மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 70

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

யார் யாரின் நெஞ்சிலும் தோளிலும் கிடந்த நாம், அண்ணனாக, மாமனாக, சித்தப்பனாக, அப்பனாக மாறுகிற தருணங்கள் அற்புதமானவை, துயரமானவை, அழகானவை.

தாய்மாமனாயிட்ட... இன்னும் இப்பிடிப் பொறுப்பு இல்லாமச் சுத்திட்டு இருந்தா எப்பிடிறா? நந்து பொண்ணுக்குக் காதுகுத்து வெச்சிருக்கு. மாமன் என்ன பண்ணப்போறாப்ல?'

நேத்து போனில் அம்மா இப்படிக் கேட்டபோது, வீட்டுக்குள் நுழைகையில் முதல்முறையாக நிலைப்படியில் இடித்துக்கொண்டது மாதிரி இருந்தது. நாம் வளர்ந்துவிட்டோம். இப்போதுதான் என்னை திருச்செந்தூருக்குக் கூட்டிப்போய் மொட்டை போட்டுக் காது குத்திய மாதிரி இருக்கிறது. தாய்மாமன் மடியில் உட்கார்த்தி காது குத்தி, அழும்போது வாயில் கற்கண்டும் வாழைப் பழமும் திணித்து சொந்தங்கள் சிரித்தது முந்தாநேத்து நடந்த மாதிரி தோன்றுகிறது.

இப்போது ஊருக்குப் போயிருந்தபோது, தீபாவளிக்கு மறுநாள் போஸ்ட்மேன் மணியார்டர் கொண்டுவந்தார். அம்மாவுக்கு சௌந்தர்ராஜன் மாமா தீபாவளி சீர் பணம் அனுப்பியிருக்கிறார். அதை வாங்கக் கையெழுத்து போடும்போது, அம்மா அதன் சொந்த ஊர் நெய்க்குன்னத்துக்குப் போய்விட்ட மாதிரி இருந்தது. கோழிக் கிறுக்கலில், 'ஆயி... தீபாவளி சீர் ஆயிரத்தைப் பெற்றுக்கொள்ளவும்’ என எழுதி இருந்த ரசீதோடு, அந்தப் பணத்தை அப்பா படத்துக்குக் கீழே வைத்துக் கும்பிட்டது அம்மா. பணமா அது..? அது 40 வருடங்களுக்குப் பிறகும் அக்காவை நினைத் துக்கொள்கிற தம்பியின் மனசு.

பெருஞ் சருகுகள் உதிர்ந்துவிட்ட உறவின் கிளைகளில் துளிர்க்கும் பசும் தளிர். எனக்கு என் தங்கச்சிகளைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. அவர்களது உலகத்தில் நுழைந்ததே இல்லை. வி.ஆர்.என். மண்டபத்தில் கல்யாணம் முடிந்து, காரில் வீடு திரும்பும்போது, பின் சீட்டில் மாப்பிள்ளையோடு உட்கார்ந்துகொண்டு, முன் சீட்டில் இருந்த என் கையை வீடு வரைக்கும் பற்றிக்கொண்டு வந்தது நந்து. இறங்கும்போது மாப்பிள்ளை என் காதருகே வந்து மெதுவாக, ''கவலைப்படாதீங்க மச்சான்... உங்க வீட்டைவிட உங்க தங்கச்சியை நல்லாப் பார்த்துக்குவோம்' என்றார். அப்போதுதான் நான் அண்ணனாக இருப்பதையே உணர்ந்தேன். பக்கத்திலேயே வளரும்போதெல்லாம் இல்லாமல், தங்கைகளை வழியனுப்பிவைக்கும் ஒரு கணம்தான் நம்மை அண்ணன்களாக்கிவிடுகிறது.

உறவுகளின் அற்புதத்தையும் முக்கியத்துவத் தையும் நான் சமீபமாகத்தான் அறிகிறேன். பொறுப்பு என்பதையே இப்போதுதான் உணர்கிறேன். அது நம்மை அறியாமல் நடக்கிறது. பொன்மலருக்கு அப்ளிகேஷன் நிரப்ப பள்ளிக்குச் சென்று நிற்கும்போது, ''யாரு நீங்க... அவங்க சித்தப்பாவா?'' எனக் கேட்ட தருணம்... கடைத்தெருவில் நின்றாலே திட்டுகிற நடராஜன் மாமா, கட்டாரி மாமா கருமாதியில் வைத்து, 'மாப்ளைக்கு ஒரு க்ளாஸ் ஊத்திக் குடு’ என்றபோது, 'சிவன் கோயில எடுத்துக் கட்றோம். உங்க அப்பா எடத்துல நீங்கதான நிக்கணும். அர்ச்சனத் தட்ட முருகங் கைல குடு’ என காளிதாஸ் சொன்னபோது, 'அண்ணே! நான் ஒரு பையன லவ் பண்றேன். நீங்கதான் எங்க வீட்ல சொல்லிப் பேசி வைக்கணும்’ என செல்வா தங்கச்சி போன் பண்ணியபோது, 'காலேஜ்ல ஆனுவல் ஃபங்ஷண்ணே...  அப்பா வர முடியாது. நீங்களும் அம்மாவும் வாங்கண்ணே’ என அருண் வந்து நின்றபோது என அது பாட்டுக்கு நடக்கிறது. 'அது மாசமா இருக்குல்ல... ஒரு வாரமா ஒரே வாந்தி. கஷ்டமா இருக்கு. வீட்ல நான்தான் சமைக்கிறேன். சீக்கிரம் போகணும் பாஸ்’ எனக் கிளம்பிப் போகிற சிவஞானத்தைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. யாரையும் போகவிடாமல் டார்ச்சர் பண்ணுகிற பார்ட்டியா இவன்? ஓர் உறவு ஏற்படுத்தும் கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகு.

மனைவி பிரசவத்துக்கு ஊருக்குப் போன கார்த்தியிடம் இருந்து, 'நிலா வந்தாச்சு’ என வந்த குறுந்தகவலிலேயே அவனது முகம் தெரிந்தது. 'பாப்பா நைட்டெல்லாம் தூங்கவே விட மாட்டேங்குதுண்ணே’ எனச் சொல்லும்போது அவனிடம் எவ்வளவு சந்தோஷம்? அங்கே இங்கே என நாலு லட்ச ரூபாய் ரெடி பண்ணிக்கொண்டு போய், ராமச்சந்திரா ஆஸ்பத்திரி வராந்தாவில் நின்றபோதுதான், சந்திரமோகன் மனுஷனாகவே மாறியிருந்தான். யார் யாரின் நெஞ்சிலும் தோளிலும் கிடந்த நாம், அண்ணனாக, மாமனாக, சித்தப்பனாக, அப்பனாக மாறுகிற தருணங்கள் அற்புதமானவை, துயரமானவை, அழகானவை.

வட்டியும் முதலும் - 70

உறவுகளைப் பற்றி அறியவும் புரியவும் ஒரு காலம் இருக்கிறது. 'முத்துகிருஷ்ணன் மாமா நீடாமங்கலத்துல ஒரு டீச்சர வெச்சுருக்காராம்’ என முதன்முதலாகக் கேட்டபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சித்ரா அத்தைக்குத் துரோகம் பண்ண இந்தாளுக்கு எப்படி மனசு வந்தது எனப் பொங்கியது. சித்ரா அத்தை அப்படி ஒரு மனுஷி. ஊருக்குப் போனால் அப்படித் தாங்கும். இளநி வெட்டித் தந்து, கோழி அடித்துப் போட்டு, கயிறு கட்டிவிட்டு 'தங்கம்... தங்கம்...’ எனக் கொஞ்சிக் குழையும். நம்மையே இப்படிப் பார்த்துக்கொள்கிறவள் மாமாவை எப்படிப் பார்த்துக்கொள்வாள் எனத் தோன்றும். 'எங்க... அந்த மனுஷன் வூட்டுக்கு வந்து ஒரு மண்டலம் ஆச்சு... நீடாமங்கலத்துலயேதான் கெடக்குறாரு’ என குதிரில் சாய்ந்து மூக்கு சிந்தியபோது, மாமா மேல் கோபமாக வந்தது. 'அந்தாளைப் பார்த்து நாக்கப் புடுங்கற மாதிரி கேக்கணும்’ எனத் தோன்றியது.

அவரைப் பார்க்கவே முடியவில்லை. மூர்த்தி தாத்தா இறந்தபோது ஊருக்கு வந்திருந்தார். பந்தலில் கூட்டத்துக்கு நடுவே உட்கார்ந்திருந்தபோது போனேன். அங்கேயே வைத்து, 'என்ன மாமா... நீடாமங்கலத்துலயே கெடக்குறீங்களாமாம். வீட்டுக்கே வர்றதில்லைனு அத்தை அழுவுது. ஏன் இப்பிடிப் பண்றீங்க?’ எனக் கேட்கிற ஆவேசத்தில் போனேன். 'நீடாமங்கலத்திலேயே’ எனக் கேட்டால், எல்லோருக்கும் புரியும். நாலு பேருக்கு முன்பு அசிங்கப்படட்டும் என நினைத்தேன். நான் பக்கத்தில் போய் நின்றதுமே என்னைப் பார்த்தவர் சட்டென்று, 'வாடா மாப்ள... ஏய் இங்க பாரு... நான் சொன்னேன்ல இவந்தான் ராஜேந்திரன் சின்னப் பையன். மாப்ள இது ஒங்க டீச்சர் அத்தடா’ எனப் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியைக் காட்டினார். அந்த டீச்சர் அவ்வளவு சாந்தமாக இருந்தார். என்னைப் பார்த்துக் கும்பிட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

உள்ளே போனால் பொம்பளைங்க கூட்டத்தில் அத்தை உட்கார்ந்துஇருந்தது. என்னைப் பார்த்ததும் 'எலேய்! துணி சாத்தறதுக்கு உங்க மாமாவ வந்து பக்கத்துல நிக்கச் சொல்றா’ என்றது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது மாமா இறந்துவிட்டார். சமீபத்தில் வீட்டில் ஒரு விசேஷம். பத்திரிகை பிரித்து வைத்துக்கொண்டு இருந்தபோது, முந்தானையில் கை துடைத்தபடி வந்த சித்ரா அத்தை ரொம்பவும் கேஷ§வலாக, 'அந்த டீச்சருக்குப் பத்திரிக்க எழுதியாச்சா? ஒண்ணு குடுத்துருங்க’ என்றது.

கல்யாணமாகி, இரண்டு வயசுப் பிள்ளைஇருக்கும் உறவுக்காரி ஒருத்தி, இன்னொரு மனுஷனோடு வாழப்போய்விட்ட ஒருநாள் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு தருணம் அதை சாலிகிரா மத்தில் பார்த்தபோது ஆளே அடையாளம் தெரியவில்லை. இளைத்துக் கறுத்து அப்படி நின்றது. 'எப்பிடி இருக்கீங்க?’ எனக் கேட்டதற்கு, 'ஒறவுங்க சாபம் என்ன சும்மாவா வுடும்?’ என்றது சிரித்தபடி. அது அசரீரி மாதிரி கேட்கிறது இப்போதும். ஒவ்வொரு முறையும் இந்த உறவுகள் தரும் உணர்வுகள்தான் நம்மைப் பெரிய மனுஷனாக்கிக்கொண்டே இருக்கின்றன. வெவ்வேறு ஆழங்களுக்கு இட்டுச் செல்கின்றன.

ஏதோ ஒரு சண்டை. 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இப்போதும் 'செந்திலு எப்பிடி இருக்கு? அதுக்கு ரெண்டாவது புள்ள பொறந்துருக்காம்ல...’ எனப் பிடித்தமான உறவிடம் மீடியேட்டர் வைத்துப் பேசிக்கொண்டிருக்கும் ஓர் அத்தை, 'உண்மைல எனக்கும் அதுக்கும் என்ன நடந்துச்சு தெரியுமா முருகா’ எனச் சமீபத்தில்தான் என்னிடம் எல்லாவற்றையும் பேசியது.

'மக கல்யாணம் வெச்சுருக்கேன்... இத்தன வருஷம் பேசாமக் கெடந்தாச்சு. இத சாக்காவெச்சு மறுக்கா பாத்துக்கலாம்னு பாக்கறேன். சிவா அண்ணன்ட்ட பேசுறியா?’ என இப்போது தான் மஞ்சுக்கா கேட்கிறது. 'தங்கச்சி கல்யாணத் துக்கு 20 சவரன் தேவப்படுது. லோனுக்கு செக்யூரிட்டி கையெழுத்து போடுறியா?’ என ஹாலில் காபி குடித்தபடி அருணா கேட்டது நேற்றுதான். 'செத்தா வந்து சேந்துருங்கய்யா... வேல கீலனு ஒருநா பாக்காதீங்க. சீவன் தேடும்யா’ என சத்தி தாத்தா போனில் தழுதழுத்தபோது என்னவோ போலிருந்தது. தாத்தாவாகிவிட்ட பிறகு வரும் உணர்வுகளை அந்தக் குரல் கடத்துகிறது. கடைசி வரை உறவுகளையே தேடுகிறது நினைவு. சொந்தபந்தம் வந்து நிற்கிற கரையிலேயே உறைந்திருக்கிறது ஒவ்வொரு ஜீவனும்.

'எனக்கும் இவங்களுக்கும் இனிமே எதுவுமே இல்லைனு எழுதிக் குடுத்துர்றேன். அவங்களையும் கையெழுத்து போடச் சொல்லுங்க’-திருச்சி போலீஸ் ஸ்டேஷனில் நின்றபடி மாலதியக்கா இப்படிச் சொன்னபோது, ராமின் குடும்பமே நிலைகுலைந்து நின்றது. ராம் என் நண்பன். அவனது ஒரே அக்கா மாலதியக்கா. அய்யர் குடும்பம். அவ்வளவு கட்டுப்பாடாக வளர்ந்த பெண். பி.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு படித்தபோது, வீடியோ கேசட் வாடகைக்கு விட வருகிற வேறு சாதிப் பையனோடு ஓடிப்போனது. ராமுவுக்கு அக்கா மேல் அவ்வளவு பாசம். இதை அவனாலும் அந்தக் குடும்பத்தாலும் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அந்தக்கா அந்தப் பையனோடு ஸ்டேஷனுக்குப் போய்விட்டது. அந்த இன்ஸ்பெக்டர், 'ஏம்மா அய்யர் பொண்ணா இருக்க... இதெல்லாம் ஒனக்குத் தேவையா..?’ என்றபடி அந்தப் பையனிடம் திரும்பி, 'ஏம்ப்பா... ஒன்னைய டவுசரக் கழட்டி உக்காரவைக்கவா? பேசாம அவங்க வீட்ல இத விட்டுட்டுப் போயிரு’ என்றார். இருவரும் கேட்கவே இல்லை. 'ஏம்மா... ஒங் குடும்பத்தோட பத்து நிமிஷம் பேசு... போ’ என அனுப்பிவைத்தார். ஸ்டேஷன் வாசலில் மொத்தக் குடும்பமும் கதறியது. 'நா அவரத்தான் கட்டிக்குவேன்... என்ன விட்ருங்க’ என்பதைத் தவிர எதுவுமே சொல்லவில்லை அந்த அக்கா. 'வாக்கா, வீட்டுக்குப் போயிரலாம்’ என ராம் தோளில் கை வைத்தபோது சட்டென்று அதைத் தட்டிவிட்டு, 'நீ யாரு... ஹலோ! ஏட்டு சார் இவன் யார்னே தெரியல. என்னன்னு கேளுங்க’ என்றது.

அவன் அதிர்ந்துவிட்டான். ஸ்டேஷனில் 'இனி, இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை’ என எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டது மாலதியக்கா. தனது டைரியில், 'எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அதில் ஒரு பெண் இன்று இறந்துவிட்டாள்’ என எழுதிவைத்தார் ராமின் அப்பா. அந்த அக்கா தன் கணவனோடு பக்கத்துத் தெருவில்தான் வாழ்ந்தது. குடும்பத்தோடு பேச்சு வார்த்தையே கிடையாது. ராம் வழியில் அக்காவையோ மச்சானையோ பார்த்துவிட்டால், கொலை வெறியாவான். மூன்று வருடங்களுக் குப் பிறகு ஒருநாள் மாலதியக்கா கணவன் வழியில் ராமைப் பார்த்து, 'உங்கக்கா உன்னையப் பாக்கணும்ங்குது. ஒருதடவ வந்துட்டுப் போயேன் ப்ளீஸ்’ என்றார். அவன் முறைத்துவிட்டு வந்தான். அதன் பிறகு, எங்கு பார்த்தாலும் அவர் இதைச் சொல்லிக்கொண்டே இருந்தார். ஒருநாள் அக்கா வைப் பார்க்கப் போகிற முடிவை எடுத்தான் ராம். 'ஒனக்கு இஷ்டம்னா, போய்ப் பாத்துட்டு வாடா’ என்றார்கள் அப்பா, அம்மா. 'இல்லம்மா... அவ நாண்டுக்கிற மாரி நாலு வார்த்த கேட்டுட்டு வந்துர்றேன். அதுக்குத்தான் போறேன்’ எனச் சொல்லிவிட்டு சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு ரயிலடி கல்லுப் பாலத்துக்குக் கிளம்பி னான். அது ஒரு சாயங்காலம். பாலத்தில்போய் உட்கார்ந்திருந்தோம்.

'அவ வரட்டும்... என்ன கேக்குறேன் பாரு... ஏதாவது பேசுனா, மொகரை யப் பேக்குறேன்’ என முஷ்டியை முறுக்கிக் கொண்டே குனிந்து உட்கார்ந்திருந்தான் ராம். அவன் அக்காவும் மச்சானும் வந்தார்கள். இவன் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அந்த அக்கா மெதுவாக வந்து அவன் பக்கத்தில் நின்றது. ரொம்ப யதார்த்தமாக முந்தியால் விசிறிக்கொண்டே, 'உஷ்ஷ்ஷ்... யப்பாடா...’ என அவன் தோளில் கை போட்டது. பயங்கரக் கோபமாக ராம் திரும்பிப் பார்த்தான். மேடிட்ட வயிற்றுடன் ஒரு கையால் இடுப்பைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த அக்காவைப் பார்த்தான். ஒரு கணம்தான்... விசுக்கு விசுக்கென்று தேம்பியபடி கேட்டான்... 'அக்கா... எப்பிடிக்கா இருக்க?’        

- போட்டு வாங்குவோம்...