Published:Updated:

சினிமா விமர்சனம் : வேதம் புதிது

சினிமா விமர்சனம் : வேதம் புதிது

சினிமா விமர்சனம் : வேதம் புதிது

'காதலுக்குக் குறுக்கே ஜாதி வருமெனில், இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்பது 'பாரதி’ராஜாவின்

வழக்கமான சினிமா தாரக மந்திரம். 'வேதம் புதிது’ படத்தில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறார் பாரதிராஜா. இங்கே மனிதத் தன்மையை வழிமறித்து, மல்லுக்கு நிற்கிறது ஜாதி. இருப்பினும், 'ரொமான்டிக்’ பாரதிராஜாவால் காதலை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கமுடியவில்லை. அடிப்படையில் பிரச்னைகளை ஆரம்பிப்பது காதல்தான்!

 உச்சிக் குடுமி, பட்டை விபூதியுடன், சொக்காய் போடாத மார்பில் பூணூல் தவழ, கண்களில் ஒளியுடன் அநாதையாக வந்து விழும் அந்தச் சிறுவனை, முறுக்கிய மீசையுடன் சத்யராஜ் தூக்கி நிறுத்துகிற காட்சிகள் நம் மனத்தைக் கலங்கடிக்கிறதே... அப்போதே படம் வெற்றியடைந்துவிடுகிறது. பாரதிராஜா போன்ற சிறந்த இயக்குநர்களால் மட்டுமே அடைய முடிகிற வெற்றி இது.

கத்தி, ஈட்டி, அரிவாள் சகிதம் வாழ்ந்த தேவர் வீரனல்ல; எல்லாவற்றையும் தூக்கித் தாமிரபரணியில் எறிந்துவிட்டு, ஆயுதமில்லாமல் அந்தப் பிராமணப் பையனை அணைத்துக்கொண்டு, கிராம மக்களை எதிர்த்து நிற்கும்போதுதான், தேவரின் வீரம் கொடி கட்டிப் பறக்கிறது.

சினிமா விமர்சனம் : வேதம் புதிது

அந்தச் சிறுவன்தான் எத்தனை லட்சணம்! வெறுமனே அவன் பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள்..! அற்புதமான தேர்வு!

காமிரா மார்தட்டிக்கொள்ளாமல், கவிதை படைக்கிறது. அமலா படுவேகமாக நதிக்கரையில் ஓடுகிற காட்சி ஒன்று போதும்!

படத்துக்கு மேலும் அழுத்தம் தருகிறது இசை.

சில விஷயங்கள் சற்றுச் செயற்கை. உதாரணமாக, எடுத்த எடுப்பில் கோயிலுக்குள் இரவில் காதலர்கள் (எங்கப்பன் குதிருக்குள் பாணியில்!) சந்தித்துக் கொள்வது... சாருஹாசனும் ராஜாவும் மலையுச்சியிலிருந்து அருவியில் விழ, கைகோத்தவாறு அவர்கள் உடல்கள் கிடைப்பது... 'இந்த அக்கிரமத்தைக் கேட் டேளோல்லியோ’ பாணியில், பிராமணர் ஜனகராஜ் கோள் மூட்டுவது... மேற்கண்ட விஷயத்தை வைக் கோற்போரில் 'பற்ற வைப்பது’போல சிம்பாலிக்கா கக் காட்டுவது... இவையெல்லாம் ரியலிஸத்துக்குக் குறுக்கே உட்காருகிற (தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத!) சில விஷயங்கள்.

பிராமணர்கள் இவ்வளவு வலிமையான அங்கமாகவா இப்போது இருக்கிறார்கள் என்று கேட்க வேண்டாம்! சம்பவங்கள் நிகழ்கிற காலத்தை பாரதிராஜா எங்கும் குறிப்பிடவில்லையே! 'நிழல்கள்’ ரவி ஓட்டி வருகிற கார்கூடப் பழைய (1948, ’50..?!) மாடல் கார்தானே..?!

- விகடன் விமரிசனக் குழு