மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 71

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள். கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் எத்தனை கலைஞர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேரைப் பிடிக்கும்.

ங்கள் ரோல் மாடல் யார்..? - தபால் பொட்டி டவுசர், ஊள மூக்கு, எண்ணெய்த் தலையோடு திரிந்த எங்கள் உலகத்தில் முதல் ரோல் மாடலாக வந்தவர் பி.டி. வாத்தியார் பாஸ்கர் சார்.

அப்படியே 'இதயம்’ முரளி. தினம் தினம் அவர் போட்டு வருகிற காஸ்ட்யூமைப் பார்க்கவே, தூர்தர்ஷனில் படம் பார்க்கிற மாதிரி காத்திருப்போம். பேகி பேன்ட், ஃப்ளிட் வைத்த டிசைன் டிசைன் சட்டைகள் என அந்தக் கால செட் சாங்குகளில் வரும் ஹீரோ போலவே வருவார். லெதர் ஷூ, கேன்வாஸ் ஷூ என டிரெஸ்ஸிங்குக்குத் தகுந்த மாதிரி மாறும். விதவிதமான வாட்ச்கள், அதுவரை நுகராத நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் என கிறுகிறுக்கும். அடிக்கடி தலை கோதியபடி அவர் பேசுவது, சிரிப்பது என எல்லாமே ஆச்சர்யம். ''டேய்... பாஸ்கர் சார் மாரி டிரெஸ் வாங்கணும்ரா...'' என்பதுதான் அப்போது ஒரே லட்சியம். மதியங்களில் அவர் ஸ்டாஃப் ரூமில் நாற்காலியில் சாய்ந்து தூங்கிக்கொண்டு இருக்கும்போது, ஜன்னல் வழியாக மெதுவாக அவர் சட்டையைத் தொட்டுத் தடவிப் பார்ப்போம்.

சக வாத்தியார்கள் அவரை, ''என்னா மைனரே...'' என விளிப்பதில் ஒரு கடுப்பு இருக்கும். ஒருமுறை பி.டி. பீரியடில் கர்லா கட்டை வந்தது. ஆளாளுக்கு அதைத் தூக்க முடியாமல் தூக்கி மூச்சு வாங்கி னோம். ''பாய்ஸ்... இப்பிடித்தான் பண்ணணும்... பார்த்துக்கங்க...'' என்றபடி திடுதிப்பென சட்டை யைக் கழட்டிவிட்டு, பாஸ்கர் சார் கர்லா சுற்ற ஆரம்பித்தார். அப்புறம் பஸ்கி, தண்டால் என எடுத்துக்காட்டி ஆர்ம்ஸ் காட்ட, அதுவரை ரொமான்ஸ் ஹீரோவாக இருந் தவர் ஆக்ஷன் ஹீரோவாகவும் ஆனார். ''டெய்லி ரெண்டு கைப்பிடி கொண்டக் கள்ல... நைட்டே ஊறப்போட்டு காலைல சாப்பிடுங்க. சாப்பிட்டு பத்து புல்-அப்ஸ்... பத்து பஸ்கி... பத்து தண்டாலு... ஒரு மாசத்துல ஒடம்பப் பாருங்க பாய்ஸ்...'' என அவர் சொல்லும்போதே எங்களுக்கு வெறியேறியது. விடாமல் புல்-அப்ஸ் அடித்ததில் எனக்குக் குடல் ஏறியது. சிவாவுக்கு வாந்தி பேதி ஆகி ஒரு வாரம் லீவு. ஆகவே, ஆக்ஷனைப் புறந்தள்ளிவிட்டு, ரொமான்ஸுக்கு முயற்சி செய்தோம்.

எப்போது டெய்லர் கடைக்குப் போனாலும் அப்பா வந்து, 'நல்லா லூஸ் வுட்டுத் தைங்க... வளர்ற புள்ள’ என்பார். புளியமரத்தடி தங்கவேலுவிடம் முடிவெட்ட உட்காரும்போதே, 'சணல் கட்டி அடிச்சுரு... புடிக்கே வரக் கூடாது...’ என்பார். உச்சகட்ட வெறியில் அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவிடம் அழுது புரண்டு, சீமாட்டியில் துணியெடுத்து, பேகி பேன்ட், ஃப்ளிட் சட்டை தைத்தேன். முதல்தடவை அதைப் போட்டுக்கொண்டு ஸ்கூல் போனபோது பாஸ்கர் சாராகவே மாறிவிட்ட மாதிரி இருந்தது. அவர் மாதிரியே தலைகோதி, சிரித்துக்கொண்டு திரிந்தபோதுதான் இங்கிலீஷ் சார் தூக்கிப்போட்டு வாலிபால் ஆடினார். ''பொயம்ஸ் சொல்றான்னா... ஸ்டைலு... ரவுடி கம்னாட்டியாடா நீ..?'' என வழக்கத்தைவிட ஆக்ரோஷமாகக் குத்தினார்.

அது குத்து அல்ல... உள்குத்து என்பது லேட்டாகத்தான் புரிந்தது. ஆனாலும், பாஸ்கர் சார் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அப்போது எங்கள் ஒரே கனவு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில் தஞ்சாவூரில் கமலா தியேட்டர் பக்கம் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் சாரைப் பார்த்தேன். கொஞ்சம் நரையடித்து, தொப்பை போட்டிருந்தார். அதே பேகி ஸ்டைல் பேன்ட், ஃப்ளிட் வைத்த சட்டை, கேன்வாஸ் ஷூவில் நெஞ்சு வரைக்கும் இன் பண்ணிக்கொண்டு நின்றிருந்தார். அப்படியே தலைகோதியபடி, ''ஓ நைஸ். ஸோ... நவ் யூ டூயிங் ஃபிலிம்... வெரிகுட்'' என்றார். ''என்ன சார் இங்க..?'' என்றதற்கு, ''பழைய போட்டோ ஒண்ணு... ஸ்கூல் டைம்ல எடுத் ததுதான்... டேமேஜ் ஆகிருச்சு. அதை ரீவொர்க்குக்குக் குடுக்க லாம்னு வந்தேன்... வீடு நியர் பை... மங்களம் நகர்தாம்பா... யூ கம் மஸ்ட்...'' என்றார். ஸ்டுடியோ சிஸ்டத்தில் அவரது பிளாக் அண்ட் வொயிட் போட்டோ கலராகிக்கொண்டு இருந்தது.

வட்டியும் முதலும் - 71

அடுத்து சரவணன் அண்ணன். கமல், மைக்கேல் ஜாக்சன், டெண்டுல்கர், கிட்டிப்புள்ளு, கூட்டாஞ்சோறு எனச் சுமுகமாகப் போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் சுகுர்றாக இலக்கிய பவுன்ஸரை இறக்கியது அண்ணன்தான். அப்போது அவர் தஞ்சாவூரில் சித்தி வீட்டில் தங்கி, கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்துக்கொண்டு இருந்தார். லீவுக்கு சித்தி வீட்டுக்குப் போனபோது, பைஜாமா-குர்தாவில் தோன்றிய அண்ணன், கண்களில் வெல்டிங் அடித்தார். ''சோழன் பூங்கால ஒரு விழா... வா...'' என அழைத்துப்போனால், அங்கே கண்களில் அதே தாகத்தோடு இன்னொரு அண்ணன்... யுகபாரதி அண்ணன். பூங்காவில் கவிதை வாசிப்பு நடந்தது. பத்து இருபது கவிஞர்கள் கூடி பின்னிப் பெடலெடுத்தார்கள். 'பாரதி... அவன் மின்னலை விழுங்கி மின்சாரத்தைத் துப்பியவன்’ என்கிற மாதிரி கவிதைகள் தெறிக்க, எனக்குள் அதுவரை காணாத கெமிஸ்ட்ரி. ''பாப்லோ நெருடா என்ன சொன்னான்னா...'' என சரவணன் அண்ணன் ஆரம்பிக்க, ''பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பேசாத மார்க்ஸியமா...'' என யுகபாரதி அண்ணன் கொளுத்த... அதுதான் என்னைத் தடம் மாற்றிப் போட்ட இடம். அங்கேயே அண்ணன்கள் என் ரோல் மாடல்கள் ஆனார்கள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம் என எல்லாவற்றையும் இவர்கள்தான் அறிமுகம் செய்தார்கள். சென்னை வந்த பிறகு யுகபாரதி அண்ணன் கணையாழி பத்திரிகையில் வேலை செய்தார். நான் அவருடனேயே இருந்தேன். காலையில் கணையாழிக்குப் போனால், அப்துல் ரகுமான் சாரிலிருந்து வெங்கட் சாமிநாதன் சார் வரைக்கும் அடுத்தடுத்து இலக்கியவாதிகள் சந்திப்புகள். சாயங்காலங்களில் அண்ணன் பாட்டெழுதப் போகும் சினிமா கம்பெனிகள். அப்புறம் அறிவுமதி அண்ணனின் அபிபுல்லா சாலை அலுவலகம்... என எல்லாமே எனக்கு ஆச்சர்யங்கள். நடுநடுவே விகடன், நக்கீரன், குமுதம் அலுவலகங்களுக்கு ஒரு விசிட்டைப் போடுவது, அப்படியே ஏதாவது ப்ரிவியூ தியேட்டரில் படம் பார்ப்பது, விடிய விடிய விவாதிப்பது என ஒரு வாழ்க்கை தொடங் கியது அவரைப் பார்த்துதான்.

''இப்பிடியே சுத்தாதரா... உனக்கு ஒரு வேலையப் பார்த்துருவோம்... துரை சார்ட்ட சொல்லியிருக்கேன். விகடன்ல போய் கண்ணன் சாரைப் பாரு...'' என யுகபாரதி அண்ணன் சொன்ன நாளில்தான், கண்ணன் சாரைச் சந்தித்தேன். பிறகு, வேலைக்குச் சேர்ந்த புதிதில் விகடனுக்கு முதல் கட்டுரையைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன். அந்தக் கட்டுரை சம்பந்தமாக ஒரு சந்தேகம் கேட்பதற் காக என்னைப் பிடிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒருநாள் முழுக்க நான் சிக்கவே இல்லை. மறுநாள் போனபோது கண்ணன் சார் கூப்பிட்டு, ''டேய்... லைஃப்னா ஒரு சுத்தம் வேணும்... அழகா... சுத்தமா இருக்கப் பழகு...'' என்றார். இப்போதுவரை அந்த வார்த்தைகள் என்னைப் பின் தொடர்கின்றன. ஒரு வேலையை, நட்பை, வாழ்க்கையை அவர் அணுகுகிற விதம்தான் எனக்கு ரோல் மாடலானது. பலரைப் பார்த்திருக்கிறேன்... யாரிடம் வேலை பார்க்கிறார்களோ... யாரை முன்னோடியாக நினைக்கிறார்களோ அவரைப் போலவே நடந்துகொள்வார்கள்.

ஒருகட்டத்தில் என்னைப் பார்ப்பவர்கள், ''என்னா பாஸு... நீ கண்ணன் சார் மாரியே பேசுற...'' என்பார்கள். லிங்குசாமி சார் குடவாசல்காரர். எங்கள் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர்தான். ''ஏய்... நம்மூர் ஆளு சினிமால போயி டைரக்டராகிட்டான்ல... 'ரன்’னு பாத்தியா... தீப்புடிக்குது...'' என ஊருக்குப் போனால் உசுப் பேத்துவார்கள். சினிமாவில் சேர அதுவும் ஒரு காரணம். அவரிடமே 'பீமா’வில் அசிஸ்டென்ட்ஆகச் சேர்ந்தபோது, அவர் முதலில் என்னை அழைத்துப்போன இடம் ராமகிருஷ்ணா மடம். ''இங்கே விவேகானந்தர் ஹால்ல மெடிடேட் பண்ணா அவ்வளவு வைப்ரேஷனா இருக்கும்... நான் லைஃப்ல அவ்வளவு நெருக்கடிகள்ல இருந்தப்போ பெரிய எனர்ஜியக் கொடுத்தது இந்த இடம்தான்...'' என்றார். அவரது ஒழுங்கு, உழைப்பு, மனசு எல்லாமே எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்!

வட்டியும் முதலும் - 71
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள். கற்றுக்கொள்ளவும் பெற்றுக்கொள்ளவும் எத்தனை கலைஞர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். நிறையப் பேரைப் பிடிக்கும்.

ஆனால், மனசு ஆராதிப்பதும் ரோல் மாடல்களாக நினைப்பதும் சிலரைத்தான். ஒவ்வொரு மனசுக்கும் ஒவ்வொரு நெருக்கம். எனக்கு வைக்கம் முகம்மது பஷீரும், சார்லி சாப்ளினும், இளையராஜாவும், பிரபாகரனும் எப்போதைக்குமான ஆதர்ஷங்களாக இருக்கிறார் கள். எத்திசை திரும்பினாலும் இவர்களின் பிம்பம் என் மேல் விழுகிறது. நிழல் முன் செல்கிறது. அவர்களின் அன்பும் கோபமும் முன்னெடுத்துச் செல்கிறது. அப்படி ஓர் மனநிலையை நோக்கியே எப்போதும் நடக்கிறேன்.

நாம் அறியாமலே நம்மைச் சுற்றிலும் எவ்வளவோ 'ரோல் மாடல்கள்’ இருக்கிறார்கள். எதிர் பார்ப்புகள் ஏதும் இன்றி யாருக்கு எதுவென்றாலும் ஓடிப்போய் நிற்கிற எத்தனை பேர் இருக்கிறார்கள்..? ''என்ன வேண்டிக்கிட்ட பாப்பா..?'' என்றதற்கு, ''அல்லாரும் அல்லாருக்கணும்னு ஏண்டிக்கிட்டேன்...'' என்கிற அந்தக் குழந்தைகூட நமக்கு ரோல் மாடல்தான். கூடங்குளம் போராட்டமோ, பரமக்குடி துப்பாக்கிச் சூடோ,  தர்மபுரி கலவரமோ அத்தனை வேலை களையும் தூக்கிப்போட்டுவிட்டு, ஓடிப்போய் நின்று குரல் கொடுக்கிற நண்பர்கள் அப்படித்தான். ''அந்த சாதிப் பையன்னா என்ன..? இந்த சாதில வந்து நீ என்ன கிழிச்சுட்ட... நான் விசாரிச்சுட்டேன்... பையன் நல்ல கேரக்டர் தான்... அவனையே கட்டிக்கட்டும். இல்லைன்னா, ரெண்டு பேரையும் நானே பஸ் ஏத்தி விட்ருவேன்...'' என்ற இமயா அக்கா எவ்வளவு பெரிய ரோல் மாடல்..?

வட்டியும் முதலும் - 71

இன்றைக்குக் காலையில் எழுந்து வரும் போது, நான் இருக்கிற தெருவில் ஒரு முதியவர் அமர்ந்து மரக்கன்று நட்டுக்கொண்டு இருந்தார். பக்கத்தில் கேரியர் நிறைய மரக்கன்றுகளோடு ஒரு சைக்கிள் இருந்தது. நட்டுவிட்டு பக்கத்து வீட்டில், ''யம்மா... ஒரு பக்கெட்ல தண்ணி மட்டும் குடுங்கம்மா...'' என வாங்கி ஊற்றிவிட்டு அவர் களிடம் சொன்னார், ''டெய்லி இதக் கொஞ்சம் பார்த்துக்கங்கம்மா... உங்க புள்ள மாரி... எல்லாம் உங்க புள்ளைங்களுக்கு நல்லது...'' எனச் சிரித்தார்.

எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அவரிடம் பேசினேன். சைக்கிளைக் கிளப்பிக்கொண்டே சொன்னார், ''பேர்லாம் எதுக்குத் தம்பி..? டெய்லி ஏரியா ஏரியாவா போய் இப்பிடிக் கன்னுங்க நட்டுட்டு வர்றேன்... ஒரு நாளைக்கு இருவது கன்னாவது நட்டாதான் எனக்குச் சந்தோஷம். இது நானா பண்ணிக்கிற வேல... பூமி நல்லாருந்தாதான் நம்ம புள்ளைங்க நல்லாருக்கும் தம்பி. ஒவ்வொரு தெருலயும் அவங்கள தண்ணி ஊத்தச் சொல்லிட்டுப் போயிருவேன்... அதை ஒரு தடவ செஞ்சிட்டா ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... அப்பறம் விட மாட்டாங்க. அதான தம்பி நாம எல்லாத்துக்கும் பொறுப்பு!''

அவர்தான் ரோல் மாடல்!