
பேய்களும் கடவுள் மாதிரிதான். இருக்கிறதோ இல்லையோ... அதைப் பற்றிய பயம் மனிதனுக்கு இருந்துகொண்டே இருக்கும். எனக்கு ஒரு பேயைத் தெரியும். எப்போதும் பலபேரின் கண் எதிரே அலைந்துகொண்டே இருக்கிறது.
"சார்... 33-ம் நம்பர் ரூம் வேணாம் சார்!'' - போன வாரம் குமுளி போயிருந்தேன். புது பெயின்ட் அடித்து, சந்தனம் தெளித்த லாட்ஜ். ரிசப்ஷனில் நாலு கிலோ கன்னங்களோடு ஒரு லாலேட்டன் சிரித்தார்.
''எடோ... சார 33-ம் நம்பர் ரூமுக்குக் கொண்டுபோயி...'' வராந்தாவில் நடந்தபோதுதான் கூடவே வந்த ரூம் பாய் ஹஸ்கி வாய்ஸில் சொன்னான், ''சார்... 33-ம் நம்பர் ரூம் வேணாம் சார்... வேற ரூம் கேளுங்க. நான் சொன்னேன்னு காட்டிக்காதீங்க.''
''ஏம்ப்பா..?''
''அது சார்... 33-ம் நம்பர் ரூம்ல ஆறு மாசத்துக்கு மிந்தி ஒரு பையனும் பொண்ணும்... லவ்வர்ஸ் சார்... சூஸைட் பண்ணி செத்துப்போச்சுங்க. அதுங்க ஆவியா சுத்துதுங்க சார்...'' எனக்கு எர்த் அடித்தது.
''என்னப்பா சொல்ற..? அந்த மோகன்லால் சொல்லவேயில்ல.''
''எப்பிடிச் சொல்லுவாய்ங்க... பிசினஸ் படுத்துரும்ல...''
நான் கலவரமாகப் பார்த்தேன். அந்த குட்டிச்சாக்கு இன்னும் உற்சாகமாகி, ''நான் இங்கதான் சார் இருந்தேன். சூப்பர் பொண்ணு சார் அது... மீரா ஜாஸ்மின் மேரி... அப்பிடியே கட்டிப்பிடிச்சமேனிக்கே கெடந்தாங்க சார். சின்ன வயசுல செத்தா ஆவியா சுத்துவாங்களாம்ல... பிராமிஸா நான் பாத்தேன் சார். 33-ம் நம்பர் ரூம்ல அதுங்களா லைட்டு போட்டுக்குதுங்க... தண்ணியத் தொறந்துவுட்ருதுங்க... மூணு மாசத்துக்கு மிந்தி ஒரு போடிக்காரரு தூங்கிட்டு இருந்தப்ப அப்பிடியே தூக்கிட்டுப் போய் மொட்ட மாடில போட்டு வந்துருச்சுங்க... அந்தாளுக்கு ஜொரம் வந்து ஓடியே போய்ட்டாப்ல...'' என்றான் எக்கச்சக்க மாடுலேஷன்களோடு. சட்டென்று எனக்குள் இருந்த பகுத்தறி வாளன் எகிறினான். ''என்ன தம்பி 'பீட்சா’ படம் பார்த்துட்டு வர்றியா? ஆவி கீவி எல்லாம் நெறையப் பாத்துட்டோம். நீ கதவத் தொறந்துவிட்டுப் போய் ஒரு லெமன் டீ சொல்லுப்பா...'' எனச் சிரித்தேன்.
அவன் மார்க்கமாகப் பார்த்தபடி ரூமைத் திறந்துவிட்டுப் போனான். உள்ளே நுழைந்து, குளிக்க பாத்ரூமுக்குள் போன சில நொடிகளிலேயே பயம் கவ்வ ஆரம்பித்தது. 'கட்டிப்பிடிச்சமேனிக்கே கெடந்தாங்க சார்... சின்ன வயசுல செத்தா ஆவியா சுத்துவாங்களாம்ல...’ என்ற ரூம் பாயின் குரல் வாய்ஸ் ஓவரில் எக்கோ அடிக்க, உடனடியாக வெளியே கிளம்பிவிட்டேன். 9 மணிபோல வந்து ரூமைத் திறந்தால், பாத்ரூமில் தண்ணி கொட்டுகிற மாதிரியே சத்தம். ஜன்னலில் யாரோ நிற்கிற மாதிரி பிரமை. கண்களை மூடிக்கொண்டு கட்டிலில் விழுந்தேன். இதே அறை... இதே இடம்... 'அந்தக் காதலர்கள் எப்படிச் செத்துப்போயிருப்பார்கள்?’ என மனம் யோசிக்க ஆரம்பித்தது. சடாரெனக் காதலர்கள் என் கழுத்தை நெரிப்பது மாதிரி காட்சிகள் கொலாஜ் ஆகி, மூச்சு முட்ட ஆரம்பித்தது. திடுக்கிட்டு விழித்தால், ஜன்னலை யாரோ ஆவேசமாகத் தட்டிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அல்லு இல்லை. மெதுவாகத் திறந்தால், மேல் வரிசையில் அநேகப் பற்கள் இல்லாத ஒரு செக்யூரிட்டி கிழவன் கையில் சரக்கு கிளாஸோடு நின்றார்.
''சார்... ரூமில் வெள்ளமுண்டோ?''
நான் தண்ணி தந்தபடியே அவரிடம் கேட்டேன், ''ஏங்க... இங்க பேய் கீயெல்லாமா இருக்கு?''
அவர் ராகம் போட்டுச் சிரித்தபடி, ''தம்பி... ஆளு மரிச்சுப் போயி... பட், ஆன்மா மரிச்சிப் போயில்லா...'' என ஒரு டெரர் பஞ்ச் அடித்தபடியே போய்விட்டார். நான் உடனடியாக ரிசப்ஷனுக்கு வந்து அந்த லாலேட்டனிடம் நின்றேன், ''சார்... அந்த ரூம் கன்வீனியன்ட்டா இல்ல. வேற ரூம் மாத்திக் குடுங்க!''
பேய்களை முதலில் எனக்கு அறிமுகப்படுத் தியது சின்னாத்தாள். அய்யனார் கொடைக்கு முதல் நாள் ராத்திரி, சாமி ரூமில் உட்கார்ந்து பணியாரம் சுட்டுக்கொண்டு இருக்கும். வெள்ளைப் புடைவை, ஒத்த ரூவாய்ப் பொட்டு, வெத்தலை வாயோடு, ஒருக்களித்த கதவு வழியே ஆத்தாவைப் பார்க்கும்போதே 'ஜெகன்மோகினி’ பார்ட் டூதான். பணியாரம் சுட்டுக்கொண்டே கையைக் காற்றில் வீசி வீசி, ''ஏய்... ந்தா காட்டுச் சிறுக்கி... தள்ளிப் போ... பணியாரத்துல கைய வைக்காத கம்னாட்டி... சொன்னாக் கேக்க மாட்ட'' என அதுவாகப் பேசிக்கொண்டு இருக்கும். திடீரென்று ஆக்ரோஷமாகி, ''எண்ணெய எடுத்து ஊத்திவுட்ருவேன்... சாமிக்கு வெச்சுட்டு வெக்கிறேன். அதுவரைக்கும் கொல்லைல போய் நில்லு எரும'' எனக் கத்தும். ''ஆர்ட்ட பேசுறாக?'' என பெரியம்மா கேட்டால், ''ந்தா... கீழத் தெரு புஷ்பம் ஆத்துல வுழுந்து அல்பாயுசுல செத்துப் போனாள்ல. பணியாரத்துக்கு வந்து வந்து நிக்கிறா? எப்பிடிக் கெஞ்சுறா பாரு. போடி முத்தத்துக்குன்னா!'' என சீரியஸாகச் சொல் லும். இதைக் கேட்கும்போதே எங்களுக்குத் திகிலடிக்கும்.
சாமிக்குப் படைத்துவிட்டு மறக்காமல் கொஞ்சம் பணியாரங்களைக் கொண்டுபோய் கொல்லையில் புஷ்பத்துக்கு வைத்துவிட்டு, ''சாப்ட்டு சீக்கிரம் கௌம்பு முண்ட'' என அதட்டிவிட்டுத்தான் வரும். ''ஆத்தா... சீரியஸா புஷ்பம் பேயா வருதா..?'' எனக் கேட்டால், ''பாக்காமலா சொல்றேன். குதுரு குதுரா ஆசைய வெச்சுக்கிட்டு பொசுக்குனு போயிட்டா. அதான் ஆவியா வந்து தெருவையே கோலிக்கிட்டு அலையுறா. நாம சொன்னாக் கேட்டுக்குவா. நாளைக்கு கார்த்தியைக்கு வருவா பாரு'' என டெரர் ஏத்தும்.
அப்போது முபாரக் அலி வீட்டில்தான் டி.வி-யும் டெக்கும் இருந்தது. தெருவுக்கே அதுதான் டூரிங் டாக்கீஸ். ஒரு படத்துக்கு அம்பது காசு டிக்கெட். 'அந்த ஒரு நிமிடம்’, 'விதி’ என ஓடிக்கொண்டு இருந்த தியேட்டரில் ஒரு நாள் 'மை டியர் லிசா’ போட்டார் கள். 'பயங்கர்ர்ர்ர்ரமாஆஆஆன படம்ரா’ என பில்டப் பண்ணிப் போட்டான் முபாரக். படம் முடிந்து, 'ஒரு பயமும் இல்லையே... ஹேஹேஹேய்...’ எனத் தில்லு காட்டிவிட்டு வந்து படுத்துவிட்டோம். கடுப்பான முபாரக் அலி, அடுத்த நாள் எங்கேயோ போய் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து போட்டது 'ஈவில் டெட்’. பாதிப் படத்தில் வீரமணிக்கு டவுசர்நனைந்து விட்டது. சாமிநாதன் மயக்கம் போட, தண்ணி கொடுத்து வீட்டுக்குப் பத்திவிட் டார்கள். பாதிப் பேர் தெறித்து ஓடினார்கள். க்ரிப்பாக உட்கார்ந்திருந்த எனக்கு க்ளை மாக்ஸில் தூக்கித் தூக்கியடித்தது. வீட்டுக்கு வந்து சாப்பிடாமல் படுத்தால், எங்கு பார்த் தாலும் புஷ்பம் நிற்கிற மாதிரியே இருந்தது. காலையில் காய்ச்சல் எகிறி ஸ்கூலுக்கு லீவு. ''இனிமே படம் கிடம் பாக்கப் போனா, தோல உரிச்சுருவேன்'' என வாங்குப்பட்டதில் இருந்து பேய்ப் படமே பார்ப்பது இல்லை.
10-வது பரீட்சை லீவுக்கு திருச்சியில் சித்தி வீட்டுக்குப் போயிருந்தபோது, சுப்ரமணியபுரம் ஏரியாவில் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். 'கலங்கடிக்கும் திகில் படம். படத்தைத் தனியாக அமர்ந்து பார்க்கும் நபருக்கு 1,000 ரூபாய் அன்பளிப்பு’ என்ற போஸ்டரைப் பார்த்ததும், ''டேய், 1,000 ரூவான்னா எத்தன எலந்த வட வரும்? போவுமாரா?'' என்றான் சித்து. தியேட்டருக்குப் போய் போஸ்டரைப் பார்த்தால், அதே 'ஈவில் டெட்’. தெறித்து ஓடி வந்துவிட்டோம்.

விகடனில் வேலை பார்த்தபோது ராஜநாராயணன் அண்ணன் என் சீனியர். அமானுஷ்ய ஏரியாவுக்கு அவர்தான் குத்தகை. போன் போட்டால், ''தம்பி, பாபநாசம் மல மேல ஏறிட்டு இருக்கேன்டா. இன்னிக்கு அமாவாச ராத்திரி. பேச்சியம்மா ஆவி வர்றேன்னுருக்கு!'' என்பார் ஹஸ்கியாக. மீட்டிங் கிறுகிறுப்பில் டீக்கடையில் நிற்கும் போது, ''சொழல்ல சிக்குன பொணத்துக்குத் தலையே இல்ல. மூங்கீல சொருவீட்டு நிக்குது. அருவிக் கரைல அலையறது கிருஷ்ணவேணியோட ஆவிலே மக்கா'' எனத் தெறிக்கவைப்பார். திடுதிப்பென ஏதாவது சாமியார்களோடு, ''நீங்க பாத்தீங்களா இல்லையா? பாத்தீங்களா இல்லையா..?'' என ஆஃப்லைட் ஹைவேய்ஸ்களில் போய்க்கொண்டு இருப்பார். ''நீங்க எத்தன வருஷமா இந்த ஆவியோட வாழ்ந்துட்டு இருக்கீங்க?'' என மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரி மாதிரியே ஆவிகளை டீல் பண்ணிக்கொண்டு இருப்பார். இப்போது விஜய் டி.வி-யில் நிகழ்ச்சி நடத்திக்கொண்டு இருக்கிற ராஜநாராயணன் அண்ணனின் வாழ்க்கையில் சரிபாதி அமானுஷ்யப் பயணங்களாலும் ஆச்சர்யங்களாலும் நிறைந்தது.
அடுத்த திகிலாக என் அண்ணன் குரு திடுதிப்பென்று 'நடந்தது என்ன..?’ டீமில் வேலைக்குச் சேர்ந்தான். அந்தக் காலகட்டத்தில் எங்கள் வீடே கிட்டத்தட்ட பாதி 'சந்திரமுகி’ பங்களா மாதிரியே இருந்தது. அதிகாலையில் கண்ணாமுழி தெறிக்க வருவான். சாப்பிட உட்காரும்போதுதான் ஆரம்பிப்பான், ''ஒரு எடத்துல சுடுகாட்டுத் திருவுழாம்மா. மிட்நைட்டு ரெண்டு பேரு ஆவேசமா ஓடிப்போய் ஃப்ரெஷ்ஷா பொதைச்ச பொணத்தத் தோண்டி எடுத்து, எலும்பைஎல்லாம் வாய்ல கவ்விக்கிட்டு, ந்தா பாரு... இப்பிடி இப்பிடி 'ப்ப்பேஏஏஏ...’னு ஓடி வர்றாய்ங்கம்மா. ஒடனே உடுக்கையெல்லாம் 'டும்ம்ம்ட்ட்டு டும்ம்ம்ட்ட்டு’னு பின்றாய்ங்க.
எர்லி மார்னிங் ரத்தப் பொரியல் சாப்ட்டு வர்றோம்...'' என அவன் 'காதலிக்க நேரமில்லை’ நாகேஷ் மாதிரி விவரிக்க விவரிக்க... ''ஏந் தம்பி... இதைஎல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிருக்கக் கூடாதா? மாப்ள டி.வி-ல வேல பாக்குறார்னு மொட்டையா சொல்லிட்டீங்களே'' என அண்ணி டென்ஷனாகும். முக்கியமான விஷயமாக கால் பண்ணினால், போனை ஆன் பண்ணி அப்படியே வைத்திருப்பான். பின்னணியில் ''இப்ப வர்றது செத்துப்போன செங்கோடனோட ஆவி. எல்லாரும் கையில கயித்த இறுக்கமாப் பிடிச்சுக்கங்க. சாம்பக் கருப்பா..!'' என பயங்கரமான குரல்கள் ஒலிக்கும். ஒரு நாள் சோகமாக வந்து, ''நைட்டுக்குள்ள ரத்தம் தோஞ்ச துணி, பன்னி வாலு, சுடுகாட்டுச் சாம்பல்... இதெல்லாம் கலெக்ட் பண்ணணும்ரா!'' என்றான். ''ஏன்டா..?''
''ஒரு சாமியாரு பேயைக் காட்றேன்னு சவால் வுடுறாரு. இப்ப சொன்னதையெல்லாம் கலெக்ட் பண்ணிக் கொண்டுபோனா, பூஜை பண்ணி மொட்ட மாடில ஒருத்தரைப் படுக்கவெச்சுருவாராம். ராத்திரி ரெண்டு மணிக்கு மேல பேய் வரும். நீங்க கேமராவ வெச்சுட்டுப் போயிட்டா அதுல தெரியுங்கறாரு. ஆனா, தனியாப் படுக்கவெச்ச ஆளு ரத்தம் கக்கிச் செத்துப்போறதுக்கும் சான்ஸ் இருக்காம். தைரியமா வந்தா, பேயைக் காட்றேங்கறாரு!'' என்றான் மோவாயைக் குத்தியபடி. கொஞ்ச நேரம் அங்கேயும் இங்கேயும் போன் போட்டுவிட்டு, ''தம்பி நீ வர்றியா..? வந்து மொட்ட மாடில படு... செம அசைன்மென்ட்டு!'' எனப் பகீர் ஆஃபர் வைத்தான்.
''குரு... இனிமே வீட்டுக்குள்ள நீ தொழிலக் கொண்டுவராத. இல்லைன்னா, நீ வீட்டக் காலி பண்ணிட்டு எதாவது மேன்ஷனுக்குப் போயிரு. நம்ம வீடு ஒரு பூங்காவனம்'' என மூச்சைப் பிடித்துக்கொண்டு வசனம் பேசிவிட்டு எகிறிவிட்டேன். அவ்வளவு பயங்கரங்கள் நிகழ்த்துவான். அப்புறம் வேலை மாறிவிட்டவன், இப்போதும் பொன்மலரும் குகனும் கதை கேட்டால் இப்படித்தான் ஆரம்பிக்கிறான், ''ஒரு ஏரியால ஒரு பேய் இருந்துச்சாம்...''
நமது பால்யங்களும் பேய்க் கதைகளால்தானே நிறைந்திருந்தது. வெள்ளைப் புடைவையில் திரியும் அக்கா பேய்கள், இலையூர் பாலத்தில் நின்று கால் இல்லாமல் தீப்பெட்டி கேட்கும் முண்டாசுப் பேய், லிஃப்ட் கேட்டுக் குரல்வளையைக் கடிக்கும் அப்பத்தா பேய், ஆத்தங்கரையில் ஆள் பிடிக்கக் காத்திருக்கும் செல்லாயி பேய், ஆகாசுவளி புளியமரத்தில் தொங்கும் பேய்கள் என எத்தனை பேய்கள் நின்றன நம் பால்யத் தின் வழித்தடங்களில்..? ''மனித மனங்களின் குற்ற உணர்ச்சிகளுக்கும் அச்சங்களுக்கும் நாம் கொடுக்கும் உருவமே பேய்'' என்கிறார் ஃப்ராய்டு.
''பேய்களும் கடவுள் மாதிரிதான். இருக்கிறதோ இல்லையோ... அதைப் பற்றிய பயம் மனிதனுக்கு இருந்துகொண்டே இருக்கும். எனக்கு ஒரு பேயைத் தெரியும். எப்போதும் பலபேரின் கண் எதிரே அலைந்துகொண்டே இருக்கிறது. அந்தப் பேய்க்குப் பெயர்கூட இருக்கிறது... வறுமை!''
- என்றார் புதுமைப்பித்தன்.
'எம் மூதாதையரின் ஆவி எனக்குள் இறங்கியிருக்கிறது. அது உனது அதிகாரத்தின் ரத்தம் குடித்தால்தான் மலையேறும்!’ என்கிற ஆப்பிரிக்கக் கவிதை மனதில் ஆவியாகிறது.
தர்மபுரி பக்கம் காடா முனீஸ்வரன் கோயில் என்ற இடம் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு சத்யாவின் தங்கச்சிக்குப் பேய் பிடித்தபோது அங்குதான் அழைத்துப்போனார்கள். அவள் ஸ்கூலுக்குப் போனபோது,

வழியில் ஒரு பையன் விபத்தில் இறந்துவிட்டான். அதை அவள் பார்த்ததில் இருந்து அந்தப் பையனின் ஆவி அவளுக்குள் ஏறிவிட்டது. அவனைப் போலவே பேசுகிறாள். நள்ளிரவுகளில் எழுந்து அவனது வீட்டுக்குப் போய்விடுகிறாள். அவன் செய்கிற மாதிரியே பல விஷயங்கள் பண்ணுகிறாள். எல்லோருக்கும் பயங்கர ஆச்சர்யம். பயம்! என்ன செய்வது என்றே தெரியாமல் பல இடங்களில் சுற்றியது சத்யா குடும்பம். அப்புறம்தான் காடா முனீஸ்வரன் கோயிலுக் குப் போனார்கள். அப்போது விவரம் தெரியாமல் நானும் உடன் சென்றிருந்தேன். பெண்களுக்குப் பேய் ஓட்டும் இடம் அது. விதவிதமாகப் பாதிக்கப்பட்டு, கதறியபடி, வெறித்தபடி, ஏதேதோ பினாத்தியபடி எத்தனை பெண்கள்? பார்க்கும்போதே கொடுமையாக இருந்தது. பேய் பிடித்த பெண்களுக்குப் பூஜை போட்டு, தலைமுடியை வெட்டி அங்கு உள்ள புளியமரத்தில் அடித்து, ஏதேதோ இம்சை. ''மூணு நாள்ல அந்தப் பேய ஓட்டிவிட்ரலாம்!'' என்றார்கள்.
சத்யாவும் நானும் டென்ஷனாகி அன்றைக்கே அழைத்து வந்துவிட்டோம். அப்புறம் அஞ்சாறு வருடங்கள் கழித்துதான் சத்யாவைப் பார்த்தேன். முதலில் எனக்குத் தங்கச்சி ஞாபகம்தான் வந்தது. டீக்கடையில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது, ''டேய், தங்கச்சிக்கு எப்பிடி இருக்கு..? அது என்னாச்சி..?'' என்றேன். அவன் கடுப்பாகச் சிரித்தபடியே சொன்னான், ''டேய்... ஆக்ஸிடென்ட் ஆனான்ல, அந்தப் பையனும் இவளும் லவ் பண்ணிருக்காங்கடா. அப்புறம் ஃபுல் டீட்டெயிலும் எடுத்துட்டேன். லவ்வுலதான் இவ இப்பிடி ஆகிட்டா. அப்புறம் சரிபண்ணியாச்சு. பெங்களூர்ல கட்டிக் குடுத்துட்டோம்.''
வரும்போது நண்பன் கேட்டான், ''இப்ப தெரியுதா எது பேயின்னு?''
- போட்டு வாங்குவோம்...