மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 67

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

சுதீப்களையும் புனித் ராஜ்குமார்களையும் பார்த்துவிட்டுப் படுத்தால், விழிக்கும்போது எதிரே பவன்கல்யாண்களும் பாலகிருஷ்ணாக்களும் சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ இது பூங்குன்றன் சொன்னது. 'யாதும் ஊரே யாதும் கேளிர்!’ இது நண்பன் ஃபிரான்சிஸ் கிருபா சொன்னது. யாவரும் என்றால் மனிதர்கள். யாதும் என்றால் ஆகாயத்தின் கீழ் இருக்கும் அனைத்தும்!

 அதுவும் டிராஃபிக் மண்டிய சாலை ஓரம் நின்றபடி, பசித்த கண்களோடு ஒரு கவிஞன் இதைச் சொன்னது விசேஷம். ஒரு முறை ஆசிரம முற்றத்தில் இருந்து எழுந்து உள்ளே போய்விட்ட விசிறி சாமியார், திரும்பி வந்து தலைக்கு நேரே கையை நீட்டி... 'ஃபாதர் ப்ளெஸ் யூ’ எனச் சொன்ன மாதிரி. சிங்கிப்பட்டிப் பக்கம் பிரேக் டவுனாகி நின்றபோது, ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த முதியவர் என் பஸ்ஸில் இருந்த குழந்தைகளுக்கு வேட்டியில் இருந்து அவிழ்த்துக்கொடுத்த ஈச்சம்பழங்கள் மாதிரி.

'காலைல காலைல போய்ப் பேசினாத்தான் பட்டுரோஸ் சீக்கிரம் பூக்கும்’ என காந்தி ஆத்தா சொன்னதால், தினம் தினம் காலையில் கொல்லையில் நின்று பட்டுரோஸ் செடியோடு பேசிக்கொண்டு இருந்த மங்கை அத்தை மாதிரி.  'சர்ச்ல எல்லாரையும் வுட்றான்பா. அதான் அங்க போறோம். இந்தக் கோயில்ல பந்த போட்றதும் வாழ மரம் கட்றதும் மட்டும்தான் நாங்க... நல்லா இருங்க சாமி’ என கலியன் கேட்டது மாதிரி. 'சொந்த அண்ணனா?’ என ஆபீஸர் கேட்டதற்கு, 'சொந்தமா வந்த அண்ணன்னு வேணா எழுதிக்கங்க’ என ரெஜிஸ்டர் ஆபீஸில் நின்று சிரித்த பரமு மாதிரிதான் இருந்தது 'யாதும் கேளிர்’ என ஃபிரான்சிஸ் சொல்லிக் கேட்டபோது.

பேருந்தில் செஞ்சியைத் தாண்டி வரும்போது, ஒரு கிராமத்தை ஒருவர் நடந்து கடந்துகொண்டு இருந்தார். பை நிறையப் பொம்மைகள் சுமந்துகொண்டு ஓர் அட்டைத் தட்டியில் பலூன்கள் கட்டிக்கொண்டு வந்தார். ஒரு கையில் அழுத்தினால் 'பீய்ய்ங்... பீய்ங்ங்...’ என வெளியே வரும் நாய்க்குட்டி பொம்மையை அழுத்தியபடி நடந்துகொண்டு இருக்கிறார்.

நான் அவராக மாறிவிடக் கூடாதா என எத்தனையாவது முறையாகவோ நினைத்துக்கொள்கிறேன். வெயில் மருகும் கிராமத்துத் தெருக்களில் பொம்மைகளோடு குழந்தைகளைத் தேடும் ஒருவன்... அற்புதன். ஏதேனும் ஒரு திண்ணையில் பிளாஸ்டிக் ரயிலை சாவி கொடுத்துவிட்டபடி, ''பாப்பா... பேரென்ன பாப்பா?'' எனக் கேட்கிறவன். ''ஊதிக் காட்டவா... பாப்பாவுக்கு என்ன பாட்டு வேணும்?'' என வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து 10 ரூபாய் ஃப்ளூட்டில் 'சந்தத்தில் எழுதாத கவிதை’ வாசிக்கிறவன்.

''எட்டு ரூவாய்க்கு மேல தர முடியாது'' என்கிற பெரியம்மாவிடம் அதை வாங்கிக்கொண்டு, ''பவளமல்லி ஒட்டுத்தாவரங்களா..? ஒரு கௌ ஒடிச்சுக்கவாக்கா..?'' எனக் கேட்டு வாங்கிப்போகிறவன். ''பாப்பா சிரிப்புக்கோசரம் தர்றேன்... சோத்த எறக்கலைல்ல... வடிதண்ணி இருந்தா தாங்கம்மா'' எனச் சிரிக்கிறவன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்தாலே பெருசு. வெறும் காசுக்காக மட்டும் இவர்கள் பொம்மை விற்கவில்லை. அவர்கள் அழுத்தும்போது 'பீய்ய்ங்... பீய்ய்ங்...’ என வெளியே வரும் நாய்க்குட்டிகள் 'யாதும் கேளிர்’ எனச் சொல்லிக்கொண்டே ஊர் ஊராக அலைகின்றன.

''முட்டாயின்னா முட்டாயி... பத்து பைசா முட்டாயி. நல்ல வாச்சு, பல்லி முட்டாயி'' எனப் பாடியபடி ஊர் ஊராகப் போய் பிள்ளைகளின் கைகளில் வாட்ச் மிட்டாய் கட்டிவிட்டவர்கள் இப்போதும் இருக்கிறார்களா? பாறை வண்டியில் மாஞ்செடிகளும் தென்னங்கன்றுகளும் விற்றுவிட்டு, சாதிக் வீட்டுத் திண்ணையில் தூங்கிவிட்டுப் போகிறவர்கள் இப்போதும் வருகிறார்களா? ''ந்தா... உள்ள வந்து பாலு குடு'' - மிதியடியும் போர்வைகளும் விற்க வந்து, அப்பத்தா வீட்டுக் கூடத்தில் உட்கார்ந்து குழந்தைக்குப் பால் கொடுத்த சப்பை மூக்குக்காரி இப்போது எந்த ஊரில் இருக்கிறாள்? 20 வருடங்களுக்குப் பிறகும் அந்தச் சித்திரம் நினைவிருக்கிறது. 'நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ என்ற பாடலைப் போல!

சௌந்தர் அண்ணன் லாரி டிரைவர். வண்டியில் டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் பகத்சிங் படத்தை ஒட்டியிருப்பார். லாரியின் பின்னால் 'அநீதிகளுக்கு எதிராகப் பொங்கி எழுந்தால் நீயும் என் சகோதரனே’ என்ற எழுத்துக்கள் தோளில் கை போடும். நெடுஞ்சாலைகளில் மறிக்கும் பாலியல் தொழிலாளிகளுக்கு சும்மாவே அம்பது, நூறு தந்து, தாபாவில் சாப்பாடு வாங்கித் தருவார். அவரிடம் வேலை பார்த்த கிளீனர்களில் மூன்று பேருக்கு அவரே சுயமரியாதைத் திருமணங்கள் நடத்திவைத்திருக்கிறார்.

பெரும்பாலும் கறுப்புச் சட்டைதான் அணிவார். திடுதிப்பென்று போன் பண்ணி, ''தம்பி... ஃப்ரீயா இருக்கியா? ஒரு ரவுண்ட் வர்றியா?'' என்பார். ரவுண்டு என்றால், கிட்டத்தட்ட பீகார் வரைக்கும். அவரோடு போனால், அது வேறு அனுபவம். இரவு பகலே தெரியாமல் வண்டி போய்க்கொண்டு இருக்கும்.

சுதீப்களையும் புனித் ராஜ்குமார்களையும் பார்த்துவிட்டுப் படுத்தால், விழிக்கும்போது எதிரே பவன்கல்யாண்களும் பாலகிருஷ்ணாக்களும் சிரித்துக்கொண்டு இருப்பார்கள்.

'என்ன மொழி’ எனப் புரியாமலேயே பெயர்ப் பலகைகள் கடந்துகொண்டு இருக்கும். விதவிதமான மனிதர்களும் நிலங்களும் டச் ஸ்க்ரீனைத் தட்டிவிட்ட மாதிரி ஓடிக்கொண்டே இருக்கும்.

சௌந்தர் அண்ணன் கன்னடம், தெலுங்கு, இந்தி என எல்லாவற்றையும் பிட்டு பிட்டாகப் பேசுவார். ''எல்லா மொழியிலயும் எட்டு வார்த்தைங்க தெரிஞ்சா போதும் தம்பி... சர்வைவல் பண்ணிரலாம்'' என்பார் சிரித்தபடி. எந்த ஊரானாலும் இறங்கி சகஜமாகப் பேசுவார். யாரிடமும் உடனே ஒட்டிக்கொள்வார். அப்படி ஓர் அழகான மனிதர். சௌந்தர் அண்ணனைப் பார்த்துப் பேசியே ரொம்ப நாட்களாயிற்று.

சமீபத்தில் ஒரு வேலையாக கள்ளக்குறிச்சி போயிருந்தபோதுதான் அவரது வீட்டுக்குப் போயிருந்தேன். சௌந்தர் அண்ணனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். நான் போயிருந்தபோது இரண்டு பேரும் இருந்தார்கள். சாப்பிடும்போது இன்னொரு பையன் வந்து உட்கார்ந்தான்.

வட்டியும் முதலும் - 67

பதினைந்து வயசிருக்கும். செம்பட்டைத் தலையும் வெளிர்நிறமுமாக இருந்தான். ''இது ரதீஷ்'' என்றார் அண்ணன் அவனைக் காட்டி. ''யாருண்ணே... கிளீனரா'' என்றதற்கு அவசரமாகத் தலையாட்டி ''இல்ல தம்பி... மவன்... என் மவன்'' என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்படி ஒரு மகன் இருப்பதே அதுவரை தெரியாது. சாப்பிட்டு வந்து உட்கார்ந்ததும் அண்ணன் சொன்னார்...

''தம்பி, இவன ஜார்கண்ட்ல பாத்தேன். அப்பன போலீஸ் அழைச்சிட்டுப் போய் கொன்னுப்புட்டானுவோ போல... ஆத்தாவும் செத்துப்போச்சு.  லாட்ஜ்ல மாவா வித்துட்டுக் கெடந்தான். வெத தெரியும்ல நமக்கு. நல்ல பயலாத் தெரிஞ்சான். பசிக்குதுனு வந்து நின்னான். 'எங்கூட வர்றியாடா?’னு கேட்டேன். லாரில ஏறி உக்காந்துக்கிட்டான்'' என்றபடி திரும்பி தன் மனைவியைப் பார்த்தவர், ''வூட்லயும் இப்ப எல்லாருக்கும் புள்ளையாகிட்டான். தொழில் கத்துக்குடுத்திருவோம். அப்புறம் அவன் ஆளாயிட்டுப் போறான்'' என்றார். வரும்போது அந்தப் பையன் தெருப் பையன்களோடு கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்... சந்தோஷமாக!

இப்படித்தான் ஒரு நாள் மாணிக்கம் தாத்தா வீட்டுக்கு துளசி வந்தான். ஒரு பேய் மழையில் வந்து திண்ணையில் உட்கார்ந்துகொண்டான். எவ்வளவு சொல்லியும் போகாமல் 'ப்ப்ப்ப்பா... ம்ம்ம்மா... ய்யாய்யா’ என ஏதேதோ சத்தமிட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்குப் பேச வராது. வாயில் அவ்வப்போது வழியும் எச்சிலைக் கைலியால் துடைத்தபடியே இருப்பான்.

ராத்திரிக்குப் பொறுக்க முடியாமல் ''ங்கொப்புரானனு வுட்டன்... அழுத்தக்காரக் கம்னாட்டியா இருக்கு...'' என்றபடி ஆத்தா வந்து அவனுக்குச் சாப்பாடு போட்டது. எதுவும் பேசாமல் பக்கு பக்கெனச் சாப்பிட்டான் துளசி. ரெண்டாவது நாளே கொட்டாயில் துண்டை விரித்துப் படுத்துக்கிடந்தான். மறு நாளே தாத்தா சொன்னார், ''என்னவோ... அந்த மகமாயிதான் இந்தப் பயல அனுப்பியிருக்கு. ஊர்ல எல்லாரையும் வுட்டுட்டு இங்க வந்து எதுக்கு ஒண்டிக்கிட்டான்? இங்கயே கெடந்துக் கட்டும்!'' அதிலிருந்து துளசி, தாத்தா வீட்டில்  ஒருவனாகிவிட்டான்.

அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என யாருக்கும் தெரியாது. கேட்டால், புரியாமல் ஏதேதோ சத்தமிடுவான். ''அப்படியே வெளங்கிரும். கம்னாட்டி நடிக்குது... அதுக்கு என்னா தும்பமோ!'' என்பார் தாத்தா. துணிமணி எல்லாம் அவனுக்கும் சேர்த்து எடுக்க ஆரம்பித்தார்கள். சனிக் கிழமைகளில் காசு வாங்கிக்கொண்டு நீடாமங்கலத்துக்குப் படம் பார்க்கப்போவான். எப்போதும் வயக்காட்டிலும் வாழைத் தோப்பிலுமாகக் கிடப்பான்.

ஏழெட்டு வருடங்களுக்குப் பிறகு பக்கத்து ஊரிலேயே பெண் பார்த்து துளசிக்குக் கல்யாணம் பண்ணிவைத்தார்கள். அன்றைக்குக் கையில் கல்யாணப் பத்திரிகையோடு நின்றபடி ஆத்தா அவனிடம், ''என்னடா... இதையாவது ஒன் ஒறவுக்காரங்ககிட்ட போய் சொல்றியா? நா வேணும்னாலும் வர்றேன்'' என்றது. அவன் எதுவும் பேசவில்லை. ஆத்தா ரெண்டு மூணு தடவை கேட்க, சட்டென்று கோபமாக ஏதேதோ கத்தியபடி பத்திரிகையை வாங்கி தாத்தாவிடம் தந்தான். அவன்பாட்டுக்குக் கத்தியபடி போய்விட்டான். எனக்குச் சட்டென்று மனம் கனத்துப்போனது. அவன் எவ்வளவோ சொல்லிவிட்டுப் போன மாதிரிதான் இருந்தது.

சௌந்தர் அண்ணன் சொன்னதும் இதுதான். ''தம்பி, எதுரா சொந்தம்? உன் வாழ்க்கையிலயும் என் வாழ்க்கையிலயும் ஒளியடிச்சவன் பூராம் யாருடா? ரத்த சொந்தமா? அங்காளி பங்காளியா? நம்மள நேசிச்சதும் தூக்கிவிட்டதும் எங்கெங்கு இருந்தோ வந்த யார் யாரோதானடா... எவ்வளவு பேரு சேந்துடா நம்மள உருவாக்குறான்? நாம எல்லாருக்கும் சொந்தம்ரா. எல்லாரும் நமக்குச் சொந்தம். அதுக்கு நட்பு... அன்பு... அது இதுனு எதுனா பேர் வையி. ஆனா, எல்லாம் ஒறவுதான்!''

'ஸ்னோ அண்ட் டைகர்’ படம் பார்த்திருக்கிறீர்களா? 'லைஃப் இஸ் ஃபியூட்டிஃபுல்’ எடுத்த ராபர்ட்டோ பெனினியின் இன்னொரு படம். அந்த ஹீரோ ஒரு கவிஞன். அவன் யதார்த்த உலகத்தில் இருக்கவில்லை என மனைவிஅவனை வெறுப்பாள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். பிள்ளைகளை அவன் தன்னைப்போலவேவளர்ப் பான். ஒரு காட்சியில் அவர்கள் அறைக்குள் வெளவால்கள் வந்துவிடும். அவற்றை அடித்து வெளியே விரட்ட முயற்சிப்பார்கள் பிள்ளைகள்.

போகாமல் உள்ளேயே சுற்றிக்கொண்டு இருக்கும். ஹீரோ வந்து தன் பிள்ளையிடம், ''இப்படி வெறுத்து அடிச்சா அது போகாது... இப்போ பாருங்க நான் சொல்ற பிரேயரைச் சொல்லுங்க''    என்றபடி கீழே உட்கார்ந்து சொல்வான். ''வெளவாலே... உனது இடது பக்கம்தான் ஜன்னல் இருக்கிறது. அதில் நீ போகலாம்'' என அவனும் பிள்ளைகளும் சொல்ல... வெளவால்கள் ஜன்னல் வழியே போகும். ''அன்பா சொன்னா எல்லாமே கேட்கும்'' என்பான்.

உண்மைதான்... அன்பை உணர்வதும் உணர்த்துவதும்தான் இந்த உலகின் யாவற்றுக்கு மான தேவை!

- போட்டு வாங்குவோம்...