Published:Updated:

வந்தேன்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 07

vandenda nanbenda santhonam
பிரீமியம் ஸ்டோரி
News
vandenda nanbenda santhonam ( Writer R.Sivakumar )

வந்தேன்டா... நண்பேண்டா! கலாய்க்கிறார் சந்தானம் - 07

##~##
சி
னிமாவுல காமெடி ஸ்க்ரிப்ட் ரெடி பண்றதுக்குள்ள, புரையேறிப் புட்டிப் பால் கக்கி, போதும்டா சாமின்னு ஆயிடும். உலகத்திலேயே சந்தோஷமானவேலை.... சிரிக்கிறது. ஆனா, உலகத்திலேயே கஷ்டமான வேலை அடுத்தவனைச் சிரிக்கவைக்கிறதுதான். அதனாலதான் சார்லி சாப்ளின், சந்திரபாபு, சந்தானம்னு (ச-வில் பேரு ஆரம்பிக்கிறதுல இப்படி ஒரு சௌகரியம், சந்துல நுழைஞ்சு சர்க்கரைப் பொங்கல் கிண்டிரலாம்!) காமெடி யன்களை உலகம் மறக்கிறதில்லை!

லொள்ளு சபா’வுல சினிமாவைக் கலாய்க்க ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண உக்காரும்போது, ஒரிஜினல் படத்து ஸ்க்ரிப்ட்டுக்குப் பட்ட கஷ்டத்துல வ-குவார்ட்டர் கஷ்டமாவது பட்டுஇருப்போம். சில சமயம், ஏதாவது ஒரு வசனம் பயங்கர ஹிட் ஆகிடும், நம்ம 'நண்பேன்டா’ மாதிரி. கவுண்டமணி - செந்தில் காமெடியில, 'அந்த ஒண்ணு எங்கே இருக்கு?’, வடிவேலு சார் காமெடியில, 'வட போச்சே’ங்கிற மாதிரி, ஏதாவது ஒரு வார்த்தை இல்லாட்டி, ஒரு வரி... அது சொல்ற டைமிங்குக்கு ஏத்த மாதிரி பயங்கரமா பிச்சுக்கிட்டு ஹிட் ஆகும். ஆனா, இந்த வசனங்கள் சாதாரணமா நம்ம வாழ்க்கையில பேசற வசனங்கள்தான்.

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 07

'நண்பேன்டா’ங்கிற வார்த்தை பல சந்தர்ப் பங்களில், பல நண்பர்கள் உபயோகப்படுத்தினதா இருக்கலாம். ஆனா, ஆர்யாவால டார்ச்சர் ஆகி, டயர்ட் ஆகி, அந்த வசனம் பேசறப்போதான் அது காமெடி ஆகுது. அப்படி உருவான ஒரு வசனத்தை இந்த வாரம் பார்க்கலாம்.

ஸ்கூல் படிக்கிறப்போ நடந்த ஒரு பலான குல்மா கில்மா குல்ஃபி மேட்டர் இது. ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்ப பிட் அடிக்காதவனும் பிட்டு படம் பார்க்காதவனும் ஸ்டூடன்ட்டா இருந்ததா சரித்திரமே கிடையாது. ஆனா, அதுக்காகக் கட் அடிச்சு பிட்டு படமே கதின்னு கிடக்கிற ஸ்டூடன்ட் உருப்பட்டதா சரித்திரமும் கிடையாது. (டேங்க் யூ தலைவா... டேங்க் யூ!).

பிட்டு படம் பார்க்கிறது இருக்கே... ஹய்யோ! செம த்ரில்லிங்கான அனுபவம். ஆனா, அதைப் பார்க்கக் கூடாத இடத்தில், பார்க்கக் கூடாத ஆட்களோடு பார்த்தா, அது த்ரில்லிங் கிடையாது... டிரில்லிங்!

எங்க ஸ்கூல் ஆண்டு விழாவப்போ, டான்ஸ் ஆடணும், பசங்களுக்குப் பிராக்டீஸ் பண்ணணும்னு ஸ்கூல் மாஸ்டர் முடிவு பண்ணினாரு. குத்துப் பாட்டுக்கு ஆடி கும்மாளம் போடலாம்னு பார்த்தா, பரத நாட்டியம்தான் ஆடணுமாம். ஹெச்.எம். உத்தரவு.

ஆனா, ஒரு பயலுக்கும் பரதம் தெரியாதே... பயம்தான் வந்தது. சில பேரு பாட்டு வரிக்கு டான்ஸ் ஆடறதுக்குப் பதிலா நாடகமே நடிப்பான். எங்க ஸ்கூல்ல ஒருத்தன் 'ராத்திரி யில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’ பாட்டுக்கு டான்ஸ் ஆடினான். அதுல ஒரு வரி, 'வாழையிலை நீர் தெளித்துப் போடடி என் கண்ணே’னு வரும். அதுக்காக அவன் காத்துலயே வாழையிலை விரிச்சு தண்ணி தெளிக்க ஆரம்பிச்சிட்டான். விட்டா... அடுத்து சாம்பார் வாளி தூக்கிட்டு, பந்தி பரிமாறப் போயிடுவான்னு கஷ்டப்பட்டுத் தடுத்தோம். அது இருக்கட்டும், மேட்டருக்கு வர்றேன். பரத நாட்டியம் ஆடணும்னு முடிவு  எடுத்ததும், எங்க மாஸ்டர் என்னைக் கூப்பிட்டு, 'சந்தானம், போய் சலங்கை ஒலி கேசட் வாங்கிட்டு வா. அதைப் போட்டுக் காட்டி, பசங்களுக்கு டிரெய்னிங் கொடுப்போம்’னாரு.

நானும் என் ஃப்ரெண்டும் கேசட் கடையில போய், 'சலங்கை ஒலி’ கேசட் கேட்டோம். அந்த கடைக்காரரு எனக்குத் தெரிஞ்சவரு. 'இப்போ கேசட் இல்லை சந்தானம். போய்ட்டு ஈவ்னிங் வா, எடுத்துவைக்கிறேன்’னு சொன்னாரு. சரின்னு சாயங்காலம் போனா, கடைக்காரரைக் காணோம். கடையில இருந்த பையன்கிட்ட, 'அங்கிள் சலங்கை ஒலி கேசட் தர்றேன்னு சொன்னாரு’ன்னேன். அப்படியான்னு ஒரு மார்க்கமா, மூர்க்கமாப் பார்த்தவன், சரக்கு வாங்கிட்டுப் போவோமே ஒரு கறுப்பு கலர் கேரி பேக், அதுல ஒரு கேசட்டைப் போட்டுத் தந்தான். டி.வி, டெக் எல்லாம் எடுத்தாந்து ஸ்கூலுக்குப் போனோம்.

ஸ்கூல் ரூம் ஒரே வெளிச்சமா இருந்தது. 'போய், ரெண்டு மூணு பெட்ஷீட் வாங்கிட்டு வாங்கடா’ன்னு மாஸ்டர் அனுப்பிச்சு, பெட்ஷீட்லாம் கொண்டாந்து ஜன்னலை மறைச்சோம். 'ஒரு சினிமா பார்க்கிற மூடு வரணும்’கிறதுக்காகத்தான் இந்த செட்டப். ஆனா, அந்த மூடே வேறன்னு 10 நிமிஷம் கழிச்சுத்தான் தெரிஞ்சுது.

டி.வி-யில டெக்கைப் போட்டு ஓடவிட்டா, டைட்டிலே இல்லை, ஸ்ட்ரெய்ட்டா படம் ஓட ஆரம்பிச்சது. அப்ப நான் பக்கத்துல இருந்த ஃப்ரெண்ட்கிட்ட கேட்டேன், 'என்னடா, பேரே போடலை, படம் ஓடுதே’னு. 'அது அப்படித்தான்டா, ரெக்கார்டிங்ல விட்ருப்பானுக’ன்னான்.

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 07

ஒரு ஊரை கேமரா சுத்திச் சுத்திக் காட்டுது. ரெண்டாவது நிமிஷம்... அந்த மலைக் கிராமத்துல ஒரே ஒரு வீடு. அப்புறம், மூணாவது நிமிஷம்... நேரா வீட்டு பாத்ரூமுக்குள்ள கேமரா போகுது. அங்க ஒரு லேடி உள்ளே போறாங்க. 'இது கமல் படம் மாதிரி தெரியலியே’னு டவுட். ஆனாலும் என்னதான் நடக்குது, பார்ப்போமேனு உக்காந்து இருக்கோம்.

அந்த லேடி திடீர்னு ஒவ்வொரு டிரெஸ்ஸாக் கழட்ட ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியலை. அந்த ஆன்ட்டி, பிளவுஸ்ல கை வெச்சதுதான் தாமதம், ஸ்கூல் மிஸ்ஸெல்லாம் ஒண்ணா சேர்ந்து, ஓடிப் போய் சேலையாலயே டி.வி-யை மறைக்கிறாங்க. அந்தக் காலத்துல டெக் போடறது, ஆஃப் பண்றது எல்லாம் 'எந்திரன்’ படத்துல ரோபோ ரெடி பண்ற மாதிரி, பயங்கர டெக்னிக்கலான விஷயம். 'எப்படி ஆஃப் பண்றது?’னு குழப்பம், பதற்றம் எல்லாம் கும்மி அடிக்க... ஒருத்தரு வயரைப் பிடிச்சு இழுக்குறாரு, இன்னொருத்தர் ஃப்ளக்கைப் பிடுங்குறாரு. 'புள்ளைகளா... கண்ணை மூடுங்க, பசங்களா... பார்க்காதீங்க, குனிஞ்சு குப்புறப் படுங்க’னு கார்கில் எல்லையில கமாண்டோக்கு ஆர்டர் போடற மாதிரியே ஆர்டர் போடறாங்க. எப்படியோ, ஒரு வழியா டி.வி-யை ஆஃப் பண்ணிட்டோம்.

'சந்தானம், என் ரூமுக்கு வா’ன்னு கூட்டிட்டுப் போய், மாஸ்டர் கதவைச் சாத்தினாரு. அப்பால, சனியன் சலங்கை கட்டி ஆடினதுல ஒலி கிலி ஆயிடுச்சு. 'ஸாரி சார், தெரிய£ம ஏதோ தப்பு நடந்துச்சு’ன்னு மன்னிப்பு கேட்டுட்டு வந்தோம்.

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 07

ஆனா, அதுக்கு அப்புறம் நடந்ததுதான் டூ மச்சோ டூ மச். நேரா கேசட் கடைக்குப் போய், 'ஏன்யா, உனக்கு மூளை இருக்கா? பரத நாட்டியம் படம் கேட்டா, பலான படம் குடுத்திருக்கிறியே, இப்படிக் கிளுகிளுப்பு படம் கொடுத்து என் வாழ்க்கையில கிருஷ்ணாயில் ஊத்திட்டியே’னு கடைக்காரரை நானும் என் ஃப்ரெண்டும் மாறி மாறிச் சத்தம் போடுறோம். 'ஏன் தம்பி, நான் இல்லாத நேரத்துல வந்து கேசட் கேட்டீங்க. சலங்கை ஒலிங்கிறது 'அந்த மாதிரி’ படத்துக்கான கோட் வேர்டு’ன்னு கூச்சப்படாம சொல்றாரு கடைக்காரர். அடப் பாவிகளா, இது மட்டும் கமலுக்குத் தெரிஞ்சதுன்னா... கிணத்து மேல பரதம் ஆடுன மாதிரி, உங்களைக் குப்புறப் போட்டுக் குச்சுப்புடி ஆடிடுவாரேனு நெனைச்சுக்கிட்டேன். இதை எல்லாம்விட பெரிய விஷயம், காந்தியோட கசின் பிரதர் மாதிரி கூப்பிட்டுக் கண்டிச்சாரே... எங்க மாஸ்டர், அவரு அந்த கேசட்டைக் கையோடு கொண்டுபோயிட்டாரு. 'கடையில குடுக்கணும்... கேசட்டைக் குடுங்க’ன்னா... 'நாளைக்குத் தர்றேன்... மறந்துட்டு வந்துட்டேன்’னாரு.

வந்தேன்டா... நண்பேண்டா!  கலாய்க்கிறார் சந்தானம் - 07

கேசட் கடைப் பக்கமே போக முடியலை. பார்க்கிறப்போ எல்லாம் அந்த கடைக்காரரு, 'தம்பி, சலங்கை ஒலி என்னாச்சு? அந்த கேசட்டுக்கு டிமாண்ட் அதிகம்’னு ஒரே டார்ச்சரு. மாஸ்டர்கிட்ட கேட்டா, 'இங்கதான் வெச்சேன், அங்கதான் வெச்சேன்’னு இழுத்தடிச்சு, ஒரு வாரம் கழிச்சுதான் கேசட்டைத் தந்தாரு. அந்த ஒரு வாரமும் மனுஷன் கேசட்டைக் கொல வெறியோடு மாத்தி மாத்திப் போட்டுப் பார்த்திருப்பார்போல. ஒரு வழியா அவர்கிட்ட இருந்து கேசட்டை வாங்கி கடைக்காரர்கிட்ட கொடுத்தேன். மறுநாளு என்னைப் பார்த்து முறைச்ச கேசட் கடைக்காரரு, 'ஏம்ப்பா, கேசட் இந்த அடி வாங்கி இருக்கு?’ன்னாரு.

ஸ்கூல்ல கேசட் போடுறப்போ நான் என் ஃப்ரெண்ட்கிட்ட சொன்ன வார்த்தையைத்தான், 'கண்டேன் காதலை’ படத்தில் டயலாக்கா வெச்சேன், ''என்னடா, பேரே போடலை, ஸ்ட்ரெய்ட்டா படம் போட்டுட்டாங்க?''

(இன்னும் கலாய்ப்பேன்)

ஒவியங்கள்: ஹரன்