
சுகா, படங்கள் : எல்.ராஜேந்திரன்
##~## |
10 வருடங்களுக்கு முன்பு 'பார்வதி பவன்’ என்று ஒரு கடை சாலிகிராமத்தில் இருந்தது. Eggetarian-களை மதிக்கும் சைவ ஹோட்டல் அது. சொல்லிவைத்தாற்போல பார்வதி பவனின் ஓனரும்

திருநெல்வேலிக்காரர்தான். கறுப்பு முகத்தில் வெள்ளை மீசை செதுக்கி இருப்பார். கல்லாவுக்கும் சமையலறைக்குமாக வேட்டியை அவிழ்த்து அவிழ்த்து மடித்துக் கட்டியவாறு நடந்துகொண்டே இருப்பார். 'எல, சட்னி அப்பவே கம்மியா இருந்ததுதெ? இப்பொ எப்படி செலவளிக்கெ? தண்ணியக் கோரி ஊத்திட்டியோ?’ - ரகசியமாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டு, அநேகமாக சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் எல்லோர் காதிலும் விழும் வண்ணம் கேட்பார். இப்போது பார்வதி பவன் இருந்த இடத்தில் ஒரு புதிய கட்டடம் முளைத்து, நிமிர்ந்து நிற்கிறது. எனக்கு அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது எல்லாம் சாம்பார், சட்னி வாசனையுடன், 'எல, அவாளுக்கு என்ன வேணும் கேளு’ என்ற அந்த அண்ணாச்சியின் குரல் கேட்கிறது!

'பிராமணாள் போஜனப் பிரியாள்’ என்பார்கள். அதை அழித்துவிட்டு 'திருநெல்வேலிக்காரன் போஜனப் பிரியாள்’ என்று மாற்றி எழுத வேண்டும். திருநெல்வேலிக்குச் சென்று வந்தவர்களுக்கு நான் இப்படிச் சொல்லும் காரணம் புரிய வரும். திருநெல்வேலியில் தடுக்கி விழுந்தால், ஹோட்டல்கள்தான். ரகவாரியாக, சைஸ்வாரியாக விதவிதமான ஹோட்டல்கள். அந்தக் காலத்தில் திருநெல்வேலியின் 'போத்தி ஹோட்டல்’, நெல்லையப்பர் கோயிலைவிட ஃபேமஸ் என்பார்கள். ஆல்ஃபிரெட் ஹிட்ச் காக்கின் 'The Birds’ திரைப்படத்துப் பறவைகள்போல அதிகாலை நான்கரை மணிக்கே சந்திப் பிள்ளையார் முக்கில் வயதான பாட்டை யாக்கள், ஒருவர் பின் ஒருவராக வந்து நிற்க ஆரம்பிப்பார்கள். என்னவோ சொர்க்க வாசல் திறப்புபோல் போத்தி ஹோட்டலின் திறப்புக்காகக் காத்துக் கிடப்பார்கள். ரத வீதிகளில் சோம வாரம், அமாவாசை நாட்களில்கூட வைர மாளிகைக்குச் சென்று நாட்டுக் கோழி சாப்பிடும் நண்பன் குஞ்சு, போத்தி ஹோட்டலின் பன்னீர் பக்கோடாவுக்கு அடிமை.
கற்பகம் ஹோட்டல், குமார விலாஸ், ரெகு விலாஸ், கல்லூர்ப் பிள்ளை கடை, காந்திமதி பவன் என்று தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு ஹோட்டல்கள் பல இருந்தாலும், உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்லாமல்; வெளியூர்க்காரர்கள் மத்தியிலும் பெரும் புகழ் பெற்றிருக்கும் விஞ்சை விலாஸ், திருநெல்வேலியின் சிறப்புகளில் ஒன்று. சென்னைக்காரரான நண்பர் மனோ என்னுடன் திருநெல்வேலிக்கு வந்து இறங்கிய உடனேயே பெட்டியை வைத்துவிட்டு விஞ்சை விலாஸுக்குக் கிளம்பினார். பலமுறை நான் சொல்லி விஞ்சை விலாஸ்பற்றி கேள்விப்பட்டு இருந்த அவர், திருநெல்வேலியில் இருந்த நாட்களில் ஒரு நாளைக்கு ஆறு தடவை சென்று சாப்பிட்டார். இத்தனைக்கும் விஞ்சை விலாஸில் மதியச் சாப்பாடு கிடையாது. 'பூரிக் கிழங்கு கூட வெங்காய மசாலா தர்றாங்க பாருங்க. ஐயையோ... எங்க அம்மா கையாலகூட நான் இப்படிச் சாப்பிட்டது இல்லைங்க!’ நண்பர் மனோவின் வாழ்க்கையில் ஒரு நீங்காத இடம் பிடித்துவிட்டது விஞ்சை விலாஸ்.

இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் வழியில் பிளாட்ஃபார ஓரங்களில் பெஞ்சுகள் போட்டு வரிசையாக ஏழெட்டுக் கடைகள் திறந்து இருக் கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஞ்சை விலாஸ் எனலாம். சும்மா அந்தப் பக்கம் நடந்து போனால் போதும். 'அண்ணாச்சி, சூடா இட்லி இருக்கு, வாங்க... வாங்க’ என்று கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிடுவார்கள்.
இட்லியின் மேல் ஊற்றப்பட்ட சாம்பார் வெள்ளத்துக்கு வெகு அருகே வைக்கப்படும் தேங்காய்ச் சட்னியைக் காப்பாற்ற முனைவதற்குள், மிளகாய்ப் பொடி (சென்னைக்காரர்களுக்கு இட்லிப் பொடி) வைத்து நல்லெண்ணெய் ஊற்றுவார்கள். 'சித்தப்பா, ஆனது ஆச்சு. இன்னும் ரெண்டு அடை சொல்லட்டுமா?’ பதிலுக்குக் காத்திராமல் மீனாட்சிசுந்தரம் அடைக்கு ஆர்டர் சொல்லுவான். 'தண்ணி குடிக்காண்டாம். முக்குக் கடைல கல்கண்டு பால் சாப்பிடணும்’ என்று எச்சரிப்பான். ஒவ்வொன்றுக்கும் இப்படி ஒரு ஃபினிஷிங் எதிர்பார்ப்பார்கள் திருநெல்வேலிக்காரர்கள்.
ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியிலேயே மாடியில் உள்ள ராஜஸ்தான் ஹோட்டலுக்கு வாரம் ஒருமுறை நானும் குஞ்சுவும் காலைச் சாப்பாடு சாப்பிடாமல் செல்வோம். காரணம், அங்கு 25 ரூபாய்க்குச் சாப்பாடு டோக்கன் வாங்கினால் எத்தனை சப்பாத்திகள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். ராஜஸ்தான் ஹோட்டலுக்குக் கீழே ஒயின் ஷாப் வந்தாலும் வந்தது... உற்சாக பானம் அருந்திவிட்டு, அங்கு வரும் போதை யப்பர்கள் ஒரு சாப்பாடு டோக்கன் வாங்கி விட்டு 25 முதல் 200 சப்பாத்திகள் வரைக்கும் வாங்கி சாப்பிடத் தொடங்கினார்கள். இப்போது ராஜஸ்தான் ஹோட்டல்காரர் ராஜஸ்தானுக்கே சென்றுவிட்டதாகக் கேள்வி!

சுக்கு வெந்நீர் குடிப்பதற்காகவே பாளையங் கோட்டை செல்லும் திருநெல்வேலிக்காரர்கள் உண்டு. 'ஏழு மணிக்கு மேல அண்ணாச்சி வட்டகையக் களுவிக் கவுத்திருவாடே. சீக்கிரம் அளுத்து’. ஆறரை மணிக்கு சுலோச்சனா முதலியார் பாலத்தில் சைக்கிள்கள் பறக்கும். இப்படி ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் ஒவ்வொரு கடை பார்த்து வைத்திருப்பார்கள். 'ஊத்தப்பம் ஆரிய பவன்லதான் சாப்பிடணும்... சொக்கம்பனையடி முக்கு பால் கடையில பால் குடிக்கிறதுக்கு முன்னாடி 50 கிராம் காராச் சேவு வாங்கி வாயில போடணும்... மாரியம்ம விலாஸ்ல உளுந்தங்களி தின்னிருக் கேளா? சங்கரய்யர் கடையில முந்திரி ரவா தோச திங்காதவன்லாம் திருநெல்வேலிக் காரனாவோ?’- படப்பிடிப்புக்காக லொகேஷன் பார்க்க திருநெல்வேலியில் காரில் சுற்றிக் கொண்டு இருந்தபோது, நண்பன் சரவணனுக்கும் மீனாட்சிசுந்தரத்துக்கும் இடையே நடந்த உரையாடல் இது.
திருநெல்வேலியில் மறக்கவே முடியாத ஹோட்டல், அப்பர் கஃபே. நியாயமாக அதை காப்பிக் கடை என்று சொல்வதுதான் பொருத்தம். காப்பி போக, அங்கு வடை, இட்லி, அபூர்வமாக தோசை, மிளகுப் பால் கிடைக்கும். மார்கழி மாதப் பஜனைக்கு பிராமணர்கள் அதிகம் குடியிருக்கும் தெப்பக் குளத் தெருவில் இருந்து ஒரு கோஷ்டி 'விட்டல் விட்டல் ஜேஜே விட்டல்’ என்று அதிகாலையிலேயே கிளம்பிச் செல்லும். அந்தக் கோஷ்டியில் வெறுமனே வாய் அசைக்கும் எங்கள் நண்பன் ராமசாமியும் உண்டு. பஜனை முடிந்ததும் அப்பர் கஃபே போய், ஆளுக்கு ஒரு காப்பி குடிப்பார்கள். அமெரிக்காவில் இருந்து லீவுக்கு வந்திருக்கும் வெங்கட்டு, அப்பர் கஃபே காப்பியை மறக்கவே மாட்டான் என்பதற்கு ராமசாமி சொல்லும் விளக்கம் சுவையானது.
'அதெப்படிய்யா மறக்க முடியும்? வெங்கட்டோட ஒன்றரை வருஷத்து மலச் சிக்கல அப்பர் கஃபேயோட ஒத்த தம்ளர் காப்பி தீத்துட்டுல்லா?’
சில வருடங்களுக்கு முன்பு ஒரு திருமணத்துக்காக திருநெல்வேலியில் இருந்து குஞ்சுவின் காரில் கிளம்பி நாகர்கோவிலுக்குச் சென்றுகொண்டு இருந்தோம். தக்கலைக்கு அருகே திருமணம். முதல் நாள் மாலையிலேயே கிளம்பி விட்டோம். நாகர்கோவில் வந்துவிட்டதை 'பாற்பர் ஷாப்’ 'பேக்கறி’ பலகைகள் அறிவித்தன. நாகர்கோவில்காரர்களுக்குப் பெரிய 'ற’ மீது அப்படி ஒரு மோகம்.
நன்கு இருட்டி இருந்தது. காரில் எங்களுடன் சுந்தரம் பிள்ளை பெரியப்பாவும் இருந்தார். 'பசிக்கிறது, எங்காவது சாப்பிடலாம்’ என்று நாங்கள் சொல்வதைக் கவனிக்காததுபோல் காரை ஓட்டிக்கொண்டு இருந்தான் குஞ்சு. இருட்டுக்குள் ஒரு மாதிரியாக ஏதோ ஓர் ஊரில் காரை நிறுத்தினான். இறங்கின உடனேயே யாரோ ஒருவரிடம் சென்று ஏதோ விசாரித்துக்கொண்டு இருந்தான். இறங்கி அவர்கள் அருகே சென்றேன். என்னைப் பார்த்ததும் 'தேங்க்ஸ் அண்ணாச்சி. வாரேன்’ என்று திரும்பினான். 'என்னல கேட்டெ?’ பதில் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்தான். அடையாளம் சொன்ன மனிதர் அங்கேயேதான் நின்றுகொண்டு இருந்தார். கார் கிளம்பும்போது காருக்குள் தலையைவிட்டு 'கவலையே படேண்டாம். நைட்டு 12 மணி வரைக்கும் அந்தக் கடைல பீஃப் உண்டு, கேட்டேளா’ என்றார். ஏற்கெனவே பசியில் இருந்த நான் கார் கிளம்பியதும் தாறுமாறாகக் குஞ்சுவைத் திட்ட ஆரம்பித்துவிட்டேன். 'கவலப்படாதெ, ஒங்களுக்கு அந்த ஊர்ல ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் சைவக் கடை இருக்கு. விசாரிச்சுட்டேன். வா’ என்றான். பின் ஸீட்டில் சிவ பக்தரான சுந்தரம்பிள்ளை பெரியப்பா பசி மயக்கத்தில் படுத்து இருந்தார்.
சிறிது நேரத்திலேயே குஞ்சு உத்தேசித்திருந்த ஊர் வந்தது. ஓலைக் கூரை போட்ட ஒரு சாப்பாட்டுக் கடைக்கு என்னையும் பெரியப்பாவையும் அழைத்துச் சென்றான். 'ரெண்டு பேரும் சாப்டுட்டு இங்கெயே நில்லுங்க. நான் வந்திருதென்’ என்று சொல்லிவிட்டுப் போனான். ஓலைக் கூரைக் கடையின் கல்லாவில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். திருச்செந்தூர் செந்திலாண்டவன் புகைப்படம் மாட்டி, ஊதுபத்தி கொளுத்திவைத்திருந்தார். நெற்றி நிறையச் சந்தனம், குங்குமம், சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுக்கு ஏக திருப்தி. நைஸாகக் கண்ணைக் காட்டிச் சொன்னார். 'சும்மா சொல்லக் கூடாதுடே குஞ்சுப் பயல. ஆயிரந்தான் இருந்தாலும் பிராமணம்லா.’
எளிமையாக, அம்சமாக இருந்தது கடை. இலை போட்டு பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீர் ஊற்றினார் சப்ளையர். 'என்ன வேணும்?’ சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, 'மொதல்ல ஆளுக்கு ரெண்டு இட்லி கொண்டு வாங்க’ என்றார் பெரியப்பா. இது மாதிரி இடம் தெரியாத ஹோட்டல் களில் முதலில் இட்லி சொல்லிவிடுவது நலம் என்று அவர் எப்போதுமே சொல்வார்.
'இங்கே எங்கேயாவது போர்டு இருக்கான்னு பாருடே?’ பெரியப்பா சொன்னார்.
சுற்றி நோட்டமிடும்போது சுவரில் பழைய கறுப்பு தகர போர்டு ஒன்று தெரிந்தது. நெளிந்த அந்த மெனு போர்டில் நடுங்கும் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்த உணவு வரிசையில், முதல் அயிட்டமாக 'றத்தப் பொறியல்’ என்று சாக்பீஸில் எழுதியிருந்தது!
- சுவாசிப்போம்...