மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 18

நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
நினைவு நாடாக்கள் ஒரு ரீவைன்ட் ( கவிஞர் வாலி )

வாலி, ஒவியம் : மணி, படம் : கே. ராஜசேகரன்

எண்ணங்களால்தான் எல்லாம்!

##~##

'அக்கா! அக்கா!’ என்றுதான் நான் அந்த அம்மாவை அழைப்பேன்; அம்மா மண்டபத்தில் உள்ள அவர்கள் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன்.

அந்த அம்மாவினுடைய தம்பி திரு. துரையும் நானும் அந்த நாளில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்துக்கொண்டு இருந்தோம்.

'வாலி! என் கஷ்டத்துக்கு விமோசனமே கிடையாதா? யாராவது உனக்குத் தெரிஞ்ச பெரிய ஜோசியர் இருந்தா கேட்டுச் சொல்லேன்!’

- என்று அந்த அக்கா அழாக்குறையாக அடிக்கடி என்னிடம் சொல்லுவார்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 18

விஷயம் இதுதான். அந்த அக்காவினுடைய கணவர், செய்யாத குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

அது வெள்ளைக்காரர்கள் நாடாண்ட காலம். அப்பீல் மேல் அப்பீல் செய்து - வழக்கு அப்போது லண்டன் ப்ரிவி கவுன் சிலில் நடந்துகொண்டிருந்தது.

அதன் தீர்ப்பை எதிர்பார்த்துத்தான், என் நண்பன்  துரையின் அக்கா துடித்துக்கொண்டிருந்தார்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 18

ஒருநாள் நான், 'அக்கா! நான் ஒரு முக்கியமான பெரியவரைக் கேட்டேன்; நீங்க சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு ஒரு மண்டலம் - அதாவது நாற்பத்தெட்டு நாள் எள் விளக்குப் போட்டு, தினம் பன்னிரண்டு பிரதட்சணம் பண்ணா -

உங்க வீட்டுக்காரர் விடுதலை ஆயிடுவார்னு சொல்றார்! ஆனா, இந்தப் பிரார்த்தனையிலே உங்க எண்ணம் உறுதியாயிருக்கணும்; சந்தேகப் பட்டு, சக்கரத்தாழ்வாரைச் சுத்திப் பிரயோஜனமில்லே!’ என்று துரையின் அக்காவிடம் சொன்னேன்.

அந்த அம்மையார், ஒரு மண்டலம் முழு நம்பிக்கைவைத்து - நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில், உறுதியாயிருந்து அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

அடுத்த வாரமே, அந்த அம்மாவின் வீட்டுக் காரர், வழக்கிலிருந்து விடுபட்டு விடுதலை ஆனார்!

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்’

- என்கிறது வள்ளுவம்; வள்ளுவம் பொய்க்காதென்பதை உள்ளுவம்!

'முருகனுக்கு ஆறுமுகம்;

மனிதனுக்கு நூறுமுகம்!’

- இது, இளையராஜா இசையில் 'எதிர்க் காற்று’ எனும் படத்தில் நான் எழுதியது.

ஆயினும்,

ஆறுமுகம் தீர்மானிப்பதல்ல

நூறுமுகம் கொண்ட மனிதனின் -

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 18

ஏறுமுகம் இறங்குமுகம் இரண்டினையும்!

அவனவன் ஏற்றமும் இறக்கமும் அவனவன் எண்ணத்தின் பாற்பட்டது. விதைத்தது விளைகிறது. 'விரையன்று போட்டால் சுரையன்று முளைக்குமா என்ன?’ என்று இன்றளவும் ஒரு சொலவடை வழக்கில் இருக்கிறது!

தாய் ஈன்று புறந்தருகிறாள்; தந்தை அச் சேயை ஆளாக்கி அறிவு புகட்டுகிறான்.

ஆளாக்குதலும் அறிவு புகட்டுதலும் ஓர் அப்பன் இல்லாமல் இல்லைதான்!

ஆனால், ஆளானவன் அவ்வறிவினைக்கொண்டு ஆற்றுகின்ற நல்லது கெட்டதுக்கு - அப்பன் என்னணம் காரணமாவான்?

சாமி -

சர்வசாட்சியாக நிற்கும்; உன் சந்தோஷத்திற்கும் சங்கடங்களுக்கும், உன் செயல்களே காரணம். செயல்கள் எண்ணங்களின் வெளிப்பாடே!

ஒரு செயல் தீங்கு விளைவிக்குமாயின், அந்தச் செயலுக்கான தண்டனை என்னவோ - அதே அளவு இல்லாவிடினும் அந்தச் செய லுக்கு மூலமாய் விளங்கிய எண்ணத்திற்கும் உண்டு!

'சக்கரவர்த்தித் திருமகள்’ படப்பிடிப்பு பார்க்க -

நடிகர் திரு.வி.கோபாலகிருஷ்ணனோடு சென்றேன்; அப்போது நான் சினிமாவில் நுழைய முயற்சித்துக்கொண்டிருந்த காலம்!

'கலைவாணர் என்.எஸ்.கே. மேக்கப் ரூமில் இருக்கிறார்; பாக்கலாம் வாங்க, வாலி!’ என்று கோபி அழைத்தார்.

அப்போது நான் கோபியிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பினேன்.

'கோபி! கலைவாணரோட மச்சானும் நானும் க்ளாஸ்மேட்ஸ்! கலைவாணரை ஸ்ரீரங்கத்திலேயே ஓரிருமுறை சந்திச்சிருக்கேன். அது இருக்கட்டும். எனக்குத் தெரிஞ்சு, கலைவாணர் ஒரு நிஜமான வள்ளல். ஸ்ரீரங்கம் வர்றபோதெல்லாம் - எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ உதவியை அவர் செஞ்சிருக்கிறதை நான் பாத்திருக்கேன்’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில் 'அது, எனக்கும் தெரியும், வாலி! கலைவாணரை, ஒரு கர்ணன்னு சொன்னா - Nobody will object to it!  அது சரி; அதுக்கென்ன இப்போ?’ என்று கோபாலகிருஷ்ணன் இடைமறித்து வினவினார்.

நினைவு நாடாக்கள் ஒரு Rewind... - 18

''அதுக்கில்லே, கோபி! இரக்க சிந்தனை எவனுக்கு இருக்கோ - அவன்தான் ஒரு வள்ளலா இருப்பான்! ஒரு பழம்பாடல் என்ன சொல்றது தெரியுமா?

'தாவென் றொருவர் வந்து
தன் வறுமை சொல்லுமுன் - இந்
தாவென்று ஈவதுதான்
தருமம்; அஃதல்லால்
கோவென்றும் குருவென்றும்
தேவென்றும் புகழ்ந்த பின்னால் -
கொடுப்பதெல்லாம் வெறும்
விளம்பரக் கருமம்!’

- இந்தப் பாட்டுக்கு உரையாக இருக்கிறவர் என்.எஸ்.கே; இவ்வளவு இரக்க மனம் உள்ளவரு -

எப்படி ஒரு கொலையைச் செய்திருக்க முடியும்?''

- இப்படி நான் கேட்டவுடன், கோபி சிரித்துக்கொண்டே, என்னை கலைவாணர் ஒப்பனை செய்துகொண்டிருக்கும், அறைக்குள் அழைத்துப்போனார்.

கலைவாணரிடம், என்னை நான் ஸ்ரீரங்கத்துக்காரன் என்றும், அவரது மைத்துனனின் நண்பன் என்றும் சொன்னதும் -

என்னை அடையாளம் தெரிந்துகொண்டு, நலம் விசாரித்தார்.

திடீரென்று கோபி, கலைவாணரிடம் 'அண்ணே! வாலிக்கு ஒரு சந்தேகம்; இவ்வளவு இரக்க சித்தம் உள்ள நீங்க - ஒரு கொலையை எப்படிச் செய்திருக்க முடியும்னு என்கிட்ட கேக்கறாரு!’ என்றவுடன் கலைவாணர் சிரித்தார்.

''அந்தக் கொலைய, நான் செய்யல்லே! கொலை செய்யுற அளவுக்கு நான் கிராதகனா என்ன? பின்ன ஏன், சிறைவாசத்தை அனுப விச்சேன்னு நீங்க கேக்கலாம்! 'இந்த ஆளு, இல்லாததையும் பொல்லாததையும் நம்மைப் பத்திப் பத்திரிகையில எழுதுறானே; இதை, இப்படியே விடக் கூடாது!’ - அப்படீன்னு வெறுமனே, எல்லாருக்கும் வருகிற மாதிரி யான யதார்த்தமான கோபத்துல நெனச் சேன்! ஆனா, நான் நெனச்சதோட சரி; வேற எதும் பண்ணல்லே!

நெனச்சேன் பாத்தியா? அந்த எண்ணத் துக்குத்தான், சில காலம் சிறைவாசம்!

தீயதைச் செய்யாட்டியும், அதை எண்ணினாலும் அதுக்கும் ஓரளவு தண்டனை உண்டு! அதுக்காகத்தான் பெரியவங்க - 'நல்லதையே நினைடா பாவி!’ங்கறாங்க!''

- இப்படி ஒரு நீண்ட விரிவுரை நிகழ்த்தினார் கலைவாணர்!

தீங்கு ஒருவர்க்கு எண்ணினாலே - அது திருப்பி நம்மைத் தாக்கும் என்பதற்கு இன்னும் ஓர் உதாரணம்.

'படகோட்டி’ படத்துக்குப் பாட்டு எழுதும்போது அந்த டைரக்டர் வலது கையில் மட்டும், Gloves போட்டுக்கொண்டு வருவார்.

காரணம், அந்தக் கையில் தீக்காயத்தின் தழும்புகள்!

முன்பு ஒரு படப்பிடிப்பில், கதாநாயகி தீ வளையத்தினிடையே மாட்டுகிறாள்; கதாநாயகன் வந்து காப்பாற்றுவதாகக் காட்சி!

காட்சி ஷூட் பண்ணி முடிந்துவிட்டது; கதாநாயகி வெளி வர முடியாமல், தீ வளையம் கொழுந்துவிட்டு எரிய -

நடிகை பயத்தில் அலறுகிறார், ஏதோ கால்ஷீட் குளறுபடியை மனத்தில் வைத்துக்கொண்டு, 'நெருப்பு, அவளைக் கொஞ்சம் சுடட்டுமே!’ என்று எண்ணினார் அந்த டைரக்டர்.

ஆனால் கதாநாயகியை, படப்பிடிப்புக் குழுவினர், காயமின்றிக் காப்பாற்றிவிட்டனர்!

ல ஆண்டுகள் சென்றுவிட்டன. ஒருநாள் வாயில் சிகரெட்டுடன் தன் காரில் பெட்ரோல் இருக்கிறதா என்று பெட்ரோல் டேங்க் மூடியை டைரக்டர் திறந்து பார்க்க -

சிகரெட்டில் இருந்து ஒரு சின்னத் தீப்பொறி பெட்ரோல் டேங்க்குக்குள் விழ -

'குபீ’ரென்று தீப்பிடித்து டைரக்டரின் வலக் கரம் மணிக்கட்டு வரை வெந்துபோயிற்று!

இன்னொருவரைத் தீ சுட வேண்டும் என எண்ணியதால் இந்தத் தண்டனை அவருக்குக் கிடைத்தது!

அன்னணம் எண்ணியவர் திரு.டி.பிரகாஷ் ராவ், தீ நடுவே மாட்டிய நடிகை திருமதி.சரோஜாதேவி, படம் - கலைஞர் உரையாடல் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’

- இதை எனக்குச் சொன்னவர் எனைச் சினிமாவில் ஊக்குவித்த - ஆதரித்த - வாழ்வித்த - திரு.மா.லட்சுமணன் அவர்கள்!

ஆரம்பத்தில், சக்கரத்தாழ்வார் சந்நிதி யைச் சுற்றிக் கணவனைச் சிறையினின்றும் மீட்டவர் - திருமதி T.A.மதுரம்!

- சுழலும்...