மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 73

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

பொய்கள் அழகானவை... சுவாரஸ்யமானவை... துயரமானவை... சில நேரங்களில் உண்மையானவை. நினைத்துப் பார்க்கும்போது, எவ்வளவு பொய்களைச் சுமந்து வந்திருக்கிறோம் எனத் திகிலாக இருக்கிறது. வாழ்வில் நாம் சொன்ன முதல் பொய் எது?

மீபத்தில் ஒரு நண்பனுக்குக் கல்யாணம்... காதல் கல்யாணம்!முகூர்த்தத்துக்கு முதல் நாள் மாலை ஒரு மண்டபத்தில் ரிசப்ஷன். பெண் வீட்டார் பெரிய இடம். நண்பனின் மாமனார் பெரிய கான்ட்ராக்டர் என்பதால், அரசியல் புள்ளிகள் எல்லாம் கும்மினார்கள்.

நாங்கள் போன போது வாசலிலேயே மங்கிக் குல்லா மாட்டிக் கொண்டு ஜோஜோ அங்கிள் எல்லோருக்கும் கும்பிடு களைப்போட்டுக்கொண்டு இருந்தார். ''என்ன அங்கிள்...பிரியாணின்னதும் சொல்லாமக்கொள்ளாம சுகுர்றா வந்துட்டபோல' என்றதும் தலைக்கு மேலே கும்பிட்டவர், ''டேய்... உள்ள வந்துவாயக் கீய வெச்சுராதீங்க. இங்க நான் மாப்பிள்ளைக் குத் தாய்மாமன்டா' என்றார் ஹஸ்கியில். அதற்குள் ''மாப்ள தாய்மாமன் எங்கங்க..? மேடைல கூப்பிடறாங்க'' என சவுண்டு வர, ''இந்தா வந்துட்டேன்' என ஓடிப்போய் சடங்கு களில் ஈடுபட்டார்.

''இவரு எப்போ அவனுக்குத் தாய்மாமன் ஆனாரு..?' என எங்களுக்கு ஷாக். ஏனெனில், ஜோஜோ அங்கிள் மேன்ஷனில் இருந்தபோது, எனக்கு, கல்யாண மாப்பிள்ளை நண்பனுக்கு எல்லாம் சீனியர். தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை பார்ப்பவர். ''வேரிலே ஊற்றும் நீரிலே கொண்ட தமிழ்ச் சீரிலே' என அவர் கவிதை பாடினால், கடல் நாலைந்து கிலோ மீட்டர் உள் வாங்கும். ''தமிழ்த் தொன்மங்களைப் பத்தி ஒரு புக் எழுதிட்டு இருக்கேன்... 48 கிலோ வரும். அதை நாடாளுமன்ற வாசல்ல வெச்சு மன்மோகன் சிங் வெளியிட, ரஜினி பெற்றுக்கொள்ளணும். இதான் என் இலக்குடா' என உறுமுவார். அவரைப் பாசமாக எல்லோரும் அங்கிள் என்றே விளிப்போம்.

''டேய்! ஆள்காட்டிகளா... அங்கிள் கிங்கிள்னு ஏன்டா பொய்ப் பரப்புரை பண்றீங்க?'' என டென்ஷன் ஆவார். அப்புறம் ஆளுக்கு ஒரு திசையில் தெறித்துவிட்டோம். வழியிலோ, விழா விசேஷத்திலோதான் அங்கிளைப் பார்ப்பது. இப்போது நண்பனுக்குத் தாய்மாமனாக வந்து நிற்கிறார்.

மாப்பிள்ளை கோட் சூட்டில் பதற்றமாக இருக்க, ஜோஜோ அங்கிள் படு கேஷ§வலாக, ''எங்க குடும்பத்துல பார்த்தீங்கன்னா... எங்க குடும்பத்துல பார்த்தீங்கன்னா' எனப் பின்னிஎடுத்துக்கொண்டு இருந்தார். ''பார்த்துக்கங்க, பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்' என தம் போட வந்தவரிடம், ''என்ன அங்கிள் இது?' என்றேன். ''என்ன பண்றது? படவா லவ் பண்ணிட்டான். பொண்ணு குடும்பம் வசதியிலயும் பெருசு. சொந்த பந்தத்துலயும் ஏகம். இவன் சைடு சொந்தங் காட்டணும்ல. 'நீ தாய்மாமனா வா அங்கிள்’னு வந்தான். சரின்னு நான்தான் போயி அப்பிடி இப்பிடிப் பேசி கரெக்ட் பண்ணி, கல்யாணம் வரை கொண்டுவந்தாச்சு. சரி... எப்பிடியும் நான் ஒங்களுக்கு எல்லாம் மாமன்தானடா' என்றார் சிரித்தபடி. சாப்பிடும்போது பதற்றமாக வந்த மாப்பிள்ளை ஜோஜோ அங்கிளிடம், ''மாமா! நீ பாட்டுக்குப் போயிராத. ரெண்டு மூணுநாளைக்கு லீவு சொல்லிட்டுக் கூடவே இரு. சடங்கு எல்லாம் இருக்காம்' எனச் சொல்லிவிட்டுப் போனான்.

''அய்யய்யோ! காதுகுத்து வரைக்கும் என்னையத் தூங்கவிட மாட்டாய்ங்க போலயிருக்கே. கல்யா ணத்துக்கு வர்றவய்ங்களை எல்லாம் பாக்கும் போது, சிக்குனா துவையல் கன்ஃபார்ம். ஓ.கே. பொய்மையும் வாய்மையிடத்தே...' என்றார் ஐஸ்க்ரீமை இழுத்தபடி.

வட்டியும் முதலும் - 73
பொய்கள் அழகானவை... சுவாரஸ்யமானவை... துயரமானவை... சில நேரங்களில் உண்மையானவை. நினைத்துப் பார்க்கும்போது, எவ்வளவு பொய்களைச் சுமந்து வந்திருக்கிறோம் எனத் திகிலாக இருக்கிறது. வாழ்வில் நாம் சொன்ன முதல் பொய் எது?

வாசல் மண்ணை வாயில் அதக்கிக்கொண்டு, ''என்ன அது?'' என்ற அதட்டலுக்கு ஒண்ணுமில்லை எனக் கைகள் விரித்ததா? மளிகைச் சாமான் வாங்கப் போனபோது, கால் ரூபாய்க்குத் தேன்மிட்டாய் வாங்கிவிட்டு, புண்ணாக்குக் கணக்கில் சேர்த்ததா? மார்க்ஷீட் வருகிற காலையில் வயித்துவலி என லீவு போட்டதா? குரூப் ஸ்டடி என பங்ஸு வீட்டுக்கு நீலப் படம் பார்க்கப்போனதா? 'இது என் ஃப்ரெண்டும்மா...’ எனக் காதலியை வீட்டில் அறிமுகப்படுத்தியதா? 'வீட்ல ஒன்னையப் பத்தி சொல்லிட்டேம்மா... எப்பவும் ஒன் நினைப்பாவே இருக்கும்மா’ எனக் காதலியிடம் அள்ளிவிட்டதா? 'ஆபீஸ் மீட்டிங்ல இருக்கேம்மா’ என பாரில் இருந்தபடி மனைவியிடம் போனில் சொன்னதா? 'அவுக என்ன ஆளுக?’ என்ற கேள்விக்குக் கூச்சத்தில் சட்டென்று சாதி மாற்றிச் சொன்னதா? 'காச்சல்ல இப்பிடிப் போயிட்டாங்க...’ போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்க்க, தற்கொலை செய்துகொண்ட மகனைப் பற்றி மாற்றிச் சொன்னதா? 'ர்ரொக்... ர்ரொக்... ஒரே இருமல் வாமிட்... முடியல சார்...’ என ஆபீஸில் லீவு சொன்னதா? 'பாண்டிச்சேரில இருக்கேன் தலைவா...’ சைதாப்பேட்டையில் நின்றபடி கந்துவட்டிக்காரனிடம் சொன்னதா? 'குடும்ப ஓட்டு பூராம் ஒங்களுக்குத்தான்’ என பணத்தை வாங்கிக்கொண்டு மாத்திக் குத்தியதா?

'பொண்ணுக்கு 28 வயசுன்னு சொல்லிருங்க’ என 34-லிலும் வரன் அமையாமல் நிற்கும் மகளுக்காகப் பேசியதா? பேப்பர் சேஸ் பண்ணியதா? டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கி யதா? கள்ளக்காதல் முளைத்ததா? அம்மாவுக்காக மனைவியிடம் பேசியதா? மனைவிக்காக அம்மா விடம் பேசியதா? நேர்த்திக் கடன் தள்ளிப்போக, சாமியிடம் சாக்குச் சொன்னதா? செலவுகள் தாக்குப்பிடிக்க முடியாமல் கொள்கையைவிட்டு 200 ரூபாய் கையூட்டு வாங்கியதா? 'சாமி கண்ணைக் குத்திரும்...’ எனக் குழந்தையிடம் சொன்னதா?

எது என்றாலும் பொய்களால் நிறைந்துஇருக்கிறது இந்த வாழ்வு. ஒரு பொய் ஓடிப்போய் ஒரு கூட்டம் பொய்களை லாரிவைத்து அழைத்துவருகிறது. சிரிப்பில் ஆரம்பிக்கும் பொய்கள் அழுகையில் முடிகின்றன. விளையாட்டாக ஆரம்பிக்கும் பொய்கள் நம்மிடமே விளையாடிவிடுகின்றன. பொய்கள் நிறைய சந்தோஷங்களையும் நிறைய துயரங்களையும் வைத்திருக்கின்றன.

வட்டியும் முதலும் - 73

பத்தாவது படிக்கும்போது நான் ரிவிஷன் டெஸ்ட்டில் அவுட். ''ஃபெயிலாப் போனவன்லாம் அப்பாவை அழைச்சுட்டுத்தான் வரணும்...'' என சர்க்குலர் வந்தது. இந்த ரிசல்ட்டோடு வீட்டுக்குப் போனால் அப்பா மட்டையைக் கட்டி உரிப்பார். என்ன செய்வது என யோசிக்கும்போதே ராதாகிருஷ்ணன் அண்ணன் எதிரே வந்தான். ராதா அண்ணன் எங்கள் கிரிக்கெட் டீம் கேப்டன். பருவத்தால் பாலிடெக்னிக்தான் படித்தான். ஆனால், உருவத்தால் டபுள் டிகிரி முடித்து இருந்தான். அப்படி ஒரு குண்டூஸ். எனவே, அவனைப் பார்த் ததும் பல்படித்தது. ''அண்ணே... எங்கப்பாவோட வேட்டிய எடுத்தாறேன். கட்டிட்டு ஸ்கூலுக்கு வா... அப்பாவுக்கு ஒடம்பு முடியல, நீதான் சித்தப்பானு சொல்லி ஹெச்.எம்ம மீட் பண்ணிரு... ப்ளீஸ்ணே... காப்பாத்து'' என்றேன். ''டேய்... நானும் ஒங்க ஸ்கூல் சீனியர்தான்டா... யாராவது பாத்துட்டா வம்பாகிரும்...'' என்றான். ''அதெல்லாம் இல்ல... ஹெச்.எம். புதுசுண்ணே...'' என்றபடி அரை பாக்கெட் கோல்டு ஃபில்டர் அன்பளித்தேன்.

கட் பண்ணா... ஹெச்.எம். ரூமில் அப்படியே பாத்திரமாகவே வாழ்ந்தான். ''சார்... இவனை உங்கள்ட்ட ஒப்படைச்சிட்டோம்... எங்களக் கேக்கவே கேக்காதீங்க... தூக்கிப் போட்டு மிதிங்க. கண்ண மட்டும் வெச்சுட்டு தோல உரிச்சுருங்க... நாங்க டீசன்டான ஃபேமிலி சார். ஒழுக்கம்தான் எங்களுக்கு முக்கியம்...'' என ராதா பேசப் பேச... எனக்கே தொண்டையை அடைத்தது. அரை பாக்கெட் வாங்கிக்கொண்டு ரெண்டு பாக்கெட் கோல்டு ஃபில்டருக்கு நடித்தான். ''ஓவராப் போறானே...'' என நினைக்கும்போதே, ஓவிய வாத்தியார் உள்ளே நுழைந்தார். ராதாவைப் பார்த்ததும் ஆச்சர்யமாகி, ''டேய் ராதா... என்னடா இங்கே?'' எனக் கேட்க, ஹெச்.எம். முகத்தில் ஜெர்க். ''சார்... இவன் நம்ம சீனியர் ஸ்டூடன்ட்... பொய் வண்டிப் பய, கெட்ட படுவா...'' என ஓவியம் போட்டுவிட, ராதாவுக்கு பேஸ்மென்ட் கிடுகிடுக்க ஆரம்பித்தது.

நான் செய்வதறியாமல் நிற்கும்போதே, உண்மையைக் கக்கினான் ராதா. ஆன் தி ஸ்பாட்டிலேயே இரண்டு பேருக்கும் விரட்டி விரட்டி அடிவிழுந்தது. ராதா வேட்டி அவிழ சைக்கிளில் கேட்டைப் பிய்த்துக்கொண்டு ஓடினான். பலத்த அடியோடு மாலையில் கிரவுண்டில் அவனைச் சந்தித்தபோது, ''இந்தப் பொய் தாங்காதுன்னு சொன்னேன் கேட்டியாடா... நீ அடிவாங்கறதுல நியாயம் இருக்கு... நான் எதுக்குரா பழைய ஸ்கூல்ல போய் அடி வாங்கணும். க்காளி... ஒன்னைய...'' என ஆவேசமாக பேட்டை எடுத்துக்கொண்டு துரத்தினான்!

இப்போதும் ஏகப்பட்ட பொய்கள் என்னைத் துரத்திக்கொண்டேதான் இருக்கின்றன. அன்பில் விளையும் பொய்களும் அநேகம். சங்கடம் தவிர்க்க, யாரையேனும் காப்பாற்ற, சோம்பேறித்தனத்தால், பிரியம் வளர்க்க, சுயநலத்தால், பொதுநலத்தால்... என எப்படிச் சொன்னாலும் பொய்கள்பொய்கள் தானே? சில பொய்கள் உறவுகளைக் காக்கின்றன. சில பொய்கள் உறவுகளை முற்றிலுமாகச்சிதைத்து விடுகின்றன. ஆனால், உண்மையைப் போல் பொய்கள் நிரந்தரமாவது இல்லை எப்போதும்.

'பொய்கள் அப்போதைக்கு நிம்மதியானவை. உண்மை கள் கஷ்டமானவை. ஆனால், எப்போதைக்குமான நிம்மதியைத் தருபவை’ என்பதையே இப்போதும் உணர்கிறேன். மாயாவிக் கதைகளைப் போல். மிதக்கவிடும் கனவுகளைப் போல் கூடவே வரும் இந்த ரொமான்டிசிஸப் பொய்களை முற்றிலுமாகத் துரத்தியடிக்கவே விரும்புகிறேன். யதார்த்தம் அடர் காடாகவும், தகிக்கும் நெருப்பாகவும், பெருநதியாகவும் இருக்கிறது. துன்பங்களும் சந்தோஷங்களும் நீண்டுகிடக்கிற உண்மையின் பாதையில் நடப்பதே பேரனுபவம்... பெருந்தரிசனம். பொய் சொல்வதைப் பெரும்பாலும் குறைத்துவிட்டேன்... சின்னச் சின்ன பீஸ்களைத் தவிர!

வட்டியும் முதலும் - 73

''வட்டியும் முதலும் அனுப்பிட்டீங்களாண்ணா?'' என விகடனில் இருந்து கார்த்தி பேசுகிறான். ''அரை மணி நேரத்துல அனுப்பிடுறேன் கார்த்தி...''

''பொய் சொல்லாதீங்ண்ணா... நெஜமா சொல்லுங்க...''

''நெஜமா அனுப்பிடுறேன். ஆமா... நாளைக்கு டிசம்பர் 21-ம் தேதிதான? நாளைக்குத்தான் ஒலகம் அழியப்போகுதே... இப்ப எதுக்கு வட்டியும் முதலும்லாம்?''

''மொக்க ஜோக். அப்ப ராத்திரி 12 மணிக்குள்ள அனுப்புங்க...''

மணி இப்போது 12.10 ஆகிறது. எவன்டா சொன்னான் அந்தப் பொய்ய?

- போட்டு வாங்குவோம்...