மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை

ஓர் இந்திய கிராமத்தின் கதை

 - தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை

##~##

பதிப்பாசிரியர்: ரெங்கையா முருகன் தமிழில்: ச.சரவணன்

வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண்: 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ,  அசோக் நகர், சென்னை-83.  விலை:

விகடன் வரவேற்பறை

110  பக்கங்கள்:160

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பண்ணை வீடு’ வாங்கிப் போட்டிருக்கும் கேளம்பாக்கம், நான்கு தலைமுறைகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும்? பாம்பாட்டிகளும், குறிசொல்லிகளும், மோடிவித்தைக்காரர்களும், கூத்தாடிகளும் கடந்து செல்லும் ஓர் எளிமையான கிராமமாக இருந்தது.

விகடன் வரவேற்பறை

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு நம் இந்தியக் கிராமங்களைப் புரிந்துகொள்வதற்குத் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது. ஆங்கிலம் தெரிந்தவர்களைவைத்து அந்தந்தப் பகுதியின் நம்பிக்கைகளை, கலாசாரங்களை, பழக்கவழக்கங்களை, பொழுதுபோக்கு அம்சங்களைப் புத்தகங் கள் வாயிலாகவே புரிந்துகொள்ள முயன்றனர். அப்படி ஆங்கிலேயர்கள், தமிழகக் கிராமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எழுதப்பட்ட புத்தகமே இது. கேளம் பாக்கம் கிராமம், தமிழகக் கிராமங்களை அறிய ஒரு பருக்கைப் பதம்.

நூலில் மந்திரத்தால் மாங்காய் செடி உருவாக்கி, அதில் மாம்பழமும் காய்க்கவைக்கும் மேஜிக் காட்சியை நூலாசிரியர் விவரிப்பது விறுவிறுப்பானது. பிய்ந்துபோன ஒரு மாங்கொட்டையைக் கூடைக்குள் கவிழ்த்துவைத்து அது துளிர்க்க ஆரம்பித்து, வளர்ந்து, காய்த்துப் பழுக்கிற வரைக்கும் படிப்படியாக மக்களுக்குக் காட்டி ஆர்வம் ஊட்டுவார்கள் மோடிவித்தைக்காரர்கள். விறுவிறுப்பான சிறுகதைபோல அதை விவரித்து இருக்கிறார் ஆசிரியர். கிராமத்தில் நடைபெறும் கூத்துபற்றி விஸ்தாரமான ஒரு பகுதி நூலில் வருகிறது. மகாபாரதக் கிளைக் கதை ஒன்றை முழுவதுமாகவே சொல்லியிருக்கிறார்.

பாம்பாட்டிகள் விஷம் உள்ள பாம்புகளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு முத்தம் கொடுப்பதும் அதைக் கையில் கொத்தவைத்து விஷத்தை முறித்துக்காட்டுவதும் அச்சமூட்டும் ஆபத்தான விளையாட்டாக இருந்தது என்கிறார் ராமகிருஷ்ண பிள்ளை. விஷமுறிவுக்கான வேர்களை விற்பதற்காகப் பாம்பாட்டிகள் உயிரையே பணயம்வைக்கும் பரிதாபம் அது.

அன்றைய கிராமத்தின் வாத்தியார், ஆசாரி, வைத்தியர், மாடு மேய்ப்பவர், விவசாயி என ஒவ்வொருவர்பற்றியும் சிறு குறிப்புகள் இதில் உண்டு. ஒவ்வொரு வரையும் ஒரு சிறுகதையின் கதாபாத்திரம்போல அறிமுகப்படுத்துகிறார். அதில் ஒரு முக்கியமான தகவலையும் சொல்லிச் செல்கிறார்.

'அடுத்து நாம் காணப்போவது நல்லாப்பிள்ளை வாத்தியார். இவர் மகாபாரதத்தை தமிழில் எழுதிய நல்லாப்பிள்ளையின் கொள்ளுப்பேரன் ஆவார். மகாபாரதத்தின் 14,000 பாடல்களும் இவருக்குத் தலைகீழ்ப் பாடம். ஒவ்வொரு ஆயுத பூஜையின்போதும் அதை வைத்துப் பூஜை செய்வார்’ என்று சொல்லிக்கொண்டு போகிறார்.

சுவாரஸ்யமான நடைச் சித்திரமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் பாணியிலேயே இந்தியாவின் பிற பகுதிபற்றியும் நூல்கள் எழுதப்பட்டன என்கிறார் பதிப்பாசிரியர். தமிழில் எழுதப்பட்ட நூல் போலவே மொழிபெயர்த்து இருப்பது மொழிபெயர்ப்பாளர் சரவணனின் திறமை!

உயிர் உலை   இயக்கம்: ம.லோகேஷ்

விகடன் வரவேற்பறை

இடிந்தகரை மக்களின் கடலும் கடல் சார்ந்த வாழ்க்கை, நிலமும் நிலம் சார்ந்த போராட்டம் இவற்றின் பதிவே இந்த ஆவணப்படம்.  '' 'அவர்கள் கடலில் பிழைப்பு நடத்துபவர்கள். நிலத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என பிற நில மக்கள் நினைப்பதால், அவர்களின் போராட்டங்களின் தீவிரம் உறைக்கவே இல்லை'' என்று யதார்த்தத்தை உரக்க, உறைக்கச் சொல்கிறது இந்தப் படம். கரையில் நின்று கடலைப் பார்த்து, எப்போது கணவன் வருவான் என்று காத்திருந்த மீனவப் பெண்கள், எப்படிக் கடலுக்குள் இறங்கினார்கள் என்று பெண்கள் கண்ணோட்டத்திலும் பேசுகிறார் கவிஞர் குட்டி ரேவதி. ''அணு உலைக்கு அடிக்கல் நாட்டும்போதே எதிர்த்திருக்க வேண்டியதுதானே?'' என்கிற பொது ஜனங்களின் கேள்விக்கு, 26 வருடங்களுக்கு முன் மக்கள் போராட்டத்தால் மூன்று முறை அடிக்கல் நாட்டுவிழா தள்ளிப்போனதை பத்திரிகைச் செய்தியோடு நிரூபிக்கிறார்கள். நடுநடுவே கார்ட்டூன்கள், அணு உலைகள் அமைப்பதற்கான விதிகள், இடிந்த கரையில் நடக்கும் விதிமீறல்கள் எனத் தகவல்களோடு பேசுகிறது ஆவணப்படம். 'அணு உலை தேவையா... இல்லையா?’ என்ற கேள்விக்கு ஆணித்தரமாகப் பதில் சொல்கிறது இந்த ஆவணப்படம்.

எதிர்நீச்சல் இசை: அனிருத் வெளியீடு: சோனி மியூஸிக் விலை:

விகடன் வரவேற்பறை

99

விகடன் வரவேற்பறை

'கொலவெறி’ புகழ் அனிருத்தின் இரண்டாவது படம்.

'போயட்டு தனுஷ்’ எழுதியிருக்கும் 'பூமி என்னைச் சுத்துதே’... செம ஜோக்கு பாட்டு. 'டேமேஜான பீஸு நானு... ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்’ போன்ற சிம்பிள் வரிகளை அதைவிடச் சிம்பிளாகப் பாடியிருக்கிறார் அனிருத். யூ டியூபில் ஐந்து லட்சம் ஹிட்டுகளை அள்ளியிருக்கும் 'யோ யோ ஹனி’ பாடல் கருத்துக் குத்து காக்டெய்ல் மசாலா.

வாழ்க்கை முன்னேற்றக் கருத்துகளை டிஸ்கோ ஹால் அதிரடியுடன் ஒலிக்கவைக்கிறார்கள். ஒரு வரி, கொஞ்சம் இசை என ஒன்றரை நிமிடம் ஒலிக்கும் 'உன் பார்வையில்’ பாடலில் க்யூட் ரிங்டோன் இனிமை. 'சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ அக்மார்க் தனுஷ் குத்து. 'கீழே மண் இருக்கு... வானத்துல சன் இருக்கு’ என்று தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி ரசிக்கவும் ஆடவும்வைக்கிறது. பேத்தாஸாக ஒலிக்கும் 'வெளிச்சப் பூவே’ பாடலில் 'ஒரு மின்வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தாயே’ என 'கரன்ட்’ டிரெண்ட் புகுத்தியிருக்கிறார் வாலி. மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல் குரல்கள் வருடல்.

தொழில்நுட்பம் கற்போம். WWW.karpom.com

விகடன் வரவேற்பறை

ஒவ்வொரு நாளும் நம் கைகளுக்குப் புதிய கணினியும், புதிய அலைபேசியும் வந்து சேர்கிறது. நவீனத் தொழில்நுட்பங்கள் நிறைந்த அந்தக் கருவிகளின் முழுப் பயனையும் நாம் அனுபவிப்பது இல்லை. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள எளிமையாகக் கற்றுத்தருகிறது இந்த வலைதளம். ஒரு ஆண்ட்ராய்டு அலைபேசியில் அவசியம் இருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள் எவையெவை, அவற்றை எங்கிருந்து தரவிறக்கம் செய்யலாம் என்பது முதல், இணைய உலகில் ஒவ்வொரு நாளும் வந்து இறங்கும் புதிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள்பற்றிய அறிமுகமும் உடனுக்குடன் தரப்படுகிறது.  'உங்களிடம் இருந்து ஃபேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது?’ என்ற கட்டுரையில், நமது தனிப்பட்ட தகவல்கள் எப்படி கரன்ஸியாக உருமாறுகின்றன என்பதைப் படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது!