மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 68

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

பூங்கொத்துகள் விற்றுவிட்டு 50 ரூபாய் சம்பளத்துடன் காலை இழுத் துக்கொண்டு இரவின் சாலையில் அவள் வீடு திரும்பும் ஒரு சித்திரம் சொல்கிறது... லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

நீங்கள் மன நல மருத்துவரிடம் போயிருக்கிறீர்களா? - நான் ஒரு முறை போயிருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு. காரணம் சிம்பிள்... 'தூக்கமே வர மாட்டேங்குது சார்!’

சைக்கியாட்ரிஸ்ட்டிடம் செல்ல வேண்டும் எனமுடிவு எடுத்த பிறகு, என் சாய்ஸ் டாக்டர் ருத்ரன். பி.சி.ஸ்ரீராம் போல போட்டோவில் பார்க்கும்போதே சிநேகமாகிவிடுகிற ஒரு முகம் அவருக்கு. ஆனால், நண்பன் விடாப்பிடியாக முகப்பேரில் இருந்த ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். பழைய நடிகர் முத்துராமன் மாதிரி புன்னகையே முகமாக இருந்தார் அவர்.

''தூக்கமே வர மாட்டேங்குது சார்...''

''சொல்ல முடியாமப் போட்டுவெச்சிருக்கிற கவலைகள் ஏதாவது உங்க மனசுல இருக்கா?''

''சொல்ல முடியாமல்லாம் எதுவும் இல்ல சார்... சொல்ற மாதிரிதான் இருக்கு. எல்லார்ட்டயும் சொல்லிட்டுத்தான் திரியுறேன்...''

''நீங்க மேரிடா..?''

''இல்ல சார். ஆனா, அதெல்லாம் எனக்குக் கவல இல்ல சார்...''

உரையாடலின் முடிவில் டாக்டர் இப்படிச் சொன்னார்.

''ராஜு... உலகத்துல நாம ப்ரெடிக்ட் பண்ண முடியாத விஷயம் நம்ம மனசுதான். கீழை நாடுகள்ல பார்த்தீங்கன்னா, நிறையப் பெண்கள் நெஞ்சு வலி, முதுகு வலினு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுத்திட்டு இருப்பாங்க. உண்மையில அவங்களுக்கு எதுவுமே இருக்காது. மனப் பிரச்னைதான்... அந்த மனப் பிரச்னை வரும்போது குறிப்பிட்ட இடத்துல வலிக்கிற மாதிரி ஃபீல் பண்ணிக்குவாங்க... அதான். இந்த மனசு நமக்கே தெரியாம நிறைய விஷயங்களைச் சேத்துவெச்சுக்கும்... சீழ் பிடிக்கிற மாதிரி தான். அப்புறம் கெடந்து அனத்திட்டே கெடக்கும். ஐ திங்... வெயிட்டிங்தான் உங்க பிரச்னை. காத்திருப்பு... லைஃப்ல நெனச்சது அமையாமத் தள்ளிப் போயிட்டே இருக்கிற தவிப்பு. அது தர்ற அழுத்தம். அதான் பிரச்னை. முதல்ல ஃபீல் ஃப்ரீ...''

டாக்டர் இன்னும் என்னென்னவோ சொன்னார். தூக்கம் வருவதற்குச் சில பயிற்சிகள் சொல்லித்தந்தார். அது க்ளினிக் மூடுகிற நேரம். நான் வெளியே வந்தபோது, அங்கு இருந்த கம்பவுண்டர் ஒருவர் என் கூடவே வந்தார்.

''சார்... நீங்க சினிமாலயா இருக்கீங்க?'' என்றார்.

''ஆமா...''

''நானும் சினிமா ஆசையில வந்தவன்தான் சார். நெறைய கதைலாம் எழுதிவெச்சிருக்கேன். அப்படியே வாழ்க்கை வேறு திசைல போயிருச்சு. ஆப்போஸிட்லதான் என் வீடு. வாங்களேன் சார்... டாக்டர் சொன்ன பிராக்டீஸ்லாம் சி.டி-யில இருக்கு. தர்றேன்...''

தொட்டிச் செடிகள் வைக்கப்பட்ட வாசல். ஹால் முழுதும் விதவிதமான ஓவியங்கள் மாட்டப்பட்ட சின்ன வீடு.

வட்டியும் முதலும் - 68

''உக்காருங்க சார்...'' என்றபடி வெளியே போய் காய்ந்துகொண்டு இருந்த புடைவைகளை எல்லாம் எடுத்துவந்து மடித்துவைத்தார். ''என்ன சார் சாப்பிடுறீங்க...''

''அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார். தண்ணி மட்டும் குடுங்க...'' என்றதும் உள்ளே எட்டிப் பார்த்தார்.

''பத்மா... பத்மா... தண்ணி கொண்டா...'' என்றார். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது. இவர் எழுந்து போய்ப் பார்த்தார்.

''ஆங்... அப்பிடித்தான்... எடுத்துட்டு வா...'' என்றபடி வந்து உட்கார்ந்து சிரித்தார். ஒரு பெண்மணி நடுங்கும் கைகளில் டம்ளரைப் பிடித்தபடி உள்ளே இருந்து நடந்துவந்தார். மிக மெதுவாக நடந்து வந்து டம்ளரை நீட்டியபடி அப்படியே நின்றார். பார்க்கவே விசித்திரமாக இருந்தது. இவர் அந்த டம்ளரை வாங்கிக்கொண்டு, ''வெரிகுட். தண்ணி தந்தாச்சு... உள்ள போங்க'' என்றதும் கொஞ்ச நேரம் அப்படியே நின்றுவிட்டு, உள்ளே போனார்.

அவர் சிரித்தபடி எங்களைப் பார்த்து, ''என் ஒய்ஃப்தான் சார்... கொஞ்சம் புத்தி சுவாதீனம்... ஒரு வாரமாப் பரவாயில்ல. ந்தா... இப்பிடித் தண்ணி கொண்டாந்து தருது பாருங்க. இங்க வாங்களேன். சாயங்காலம் வாசல்ல பாதி கோலம் போட்ருக்கு. பாருங்களேன்...'' என்றார். வாசலில் முடிவடையாத பாதி கிருஷ்ணர் கிடந்தார்.

''நாங்க லவ் மேரேஜ் சார். அது ஆர்ட்டிஸ்ட்டு. தஞ்சாவூர் பெயின்ட்டிங்லாம் நல்லா வரையும். இங்க மாட்டிருக்குற படங்கள்லாம் அது வரைஞ்சதுதான். நல்லாத்தான் இருந்துச்சு. நாலு வருஷத்துக்கு முந்தி இப்பிடி நெனப்பு தட்டிப்போக ஆரம்பிச்சுது. ஒருநாள் திடீர்னு ஹிஸ்டீரியா மாதிரி வந்துருச்சு. அன்னைக்குப் போனதுதான் என் தூக்கம். இப்ப வரைக்கும் திரும்பலை. ஆஸ்பத்திரி, கோயில்னு அலைஞ்சு திரிஞ்சுட்டேன். எதாவது ஆஸ்பத்திரியில சேத்துவிட்ருனு சொன்னாங்க. எனக்குக் கேக்கல. வீட்டோடயே வெச்சுக்கிட்டேன். அது ஒண்ணும் பண்ணாது சார். எதையும் கெரகிச்சுக்க முடியாது, அப்பிடியே கெடக்கும்... செல நேரம் ரொம்ப அனத்தும்... இப்ப ஒரு வாரமா பரவாயில்ல. நல்லா நடக்குது. சிரிக்குது... சொன்னா செய்யுது. ந்தா... இன்னிக்கு திடுதிப்னு வந்து க்ளினிக் கௌம்புறப்ப கோலம் போட்டுது. சந்தோஷமாயிருச்சு சார்...'' என்றவர் பொசுக்கென்று தேம்பினார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆற்றில் குளித்துக் கரையேறுகிற ஒரு பெண்ணும் கரையில் காத்திருக்கிற ஓர் ஆணுமாக அங்கு இருந்த ஓவியம், அதுவரை காணாத காவியம்போல் உறைந்து இருந்தது.

''பத்மா... சார் கிளம்புறாங்களாம்...'' என்றதும் மிக மெதுவாக வந்து வாசலில் சாய்ந்து நின்றார் பத்மா. வெளியே வந்து தெருமுனை வரை நடந்து வந்தவர் விடை பெறும்போது சொன்னார்.

''சார்... என்னவோ இப்பிடி ஆயிருச்சு... இப்பிடி அவளப் பாத்துக்கறது எனக்குச் சந்தோஷமாத் தான் சார் இருக்கு. இப்பதான் சார் என்னோட லவ்வ அதிகமாக் குடுக்கறேன். எனக்கு அவ... அவளுக்கு நான். அந்த வாசக் கோலத்த அவ முழுசாப் போட்டுருவா சார். இங்க பாருங்க சார்... என்னையக் கேட்டா ஒரே வரில சொல்லிப்புடுவேன்... லைஃப் இஸ் பியூட்டிஃபுல் சார்!''

அந்த இரவின் தெருமுனையில் நின்று அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு விடியலைப் போல இருந்தது. நண்பன் ரஞ்சனுக்குக் குழந்தை பிறந்தபோது பிள்ளை அழவே இல்லை. நான் போனபோது குழந்தை சலனம் இல்லாமல் விழித்துக்கொண்டு இருந்தது. டாக்டர் குழந்தையை ஏதேதோ செக்கப் செய்து பார்த்தார். கொஞ்ச நேரம் கழித்துப் பெரிய டாக்டர் வந்தார். குழந்தையின் பக்கத்தில் நின்று கை தட்டினார். ஒரு பாத்திரத்தை எடுத்துப் பக்கத்தில் போட்டார். பாப்பா அப்போதும் சலனம் இல்லாமல் மேலே பார்த்தபடியே இருந்தது.

''குழந்தைக்குக் காது கேக்கல...'' என்றார் டாக்டர். நண்பனின் அம்மாவும் மாமியாரும் கதறி அழ ஆரம்பித்தார்கள். நண்பனும் மனைவியும் தவிப்பாக டாக்டரைப் பார்த்தார்கள். ஓர் உயிர் பிறக்கும்போதே மௌனத்தில் இருப்பதை அப்போதுதான் பார்த்தேன். அந்த இடமே அவ்வளவு தவிப்பில் கிடந்தது. இப்போது பார்த்தால் எல்லாம் போய்விட்டது. அவ்வளவு அழகாக வளர்கிறாள் அந்தப் பாப்பா. கௌபாய், காந்தி, கிருஷ்ணர், ஜான்ஸி ராணி என எல்லா கெட்டப்புகளிலும் அவள் சிரிக்கிற ஆல்பம் எப்போதும் அந்த வீட்டின் ஹாலில் கிடக்கிறது. வைப்ரேட்டர் வைத்த பந்து, கால்குலேட்டர், பொம்மைகள் என அவளுக்கு என்று ஓர் உலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறான் ரஞ்சன். இசை என்பது ஒரு வடிவம். அதைத் தொடவும் முடியும் என்பதை அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோதுதான் உணர்ந்தேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

பாண்டி பஜாரில் வரிசையாக நிற்கும் பூங்கொத்துக் கடைகள். வரிசையாக பொக்கேக் கள் அடுக்கப்பட்டு, மஞ்சள் விளக்கில் கடந்து போகும் கடைகள். சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் சார் பிறந்த நாளுக்கு பொக்கே வாங்கலாம் என்று போனபோதுதான் சுலேனாவைப் பார்த்தேன். பூங்கொத்துகளுக்குப் பின்னால் பாவாடை, சட்டையில் தலை மட்டும் நீட்டிக்கொண்டு இருந்த சிறுமி.

''மூணு ரோஸ் மட்டும் வெச்சுச் சின்னதா வேணும்...'' என்றதும், ''ஏண்ணே... அவ்ளோ சின்னதாப் போதுமா...'' எனச் சிரித்தாள். ''போதும்மா'' என்றதும், சட்டென்று ஒரு ரோஜாப் பூவை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு, இடது கையாலேயே கத்திரியை எடுத்துத் தடதடவென பேப்பர் கட் பண்ணி பேக் செய்தாள். அப்போதுதான் எட்டிப்பார்த்தேன். அவளுடைய வலது கால், கை இரண்டுமே போலியோ தாக்கியதுபோல் மெலிந்து விழுந்திருந்தன. இடது கையாலேயே பூங்கொத்தைத் தயார்செய்து புன்னகையோடு நீட்டியபோதுதான் பெயர் கேட்கத் தோன்றியது.

''எட்டாவது படிக்கிறேண்ணே... இங்க கார்ப்பரேஷன் ஸ்கூல்ல. இங்க வந்து உட்கார்ந்தா டெய்லி அம்பது ரூவாண்ணே...''

அதன் பிறகு எப்போது அந்த ஏரியா போனாலும், கண்கள் சுலேனாவைத்தான் தேடும். பெருநகரத்தின் இவ்வளவு நெரிசலான சாலையில் இப்படி ஒருத்தி பூங்கொத்து விற்றுக்கொண்டு இருப்பதை யார் அறிவார்? அவள் புன்னகை தரும் ஆயிரமாயிரம் பூங்கொத்துகளை யார் தருவார்?

பூங்கொத்துகள் விற்றுவிட்டு 50 ரூபாய் சம்பளத்துடன் காலை இழுத் துக்கொண்டு இரவின் சாலையில் அவள் வீடு திரும்பும் ஒரு சித்திரம் சொல்கிறது... லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

பாலன் வந்து கல்யாணப் பத்திரிகை கொடுத்தபோது இதுதான் தோன்றியது... பாலனுக்கு 40 ப்ளஸ் இருக்கும். ஆள் இரண்டரை அடிதான் இருப்பார். சர்க்கஸ் குள்ளர். சாலிகிராமத்தில் தங்கியிருக்கிறார். அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டுவார். அப்படி ஒரு ஷூட்டிங்கில்தான் எனக்கு அவர் பழக்கம்.

ஒருநாள் பிரசாத் ஸ்டுடியோ எதிரில் இருந்த டீக்கடையில் வைத்து எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்துக்கொண்டு இருந்தார். எனக்கும் தந்துவிட்டு, ''கன்ஃபார்மா வந்துரணும் சார்... இருங்க என் ஒய்ஃபையும் கூப்பிட்டுச் சொல்லச் சொல்றேன்...'' எனக் கைதட்டினார். பக்கத்தில் இருந்த கடையில் இருந்து வந்தார் அஞ்சரை அடியில் ஒரு பெண்.

''எஸ்.டீ.டி. பூத் வெச்சிருக்கு சார். நாம வாய்ப்புக்காக அப்பப்ப போன் பண்ண வருவோம்ல, அப்ப நம்மளைப் புடிச்சுப்போச்சு. எட்டு வருஷ லவ் சார்...'' என்றார் வெட்கமாக.

''கல்யாணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் சார்...'' என்றபடி இருவரும் நடந்தார்கள். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

வட்டியும் முதலும் - 68

தேவனைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை முடியாது. திருப்பூரில் இருந்தபோது, குழந்தைக் கல்வியை வலியுறுத்தி ஒரு கலைக் குழுவுடன் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு இருந்தேன். அது ஒரு என்.ஜி.ஓ. அமைப்பு. அந்தக் குழுவில் பாடகராக இருந்தார் தேவன். தப்பாட்டம், பாடல்கள், நாடகம் என விதவிதமான பிரசாரங்கள் நடக்கும். தேவன் பழைய பாடல்களை மெட்டெடுத்து பிரமாதமாகப் பாடுவார். மற்றபடி குழுவில் அவர்தான் சந்தானம். எப்போதும் ஏதாவது காமெடி பண்ணிக்கொண்டே இருப்பார். பாக்கெட்டில் பிள்ளைகளுக்குத் தருவதற்கு எப்போதும் மிட்டாய்கள் வைத்திருப்பார். டி.டி.எஸ். எஃபெக்ட்டில் களேபரமாகச் சிரிப்பார். சில நேரங்களில் நமக்கு எரிச்சலாகக்கூட இருக்கும். ஓர் இரவு அப்படி அவர் காமெடி பண்ணிச் சிரித்தபோது, ''ஏங்க... இவரு டார்ச்சரு தாங்க முடியலையே'' என்றேன் ஒரு நண்பரி டம். அவர் சாதாரணமாகச் சொன்னார், ''இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும். மனசோட வெச்சுக்க முருகா... அவர் ஹெச்.ஐ.வி. பேஷன்ட்!''

இப்போது தேவன் மேடையில் பாடிக்கொண்டு இருந்தார்,

'கடவுள் இருக்கின்றார்... அது கண்ணுக்குத் தெரிகின்றதா... காற்றில் தவழுகிறாய்... அது கண்ணுக்குத் தெரிகின்றதா? கடவுள் இருக்கின்றார்... இருக்கிறார்... இருகின்றார்...’

லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

- போட்டு வாங்குவோம்...