
எல்லோருடைய உலகத்திலும் ஒவ்வொரு வருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது எல்லாம் அது மாறிக்கொண்டே இருக்கிறது.
"திரும்பிப் பார்க்கும்போது சட்டுனு ஒண்ணுதான் தோணுது பாஸ். ஒரு காலத்துல யாரோ ஒருத்தரோட உலகமா நாம இருந்தோம். இப்போ அவங்க உலகத்துலயே நாம இல்ல.'
நேற்று மழைக்கு ஒதுங்கிய டீக்கடையில் இப்படி ஸ்டேட்டஸ் போட்டார் ஒரு நண்பர்.
''என்ன டவுசருக்குத் திரும்பிப் பார்க்குற? மொதல்ல முன்னாடி பார்த்து மூணு இஞ்சி டீ சொல்றா.'
''அதுக்கு இல்லண்ணே... பெருங்காத்தும் மழையுமா சொழட்டி அடிச்சுதுல என்னவோ ஒரு நெனப்பு. ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய லவ்வருக்கு போன் போட்டேன். பேசணும்னு தோணுச்சு. அவ போனை எடுத்து, 'சின்னவனுக்குச் சோறு ஊட்டிட்டு இருக்கேன். அப்புறம் பேசறேன்டா’னு பட்டுனு கட் பண்ணிட்டா. மனசு கனத்துப்போச்சுண்ணே. 'நமக்கு எவ்வளவு புள்ளைங்க பொறந்தாலும் என் மூத்த மகன் நீதான்டா’னு சொன்னவண்ணே அவ... ப்ச்ச்ச்.'
''இப்பிடி எழுவத்தேழு கிலோல தொப்ப போட்ட மூத்த புள்ளைய சொமக்க முடியுமாடா? அதான் விட்டுட்டுப் போயிருச்சு. கன்னுக்குட்டி... டீக்குக் காசைக் குடு.'
மழை விசிறி அடிக்க ஆரம்பித்தது. கவுன்ட்டர் கொடுத்துக்கொண்டு இருந்த சீனியர் அண்ணன், ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழமாக இழுத்து ஊதினார்.
''ஆமாண்டா. அது அப்பிடித்தான். போன மாசம் திருச்செந்தூர்ல செல்வம் கல்யாணத்துல மலர்வனத்தைப் பாத்தேன். கண்ணுக்குக் கண்ணு பாக்கலடா. காத்தைக் கடந்து போற மாதிரி போறா. என்னா பண்ணேன் ஒனக்கு? புருஷன் புள்ளைங்களோட நல்லாருக்கணும்னு மூகாம்பிகைக்கு காசு முடிஞ்சு போட்டவன்டி நான். நீதான தொட்ட. நீதான விட்ட. வூட்ல யாரும் இல்லாதப்ப வந்து நின்னு, எங்கம்மா பொடவை யக் கட்டிக்கிட்டு மூட்டம் போட்டது யாரு? நீதான் என் ஒலகம்னு க்ரே டிஷர்ட்ல கண்ணு மை அப்புனது யாருங்கறேன்? போனது போச்சுய்யா. இப்ப எதுக்க பாக்கும்போது ஒரு ஹாய் சொல்லக் கூடாதா? 'தங்கப் பதக்கம்’ சிவாஜி மாதிரி வெரச்சுக்கிட்டுப் போற? என்னை என்னன்னு நெனைச்சுக்கிட்டா? கூசிப் போச்சுரா.'
அப்போது அவருடைய மொபைல் அடித்தது. ''என்னடி சொல்றான்? குடு. தம்பி குட்டி, மழைல சைக்கிள்லாம் வேணாம்ரா. வீஸிங் வரும். டாடி ஒனக்கு லேஸ் வாங்கிட்டு வர்றேன். எது... பட்டர்ஃப்ளை சி.டி-யா? சரி வந்துர்றேன். அழாம இருந்துக்கணும். என்னா?' - கொஞ்சம் குறைந்த மழையில் தடதடவென ஓடிப்போய் பைக்கைக் கிளப்பிக்கொண்டு போனார் சீனியர்.
அதே மழையோடு வீட்டுக்கு வந்தால், என் அறையெல்லாம் மழைத் தண்ணீர். ''தம்பி, ஜன்னல் எல்லாம் சாத்தாமப் போயிட்டீங்களா? சார அடிச்சு தண்ணியாகிப்போச்சு. ஸ்லாப்புல இருக்கிற அட்டப் பொட்டியில எதாவது முக்கியமா வெச்சிருக்கீங்களா? இருந்தா எடுத்து ஹால்ல வெச்சுருங்க.'
அந்த அட்டைப் பெட்டியை எடுத்து ஹாலில் கவிழ்த்தேன். எப்போதோ சேர்த்த குப்பைகள் (அவை வைரங்களாக இருந்த ஓர் உலகம் இருந்தது). கிளறிய காகிதங்களில் சட்டென்று அந்தக் கடிதம் கண்ணில் வந்தது. 'லூஸு’ எனத்தொடங்கும் கடிதம். 'உன்னைப் பார்க்காத எனது உலகம் சுற்றவே இல்லை’ என்ற வரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன. 'நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவத்தியும். தனிமை தனி மையோ, கொடுமை கொடுமையோ’ என்ற பாடல் வரிகள் அடிக்கோடு இடப்பட்டு இருக்கின்றன. 'முத்தங் களுடன்’ என முடிந்திருக்கிறது. இந்தக் கடிதம் என்னிடம் வந்து சேர்ந்த நாளும் இப்படித்தான் மழை. குடையைக் கழுத்தில் இடுக்கிப் பிடித்தபடி, பர்வீனக்கா கடை வாசலிலேயே நின்று இதைப் படித்த தருணம் ஞாபகம் வருகிறது. சில பொழுதுகள் அப்படித்தான் அமையும். கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு தொடர்பு உள்ளோடிக்கிடக்கும்.
அப்புறம் அந்த அட்டைப் பெட்டியில் இருந்து, 'ஹவ் மச் டூ யூ லவ் திஸ் வேர்ல்டு?’ 'திஸ் மச்’ என்று எழுதப்பட்ட ஓர் ஓவியம் வந்து விழுந்தது. இயேசு சிலுவையில் இரு கைகளையும் விரித்துக்கொண்டு, 'திஸ் மச்’ என நிற்பதுபோல் ஓவியம். இதை எனக்குத் தந்துவிட்டு, ''இப்படித் தான் நான் உன்னை லவ் பண்றேன். திஸ் மச்' எனக் கைகள் விரித்து சிரித்த இதயம் இப்போது எங்கே? இப்போது அவளுக்கு ஒரு போன் பண்ணிப் பேசலாம் எனத் தோன்று கிறது. ஆனால், அவளது புது மொபைல் நம்பர்கூட என்னிடம் இல்லை. அவள் தரவில்லை.என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு லேண்ட் லைனில் இருந்து அழைத்துப் பேசினாள். ''ஏய்... உன் மொபைல் நம்பர் குடுடி.''
''அதெல்லாம் வேணாம். இது ஆபீஸ் நம்பர். எதுன்னா ரொம்ப முக்கியம்னா நைன் டு சிக்ஸ், ஆபீஸ் நம்பர்லயே கூப்பிடுங்க. முக்கியம்னா மட்டும் கூப்பிடுங்க. அப்புறம் இனிமே இப்பிடி வாடி போடினு கூப்பிட வேணாம்.' இப்போது அவள் உலகம் வேறு. அந்த உலகத்தில் ஒரு லேண்ட்லைன் போனில் எப்போதாவது முக்கியத் தேவையென்றால், சிணுங்கும் சிறு குரல் மட்டுமே நான். வானம் அளவுக்கு விரித்த கைகளில் இப்போது ஒரு நட்சத்திரம்கூட இல்லை. திஸ் மச்!
இப்படி எவ்வளவோ இருக்கிறது எல்லோருக்கும்.
எல்லோருடைய உலகத்திலும் ஒவ்வொரு வருக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது எல்லாம் அது மாறிக்கொண்டே இருக்கிறது.
''இப்பவும் கண்ணாடி பார்த்து பொட்டுவைக்கும்போது திடுக்குனு இருக்குரா. பின்னால எளங்கோ வந்து நிக்கிற மாரி இருக்கு. பிம்பமா வந்துட்டுப் போற மாதிரி. ஆளு இப்ப அரிசி மண்டிக்கு எல்லாம் வருதா? ஈ.பி-ல சேந்துருச்சுல்ல. பெரிய எடத்துச் சம்பந்தம் வேற. முன்ன மாரி இருக்க முடியுமா?'' என்ற மாலதி அக்காவின் குரல் இப்போதும் ஒலிக்கிறது. கரி படிந்த செய்தித்தாள்கள் ஒட்டப்பட்ட அடுக்களைதான் மாலதி அக்காவின் உலகம். அந்த உலகத்தில் நுழைந்து வண்ணத்தாள்கள் ஒட்டிய இளங்கோ, இப்போது தெருவில் இறங்கிப் போய்விட்டார் வேறு ஓர் உலகத்துக்கு. இப்போது மாலதி அக்காவுக்கு காட்டுமன்னார்குடி பக்கம் வேலிப்படல் போட்ட ஒரு உலகம் உருவாகிவிட்டது.

பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், அலுவலகத்தில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு உலகம் திறக்கிறது. ஒவ்வொரு உலகத்திலும் ஒவ்வொரு விதமான நட்புகள், காதல்கள், உறவுகள்... எல்லா உலகங் களிலுமா நம் கூடவே வருகின்றன? முந்தைய உலகத்தின் முதல் நபராக இருந்த நண்பனை, இன்றைய நமது உலகத்தில் பார்க்கவே முடிவது இல்லை. கல்லூரி உலகத்தில் ஒன்றாகவே திரிந்தவன் இப்போது போன் பண்ணும்போது குரலையே கண்டுபிடிக்க முடியவில்லை.
திடீரென்று மொபைலில் ஒரு குரல். ''டேய், நான் கல்யாணராமன் பேசறேன்டா.'
''எந்தக் கல்யாணராமன்?'
''கம்னாட்டி. மூலங்குடி ஸ்கூல்ல எட்டாவது வரைக்கும் படிச்சோம்ல. பிம்பிளிக் குஞ்சுக் கத கல்யாணராமன்டா.'
''ஏய், கல்யாணராமா எப்பிடிறா இருக்க?'
''அதெல்லாம் இருக்கேன். நீ எங்க இருக்க?' அடுத்த நாளே வீட்டுக்கு வந்தான். 20 வருடங்களுக்குப் பிறகு, அலை அலையாகத் தளும்பும் சுருட்டை முடி கல்யாணராமன் பாதி தலை ஏறிப் போய்இருந்தது. வந்தவுடனே, ''யம்மா... சேர எடுத்துப் போடு. எங்கடா உன் புள்ளைக? சும்மா ஆப்பிளும் மேரி பிஸ்கெட்டும் தான்' எனப் படபடஎனப் பேச ஆரம்பித்துவிட்டான்.
''எது... இன்னும் ஒனக்கும் கல்யாணம் ஆகலையா? எனக்குத்தான் என்ன எழவு தோஷமோ இருக்குன்னுட்டாய்ங்க. முப்பத்தி ஏழுலதான் முடியுமாம். பஜாஜ் அல்லயன்ஸ்ல வேல பாக்குறேன்டா. நம்ம பயலுவோள்ட்ட எல்லாம் பேசுவியா?'
''எங்கடா... யார்ட்டயும் டச்சே இல்ல.'
''என்னடா இப்பிடிச் சொல்ற. டைரிய எடு. பயலுவோ நம்பர்லாம் நோட் பண்ணித் தர் றேன். நாம மேக்ஸிமம் எல்லாப் பயலுவளையும் பார்த்துருவேன். பொண்டுகள மட்டும்தான் பாக்கறதில்ல. கொடவாச கடத் தெருலஃபேன்ஸி ஸ்டோர் போட்ருக்குல்ல அங்க சித்ராவப் பாக்கறதோட சரி. சசி அங்கன்வாடில வேல பாக்குது. அது புருஷன் நல்ல டைப்புரா. உன்னை எல்லாம்கூட கேக்கும். அது நம்பரும் தர்றேன். பேசு.
நமக்கு நண்பர்கள் மட்டும்தான்டா உலகம். நீதான் இத்தன நாளா மிஸ்ஸாயிட்ட. அதான் இப்பப் பிடிச்சிட்டன்ல. யம்மா மதியம் சாப்பிட்டே போயிர்றேம்மா. இந்தக் கம்னாட் டியோட சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு.' எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. வரட்டிகள் ஒட்டப்பட்ட, பிம்பிளிக்காக் குஞ்சுக் கதை பேசிய பள்ளிக்கூட சுவரில் இருந்து நான் எத்தனையோ உலகங்களைத் தாண்டிவிட்டேன். இன்னும் அந்த நண்பர்களை மட்டுமே தன் உலகமாக வைத்திருக்கும் கல்யாணராமன் எவ்வளவு அற்புதம்! குற்றாலம் பகவதி இப்படித்தான் கல்லூரி நண்பர்களைத் தேடித் திரிவான். அவன் போன் பண்ணும்போது எல்லாம் ஏதாவது வேலையாக இருப்பேன்.
மொபைல் மாற்றியபோது அவனுக்கு நம்பரே தரவில்லை. ஒருமுறை காரில் போனபோது பாண்டிச்சேரி - சென்னை ஈ.சி.ஆர். சாலை டோல்கேட் ரூமில் இருந்து, ''நாப்பத்தஞ்சு ரூவா சார்' என எட்டிப் பார்த்தான். கடையநல்லூரில் அவ்வளவு பெரிய மளிகைக் கடையில் உட்கார்ந்திருப்பவனை, இப்படி ஒரு டோல்கேட்டில் நினைத்துப் பார்க் கவே இல்லை.
''எலே... மக்கா! என்னை எல்லாம் மறந்துட்டி யாலே' எனக் குதித்து வந்த அவன் முகத்தைப் பார்க்க வெட்கமாக இருந்தது. புதிய முகங்களால் நிறையும் நிறுத்தங்களில் ஏறி ஏறி இறங்கினாலும், தனது அன்பு சூழ் உலகத்தை அப்படியே வைத்திருக்க இப்படிச் சில கல்யாணராமன்களாலும் பகவதிகளாலும்தான் முடிகிறது.
ரமணி மாமா ரிட்டையராகி வந்த நாள் இப்போதும் நினைவில் இக்கிறது. அரசாங்கப் பள்ளியில் கணக்கு வாத்தியார். அவருக்குபள்ளிக் கூடம்தான் உலகம். 35 வருஷ சர்வீஸில் அஞ்சாறு நாட்கள்தான் லீவு போட்டிருக்கிறார். மனைவி பிரசவம், பொண்ணு கல்யாணம், அப்பா மரணம். இப்படித்தான். பள்ளிக்கூடத்தை வீட்டுக்கும் இழுத்துவந்துவிடுவார். திண்ணைக் கட்டில் டியூஷன் எடுப்பார். இரவுகளில் நோட்ஸ் எடுப்பார். பேப்பர் திருத்துவார். ''ஸ்கூலும் இந்த வாத்தியார் தொழிலும்தான் எனக்கு எல்லாம். அது இல்லாம ஒரு ஒலகத்த நெனச்சே பாக்க முடியல மாப்ள' என்பார். சாக்பீஸ் வாசமும் கோவக்கா வாசமும் அவர் கூடவே இருக்கும். ரிட்டையரான பிறகு, அவர் எப்படி வாழப்போகிறார் என நினைத்துக்கொள்வேன்.
அக்கா அதைச் சொல்லியே திட்டும். ''பாக்கறேன் பாக்கறேன்... ரிட்டையரான பொறவு இங்ஙனதான கெடக்கணும். அப்ப என்ன பண்றீயனு பாக்கறேன்.' அந்த ரிட்டையர்மென்ட் விழாவுக்கு அக்காவை அழைத்துக்கொண்டு போயிருந்தேன். ஏற்புரை நிகழ்த்தும்போது குரல் உடைந்து தேம்பினார் மாமா. ஷீல்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் ரூமுக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டார்
நெடுநேரம். அவ்வளவு தான். மறு நாளில் இருந்து சிரிப்பும் உற்சாகமுமாக இந்த உலகத்துக்குள் வந்துவிட்டார். அத்தையோடு கடை களுக்குப் போவது. தோட்டத்தில் செடிகள் வைப்பது. பேரன், பேத்தி களை அள்ளிக்கொண்டு அலைவது என ஒரு ரமணி மாமா. ''இது சைனா மூங்கி, நாட்டு மூங்கி எடுத்தாடா' என கையெல்லாம் சேறாக கொல்லை யில் உட்கார்ந்து இருக் கும், திண்ணைக்கட்டில் உட்கார்ந்து அக்காவுக்கு நகம் வெட்டிக்கொண்டு இருக்கும் மாமாவின் உலகத்தில் 'ஏழேழு நாப்பத்தொம்போது’ என்ற குரல், நினைவின் இனிய பாடல்போல் எங்கோ கேட்கிறது!
பரமேஸ்வரியை மறுபடி அப்படிப் பார்ப் பேன் என்று நினைக்கவே இல்லை. சுத்துப்பட்டில் பரமேஸ்வரி என்றால், ஒரு மாதிரி. ஊரில் ஒரு பொம்பளைக்கும் அதைப் பிடிக்காது. ''அம்பது ரூவாடா' என்பார்கள் பையன்கள். பஸ்ஸ்டாண் டிலும், கிளப்புக் கடைகளிலும், இலுப்பைத் தோப்பிலும் அவ்வப்போது அதைப் பார்ப்பேன். கொஞ்சம் தள்ளி யாராவது ஒரு பெரிய மனுஷன் வருவார்கள். எப்போதும் மஞ்சள் பூசி, பெரிய பொட்டு வைத்து... அப்படி இருக்கும் அது முகம். எப்போதும் அப்படி ஒரு சிரிப்பு. யாரைப் பற்றியும் சட்டை பண்ணாத சிரிப்பு.

பல வருடங்களுக்குப் பிறகு ஊர்ப் பக்கம் அதை பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஆல மரத்தடியில் எலும்பும் தோலுமாக, அழுக்காக வெறித்து வெறித்துச் சிரித்தபடி உட்கார்ந்திருந்தது. ''அது ஒரு மாரி கிறுக்காயிருச்சுரா. இப்பிடித்தான் திரியுது பாவம்!' என்றான் நண்பன். அதன் உலகம் எவ்வளவு ஆண்களால் நிறைந்திருந்தது. எவ்வளவு முகங்கள், குரல்கள், வாக்குகள் குவிந்திருந்தன. இப்போது அதன் உலகம் எது? அங்கே என்ன இருக்கிறது? யார் இருக்கிறார்கள்? அதில் பரமேஸ்வரியாவது இருக்கிறாளா? அர்த்தம் விளங்காத அந்தச் சிரிப்பு மட்டும்தான் இன்னும் அப்படியே இருக்கிறது!
திரும்பிப் பார்க்கும்போது சட்டுனு ஒண்ணு தான் தோணுது பாஸ். மாறிக்கொண்டே இருப்பது உனக்கான உலகமும் எனக்கான உலகமும்தான். உனக்காகவும் எனக்காகவும் அப்படியேதான் காத்துக்கொண்டு இருக்கிறது நமக்கான உலகம்!
- போட்டு வாங்குவோம்...