும். இதெல்லாம் ஒரு பிசினஸ் ட்ரிக்கு...''
இதைக் கேட்டுப் பயங்கரக் கோபமாகி, ''ஓ... இதுல பொங்கல் வேறயா..? இப்ப எனக்குக் காசு வரல... ஒரு பய இங்க தீபாவளி கொண்டாட முடியாது'' என அதிரடி வெடிக் கடை பேனரைக் கிழித்தெறிந்தார் மணியண்ணன். அப்படி முடிந்தது அந்த பிசினஸ் கனவு.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு போன வாரம் சிவா அண்ணன் போன் பண்ணியிருந்தார். ''தம்பி, தீபாவளிக்கு திருச்சில துணிக் கடை போட்ருக்கேன். தொறந்துவைக்கற துக்கு ஏதாவது சீரியல் நடிகை வருமா? இந்த துளசில்லாம் வந்தா ஒரு அள்ளு அள்ளிரலாம்!''
''ஹேப்பி தீபாவளிண்ணே... இப்ப நான் நியூயார்க்ல இருக்கேண்ணே... அடுத்த வாரம் கூப்பிடுறேன்'' என போனை வைத்துவிட்டேன்!
மதுரையில் இருந்தபோது ஒரு தீபாவளிக்கு விளக்குத் தூணில் துணிக் கடை போட்டிருந்தார் ரங்கராஜ். துணிக் கடை என்றால், ஃப்ளாட்ஃபார்மில் குவித்துவைத்து ஏலம் போடுகிற வியாபாரம். விளக்குத் தூண், வடக்கு மாசி வீதி, காமராஜர் சாலை, திண்டுக்கல் ரோடு முழுக்கத் தீபாவளிக்கு முதல் நாள் பார்க்க வேண்டுமே... ஜேஜே என்று கிடக்கும். 'நூறு ரூவா... நூறு ரூவா...’ என பேன்ட் பிட்டை இருபது அடிக்குத் தூக்கிப் போட்டுப் பிடிப்பார் கள். தோளில் போட்ட புடைவையை கலர் கலராக விசிறி இழுப்பார்கள். கோடு போட்ட, கட்டம் போட்ட, பூப்போட்ட சட்டைகள் அடுக்கி அடுக்கிச் சரிந்துகிடக்கும். அழுக்கு வேட்டியோடும் புடைவையோடும் பிள்ளைகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ''நாப்பது ரூவான்னா குடு...'' எனப் பேரம் பேசும் முகங்கள் வழியெல்லாம் கிடக்கும்.
ரங்கராஜ் தனது கடை யில் ஸ்பீக்கர் வைத்து பல நடிகர்களின் குரல் களில், ''வாங்கம்மா... வாங்க... அய்யா வாங்க... அம்மா வாங்க...'' எனப் பேசப்பட்ட பதிவுகளைப் போட்டுவிட்டு இருந்தார். ஊரில் இருந்து அக்காவையும் இரண்டு தங்கச்சிகளை யும் அழைத்து வந்து கடையில் விட்டிருந்தார். மஞ்சள் பூசிய முகங்களோடு கை கூப்பியபடி அவர்கள் வியாபாரம் பார்த்ததில் சேல்ஸ் எகிறியது. தீபாவளிக்கு முதல் நாள் இரவு நேரம் ஆக ஆக... விலையெல்லாம் கூறு கட்டிக் குறையும். நள்ளிரவுக்கு மேல் ரங்கராஜ் கடையில் புடைவை திருடிக்கொண்டு ஓடப்பார்த்தவனைப் பிடித்துப் போட்டுப் பொளந்தார்கள். அவ்வளவு பேரும் கூடி அடிக்க, ரத்தம் வரக் கதறிய அவனது முகம் இப்போதும் நினைவில் இருக் கிறது. அதிகாலையில் இரண்டு போலீஸ்காரர் கள் அவனை அடித்து இழுத்துப் போனார்கள். இப்போதும் தீபாவளியை முன்னிட்டு சேனலுக் குச் சேனல் கதறும் விளம்பரங்களைப் பார்க்கும் போது எனக்கு சிவாண்ணனும் ரங்கராஜும்தான் நினைவுக்கு வருகிறார்கள்.

நேற்று காலையிலேயே துபாயில் இருந்து ராஜி போன் பண்ணினான். ''என்ன மாப்ள... தீபாவளிக்கு ஊருக்குப் போறியா..?''
''போவணும் மச்சான்... அங்க எப்பிடி..?''
''இங்க என்ன மாப்ள... லீவு கெடைக்குமான்னு தெரியல. சேக்குட்ட சொல்லணும். கெடைச்சா செந்திலு, குணா, சாகுலெல்லாம் ஒரே எடத்துலதான இருக்கானுவோ... போய்ப் பார்த்துட்டு வரணும். போனா, சரக்கப் போட்டு ஒரே ஊர்க் கததான்... அதான் தீபாவளி. நாட்டாரு வூட்டு மாடில யான வெடி காயவெச்ச கதைலாம் நெனப்பிருக்குல்ல'' - ராஜி பேசியபோதுதான் தீபாவளி வந்துவிட்டதே தெரிந்தது. வெடி வாசமும் சுழியன் ருசியுமாக நினைவில் புகைந்தது.
சொல்லிவைத்தது மாதிரி அன்றைக்கு இரவு லண்டனில் இருந்து கிரிதரன் போன் பண்ணினார். ஈழத் தமிழ் நண்பர். ''தீபாவளி வந்துருச்சா...'' எனச் சிரித்தபடி தொடங்கிய உரையாடல் எங்கெங்கோ போய்விட்டது.
பண்டிகைகள் எவ்வளவு உறவுகளையும் நினைவுகளையும் இழுத்து வந்துவிடுகின்றன. ''எங்கட தீபாவளியெல்லாம் போயிருச்சு முருகன்... இனிமே அப்பிடி ஒரு தீபாவளி வர வாய்ப்பு இல்லே. யாழ்ப்பாணம் சந்தைல துணி எடுக்கப் போவியணும். லாந்தர் விளக்குல துணிகள் ஏலம் விடுவாங்கள். 'காக்கிச் சட்டை’யிலே கமல் போட்ட டிசைனென்டும் 'தர்மதுரை’யிலே ரஜினி போட்ட டிசைனென்டும் கூவிவிடுவாங்கள். அம்பது அறுபதென்டு சொல்லி அதை ஏலம் எடுப்பதே ஒரு சாகசம்தான்.
காங்கேசன் துறை வீதி மனோகரா தியேட்டர்ல புதுப் படம் போடுவான். தீபாவளிக்கு மொத நாளே அங்கட ரிலீஸாகிரும். மொத ஆளா போய் நின்டு பாத்துடுவோம். ஒரு வாரத் துக்கு முன்னாடியே வெடிகள் வாங்கி பன ஓலையிலே காயவெச்சுரு வோம். தீபாவளியன்றைக்கு ஆர் வீட்டு வாசலில் அதிகமாய் வெடித்த காகிதங்கள் கெடக்குதுன்னு பொடுசுகளுக்குள்ளே ஒரு போட்டியே நடக் கும். மத்தியானம் பக்கத்து வீட்டு வாசல்லே இருந்து காகிதங்கள் பொறுக்கி எங்கட வாசல்ல போட்டுக்குவோம். கற்குளம் கற்பக விநாயகர் கோயிலுக்குப் போயிட்டு வந்தால், எங்கம்மை செய்து தர்ற சீனிப் பணியாரமும் பயித்தம்பயிறு உருண்டையும்தான் தீபாவளி. எல்லாம் போச்சு. இப்போ நான் லண்டனிலே கெடக்கிறன். தம்பியும் அவன் குடும்பமும் வல்வெட்டித்துறையிலே கெடக்குதுகள். அங்கே எங்கட பிள்ளைகள் ஆரும் வெடியே கேக்கற தில்லே. அவியளும் தினம் தினம் எவ்வளவு வெடிகளைப் பார்த்துவிட்டதுகள். சொந்தங்கள் தானே பண்டிகை? ஊரே இல்லாதவனுக்கு தீபாவளி என்ன கேடு?''
கிரிதரன் போனை வைத்துவிட்டார். 'சொந்தங் கள்தானே பண்டிகை..?’ என்ற வார்த்தைகள் இன்னும் அணையாத மத்தாப்பாகப் பொரிந்துகொண்டே இருக்கிறது.
இப்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போனால், அத்தனை பேருந்துகளிலும் பிதுங்கும் முகங்கள். மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர் என எல்லாப் பேருந்துகளும் சொந்தங்களைச் சுமந்த முகங்களால் நிறைந்துஇருக்கும். துணிக் கடை கட்டைப் பைகளும் இனிப்பு கவர்களும் ஊர்களைப் பார்க்க உட்கார்ந்திருக்கும். கடன்பட்டு தலை தீபாவளிக் குப் போகிற ஒருவனது மொபைல் விடாமல் சிணுங்கிக்கொண்டே இருக்கும். யார் யாரோ, யார் யாருக்கோ போன் பண்ணி, வருகையைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் உறவும் நிலமும்தானே பண்டிகையின் முதல் அர்த்தம்?
ஒரு தீபாவளி இருந்தது. ரயில்வேயில் வேலை பார்க்கிற சிவராஜ் சித்தப்பா வாங்கிவரும் வெடிகளை ஒரு வாரத்துக்கு முன்பே நாட்டார் வீட்டு மாடியில் காயவைத்துக் காவல் இருந்த தீபாவளி. வெங்கட் மாமா வீட்டில் இருந்து நாகராஜண்ணன் வீட்டுக்கு நூல் கட்டி ரயில்விட்ட தீபாவளி. திண்ணை எல்லாம் பாம்பு மாத்திரையும் எலெக்ட்ரிக் கல்லும் வைத்த தழும்புகள் தரும் சந்தோஷ தீபாவளி. கொரடாச்சேரி வின்ஃபிட் டெய்லரிடம் துணி தைக்கக் குடுத்துவிட்டு, 'ஃப்ளிட் வெச்சாரா இல்லியா?’ என இரவெல்லாம் விழித்திருந்த தீபாவளி. கருக்கலில் எழுந்து வெட்டாற்றில் எண்ணெய் தேய்த்துக் குளித்த தீபாவளி.
கும்பகோணம் விஜயாவிலும் திருவாரூர் தைலம்மையிலும் படம் பார்த்துவிட்டு, சைக்கிளில் வீட்டுக்கு வந்து சுழியனும் கோழிக் கறியும் சாப்பிட்ட தீபாவளி. கார்த்திகைக்கு வெடிகளைச் சேமித்துவைத்துவிட்டு, வயித்து வலி என்று ஸ்கூலுக்கு இரண்டு நாட்கள் மட்டம் போட்ட தீபாவளி. எனக்கும் இப்போதுள்ள பிள்ளைகளுக்கும் அந்தத் தீபாவளி கிடைக்கப்போவதே இல்லை. நமது பால்யம் என்ற நதியில் இந்தப் பண்டி கைகள் கொட்டிய கூடைப் பூக்கள் எப்போதும் நினைவில் மிதந்து கொண்டே இருக்கும்.
''தீபாவளி எல்லாம் கொண்டா டாத... அன்னிக்கு கறுப்புச் சட்ட போட்டுக்க''- ஏழெட்டு வருடங் களுக்கு முன்பு ஒரு தீபாவளி நாளில் கரிசல் கோவிந்தராஜய்யா இப்படிச் சொன்னார். ''இதெல்லாம் வர்ணம் பிரிச்சவன் கொண்டுவந்தது... கட்டுக்கதைங்க. எங்க பார்த்தாலும் நூத்துக்கணக்கான நரகாசுரனுங்க இருக்காய்ங்க. அரசியல், அதிகாரம், ஊழல்னு கொழுத்துத் திரியுறாய்ங்க... அவிய்ங்கள அழிக்காம ஒனக்கென்ன தீபாவளி..? ஏழைபாழைங்களுக்கும் விவசாயிக்கும் என்னய்யா தீபாவளி..? ஒரு நா மட்டும் சந்தோஷமா இருந்துக்கன்னா..? இருவத்து நாலு மணி நேரமும்தான் டி.வி-ல தீபாவளி கொண்டாடறான்... அன்னிக்கு மட்டும் என்னா வந்துச்சு? இந்தத் தேசத்துல ஒருத்தன் நியாயமா, சந்தோஷமா இருந்தான்னா, ஒவ்வொரு நாளும் பண்டிகைதான்'' என அவர் சொன்னது இப்போதும் கேட்கிறது. தீபாவளி முடிந்த மறு நாள் எனது தெருவில் கோணிச் சாக்கு போட்டுக்கொண்டு வெடித்துக்கிடக்கும் பேப்பர்கள் பொறுக்க வந்த ஒரு சிறுவனின் அழுக்கு முகம் உள்ளே கிடக்கிறது... ஒரு கரித் துண்டைப் போல!

தீபாவளி என்றதும் எவ்வளவோ நினைவுகள்... எப்போதும் முதலில் வருவது அமுதாக்கா முகம்தான். ஒரு தீபாவளி தினத்தில்தான் அமுதாக்கா தீக்குளித்து செத்துப்போனது. நாங்கள் குட்டிப் பையன்கள். ஏன், எதற்கென்றே தெரியாது. திருச்சியில் ஆஸ்பத்திரியில் வைத்திருந்தார்கள். ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அதிகாலையில் காவிரிக் கரையில் மாமா«வாடு உட்கார்ந்திருந்தபோது காகங்கள் கரையத் தொடங்கியிருந்தன. அக்கா இறந்துவிட்டதை ஒருவர் வந்து சொன்னார். அந்த தீபாவளி அப்படியே நின்றுவிட்டது.
அடுத்த வருடம் தீபாவளிக்கு வீட்டில் போட்டோ வில் சரமிட்டுச் சிரித்தது அமுதாக்கா. ''இந்த வருஷம் நமக்குத் தீபாவளி இல்ல... அக்கா சாமிஆகிருச்சுல்ல... அதுக்கு சாமி கும்புட்டுக்கிட்டா போதும்...'' என்றது அம்மா. அமுதாக்காவின் கீழ் சுடர்விட்டுக்கொண்டு இருந்தது ஓர் அகல். நாற்புறமும் நற்சுடர்கள் ஏற்றச் சொன்னதைப் போல் இருந்தது புன்னகை. ஒரு சுடர் உயிரைப் பறிக்கும்... ஒரு சுடர் ஒளியைக் கொடுக்கும்... ஒரு சுடர் எதுவும் செய்துவிடும் இல்லையா?
- போட்டு வாங்குவோம்...