மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 75

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

''ஒங்க மெட்ராஸுக்கெல்லாம் ஸ்லாப் கொண்டுவந்துருக்கேன் முருகா. ஒங்க சினிமா ஆளு ஒருத்தர்தான்... ஆங்! மன்சூரலிகான் வூட்டுக்குத்தான் ஒரு ஆர்டர். மினி லாரி புடிச்சுக் காத்தால அஞ்சு மணிக்கெல்லாம் கிண்டி பாலத்தத் தாண்டி உள்ள நொழைஞ்சுட்டேன்.

மீபத்தில் செய்தித்தாள் பார்த்தபோது ஓரிடத்தில் உறைந்து நின்றேன்! விவசாயம் பொய்த்ததால், மூன்று விவசாயிகளின் தற்கொலை பற்றிய செய்தி அது. அந்த மூன்று பேரில் ஒருவரின் பெயருக்குப் பின்னால் குடவாசல் அருகில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்.

எனது ஊரில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள ஊர். பக்கத்து ஊரில் ஒரு விவசாயி தற்கொலை செய்து செத்துப்போகிறார். அதன் பயங்கரமும் வேதனையும் துளியும் தெரியாமல், எஸ்கேப் சினிமாவின் இன்டர்வெலில் வெஜ் சாண்ட்விச் வாங்கிச் சாப்பிடுகிறேன். மார்கழியில் மகமாயிக்குக் கதிர் படைத்துப் படையல் போடாமல், பொங்கலுக்கு முதல் நாள் குடவாசல் கடைத்தெருவில் கரும்பு ஏலம் எடுக்காமல், போகியில் வீட்டுக்கு வெள்ளையடிக்கும்போது பழைய கல்யாண போட்டோவின் புன்னகையை மீட்டு ரசிக்காமல், மணியாத்தங்கரையில் மாடு குளிப்பாட்டி கொம்புக்கு பெயின்ட் அடிக்காமல், பொங்கல் சாப்பிட்டுவிட்டு பஞ்சாயத்து போர்டு திண்டில் பண்டிகைச் சீட்டுக் கச்சேரி போடாமல், கன்னிப் பொங்கலுக்கு பிள்ளைகளுக்குக் குஞ்சம் கட்டி மில்லுத் தோப்புக்கு அனுப்பாமல், ''ஆத்தா... அம்மாயி! நீரு நெலத்தக் காக்கணும் தாயி!'' என அறுத்த கதிரைத் தூக்கிக்கொண்டு சூரியனைக் கும்பிட்டுப் பொங்கல் விடாமல் ஏன் செத்துப்போனார் அந்த விவசாயி?

ஊரில் எங்களுக்கும் ஒரு வேலி நிலம் இருக்கிறது. தஞ்சாவூரின் செழிப்பும் தழைப்பும் தாத்தா காலத்தோடு போச்சு. வயல்களும், பாடல்களும், எப்போதும் வீட்டை நிறைத்திருக்கும் பத்தாயத்து நெல் வாசமும் எங்கோ தொலைந்துவிட்டன. அறுத்த வயலில் உதிர்ந்த கதிர் பொறுக்கி, கணபதி சித்தப்பா கடையில் போட்டு, பேத்திக்கு பால் பன் வாங்கும் சுப்பாத்தாவோடு விவசாயமும் பாதி செத்துப்போய்விட்டது. அப்பா இருந்த வரைக்கும் தீவிர விவசாயம் நடந்தது. அது ஒரு ரொட்டேஷன். குருவைக்கு நாத்து விடும்போது அம்மாவின் வளையல்கள் அடகுக்குப் போகும். ''ரெண்டு வாரத்துல மூட்டுர்றேன் மல்லி'' என்பது அப்பாவின் எவர்க்ரீன் டயலாக். ஆனால், அடுத்தடுத்து ரெட்ட வடம் சங்கிலி, தோடு என ஒவ்வொன்றாக அடகுக்குப் போய்விடும். அறுவடை வரைக்கும் அம்மா நகை இல்லாமல் மூளியாகத்தான் நிற்கும். அந்த சீஸனில் எதாவது விசேஷம் வந்தால்,

''நா ஒண்ணும் வரல... ஒத்த செயின்கூட இல்லாம அங்க போய் நிக்க முடியாது'' என அம்மா கொல்லைக்கட்டில் உட்கார்ந்து விசும்ப, ''டேய் கலியா... எருக் கூலி என்னடா சொல்றானுங்க..?'' என அப்பா வாசலில் நின்று கத்திக்கொண்டு இருப்பார். ''தண்ணியே விட மாட்டேங்குறானுங்க... க்காளி... நம்மெல்லாம் என்ன சிம்மந்தடிப் பயலா..? லேய்... ரவைக்கு ஆகாசுளிக்குச் சாப்பாடு எடுத்துட்டு வந்துரு'' என அப்பா ராப்பகலாக வயக்காட்டில்தான் கிடப்பார். அறுவடை முடிந்த ஒரு மாசத்துக்குள் ஒவ்வொரு நகையாக வீட்டுக்குத் திரும்பி வரும். நேஷனல் டேப்ரெக்கார்டர் வரும். சாலிடர் பிளாக் அண்ட் ஒயிட் டி.வி. வரும். ஒரு மாசம்தான், ''சம்பாவுக்கு வெத வுடணும்'' என அம்மா வளையலைப் பார்ப்பார் அப்பா. இப்படித்தான் நடக்கும் பொழப்பு!

வட்டியும் முதலும் - 75

இப்போது அதுவும் இல்லை. ஊரில் பாதிப் பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கப் போய்விட்டார்கள். சொந்த நிலங்களையும் கதிர்களையும் நினைவில் குலை தள்ளவிட்டு, எங்கெங்கோ கடைநிலை வேலைகளில் உழல்கிறார்கள். திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பஞ்சம் பிழைக்கப் போய்விட்டார்கள், நேற்று ஊரில் இருந்து அண்ணன் சித்து பேசும்போதுகூட, ''தண்ணியே வரலடா... பம்புசெட்டும் ரிப்பேராப்போச்சு. அதுக்குத்தான் ஆள் தேடிச் சுத்திட்டு இருக்கேன். பேசாம இத வித்துப்புட்டு தஞ்சாவூர்ல வீட்டக் கட்டிட்டுப் போலாம்னு தோணுதுரா. அப்பா வுட்டுப் போனத விட்ரக் கூடாதுன்னுதான் பாக்க வேண்டியிருக்கு'' என்றான் சலிப்புடன். இதே சலிப்புடன்தான் இன்னும் ஏராளமான விவசாயி களும் இருக்கிறார்கள்.

''நீங்க போங்கடா... எங்கன்னாலும் போங்க... நா இங்கதான் கெடப்பேன். சிமிழிக் குண்ட மட்டும் விக்காதீங்க. நாஞ் செத்தா அங்கதான் பொதைக்கணும்'' என்ற துளசி தாத்தாவைப் புதைக்கக் கடைசியில் சிமிழிக் குண்டும் இல்லை. பத்து மா நிலம் வைத்திருந்த திட்டக்குடி மாப்பிள்ளையை, கும்பகோணத்தில் ஒரு ஏ.டி.எம். சென்டரில் செக்யூரிட்டியாகப் பார்த்தேன். வெள்ளை வேட்டி-சட்டையில், ''கெழக்க நின்னு தூத்தி அடி மாப்ள'' எனப் பார வண்டியில் வந்தவரை, இப்படி யூனிஃபார்மில் ஏ.டி.எம். வாசலில் தளர்ந்து உட்காரும்படி பார்ப்பது பயங்கரம். காய்கறி காளிதாஸ் ஊரிலேயே சிமென்ட் ஸ்லாப் வேலை பார்க்கிறார். பச்சை வாசத்தோடு தோட்டத்தில் பார்த்தவரை சிமென்ட் பூச்சோடு,

''ஒங்க மெட்ராஸுக்கெல்லாம் ஸ்லாப் கொண்டுவந்துருக்கேன் முருகா. ஒங்க சினிமா ஆளு ஒருத்தர்தான்... ஆங்! மன்சூரலிகான் வூட்டுக்குத்தான் ஒரு ஆர்டர். மினி லாரி புடிச்சுக் காத்தால அஞ்சு மணிக்கெல்லாம் கிண்டி பாலத்தத் தாண்டி உள்ள நொழைஞ்சுட்டேன்.

டைம் ஆச்சுன்னா... என்னா, ஏது, லைசென்ஸ் இருக்கா... அது இதுனு போலீஸ் புடிக்கும். சின்னவ காலேஜ் போறாள்ல. டெய்லி நூறு ரூவா ஆகிருது. எங்க போறது..? வெவசாயத்த நம்புனா ஊண்டி எந்திரிக்கறதுக்குள்ள மட்டேர் மட்டேர்னு கால வாரி வுடுது. அதான் எதையாவது பண்ணிப் பொழைச்சுக்கணும்ல!'' எனச் சொல்லும்போது மனசைத் திருகியது. ஏழு ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு ஊரைவிட்டுப் போன வீரமணி அண்ணனின் மகன் கார்க்கியை, திருச்சியில் ஒரு ஹோட்டலில் சப்ளையராகப் பார்த்தேன். என்னைப் பார்த்தும் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவனைப் போய்ப் பிடித்துவிட்டேன். எல்லாவற்றையும் பேசிவிட்டுக் கரி படிந்த பாத்ரூம் கதவில் சாய்ந்து நின்றபடி அவன் சொன்னான்,

''அண்ணே... நானும் ஹோட்டலுக்குப் போகும்போது எல்லாம் சப்ளை பண்ற பையங்க கவனிக்காமப் போனா சுர்ர்ருனு கோவப்படுவேன். இப்போதாண்ணே தெரியுது... தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க யாரும் பாத்துருவாங்களோன்னுதாண்ணே அவங்க அப்பிடி நடந்துக்கிறாங்க’! இதைக் கேட்டபோது, திகீரென்றது.

விருகம்பாக்கத்தில் பழ வண்டி தள்ளிக்கொண்டு போன வேணுவையும் அவரது மனைவியையும் பார்த்தபோதும் இப்படித்தான் இருந்தது. பட்டுக்கோட்டை பக்கம் இருந்த விவசாய நிலத்தை விற்றுவிட்டு, நகரத்துக்குப் பிழைக்க வந்தவர்கள். தள்ளுவண்டியில் பழம் விற்றுக்கொண்டு, வெள்ளாளர் தெருவில் ஒரு சினிமா துணை நடிகையின் புறாக்கூண்டு போர்ஷனில் தூங்கப்போகிறார்கள். ரோட்டோரம் நின்று டீ குடித்தபடி வேணு என்னிடம் சொன்னார், ''தம்பி! ஒரு விஷயம் கேட்டுக்கங்க... ஒரு விவசாயியைப் பொறுத்தவரைக்கும் தற்கொல பண்ணிக்கிறது... நெலத்த விக்கறது ரெண்டும் ஒண்ணுதான்!''

இன்று நகரங்களில் பிழைக்க வந்து நிறைந்திருக்கும் முக்கால்வாசிப் பேர் என்னைப் போன்ற விவசாயிகளின் பிள்ளைகள்தான். பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஊர்களில் விவசாயம் பார்க்கிறார்கள். அடுத்த தலைமுறை எல்லாம் வேறு வேறு வேலைகளுக்குப் போய்விட்டோம். தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்ய வருவதை விவசாயத் தகப்பன்களே விரும்பவில்லை. 'இந்தக் கஷ்டம்லாம் என்னோட போகட்டும்’ என்பதுதான் அவர்களின் நினைப்பு. விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெள்ள மெள்ளச் சாகடித்துவிட்டால் என்னஆகும் இந்த தேசம்? இதற்கு யார் பொறுப்பு?

நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் இருந்த காவிரி டெல்டாவில், இப்போது எத்தனை ரகங்கள் இருக்கின்றன? வீரிய விதையும் ஒட்டு விதையும் தந்து விவசாயத்தைக் கீழே இழுப்பது யார்? பக்கத்து மாநிலம் கேரளாவில் எல்லா அரசுக் குழுக்களிலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் போல ஒரு விவசாயிக்கும் இடம் தருகிறார்கள். அவரது ஆலோசனை கேட்கப்படுகிறது. இங்கே ஒரு விவசாயியை எப்படி மதிக்கிறது இந்த அரசும் சமூகமும்? இன்னமும் 'மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ எனக் கால்நடை வளர்ப்பையும் விவசாயத்தையும் அடிப்படையிலேயே மட்டமாகப் பார்க்கும் சமூகமாகத்தானே நாம் இருக்கிறோம்? சினிமாக்காரரோ கிரிக்கெட் வீரரோ அல்ல... உண்மையில் ஒரு விவசாயிதான் இந்த நாட்டின் நாயகன் என்பதை எப்போது உணர்வோம்?

யாரையும் சுரண்டாமல், போர் தொடுக்காமல் 5,000 வருடங்கள் வீரத்தோடும் மானத்தோடும் தமிழ்ச் சமூகம் வாழ்ந்ததற்குக் காரணம் விவசாயம்தான் என்பதை நம் பிள்ளைகள் அறிவார்களா? மேட்டூரில் இருந்து கல்லணை வரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற குறைந்தபட்சக் கோரிக்கை கூட இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன்? இருக்கிற நிலத்தை எல்லாம் ஃப்ளாட் போட்டு விற்றுவிட்டு, புவ்வாவுக்கு என்ன செய்வோம்? ஆமாம்... அதுதான் முக்கியமான கேள்வி! புவ்வா வுக்கு என்ன செய்வோம்?

இயற்கை வேளாண்மைதான் இனி இந்த மானுடத்தின் ஜீவனம் என்பதை உணர வேண்டும். மரபணு மாற்ற விதைகள், பூச்சிக்கொல்லிகள் எதுவும் இல்லாமல் நாட்டு விதைகள், சாணம், கோமியம், இலை, தழையில் வரும் இயற்கை உரங்களால் வளரும் விவசாயம்தான் ஆரோக்கியமானது. விவசாயத்தின் அவசியமும் அவசரமும் புரியாமல் வேறு வேறு கொண்டாட்டங்களில் திளைக்கிறோம். விவசாயத்தின் மீதான கடமையையும்  கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணரச் செய்வதுதான் இன்றைய முதல் தேவை. நம்மாழ்வார், அறச்சலூர் செல்வம், புளியங்குடி அந்தோணிசாமி, கோமதிநாயகம், 'கிரியேட்’ ஜெயராமன், பாலையூர் ரங்கநாதன், பாமயன், சத்தியமங்கலம் சுந்தர்ராமன், ரவி போன்ற தனி மனிதர்களின் முன்னெ டுப்புகளும் முயற்சிகளும் மட்டுமே எதிர்காலத்துக்கான நம்பிக்கை விளக்குகளை ஏற்றுகின்றன.

சமீபத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து மவுன்ட் ரோட்டுக்கு வர ஒரு ஆட்டோ பிடித்தேன். வரும்போது ஆட்டோவின் முன்புறம் ஒரு 'பசுமை விகடன்’ சுருட்டிவைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன். அந்த ஆட்டோ டிரைவரிடம், ''என்ன தலைவா... பசுமை விகடன் படிப்பீங்களா..?'' என்று கேட்டேன். அவர், ''ஆமா சார்... ரெகுலரா படிச்சுருவேன். நமக்கு புதுகோட்டைப் பக்கம் கிராமம். ஒரு சூழ்நிலை. ஊர்ல நெலத்தை எல்லாம் வித்துட்டு, இங்க வந்து ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன். ஊர்ல ஒரு அஞ்சு ஏக்கர் நெலம் வாங்கி இயற்கை விவசாயம் பாக்கணும். அதான் சார் என் லட்சியம்.  கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்துட்டு இருக்கேன்'' என்றார் சிரித்தபடி. எனக்குச் சந்தோஷமாக இருந்தது. நானும் அந்த ஆட்டோக்காரர் மாதிரிதான்!

- போட்டு வாங்குவோம்...