மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மனம் கொத்திப் பறவை - 23

மனம் கொத்திப் பறவை!
பிரீமியம் ஸ்டோரி
News
மனம் கொத்திப் பறவை!

மனம் கொத்திப் பறவை - 23

விளக்குக் கம்பத்திலிருந்து நீட்ஷேவுக்கு!

''வரும் டிசம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு என்னுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி உள்ளது; சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்துகொள்வீர்களா?' என்று (ஹாய்) மதனிடம் கேட்டதும் சம்மதித்தார். காமராஜர் அரங்கம் என்றதும் நண்பர்கள் அதிர்ச்சி  அடைந்தார்கள். அவ்வளவு பெரிய ஹாலில் இதுவரை இலக்கிய நிகழ்ச்சி நடந்தது இல்லை. 'கூட்டம் கூடுமா?’ என்று பலருக்கும் சந்தேகம். சிறிய ஹாலில் கூட்டம் முடியும் வரை பலரும் இடம் இல்லாமல் நின்றுகொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் 'அரங்கம் நிறையாவிட்டாலும் பரவாயில்லை; ஒருவர்கூட நிற்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் காமராஜர் அரங்கத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

 நிகழ்ச்சிக்கு இன்னொருவரும் வருகிறார். எலூர் லெண்டிங் லைப்ரரியில் புத்தகம் எடுத்த காலத்தில் இருந்து அவர் எனது நண்பர். அப்போது ஹிண்டு நாளிதழில் வேலையில் இருந்தார். அவர் சார்ந்துள்ள கட்சியை நான் விமர்சித்து எழுதினாலும் அது வேறு, நட்பு வேறு என்று நினைப்பவர். 'வருகிறீர்களா? என்று கேட்டவுடனே ஒப்புக்கொண்டார்.  யூகித்துவிட்டீர்களா? கனிமொழி!

மனம் கொத்திப் பறவை - 23

ங்கிலத்தில் எழுதுபவர்கள் சினிமா நடிகர்களைப்போல் வாழ்கிறார்கள் என்பதை ஹே திருவிழாவில் கண்டுகொண்டேன். தமிழ்நாடு, ஆந்திரா தவிர, உலகம் பூராவும் எழுத்தாளர் என்றால் இதுதான் நிலைமை. உதாரணமாக, சிலியில் பாப்லோ நெரூடாவின் வீடு... அந்த நாட்டு ஜனாதிபதியின் வீட்டை விடப் பெரிதான ஓர் அரண்மனை!

ஹே ஆன் வை என்று ஒரு சிறிய ஊர் இங்கிலாந்தில் உள்ளது. (ஊரை ஒட்டி, வை என்ற நதி ஓடுவதால், இந்தப் பெயர்). ஜனத்தொகை 1,500. ஆம், வெறும் 1,500-தான்.  ஆனால், அங்கே உள்ள புத்தகங்களின் தொகை 15 லட்சம். எல்லாம் பழைய புத்தகங்கள். இதனால் இந்தச் சிறிய ஊர் இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்டது. இங்கே 10 நாட்கள் நடக்கும் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்ள உலகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் வாசகர்களும் எழுத்தாளர்களும் வருகிறார்கள். இதன் காரணமாக, இந்த விழாவை டெலிகிராஃப் செய்தித்தாளே நடத்துகிறது. ஹேவைத் தவிர, இந்த விழா இப்போது உலகின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள் எல்லாம் கலந்துகொள்ளும் இந்த விழாவுக்கு நானும் அழைக்கப்பட்டதை எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதவில்லை. தமிழ் எழுத்தாளர்கள் அனைவருக்கும் கிடைத்த கௌரவம்.

இந்த விழாவில் நான் சந்தோஷம் அடைந்த தருணங்கள் பல. தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் என்னைப் பார்த்ததும் முக மலர்ச்சியுடன் என் பெயரைச் சொல்லி அழைத்துக் கை குலுக்கியபோது ஓர் ஆச்சர்யம். இந்த அங்கீகாரம் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் கிடைக்க வேண்டுமானால், நம் படைப்புகள் சரியான மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்துக்குச் செல்ல வேண்டும். 'இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதப்படுவது எல்லாம் வெறும் குடும்பக் கதைகளே; அதை ஆந்த்ரபாலஜி என்று சொல்லுங்கள்; இலக்கியம் என்று சொல்லாதீர்கள்’ என்று என் பேச்சில் குறிப்பிட்டேன். ஆங்கிலத்தில் எழுதப்படுவதைவிட, தமிழ், மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியம் தரமானது; அதிலும் இந்திய அளவில் தமிழின் சமகால இலக்கியம்தான் உச்சத்தில் இருப்பது என்று வாதிட்டேன். ஆனால், நம்முடைய பிரச்னை, இதற்கெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் சரியாக இல்லை.

மனம் கொத்திப் பறவை - 23

மற்ற சந்தோஷங்கள் நிலாஞ்சனா ராய் மற்றும்  மம்மூட்டியின் நட்பு. ஏன் காலையில் பேசவில்லை என்று கேட்டதும், 'நீங்கள் என் மேஜைக்கு வராமல் வேறு இடத்துக்குப் போனதும், காரணம் தெரியாமல் குழம்பினேன்; அதனால்தான் ஹலோ சொல்லவில்லை’ என்றார் நிலாஞ்சனா ராய். அவரிடம் 'ஒரு பெண்ணுடன் பேசுவதே தப்பு; எங்கள் ஊர் கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசினால் அபராதம் விதிக்கிறார்கள்; இதை ஒரு துணைவேந்தரே நியாயப்படுத்துகிறார். அந்தக் கலாசாரத்தில் இருந்து வந்தவன் நான்’ என்று பதில் சொல்ல முடியுமா? 'அதுவும் தவிர, சீரியஸாக யோசித்துக்கொண்டு இருந்தீர்கள். அதனா லும் தயங்கினேன்’ என்றார். 'அடக் கடவுளே, உங்களுக்கு அடிமையாகிவிடக்கூடிய ஒருவனைப்பற்றி அப்படி நினைக்கலாமா?’ என்று சொல்லவில்லை; நினைத்துக்கொண்டேன். காரணம், அழகு அல்ல;  அவருடைய அறிமுகத்தில் 'practising Hedonist’ என்று கண்டிருந்தது. என் எழுத்து பூராவுமே ஹெடோனிசம்தான். இப்படி ஒரு ஹெடோனிஸ்ட்டை அதுவும், ஒரு பெண் வடிவில் இதுவரை வாழ்க்கையில் சந்தித்தது இல்லை என்பதே என் உற்சாகத்துக்குக் காரணம். ஹெடோனிசம் என்றால் என்ன? இந்தத் தொடர்பற்றி உல்லாசம், உற்சாகம் என்று குறிப்பிட்டு இருந்தது அல்லவா? அதுதான். வாழ்வைக் கொண்டாடுவது. ஆனால், இதில் ஓர் ஆபத்தும் இருக்கிறது. பலரும் படிக்க வேண்டிய வயதில், படிப்பை விட்டு விட்டுக் குடிப்பது, கும்மாளம் போடுவது என்று தவறாக நினைத்துவிடுகிறார்கள். நம்முடைய பொறுப்பைக் கை கழுவுவது அல்ல கொண்டாட்டம். ஹெடோனிசம் என்பது சோம்பேறியாக வாழ்வது அல்ல.

திருவனந்தபுரத்தில்தான் ஹே இலக்கியத் திருவிழா மூன்று தினங்கள் நடந்தன. 'ஏன் சென்னையைத் தேர்ந்தெடுக்கவில்லை?’ என்று கேட்டேன். 'அதற்கான இலக்கியச் சூழல் இங்கே இல்லை’ என்று பதில் வந்தது.  நாம் கோபம் அடையக் கூடாது. ஒவ்வொரு நாளும் மூன்று அரங்கங்களில் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது. ஒவ்வோர் அரங்கிலும் ஐந்து செஷன். ஆக, 15 செஷன்கள். அத்தனை நாட்களும் அத்தனை செஷன்களும் பார்வை யாளர்களால் நிரம்பி வழிந்தன. முக்கால்வாசிப் பேர் கேரளத்தின் கல்லூரி மாணவர்கள். இப்படி ஒரு நிலை சென்னையில் உண்டா?

சினிமா நடிகர்கள் வந்தால்தான் இங்கே அப்படி கூட்டம் கூடும். அங்கேயும் மம்மூட்டி வந்தார். ஆனால், எல்லோரையும்போல் ஒரு பார்வையாளராக நின்றுகொண்டு இருந்தார். 'மதிப்புக்குரிய இந்தப் படைப்பாளிகளின் நடுவே நான் ஒரு சாமானியன்’ என்று ஆரம் பித்து, ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு  அமர்ந் தார். இந்த அடக்கமும் எளிமையும் இங்கே உண்டா? அதோடு, அவருடைய பேச்சு... ஒரு தேர்ந்த வாசகனின் பேச்சாகவே இருந்தது.  

மனம் கொத்திப் பறவை - 23

அன்று மாலை வேறு ஓர் இடத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். கேரளத்தைச் சேர்ந்த சி.பி.சுரேந்திரன் ஆங்கி லத்தில் எழுதிய நாவலின் வெளியீட்டு விழா. அங்கேயும் மம்மூட்டி இருந்தார். 50 பேர் மட்டுமே அமரக்கூடிய ஒரு சிறிய ஹால்.  எல்லோரையும்போல் அவரும் அங்கே பேசினார். அவ்வளவுதான். எல்லோரும் சமமாக இருந்தார்கள். எப்படி அதை விளங்க வைப்பது என்று தெரியவில்லை. அவர் ஒரு சினிமா நடிகர் என்று சொன்னால்தான் தெரியும். யாரும் அவரை போட்டோ எடுக்கவில்லை. ஆட்டோகிராஃப் வாங்கவில்லை. அவர்தான் அன்று அங்கே கம்மியாகப் பேசியது. ஆனால், முக்கியமான ஒரு விஷயத் தைக் குறிப்பிட்டார். 'இன்று ஆங்கிலத்தில் எழுதும் கேரளியர் பலர் இருக்கிறார்கள். நம் இலக்கியம் உலக அளவில் போக வேண்டும். அதை ஊக்குவிக்கவே இங்கே வந்தேன்’ என்றார். நூற்றுக்கு நூறு சரி. ஆங்கிலத்தில் எழுதும் ஒரு டஜன் படைப்பாளிகள் கேரளத்தில் உள்ளனர், அருந்ததி ராய் உட்பட!

நிலாஞ்சனா என்னைத் திருட வேண்டும் என்று குறிப்பிட்டது, மலையாள இலக்கியச் சூழல்பற்றி  என்னுடன் பேச வேண்டும் என்ப தற்காக. ரொம்பவே தயவாகக் கேட்டார். சாதாரணமாகவே கேட்கலாம்; நான் ஒன்றும் சிங்கம், புலி, கரடி அல்ல என்றேன். ஆனால், அந்த விழாவில் கலந்துகொண்ட அத்தனை பேரின் முகவரிகளும் என்னிடம் உள்ளன; நிலாஞ்சனாவிடம் கேட்க மறந்துபோனேன். ஹெடோனிசத்தின் பாதிப்பு.

அங்கே நடந்த செஷன்களில் என்னுடைய செஷன்தான் ரொம்ப அட்டகாசமாக இருந்த தாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. பிரிட்டிஷ் டெபுடி ஹை கமிஷனராக உள்ள மைக் நிதாவ்ரியனாகிஸ், 'உங்கள் பேச்சு கொண்டாட்டமாக இருந்தது’ என்றார். என் பேச்சு சுவாரஸ்யமாக இருந்ததன் காரணம், மற்றவர்கள் யதார்த்தம், மிகை யதார்த்தம், கற்பனாவாதம், மாயை என்றெல்லாம் பேசி, எல்லோரையும் தூங்கவைத்ததுபோல் அல்லா மல் வாழ்க்கையையும் தத்துவத்தையும் இணைத் துப் பேசினேன். உ-ம், எங்கள் கிராமத்தில் இரவு 9 மணி ஆனால், பெட்ரோமாக்ஸ் விளக்கை வைத்துக்கொண்டு சிட்டுக் குருவி லேகியம் விற்பவர், அங்கே இருக்கும் விளக்குக் கம்பத்தைக் காண்பித்து 'உங்களுக்கு அப்படி ஆக வேண்டுமானால், இந்த லேகியத்தைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லி விற்பார் என்று ஆரம்பித்து, நீட்ஷேவுக்குப் போனேன். விளக்குக் கம்பம் என்றதும் அதுவரை மற்ற செஷன்களில் கலந்துகொண்டு தூக்கக் கலக்கத் தோடு வந்தவர்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள்.

மெக்சிகோவில் இருந்து ஹோர்ஹே வோல்ப்பி என்ற எழுத்தாளர் வந்திருந்தார். 30 வயதுதான் இருக்கும். ஆனால், மெக்சிகோ அரசு அவரைத் தங்கள் தூதராக

மனம் கொத்திப் பறவை - 23

ஃபிரான்ஸுக்கு அனுப்பியிருக்கிறது. இங்கே? சமீபத் தில் கனடா செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்தேன்.  விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 'உங்கள் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை; எங்கள் நாட்டுக்கு வந்தால் நீங்கள் அங்கேயே தங்கிவிடுவீர்கள் என்று தோன்றுகிறது!’

18 ஆண்டுகளுக்கு முன்பு நான் மதுரையில் நிகழ்த்திய ஒரு நாடகத்தின்போது நடந்த ரகளையின் காரணமாக, நாடகம் என்றாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அந்த நாடகம் அகஸ்தோ போவால் என்ற பிரேசில் நாட்டு நாடகக் கலைஞரின் ஃபோரம் தியேட்டர் என்ற வடிவத்தைச் சார்ந்தது. அதாவது, பார்வையாளர்களையும் நாடகத்தோடு இணைத்துக்கொள்ளும் முறை. நம் ஊரில் அது முடியுமா? இதோ நாங்களும் இணைகிறோம் என்று சொல்லி, என்னை யும் மற்ற நடிகர்களையும் தாக்க ஆரம்பித்துவிட்டார்கள், பார்வையாளர்களில் சிலர்.  போவாலைப் பார்த்து அஞ்சிய பிரேசிலின் ராணுவ அரசு அவரைக் கைது செய்து, சித்ரவதை செய்து, நாடு கடத்தியது. 1971 முதல் 1986 வரை 15 ஆண்டுகள் அவர் வெளிநாடு களிலேயே வாழ்ந்தார். நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவரது கோட்பாடுகள்தான் இன்றைய வீதி நாடகங்களின் ஆதாரம்.  

அந்த அகஸ்தோ போவாலிடம் நாடகம் பயின்ற ஒரு தமிழ் நாடகக்காரர் சிங்கப் பூரில் இருக்கிறார்.லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக் கழகத்தில் நாடகத்தில் முது கலைப் பட்டம் பெற்றவர். கவிஞரும்கூட. அதை எல்லாம்விட, அவர் எழுத்து கனன்றுவிட்டு எரியும் தீப் பிழம்பைப் போன்றது. சிங்கப் பூரில் கருத்துச் சுதந்திரம் கொஞ்சம் கம்மி. ஒரு நாடகம் போட வேண்டுமானால், அதன் பிரதியை அரசாங்கத்திடம் காண்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இளங்கோவனின் நாடகங்கள் அரசையும் சமூக மதிப்பீடுகளையும் கடுமையாக விமர்சிக்கின்றன. அதிகாரத்திடம் அவர் எந்தவித சமரசமும் செய்ததில்லை. உலகம் பூராவும் சென்று பல நாடுகளில் அவர் தனது நாடகங்களை இயக்கி இருந்தாலும், தமிழ்நாடு மட்டும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் வல்லினம் என்ற இதழில் அவருடைய நெருப்புப் பேட்டியைப் படித்தேன். அதில் அவர் கூறுகிறார், 'சிங்கப்பூரில் யாரும் முழு நேர இலக்கியவாதியாக இருக்க முடியாது. வீட்டில் தோசை வார்த்துக்கொண்டு சிங்கப்பூரைப் பற்றி தவறான கண்ணோட்டத்தையும் தகவல்களையும் அரைவேக்காட்டுப் படைப்புகளில் பேதிக்குப் போகும் ........  தவிர, தமிழில் முதுகெலும்பு உள்ள படைப்பாளியாக இருப்பது தற்கொலைக்குச் சமம்.  

மனம் கொத்திப் பறவை - 23

இதில் தமிழை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் பல்லக்குத் தூக்கிகள் ஒரு பக்கம்; பாடத் திட்டத்தில் தமிழ் இல்லாவிட்டால் நிம்மதி என்று வளரும் இளம் தலை முறை மறுபக்கம்...

இந்த லட்சணத்தில் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் தொடர்ந்தால் என்ன, தொடராவிட்டால் என்ன?’

கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் நிலையும் இதுதான் என்பது என் கருத்து. டேஷ் நான் போட்டது.  

ரொம்பத் திட்டுகிறாரே என்று விட்டுவிடாமல் தமிழர்கள் அத்தனை பேரும் கவனிக்க வேண்டிய ஓர் ஆளுமை இளங்கோவன்.

- பறக்கும்...