மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

அது என்ன குதிரை பேரம்?

##~##
அ.யாழினி பர்வதம், சென்னை-78.

செல்வச் செழிப்பான இடத்தை எல்டொராடோ என்று குறிப்பிடுவது ஏன்?

  'எல்டொராடோ’ (Eldorado) என்றால், ஸ்பானிஷ் மொழியில் 'தங்கத்தால் இழைக்கப்பட்ட ஒன்று’ என்று அர்த்தம். ஸ்பானிஷ் தளபதி பிஸாரோ (Pissaro)-வின் தலைமையில், தென் அமெரிக்காவில் அவரது படையினர் நிகழ்த்திய கொடூரமான கொலைகள்பற்றி 'மனிதனுக்குள் மிருகம்’ புத்தகத்தில் ஏற்கெனவே நான் விவரமாக எழுதியிருக்கிறேன். அத்தனை மிருகத்தனத்துக்கும் அடிப்படைக் காரணம் தங்கம்தான்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

  தென் அமெரிக்காவின் வட மேற்கே, காடுகளுக்கு நடுவே, மலைகள் சூழ்ந்துள்ள ஓர் ஊரில் தங்கம் மலை மலையாகக் கொட்டிக்கிடக்கிறது. அங்கே மண்ணெல்லாம்கூட தங்கத் துகள்கள்தான் என்று கேள்விப்பட்டு, 1570-ல் ஆரம்பித்து, 75 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஸ்பானிஷ் வீரர்கள் திரும்பத் திரும்ப அங்கே படையெடுத்துச் சென்று 'எங்கே அந்த தங்க ஊர்?’ என்று கேட்டுப் பழங்குடி மக்களைச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்தனர். உயர்ந்த கலாசாரம்கொண்ட அந்த மக்கள், ஏராளமான தங்க நகைகள் அணிந்து இருந்தாலும், தங்கச் சுரங்கம் எல்லாம் கிடைக்கவில்லை. தங்கத்தைத் தேடுவதற்காக 1,000 ஸ்பானிஷ் வீரர்கள் கிளம்பினால், 200 பேர்தான் உயிரோடு திரும்புவார்கள். அந்த அளவுக்குக் காட்டு மிருகங்களும், விஷப் பாம்புகளும், முதலைகளும், மலேரியாக் கொசுக்களும் அவர்களைத் தீர்த்துக் கட்டின. இருப்பினும் பேராசை போகுமா? 'இன்றைக்கும் அந்த மர்மமான - பூகோளத்தில் இல்லாத - 'தங்க நகரத்தை’த் தேடுபவர்கள் உண்டு!

பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

முட்டாளுக்கும் புத்திசாலிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அது என்னவென்று சொல்ல முடியுமா?

  முட்டாள், புத்திசாலியை முட்டாள் என்று நினைப்பார். புத்திசாலிக்கு, தான் முட்டாள் என்பது தெரியும்! ('இதுல ஒற்றுமை எங்கே இருக்கு?’ என்கிறீர்களா? விடுங்க!)

எல்.என்.சக்ரபாணி, திருச்சி-6.

ஹாய் மதன் கேள்வி - பதில்

சினிமாவில் முதல் 'கிஸ்’ எப்போது வந்தது?
(அல்லது இந்தக் கேள்விக்கு முன்பே பதில் சொல்லிவிட்டீர்களா?!)

பதில் சொல்லியிருக்கலாம்! ஆனால், லேட்டஸ்ட்டாக ஒரு புத்தகத்தில் நான் படித்தது - தாமஸ் ஆல்வா எடிசன் கேமரா கண்டுபிடித்த வுடன், 1896-ம் ஆண்டில், ஒரு காட்சியை ('கிஸ்’ என்ற தலைப்பில்!) படம் பிடித்தார். அதில் ஜான் ரைஸ் என்பவரும், மே இர்வின் என்கிற பெண்ணும் 30 விநாடிகளுக்கு லிப்-கிஸ்அடித்துக் கொண்டார்கள். ஃபிலிமில் பதிவு செய்யப்பட்ட முதல் முத்தம்! (பிள்ளையார் சுழி என்று சொல்லலாம் என்று பார்த்தால்... அவர் பேச்சுலர்!).

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

அரசியலில் எம்.எல்.ஏ., எம்.பி-க்களை விலை பேசும் போது அதை 'குதிரை பேரம்’ என்று ஏன் சொல்கிறார்கள்... ஆடு பேரம், மாடு பேரம் என்று ஏன் சொல்லவில்லை?

ஹாய் மதன் கேள்வி - பதில்

  பண்டைய காலத்திலிருந்து குதிரைக்கு 'வேல்யூ’ அதிகம். 'குதிரை பேரம்’ என்றால் கடுமையான பேரம் என்று அர்த்தம்! Horse என்கிற வார்த்தையைக்கொண்ட சொற்றொடர்கள் நூற்றுக்கும் அதிகமாக உண்டு. உதாரணமாக, To ride a High Horse என்றால், கர்வமானவர் என்று பொருள். Straight from the Horse's mouth என்றால் 'சம்பந்தப்பட்டவரே (இடையில் யாரும் இல்லாமல்) சொன்ன விஷயம்’ என்று அர்த்தம். Horse உள்ள மொத்த வார்த்தைகளையும் இங்கே விளக்க விகடனில் 10 பக்கங்கள் தேவைப்படும்!

பா.அசோக், விருதுநகர்.

ஓர் அரசியல்வாதிக்குத் துணிவு முக்கியமா... அல்லது பணிவு முக்கியமா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

 அரசியல்வாதிக்குப் 'பணிவு’ என்பது நடிப்பு. அந்த ரோலில் சிறப்பாக நடிக்கப் பயிற்சியும் துணிவும் முக்கியம்!

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

அழகான பெண்ணிடம் அசடு வழிந்த அனுபவம் மதனுக்கு உண்டா?!

  அழகான பெண்ணிடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அசடு வழிவார்கள். நான் என்னுடைய விதத்தில் அசடு வழிந்தது உண்டு!