மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 69

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

சென்னை வந்த புதிதில் நான் பார்த்த ஒரு வேலையில், எனக்கு 800 ரூபாய்தான் சம்பளம். அதெல்லாம் 10-ம் தேதியோடு பணால். அப்புறம் எல்லாமே அன்புக் கடன்கள்தான்.

'நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ வாழ்வில் அதிகமாக எதிர்கொண்ட கேள்விகளில் இதுவும் ஒன்று. எந்த பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறோமோ, அது எதிர் திசையிலேயே போய்க் கொண்டு இருக்கும். முதல் நம்பர் இருக்கும்... அடுத்த நம்பரும் இருக்கும், நாம் தேடிப் போகிற அட்ரஸ் மட்டும் அலைக்கழிக்கும்.

கல்யாணம் பண்ணிக் காசு சேர்க்கும்போது, அடுத்தடுத்து அவன் குடும்பத்தில் நடந்தது எல்லாமே துயரங்கள். அம்மாவுக்கு கேன்சர் வந்து பெரும் பணம் செலவழித்து சிகிச்சை எடுத்தார் கள். அது முடிவதற்குள் அப்பாவுக்கு பைபாஸ் ஆபரேஷன் பண்ணி... கொஞ்ச நாளில் இறந்துவிட்டார். அடுத்து  மச்சா னுக்கு நடந்த ஒரு விபத்தில் வீட்டையே விற்றான். சின்ன தும் பெரிதுமாக அவ்வளவு பிரச்னைகளோடும் விடாமல் வேலை பார்த்து, அப்படியே சிரித்துக்கொண்டு தினசரி கடக்கிறவனை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரே ஒரு தருணம் அவன் மச்சானை வைத்திருந்த மருத்துவமனை வளாகத்தில் நின்றபடி, ''நமக்கு மட்டும் ஏன்டா இப்படி நடக்குது... தெரியலையே... நாளைக்கு திருநள்ளாறு கிளம்பலாம்னு பாக்கறேன்!'' என்ற போது அவனது கண்களில் விடை இல்லாத ஒரு கேள்வி நெருஞ்சியைப் போலக்கிடந்தது.

அவசர அவசரமாக ஓடிவரும்போது பத்தடி தூரத்தில் கடையை அடைத்துக் கற்பூரம் கொளுத்துவான். டீக்கே காசு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும்போது, யாராவது நாய்க் குட்டிக்கு சிக்கன் பிரியாணி ஊட்டிக்கொண்டு இருப்பார் கள். ''அச்சோ ஸாரிப்பா... நீ புரொபோஸ் பண்ணது தப்பில்ல... நான் கணேஷை லவ் பண்றது உனக்குத் தெரியாதா?'' எனஒருத்தியிடம் வாங்கு பட்டு வரும்போதுதான், எல்லாப் பயல்களும் அழகழகான ஃபிகர்களோடு திரிவான்கள். 'முக்கியமான மூணு கொஸ்டீனப் படிச்சாச் சுப்பா’ என எக்ஸாமுக்குப் போகும்போது, முக்கியம் இல்லாத நாலாவது கொஸ்டீன்தான் முதல் கொஸ்டீனாக இருக்கும். ரிசல்ட் பார்க்கப் போகிறபோது திரும்புகிற இடம் எல்லாம்டுடோ ரியல் விளம்பரங்களாக இருக்கும். முக்கியமான போன் வரும்போது எல்லாம் நாட்ரீச்சபிள் ஆக இருப்போம். வந்து போன் பண்ணினால்,ஆபீஸர் கள் எடுக்க மாட்டார்கள்.

''சன் நியூஸ்லமழையப் பத்தி மக்கள் கருத்து சொல்லி இருக்கேன். ஏழு மணிக்குப் பாருங்க மாமா...'' எனக் குடும்பத்தோடு உட்கார்ந்து இருக்கும்போதுதான் கரன்ட் கட் ஆகும். 8 மணி மீட்டிங்குக்கு 8.10-க்குப் போய்க் கொண்டு இருக்கும்போதுதான், டிராஃபிக் கான்ஸ்டபிள் மடக்கி வறுவல் போடுவார். மெடிக்கல் ரிசல்ட் வாங்கப் போகும்போது தான், வழி எல்லாம் கண்ணீர் அஞ்சலிபோஸ்டர் கள் கண்ணில்படும். 'இன்னிக்கு இருந்து குடிக் கவே கூடாது’ என உச்சகட்ட உறுதி எடுக்கும் போதுதான், 'நார்வே சரக்கு வந்து இருக்கு... கிரில் சிக்கன் வாங்கியாச்சு. ராஜா சாங்ஸ் டவுன்லோட் பண்ணி யாச்சு. அரைக் கிலோ ஆப்பிள் போதும்ல...’ என போன்கள் வரும்.

 நமக்குப் பிடித்த டிசைனில் '38’ இருக்கும்... '42’ இருக்கும்... நமக்கான சைஸ் '36’ மட்டும் இருக்காது. குடும்பத்தோடு சினிமா கிளம்பும்போதுதான், போன் பண்ணாமல் விருந்தினர்கள் வந்து இறங்குவார்கள். நைட் ஷிஃப்ட் முடித்த கையோடு மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகும்போது, 'டோக்கன் நம்பர் 67...’ என்பார்கள். அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டில் நெருக்கியடித்து மூச்சு முட்டும்போது, மேல் பெர்த்தில் கால் ஆட்டியபடி இயர்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே, 'இந்தியா டுடே’ புரட்டுபவரைப் பார்த்தால், எப்படி இருக்கும்? எனக்கு இதுவரை எதிர் பெர்த்திலோ, பக்கத்து சீட்டிலோ, ஒரு சமீரா ரெட்டிகூட வந்ததே இல்லை. கேட்கும்போது போக்குக் காட்டிவிட்டு, நாற்று பறிக்கும்போது அடித்து இம்சிக்கும் மழையை என்ன செய்வது? தேடும்போது எல்லாம்கிடைக்காமல், தேவை இல்லாதபோது எதிரே இளிக்கும் பொருளாக இருக்கிறது, பல நேரங்களில் இந்த வாழ்க்கை!

'நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’

சென்னை வந்த புதிதில் நான் பார்த்த ஒரு வேலையில், எனக்கு 800 ரூபாய்தான் சம்பளம். அதெல்லாம் 10-ம் தேதியோடு பணால். அப்புறம் எல்லாமே அன்புக் கடன்கள்தான்.

ஆனாலும், நான் பஸ்ஸிலோ, ரயிலிலோ 'வித் அவுட்’ அடித்ததே இல்லை. ஒருநாள் 10 ரூபாயோடு பீச்சுக்கு பஸ் ஏற நின்றேன். என்னுடன் வந்த நண்பன் முஜிபுர் ரஹ்மான், ''முருகா... டிக்கெட் எடுக்காத'' என்றான்.

''ஏன்? நீ எடுத்துர்றியா?''

''நாம எதுக்கு எடுக்கணும்? நாமெல்லாம்கவர் மென்ட்டோட தத்துப் பிள்ளைகள்யா... லூஸுப் பசங்கதான் டிக்கெட்லாம் எடுப்பாய்ங்க. நீ வா.'' பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுக்கவே இல்லை. கொஞ்சம் திகிலடித்தது.

''டேய், செக்கர் வந்து பிடிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது?''

''ஐயே... நான் சென்னை வந்து நாலு வருஷம் ஆச்சு. ஒரு தடவகூட டிக்கெட் எடுத்ததே இல்ல. வித் அவுட்தான். இனிமே நீயும் இதையே மெயின் டெயின் பண்ணு. இந்தக் காசுல ஒரு டீ, வடையப் போடலாம்யா. டிக்கெட் எடுத்த மாரியேநில்லு...'' என்றான் கேஷ§வலாக. அதைக் கேட்டுகொஞ்சம் நெஞ்சு விடைக்க, விசிலடித்தபடி நின்றேன்.

எனக்கு 'வித் அவுட்’ என்ற வார்த்தையிலேயே மனம் குதிரை ஏறியது. ஆஹா... எவ்வளவு அற்புதமான வார்த்தை. 'வித் அவுட்’ என்றால் ஏதுமற்றவன்... அவன் துறவி... ஞானி. ஒரு கவிதை எழுதலாமே!

''எல்லாரும் டிக்கெட்ட எடுத்துக் கைல வெச்சுக்கங்க''- திடுதிப்பென்று எல்.ஐ.சி. ஸ்டாப் பிங்கில் பஸ்ஸை மடக்கி, இரு புறமும் செக்கர்கள் ஏறினார்கள். ''ஒன் பை ஒன்னா வா... டிக்கெட் இல்லைன்னா, ஃபைன் 500 ரூவாய எடுத்து வெச்சுக்க''- தடதடவென உள்ளே ஏறி வந்தார்கள். நான் 'பரதேசி’ அதர்வா மாதிரி கிறுகிறுத்து நின்றேன். அடிவயிற்றில் ரிங்டோன்கள் கிளம் பின. கண் இமைக்கிற நொடியில் முஜிபுர் மொபை லைக் காதில்வைத்தபடி, ''எம்.எல்.ஏ. ஆளு தான்யா... கார் வர்றதுக்கு இவ்வளவு லேட்டா? இந்நேரம் கோர்ட் ஆரம்பிச்சிருக்கும்... ந்தா வர்றேன்யா'' எனக் கத்தியபடி செக்கரைப்பிடித் துத் தள்ளிவிட்டு வெளியே தவ்வி, எகிறி ரோட்டில் விழுந்து எதிர் திசையில் ஓடி மறைந்தான்.

எல்லாமே 'கால்’ கட் பண்ணுகிற நொடியில் நடந்தது. செய்வது அறியாது திகைத்த செக்கர் கள், ''ஹை கோர்ட்டுக்குப் போறதுக்கு எதுக் குய்யா பீச் வண்டில ஏறுனான்..? நாதாரி...'' எனத் திட்டிவிட்டு, ''நீ வா... டிக்கெட்ட எடு...'' என என்னிடம் வந்தார்கள். அப்படியே காலரைப் பின்பக்கம் கவ்வி என்னை வெளியே இழுத்தார்கள். ''சார்... சார்... பாஸிங் விட்ருந்தேன் சார்...''

''யார்ட்ட..?''

வட்டியும் முதலும் - 69

''அவரு தவுசன் லைட்ல எறங்கிட்டாரு சார்...''

''அப்ப நீ ஜெமினிலயே இறங்கி இருக்கணும். வாடா...''- வண்டியில் அடைத்து ஸ்டேஷனுக்குக் கொண்டு போனார்கள். அங்கே என்னைப் போலவே, 'நமக்கு மட்டும் ஏங்க இப்படி நடக்குது நண்பர்கள்’ குழுமி இருந்தனர். எவ்வளவோ கொட்டடித்தும் கேட்கவே இல்லை. கடைசியாக, எனது பழைய நோக்கியா போனை அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்து, 300 ரூபாயோடு போய் மீட்டு வந்தேன். டென்ஷனில் இருந்தபோது, டீக் கடையில் தம் அடித்தபடி முஜிபுர் அலட்சிய மாகச் சொன்னான், ''முருகா... நான் நாலு வருஷமாப் போறேன். சிக்குனதே இல்ல. நீ மொத தடவையே சிக்கிட்ட... சில விஷயம் சில பேருக்குத்தான் அமையும்''- அதிலிருந்து நான் வித் அவுட்டில் போனதே இல்லை.

ஆமாம்... சில பேருக்குத்தான் சில விஷயங்கள் அமையும். நானும் ஜெயசீலனும் பள்ளிக்கூடம் முடிகிற வரை கிளாஸ்மேட். ஒரே பெஞ்ச் காரர்கள். அவன் அப்பா டவுனில் பி.வி.சி.பைப் கடை போட்டு இருந்தார். வசதியான குடும்பம். காலேஜ் முடித்துவிட்டு நானும் மற்ற நண்பர் களும் வேலை எதுவும் செட் ஆகாமல் வெட்டி யாகச் சுற்றிக்கொண்டு இருந்தபோது, ஜெயசீல னுக்கு அவனது அப்பா தனியாகக் கடை போட்டுக் கொடுத்துவிட்டார். நாங்கள் கைலியும் கவலையுமாகக் கையில் பைசா இல்லாமல் திரியும்போது, ஜெயா ஜம்மென்று கல்லாவில் முதலாளியாக உட்கார்ந்துவிட்டான்.

வெள்ளை வேட்டி - சட்டையும் கழுத்தில் பட்டைச் செயினு மாகக் கல்லாவில் உட்கார்ந்தபடி, ''என்ன மாப்ள... ஜாப் எதுவும் கெடைக்கலையா? எப்பி டிறா மாசக் கணக்குல சும்மா இருக்கீங்க?'' என்பான். நாங்கள் கிரிக்கெட் டோர்னமென்ட் டுக்கு வேடிக்கை பார்க்கப் போய் உட்கார்ந்து இருந்தால், அவன் 1,000 ரூபா டொனேஷன் குடுத்துவிட்டு, ஆட்டத்தைத் துவக்கிவைத்து விட்டுப் போவான். ஒருமுறை ஒயின் ஷாப்பில் வைத்து ஏதோ தகராறு வந்துவிட்டது. சேகர் வெகுண்டெழுந்து, ''போடா ..ரு... உங்கப்பன் சீமக்கருவ... எங்கப்பன் எருக்க... அந்தாளு போட்ட ரூட்ல நீ சடக்குனு கல்லால உக்காந்துட்ட. இல்லைன்னா, நீயெல்லாம் இருந்த இருப்புக்கு இங்கதான்டி தட்டு கழுவணும்.

பெருசா காசக் காட்டிப் பீத்தாத. எங்களுக்கு அமையல... அதான் இப்படிக் கெடக்குறோம். நாங்களேதான் கைய ஊன்டி ஊன்டி வரணும்... ஓங்காசு பத்துக்கு எங்காசு அஞ்சு சமானம்... போடா'' என்றான். அப்படியே என் மேல் சாய்ந்து, ''மாப்ள... நமக்கு மட்டும் ஏன்டா இப்படி எல்லாம் நடக்குது? நமக்கும் அப்படி ஒரு அப்பா  பேக்ரவுண்டு வந்துருக்கலாம்ல...'' எனப் புலம்பினான். இரண்டு பேரும் ரொம்ப நாளைக்குப் பேசாமல் திரிந்து, இன்னொரு பார்ட்டியில் சேர்ந்தார்கள். எனக்கு இப்போதும் சில அரசி யல், கலை உலக வாரிசுகளை எல்லாம் பார்க்கும் போது ஜெயசீலன் ஞாபகம்தான் வரும்.

''எனக்கு மட்டும் எதுவும் சீக்கிரமே கிடைக்காது. அது என் ராசி...'' என்று அடிக்கடி சொல் வான் குரு. ''என் அண்ணனுக்கு எல்லாமேஉடனே நடந்துரும்ங்க... சின்ன விஷயம்னாக்கூட எனக்கு அது நடக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிடும்ங்க...'' என்பார் பாண்டி. நண்பன் லெனினுக்குச் சமீப மாக நடந்தது எல்லாமே ரம்மி ஆட்டம் மாதிரி தான் இருந்தது. முட்டி மோதி உழைத்து, கஷ்டப் பட்டு சேர்த்து வீடு கட்டினான்... கார் வாங்கினான்.

திடுதிப்பென்று என்ன நோய் என்றே தெரியாமல் மொத்த உடலும் சுருங்கி, முப்பத்தஞ்சு வயதில் ஒரு குழந்தையைப் போல திண்ணையில் கிடந்த நாகுவை... நாப்பத்துச் சொச்சம் வயதில் வாரத்துக்கு இரண்டு முறை கோயம்புத்தூர் ஆஸ்பத்திரிக்குப் போய் டயாலிசிஸ் பண்ணிக்கொண்டு வாழும் ஞானத்தை... வகுப்புத் தோழி கட்டிய பங்களாவிலேயே சித்தாளாக வேலை பார்த்ததை, அந்த வீட்டைக் கடக்கும்போது எல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சுதாக்காவை... கல்யாணத்துக்கு முதல் நாள் சாயங்காலம் பெண் ஓடிப்போக, மறுநாள் மண்டபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற பாஸ்கரனை... பெற்ற நாலு பிள்ளைகளும் கைவிட்டுவிட, பெரியாஸ்பத்திரி பிரசவ வார்டில் வந்து தர்மத்துக்கு வேலை பார்க்கிற மணியம்மாவை... நினைக்கிறபோது எல்லாம் நான் ரொம்பவும் சின்னவனாகத் தெரிகிறேன்.

நேற்று சார்லஸ் வந்திருந்தான். பெசன்ட் நகர் சர்ச் பக்கம் இருக்கிற குப்பத்தில் இருப்பவன். நண்பன் பரமுவின் நண்பன். அப்படித்தான் அவனை எனக்கு அறிமுகம். சுனாமி வந்த நாளில், பீச்சுக்குப் போன சார்லஸை ஒரு பேயலை வந்து தூக்கி மண்ணில் சொருகியது. என்ன... ஏதென்றே தெரியாமல் நினைவு இழந்து மணலில் கிடந்தவனை ஆஸ்பத்திரியில் கொண்டுபோய்ப் போட்டார்கள். எப்படியோ பிழைத்துவிட்டான். எழுந்துவந்தால் அவனது குடும்பத்திலேயே இன்னும் இரண்டு உறவுகளைக் கொண்டுபோய்விட்டது கடல். இவனுக்கு ஏகப்பட்ட தண்ணீரும் மணலும் உள்ளே போய் ஆளே உருக்குலைந்துவிட்டான். இப்போது வரைக்கும் சாப்பிட்டாலே வயிறு வலிக்கும். அப்படியும் மீண்டு வந்து, வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டான்.

வட்டியும் முதலும் - 69

இன்னமும் சிரிக்கிறான். இந்த உலகை ரசிக்கிறான். அவனை விடுவதற்காக ஈ.சி.ஆர். பக்கம் இருக்கிற சுனாமி குடியிருப்புக்குப் போனேன். அங்கே பையன்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தார்கள். சட்டென்று ஏதோ தோண சார்லஸிடம், ''நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?னு யோசிச்சுருக்கியா தலைவா..?'' என்றேன். அவன் சிரித்தபடி சொன்னான், ''அப்பிடிலாம் இல்ல சார்... எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ நடக்குது. சில விஷயங்கள ஏத்துக்கிட்டுதான் ஆகணும். ஏத்துக்கிட்டாதான் மனுஷன். சுனாமி வந்தப்ப இந்த எடம் எப்பிடிக் கெடந்துச்சு... இப்ப எப்பிடி இருக்கு? என்னா சார்..?'' எனக்கு சுருக் என்றது. ஒரு பையன் பந்தை ஓங்கி அடிக்க... சட்டென்று உற்சாகமாகி கையைத் தூக்கினான் சார்லஸ், ''டோலு... சிக்ஸர்றா!''

- போட்டு வாங்குவோம்...