மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும்! - 76

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

''தம்பி வாடா... புகைப்படம் எடுப்போம்... புகைப்படம் எடுப்போம்...'' என வழியில் ஆதூரமாய் மறித்து அறிவுமதி அண்ணன் மொபைலில் நாலு போட்டோ எடுத்து அனுப்புவார்.

ஏதோ ஒரு வெளியூர் லேண்ட் லைனில் இருந்து போன். எடுத்தால், ''தம்பி... விக்ரமாதித்யன் பேசுறேன்...'' என்றது அண்ணாச்சியின் குரல். 'ஆமா... புக் ஃபேர் வந்துருச்சுல்ல...’ எனத் தந்தியடித்தது மனசு. அண்ணாச்சியின் போன் வருவது திருவிழாவுக்குக் காப்புக் கட்டுவது மாதிரி. சாமி புறப்பாட்டுக்குப் பிறகுதானே தீபாராதனை. ''சென்னை வர்றேன் தம்பி...''

- என வாழை மரம் கட்டினார். உடனடியாக என் பிரியத்துக்குரிய இலக்கிய முகங்கள் மனசுக்குள் மண்டத் தொடங்கின.

இம்மாதிரியான தருணங்களில்தான் இலக்கிய ஜிப்சிக்களை பல்க்காகப் பார்க்க முடியும். புக் ஃபேர் வாசலில் அய்யப்ப மாதவன், கவர்னர் மாளிகையில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்த மாதிரி கையசைப்பார். நண்பன். அற்புதமான கவிஞன். ''ராஜி... காத்திரமான நவீன கவிதைகளை கோட் பண்றா... 'உயிர்மை’ ஸ்டால்ல என் தொகுப்பு கிடைக்குது. 'ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ படிச்சியா? கோணங்கி உயிர்மையில் நிக்கிறாரு...''

அந்தப் பக்கம் போகும்போதே, 'விடியல்’ வாசலில் ஃப்ரான்சிஸ் கிருபா நிற்பார். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் வாசலில் கட்டித் தொங்கும் நட்சத்திரம் மாதிரி கண்கள் மின்ன, ''ராஜி... ஐ லவ் யூ... ஐ மிஸ் யூ... ஐ ஹேட் யூ...'' எனக் கட்டிப்பிடி வைத்தியம் பார்ப்பார்.  '' 'காலச்சுவடு’ல கோணங்கி இருந்தாரே!'' என்ற தகவலைப் பிடித்துப் போனால், வழியில் புலித் தோல் ஜீன்ஸில் சாருவும் மனுஷ்யபுத்திரனும் ஆட்டோகிராஃபில் பிஸியாக இருப்பார்கள். யுவகிருஷ்ணாவும் அதிஷாவும் 'மாற்றான்’ கெட்டப்பில் ஒவ்வொரு ஸ்டாலாக உளவு பார்த்துத் திரிவார்கள். ''ஜெயமோகனுக்கு நீங்க ஏன் இந்துத்துவ முகமூடி மாட்றீங்க...'' என ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருப்பவரை ஸ்டாப்பி, ''இவர்தான் விஷ்ணுபுரம் சரவணன்'' என அறிமுகப்படுத்துவார்கள்.

''கேன்டீன்ல லேப்டாப்போட உட்கார்ந்து கேபிள் சங்கர் அப்டேட்ஸ் போட்டுட்டு இருக்காரு. 'கறுப்புப் பிரதிகள்’ல ஜாக்கி சேகரும் கடங்கநேரியானும் நிக்கிறாங்க... டிமிட்ரியப் பார்த்தீங்களா..?'' என ஒரு ப்ளாக்கர்ஸ் குரூப் சைனீஸில் பேசியபடி வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில் கூடியிருக்கும். ''விகடன் ஸ்டால்ல கோணங்கி இருக்காரு... பாக்கல..?'' என பரிசல் செந்தில்நாதன் சொல்லிவிட்டுப் போவார்.

ஆன் தி வேயில் திடீரென்று ஓர் இடத்தில் பதற்ற மேகங்கள். கூட்டம் கூடி, ''இங்க பிரச்னை வேணாம்... இங்க பிரச்னை வேணாம்...'' எனக் கலவரக் குரல்கள். பக்கத்து ஸ்டாலில் லீனா மணிமேகலையும் ஷோபா சக்தியும் புக் ரிலீஸ் முடித்துக் கிளம்புவார்கள். ஞாநி ஸ்டாலில் வாக்கெடுப்பு நடக்கும். 'மோடி, பிரதமர் வேட்பாளராக ஆகலாமா?’ என்ற வாக்குச்சீட்டை மடித்தபடி, ''ஏன் முரிகேன்... மோடியப் பாத்தா டெல்லி குமார் தம்பி மாரி இல்ல... க.சீயப் பார்த்தீங்களா? இங்கதான் நின்னான்...'' என பாஸ்கர் சக்தி சிரிப்பார். திரும் பினால், எதிரே அப்படியே வத்தலக்குண்டு வாசத்தோடு வந்துகொண்டு இருப்பார் க.சீ.சிவக்குமார் அண்ணன். ''சங்கர்ராமசுப்ரமணியனும் லக்ஷ்மி மணிவண்ணனும் இப்பத்தான் கிளம்பினாங்க. என்னப்பா... மணிவண்ணன் ஒரு கவித சொன்னான். மகா கலைஞன்பா அவன். சிலிர்த்து ருச்சுப்பா... இங்க பாரு...'' என உணர்வுக் கிளர்தல்களோடு வருகிற அண்ணனோடு போனால், ஒரு ஸ்டால் வாசலில் அசிஸ்டென்ட் டைரக்டர்களோடு ஆவேசமான விவாதங்களில் நிற்பார் அஜயன்பாலா.

''தம்பி வாடா... புகைப்படம் எடுப்போம்... புகைப்படம் எடுப்போம்...'' என வழியில் ஆதூரமாய் மறித்து அறிவுமதி அண்ணன் மொபைலில் நாலு போட்டோ எடுத்து அனுப்புவார்.

வெளியே வந்தால், ''கண்ணுக்குத் தெரியாத ஒரு... ஒரு... அத எப்பிடிச் சொல்றது... ஒரு இழை இருக்குங்க... அடியில பார்த்தீங்கன்னா...'' என பாக்கியம் சங்கர் - வே.பாபு - ஜாகீர்ராஜாவெல்லாம் ஜேஜேவென எதிர்க் காற்றில் வருவார்கள். கேமராவை பேன் பண்ணினால், ''எழுத்துங்கிறது டிகிரி காபி இல்லைய்யா...'' என்றபடி பூங்காற்று என்ட்ரி கொடுப்பார். ''இல்லைங்க... என்ன கிழிச்சுது... சமையல் புக்கும் வாஸ்து புக்கும்தான் இப்பமும் அதிகமா விக்குது...'' என விவாதம் சூடாகும்போதே, கூலர்ஸோடு மிஷ்கின் குரூப் வரும். கடைசி வரை கோணங்கியை மட்டும் பார்க்கவே முடியாது. அங்கே இங்கே என எங்கோ போய்விடுவார். மறுநாள் போன் பண்ணி விசாரித்தால், ''அவரு கிளம்பிட்டாரே... கோவில்பட்டி போறேன்னு சொல்லிட்டுப் போனாரு...'' என்பார்கள்.

அண்ணாச்சியும் க.சீயண்ணனும்கூட இப்படித்தான். கூடையில் இருந்து பூக்களும் புறாக்களும் எடுக்கிற ஜாலக்காரன் மாதிரி வந்த சுவடு தெரியாமல் கிளம்பிவிடுவார்கள். அவர்கள் வருகிற நேரமும் போகிற நேரமும் கடவுளுக்குக்கூடத் தெரியாது. இப்படி இலக்கிய அன்பர்களை இதன் பிறகு ஏதாவது குற்றாலம் சாரல் இலக்கிய விழாவிலோ, எழுத்தாள நண்பர்களின் வெளியூர் திருமணங்களிலோ, ஏதாவது புக் ரிலீஸ் தருணங்களிலோதான் பார்க்க முடியும்.

வட்டியும் முதலும்! - 76

சில பல வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒரு புத்தக வெளியீடு வைத்திருந்தார். அப்போது நான் விகடனில் நிருபர். ''பாஸ்... புக் ரிலீஸுக்கு வாங்க...'' என அழைத்தார். போன பிறகுதான் தெரிந்தது... ஓடும் மின்சார ரயிலில் வைத்து நடந்தது அந்த விழா. ரயிலில் இருந்து புத்தகத்தைக் வெளியே விட்டெறிந்தார்கள். தாம்பரத்தில் இறங்கி குரூப்பாக மதுபானக் கடைக்குப் போய்க் கொண்டாடினார்கள். விவாதங்கள்... விமர்சனங்கள்... கட்டுடைப்புகள். அப்போதுதான் எனக்கு அப்படி ஒரு விசாலமான உலகமே அறிமுகமானது. இன்னொரு முறை நுங்கம்பாக்கத்தில் ஒரு ஒயின்ஷாப்பில் இலக்கிய நிகழ்வு. விகடனில் கவர் பண்ணுவதற்காகப் போயிருந்தேன். விவாதங்கள் சூடேறி, அரை மணி நேரத்தில் கலவரம் வெடித்தது. ஆளாளுக்கு மேஜை மேல் ஏறி குத்து டான்ஸ் ஆடினார்கள். ஒரு பக்கம் கைகலப்பில் சிலர் இறங்க... ஆக்ஷன் ப்ளாக். 'ஒரு மண்டபம் புடிச்சமா... அடுக்கு மொழில நாலு பாராட்டுக்களைப் போட்டமா... கைத்தட்டலை வாங்கினோமானு இல்லாம, இதென்னடா வேற தினுசுல இருக்காங்க?’ என எனக்குக் கிறுகிறுத்தது. தலைதெறிக்க வந்து எடிட்டோரியலில் விஷயத்தைச் சொன்னால், 'ஃபார்ம்ல மூணு பக்கம் போட்டாச்சு... சீக்கிரம் எழுதிக் குடுத்துரு’ என்றார்கள் கூலாக. புத்தம் புதிய உலகத்தை, அறிவின் அடுத்தகட்டத்தை, அற்புத வாசிப்பு அனுபவங்களை, அழுத்தமான சமூகப் பார்வையை, மாற்று அரசியலை இந்த இலக்கியவாதிகள்தான் எனக்குக் கற்றுத்தந்தார்கள். அப்புறம் நாடோடி வாழ்க்கையின் மகோன்னதத்தை!

கோணங்கியை இதுவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. அவரைப் பார்த்துவிட வேண்டும் என ஒவ்வொரு முறை முயன்றபோதும் தட்டிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், ஊரில் இருந்து ஒருநாள் என் அண்ணன் போன் பண்ணி, ''டேய்... இங்க கோணங்கினு ஒருத்தர் வந்திருக்கார். உன் பேரைச் சொல்றார்றா... இங்க நம்ம ஊரு சிவன் கோயிலைப் பார்க்கணும்னு சொல்றாரு'' என்றான். எனக்குப் பயங்கர ஆச்சர்யமாக இருந்தது. இவர் எப்படி எனது ஊரைக் கண்டுபிடித்துப்போனார்? அங்கு இருக்கிற சிவஸ்தலம் இவருக்கு எப்படித் தெரியும்? சத்தியமாக மன்மோகன் சிங் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தால்கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன். உடனே த்ரில்லாகி, ''டேய்... அவர்ட்ட போனைக் குடு...'' என்றால், ''அவரு கோயிலுக்குப் போயிட்டார்றா...'' என்றான்.

''டேய்... அவரை ஒழுங்காக் கவனிச்சு அனுப்புறா...'' என்றேன். கோயிலைப் பார்த்துவிட்டு உடனடியாக அடுத்த ஊருக்குக் கிளம்பிவிட்டார் கோணங்கி. அது ஒரு மனசு. என்னை ஆச்சர்யத்திலும் பொறாமையிலும் ஆழ்த்தும் மனசு. அண்ணாச்சியைப் பார்க்கும்போது எல்லாம் பல ஊரின் வெயிலும், மழையும், வாசமும் அடிக்கும். அவர் நத்தைபோல் பிரபஞ்சத்தைக் கூடாக்கிச் சுமந்து திரிகிறார். ஒவ்வொரு முறை வரும்போதும் புதிய புதிய சொற்களையும் அனுபவங்களையும் கவிதைகளை யும் தருகிறார்.

ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்கா முதல் கங்கை வரை’ படித்திருக்கிறீர்களா..? ஆன்மிகம், அரசியல், கலாசாரம் என எல்லாத் தளங்களிலும் அப்படி ஒரு பார்வையை விதைக்க, அப்படி ஒரு நாடோடியால்தான் முடியும். கம்யூனிஸ்ட்டாக, புத்திஸ்ட்டாக, ஏதுமற்ற கலைஞனாக அவர் வாழ்க்கை முழுவதும் அற்புதமான பயணம் செய்திருக்கிறார். ''நான் போன பாதையில் திரும்பப் போக விரும்புவது இல்லை'' என்கிறார் ஓர் இடத்தில். அப்படியானால், எவ்வளவு முகங்கள் கிடைத்திருக்கும் அவருக்கு? 'கால் கட்டை விரல் ரேகை, சிலந்திபோல் நீண்டு நட்சத்திரங்களைத் தாண்டும் வரை போக வேண்டும்’ என எழுதுகிறார் கோணங்கி. அது இந்த பிரபஞ்சத்தை விழுங்கிவிடுகிற ஆவேசம்.

ஒருமுறை டிஸ்கஷனுக்குப் போய் சீன் பிடிக்க முடியாமல் டீ அடித்தபடி கிறுகிறுத்து நின்றபோது, தோளில் நீள் பை மாட்டிக்கொண்டு புல்லட்டில் வந்து நின்ற திருவண்ணாமலை பழனிவேலிடம், ''எங்க போறீங்க?'' என்றேன். ''ச்சும்மா... பைக்லயே செஞ்சி தாண்டி மலைஓரமா போறேன். தமிழ் தொன்ம வாழ்க்கைக்கான நிறைய விஷயங்களை கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்... எப்போ திரும்பறதுனு திட்டம் எதுவும் இல்ல'' என்றபடி போனார். பொறாமையாக இருந்தது.

க.சீ.சிவக்குமார் அண்ணனும் நாடோடிப் பேரன்பன்தான். 'சுதேச நாடோடி’ என்ற கோணங்கியின் பதம் அவருக்கும் பொருந்தும். ஊர்களையும் மனிதர்களையும் சொற்களையும் எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டியபடியேதான் வருவார். அவரிடம் அதுபற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது சொன்னார், ''இப்படி அலையறதுக்கு ஆராட்டல்தான் காரணம். ஆராட்டல்னா, தீர்க்க முடியாத தனிமை உணர்ச்சி. 60 வயசுக்கு மேல சில பொம்பளைங்க திடீர்னு கௌம்பிக் காணாமப் போயிருவாங்க... அது ஒரு துரத்திஅடிக்கிற தனிமை உணர்ச்சி. லா.ச.ரா. சொல்லிருக்காருல்ல... 'தசை வெறி தணிந்த பின் அவரவர் தனித்தனி’னு அப்படி ஓர் உணர்ச்சி. ஆனா, எல்லாரையும் தனதாக்கிக்கிற பேருணர்ச்சிரா...'' என்றார். யாரோ, எங்கேயோ ஒரு சிறுபத்திரிகை ஆரம்பித்தாலும் எழுதி னாலும் பஸ் ஏறிப் போய், அவரோடு ஓர் இரவைக் கழித்துவிட்டு உற்சாகப்படுத்தி வருகிற யூமா வாசுகிக்கு இருப்பதும் அந்தப் பேருணர்ச்சிதான்.

வட்டியும் முதலும்! - 76

'சலீல் சவுத்திரியின் பாடலைக் கேட்டபடியே... இரவுகளை வாழ்ந்துகொண்டு இருக்கிறான் தேசாந்திரி. கூடாரத்தின் இந்தப் பக்கமும்     அந்தப் பக்கமும் ஒளிந்து விளையாடும்  பிள்ளைகள் ஜில்லிடும் இப்பொழுதில் சூடாக சாயா குடிக்கும் இவ்வம்சத்தின் மூத்த கிழவன் அலைந்து திரியும் இப்பறவைகளுக்குக் கூடும் இல்லை வேர்களும் இல்லை இதைப் பற்றிய விசனமும் இல்லை’

- என்ற பாக்கியம் சங்கரின் கவிதை நினைவுக்கு வருகிறது. தேசாந்திரியாக, நாடோடியாக அலையும் இலக்கிய நண்பர்கள் பொறுப்பற்றவர்கள் என்பது பொதுப் புத்தி. அது ஒரு தேடல். சே குவேராவின் லத்தீன் அமெரிக்க மோட்டார் சைக்கிள் பயணம் போன்றது. ஆகாயத்தை மடித்துப் பையில்வைத்துக் கொண்டு, நிலங்களையும் மனங்களையும் சதா படித்துக்கொண்டு அலையும் ஆன்மா எல்லோ ருக்கும் வாய்த்துவிடாது. அது 'தான்’ என்பதே அழிந்துவிடும் மானுடத்தன்மை.

நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற பல முக்கிய படைப்பாளுமைகளை உருவாக்கியதும் இந்த இலக்கற்ற நாடோடிப் பயணங்கள்தான். வைக்கம் முகம்மது பஷீரின் வாழ்க்கையில் பெரும் பகுதி இப்படியான நாடோடிப் பொழுதுகளில்தான் கழிந்தன. வீட்டை விட்டுக் கிளம்பி நாடோடியாகச் சுற்றித் திரிந்த வைக்கம் முகம்மது பஷீர், ஓர் இரவில் ஒரு ஊருக்குள் நுழைகிறார். அப்போது நல்ல மழை. ஊர் எல்லையில் இருக்கும் சத்திரத் தில் ஒதுங்கும்போது, அங்கு ஒரு கிழவன் படுத் திருக்கிறான். கொஞ்ச நேரம் பார்த்த பிறகுதான் தெரிகிறது. அந்தக் கிழவன் இறந்துவிட்டிருக் கிறான். அவன் யார், எங்கிருந்து வந்தான்? எதுவும் பஷீருக்குத் தெரியாது. அதிகாலையில் அவனை முதுகில் சுமந்துகொண்டு சென்று ஊர் பெரிய மனிதர் வீட்டில் அவனை வைக்கிறார். ஊரே திரண்டுவிட்டது.

விசாரித்தால், அவன் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. அது ஒரு மலைக் கிராமம். பக்கத்தில் ஸ்டேஷன்கூட இல்லை. இரண்டு நாட்கள் இருந்து பார்த்துவிட்டு, அந்தக் கிழவனுக்கான இறுதிக் காரியங்களை பஷீரே நடத்தி அடக்கம் செய்துவிட்டு வருகிறார்.

''அந்தக் கிழவன் கழுத்தில் சிலுவை தொங்கியது. அதனால் அவன் கிறிஸ்துவனாகத்தான் இருப்பான் என அறிந்தேன். அதனால் கிறிஸ்துவ முறைப்படியே அவனை அடக்கம் செய்தேன். அதனால் இஸ்லாமியனான எனக்கு, ஒரு கிறிஸ்துவத் தகப்பன் கிடைத்தான்!'' என்கிறார் பஷீர். இப்படி வழி முழுக்க யார் என்றே தெரியாத எல்லோருக்குமான அன்பையும், அரசையும், அரசியலையும் விதைத்துவிட்டுப் போக, ஓர் எழுத்தாளனால்தான் முடியும்.

உருகுவே எழுத்தாளர், ஓவியர், பத்திரிகையாளர் எட்வார்தோ கலியானோவை இன்று உலகமே கொண்டாடுகிறது. வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் அமெரிக்க அதிபர் ஒபாமாவைச்சந்தித்த போது பரிசாகக் கொடுத்தது எட்வார்தோவின் புத்தகத்தைத்தான். ஐ.நா. சபையில் அமெரிக்க அதிபரை உலகின் சாத்தான் என சாவேஸ் பேசிய அதிரடிப் பேச்சுக்கு அத்தனை பேரும் பம்மியபோது, அடுத்த அரை மணியில் ஆதரவு அறிக்கைவிட்டவர் எட்வார்தோதான். கேலிச் சித்திரங்களுக்காகவும் எழுத்துக்காகவும் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டு, நாடோடியாகச் சுற்றித் திரிந்த எட்வார்தோ, இன்று உருகுவேயின்அடை யாளம். ஏராளமான ரசனைக்காரர்களுக்கு ஐடியல் எழுத்தாளர். அவரது 'ஓப்பன் வெய்ன்ஸ் ஆஃப் லத்தீன் அமெரிக்கா’ புத்தகம் விற்றுத் தீர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால்,இங்கே ஓர் எழுத்தாளனை எப்படி மதிக்கிறது இந்தச் சமூகம்?

'ஊதாரி, உருப்படாதவன்’ என்றல்லவா பேசிக்கொள்கிறோம். மண்ணையும் மக்களையும் சுமந்து திரியும் அவர்கள்தான் அடுத்தகட்டசமூகத் துக்கான விதைகளைத் தெளித்தபடி போகிறார் கள் என்பதை எப்போது உணரப்போகிறோம்? அவர்களுக்கு என்று நாம் எதையும் தரவில்லை. 'அலாஸ்காவில் தொலைந்த ஒட்டகம்போல’ தன்னை உணரும் வ.ஐ.ச.ஜெயபாலனின் வரிகள் என்னைக் கலைத்துப்போடுகின்றன.

'பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நட்டுவைத்த தோட்டத்தை விட்டுவிட்டு தொலைதூரம் வந்தவன் நான் என்னுடைய பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்?’

- போட்டு வாங்குவோம்...