
அரை மணி நேரத்தில், புதுப் புடவை சுற்றி, அலங்கரித்து நிற்கும் மகமாயி, நாளைக்கு வந்து பார்த்தால் வெறுமையில் வாடி நிற்பாள். ஆட்கள் அற்ற வனத்தில் காக்கா விரட்டிக்கொண்டு இருப்பார் இந்த பூசாரி.
"பாடியப் பாத்தீல்ல சார்... டிரெயின்ல வுழுந்தா என்னாவும்? அள்ளிப் போட்டுக் கட்ற மாரி நொஞ்சிருச்சு சார். எடுத்துப்போட்டுப் போனா, எட்டு நாளைக்கு நாஸ்டா எறங்காது. இப்பப் போயி அப்பன் ஆத்தாட்ட பார்கேன் பண்ண முடியுமா..? நீ மீடியேட் பண்ணு சார். மூவாயிரம் வாங்கிக் குடுத்துரு போ''
- கைலியை ஏத்திச் சுருட்டி, தண்டவாளம் ஓரம் உட்கார்ந்து தம் அடித்தபடி ஒருவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் அவர். 20 அடி தூரத்தில் நசுங்கிச் சிதைந்துகிடந்தது ஓர் உடல். பாவம்... யாரோ ஓர் இளைஞன். விடியலுக்கு முன் கடந்த விரைவு வண்டியில் விழுந்து செத்துப்போயிருக்கிறான். அவனது உறவுக் கூட்டம் கொஞ்சம் தள்ளி நின்று பெருங்குரலில் அழுதுகொண்டு இருந்தது. கூழாகிக்கிடந்த உடலை எடுத்துத் தர, பேரம் பேசிக்கொண்டு இருந்தார் கைலி பார்ட்டி. இதுதான் அவர்களது வேலை.
பீச் டு செங்கல்பட்டு, சென்ட்ரல் டு அரக்கோணம் பாதைகளில் அவ்வப்போது தற்கொலைகளிலும் விபத்து களிலும் இப்படி பாடியாகிறவர்களை எடுத்துத் தருவது. இவர்களைப் பற்றிச் சொல்லி, கோபிதான் என்னை அங்கே அழைத்துப் போயிருந்தான். ''கஸ்மாலம்... காத்தாலயே ஒரு டிக்கெட்டு'' என்றான் கோபி. எனக்கு அதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. குளிர் விலகாத ஆரஞ்சு வானத்தின் கீழ் ஒருவனுக்கு இப்படியா விழுந்து செத்துப்போகத் தோணும்? ஒளி பரவி, இசை விரவி இளநீர் வண்டிக்காரர்கள் அலையத் தொடங்கும் அதிகாலை எவ்வளவு அழகு? அந்த நேரத்தில் ஒருவன் இப்படி முடிவெடுக்க முடியுமா? நான்சென்ஸ்... யோசித் துத் தீராமல் கிறுக்குப் பிடிக்கவைப்பது இந்த மனித மனம்தான். கைலி பார்ட்டி விடாப்பிடியாக நின்றார்...
''த்ரீ தவுசண்ட் சார்... இல்லைன்னா, வேற ஆளப் பாரு. போலீஸ்ல வேண்ணா கேட்டுக்கோ எங்க ரேட்டு இன்னான்னு'' வந்து நின்ற உறவுக்கார ஆள், கொஞ்சம் யோசித்து, ''சரி... நீங்க எடுத்துக் கட்டி வண்டில ஏத்துங்க. ஜி.ஹெச். வரைக்கும் வரணும். நான் போயி ஏ.டி.எம்-ல பணம் எடுத்துட்டு வர்றேன்'' என்றபடி நகர்ந்தார். சொடக்குப் போட்டு அவரைக் கூப்பிட்ட கைலி, ''கைல இருக்கறத குடுத்துட்டுப் போ சார். சரக்கு வாங்கணும். இந்நேரம் இஸ்கூலு கடைல ப்ளாக்குலதான் வாங்கணும்!'' என்றார் அலட்சியமாக. கொஞ்ச நேரத்தில் தடதடவென வேலையை முடித்து, வண்டியை ஜி.ஹெச்சுக்கு அனுப்பிவைத்தார்கள். இன்னொரு பாட்டிலைத் திறந்தபடி ஓரமாக உட்கார்ந்த கைலியிடம் கேட்டேன், ''ஏங்க... ஒரு ஆளு செத்துக் கெடக்கான். இப்போ போயி பேரம் பேசுறீங்களே?''
அவர் என்னைப் பார்த்துக் கோணலாகச் சிரித்தபடி சொன்னார், ''இங்க வந்து நின்னவங்களுக்கு நாளப்பின்ன என்னையப் பாத்தா யாருன்னாவது தெரியுமா சார்? இப்பிடி எப்பவாவது, எதாவது நடந்துச்சுன்னாதான் இந்த ரெஸ்பான்டிங்லாம் எங்களுக்கு. நாளைக்கும் பசிக்கும் சார். ந்தா... இப்போ கைல ஆஃப் இருக்கு. எறங்கி நடந்தா பேரடைஸ்ல பிரியாணி. இன்னா சொல்றது, நான்லாம் ஒருநாக் கூத்துக்கு ராசா சார்!''
ஏதோ அசரீரி மாதிரி பேசிவிட்டார் அவர். வெகு சாதாரண மாக, அசாதாரணமான சிந்தாந் தங்களைப் போட்டுத்தாக்க இந்த மாதிரியான கடைநிலை ஜீவன்களால்தான் முடியும். 'எங்களுக்கு நாளைக்கும் பசிக் கும் சார்’, 'நான்லாம் ஒருநாக் கூத்துக்கு ராசா’ என்ற வார்த்தை கள் இந்தக் கணம் வரை என்னை இம்சிக்கின்றன.
சப்பரத் திருவிழாவுக்கு முதல் வாரம் வரை தேரடிக் கொட்டாயில் கேட்பாரற்றுச் சிதிலம் அடைந்து கிடக்கும் பெருமாள் கோயில் தேரைப் போல எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்? கதகளி கலைஞர்களின் ஆக்ரோஷ அபிநயங்களை வியந்து ரசிக்கிறோமே? சாமான்யர்களாக அவர் கள் உலவும் பொழுதுகளைப் பற்றி யோசித்திருப்போமா? எங்கள் ஊரில் திருவிழாவுக்குக் கூத்துக் கட்ட வருவார்கள். பெரும்பாலும் வள்ளித் திருமணமோ, அரிச்சந்திரனோதான். சாயங்காலத்தில் இருந்தே அவர்களுக்கு மரியாதை பின்னி எடுக்கும். ''சந்திரமதிக்கு குடிக்க கோல்டு ஸ்பாட் குடுங்கடா'' என சவுண்டைக் குடுத்துக்கொண்டே இருப்பார் கோவிந்தராஜ். ''ஆஜா கடைக்குப் போயி ரெண்டு கவுளி வெத்தல வாங்கிட்டு வந்து அரிச்சந்திரன் கைல குடுத்துரு. வாசன சுண்ணாம்புதான்டா போடுவாக. பபூனுக்கு போயல வேணுமானு கேட்டுக்க'' என உபசாரம் தூள் பறக்கும். ''அந்த டான்ஸர் புள்ளைக்குக் கொசுக்கடி தாங்காதாம். பள்ளிக்கூடத்துல தங்க முடியாதுங்குது. கட்டாரி வூட்டு மாடில டேபிள் பேனப் போட்டுப் படுக்கச் சொல்லுங்கய்யா!'' என அவனவனும் கொடி பிடிப்பான்.

திருவிழா முடிந்த மறுநாள் காலையில் பார்த் தால், பக்கத்தூர் கள்ளுக்கடையில் பப்பரக்கா என உட்கார்ந்திருப்பார்கள். ஒரு பயல் பார்க்க மாட்டான். பல்லு விளக்காமல் 'வரட்டு வரட்டு’ எனச் சொறிந்தபடி உட்கார்ந்திருக்கும் சந்திரமதி, ''ங்கேருய்யா... பஸ்ஸு காசு தனி. எத்தன தரம் சொல்றது ஒன்ட்ட!'' என அரிச்சந்திரனிடம் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும். கொசுக் கடி தாங்காத டான்ஸர் புள்ளையை மறுநாள் ரவைக்கு அது ஏரியாவில் போய்ப் பார்த் தால், சிம்னி எரியும் சாணித் தரையில் சுருண்டு கிடக்கும். பபூனெல்லாம் ஒரு சார்மினார் சிகரெட்டுக்குச் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார் கள். இவர்களின் ஒருநாள் நமக்குத் தெரியும். மறுநாள் தெரியவே தெரியாது.
சமீபத்தில் காஞ்சிபுரத்தில் இன்னமும் தெருக்கூத்து போட்டுக்கொண்டு இருக்கும் கணபதியைப் பார்க்க நண்பர் ஒருவர் அழைத்துப் போயிருந்தார். கணபதியின் நளினமான உருவமும் பின்னணியில், 'தாரம் ஒன்று கட்டி, தரணி ஆண்ட மன்னன், ராசாதி ராசா நானே, ஈடில்லா வீரந்தானே...’என்ற குரலும் நினைவில் இப்போதுகூடப் பிசிறு இல்லாமல் ஒலிக்கிறது. நான் போகும்போது ராமர் வேஷம் போட்டுப் பாடி ஆடிக்கொண்டு இருந்தார். பிடறி வழிய பாகவதர் கிராப், உடல் முழுக்க நீல வண்ண மேக்கப், மழுமழு முகத்தில் லிப்ஸ்டிக் எனப் பக்காவாக இருந்தார். அவரது பேச்சு, தொனி, உடல் மொழி எல்லாம் அவ்வளவு ஆகிருதி. கூத்து முடிந்ததும் அவரது வீட்டுக்கு அழைத்துப்போனார். மேக்கப் கூடக் கலைக்காமல் அப்படியே வந்துவிட்டார். எங்களைத் திண்ணையில் உட்காரவைத்துவிட்டு உள்ளே போனவர், திரும்பி வரும்போது பார்த்தால் ஃபுல் பால்டு ஹெட். ஆளே அடையாளம் தெரியவில்லை. வீட்டுக்குள் இருந்து பொம்ப ளைக் குரல்கள் சண்டை போடுகிற சத்தம் காதடைத்தது.
''அய்ய... ஊளைய நிறுத்துங்கடி. ஆளுக வந்துருக்காகள்ல!'' என சவுண்ட் விட்டவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ''என்ன தம்பி பார்க்குறீங்க? நாம கூத்துலதான் ராமன். நெசத்துல முருகன். ரெண்டு பொண்டாட்டிக. எனக்கு இது தனிக் கூத்து'' என்றார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னார், ''தம்பி, திருநாளுக்குத் திருநாள்தான் எங்கள உங்களுக்குத் தெரியும். இப்போ அதுக்கும் கூப்பிட மாட்றீங்க. திருநாளுக்கு மறுநாள்ல இருந்துதான் எங்க வாழ்க்க ஆரம்பிக்குது. கூத்துக்கு ராசா நெசத்துல கூசாய்யா. எனக்கு ஒரு கிட்னி கெடையாது தம்பி. பத்து வருஷத்துக்கு மிந்தி எம் மவன் மரத்துலேருந்து கீழ வுழுந்து கை ஒடைஞ்சு பெரிய ஆபரேஷனாகிப்போச்சு. பெரிய செலவு. எங்க போறது? ஒரு கிட்னிய எடுத்து விக்கக் குடுத் துட்டேன். அதான் எக்ஸ்ட்ரா ஒண்ணு குடுத் துருக்கான்ல. அதுல மேக்கப் பண்ணிட்டு இருக்கேன். பத்துத் தல ராவணன எதுத்து ஒத்த கிட்னி ராமன்... இது எப்பிடி இருக்கு?'' இதைக் கேட்டு எனக்குத் திடுக்கென்றது. ஒருநாள் பார்க்கும் அவர்களின் வாழ்க்கையின் மறு நாள்களின் பயங்கரம் மனதில் அறைந்தது.
மோகன்ராஜ் அண்ணன் இப்படித்தான். கரகரப்பும் கலகலப்புமாக அவருக்கு அம்சமான குரல். கூடவே, அடுக்குமொழிகள் போட்டுக் கவிதைகள் எழுதுவார். டிகிரியைத் தேறி முடிக்காமல், ஊரைச் சுற்றியவரை ஒரு உள்ளாட்சித் தேர்தலில் மைக் கட்டி காரில் பேசவிட்டார்கள். 'ஓய்வு தரும் திண்ணை, நமது சின்னமோ தென்னை... தென்னை... தென்னை!’ என அவர் மினி டி.ஆர். ஆகிப் பொளந்தது செம ஹிட். அதிலிருந்து சாவு, விளம்பரம் என எது என்றாலும் அவரை கார் வைத்துக் கொண்டுபோய்விடுவார்கள். அன்றைக்கு மட்டும் பிரியாணி, சரக்கு, பாக்கெட் மணி என அவரைக் கொண்டாடுவார்கள். ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு காரில் வலம் வருவார். மறுநாளில் இருந்து கேட்க ஆளற்று, தாடையைச் சொறிந்தபடி டீக்கடையிலும் பஞ்சாயத்து போர்டிலும் திரிவார்.

ஒரு பொதுத் தேர்தல் வந்தது. ரெண்டு, மூணு வாரம் அண்ணன் கார் எடுத்துக்கொண்டு செம பிஸியாகத் திரிந்தார். ஒரு கட்சி அவரை அப்படியே எலெக்ஷன் முடிகிற வரைக்கும் லபக்கிக்கொண்டது. சுத்துப் பட்டில் அவரது குரல்தான் ஒலித்தது. ''ஏய், மோகனுக்கு என்ன சரக்குனு கேட்டுக்க. ராயல்ஸ்ல டிபன் சொல்லு. கிங்ஸா வாங்கிக் குடுத்துரு!'' எனக் கட்சிப் புள்ளிகள் அவரைத் தாங்கினார்கள். எலெக்ஷன் முடிந்து அந்தக் கட்சியே ஜெயித்தது. தனது வாழ்க்கைக்கே ஒளி கிடைத்துவிட்ட மாதிரி மோகன் அண்ணன் குஷியாகிவிட்டார். தினமும் காலையில் அந்தக் கட்சி ஆபீஸில் போய் டாப்படித்துவிடுவார். சரக்கு, சாப்பாடு, டிஸ்கஷன் என அங்கேயே கிடந்தார். ரெண்டே வாரம்தான்.
''டேய், அந்த மோகன் பயல இனிமே இங்க வர வேணாம்னு பத்திவிடு. எதுக்கு அநாவசியமா இங்க டாப்ப போட்றான்'' என கவுன்சிலர் தாக்கல்விட்டார். என்னாச்சோ..? அடுத்த நாளே கவுன்சிலரின் மச்சானும் தம்பியும் அண்ணனைக் கட்சி ஆபீஸுக்கு வெளியே விட்டு வெளுத்துக்கொண்டு இருந்தார்கள். ''ஏதோ எலெக்ஷனுக்கு பேசுனான்னு எடம் குடுத்தா ஏறி மிதிச்சு வர்ற'' என நடுரோட்டில் நாய் மாதிரி அடித்துப் போட்டுவிட்டுப் போனார்கள். அந்தப் புறக்கணிப்பை, அவமானத்தைச் சுமந்து குடித்துக் குடித்து ஒருநாள் செத்துப் போனான் மோகன்ராஜ் அண்ணன். அவனது சாவில் மைக் கட்டி, போஸ்டர் ஒட்டி, வெடி போட்டு ஒருநாள் ராசாவாகப் போய்ச் சேர்ந்தான்.
''மூணு லச்சம் ரூவா கடன். எவ்வளவோ சொன்னேன். கல்யாணத்த சிம்பிளா நடத்தலாம்னு... கேக்காம தாலியறுத்தானுங்க. ஒருநாள் கூத்துக்கு இப்போ நான் பாதி ஆயுசுக்குத் தண்டம் கட்டணும்'' என நேற்றுகூட ஒரு நண்பன் போன் பண்ணிப் புலம்பினான். ''கோயில்ல பண்ண வேண்டியதுதான... நிச்சயத்துக்கு எதுக்கு ஹாலு? ஒருநாள் கௌரவத்துக்கு லோன் எடுத்து லோல் படணுமா?'' என டென்ஷனாகிறவர்கள் எவ்வளவு பேர்? எனக்கு மிடில் க்ளாஸ் விசேஷங்களில் விதவிதமான அயிட்டங்கள் சாப்பிடும்போது எல்லாம், அவர்களின் மறுநாள்களைப் பற்றிய கவலையே மனதில் ஓடும். வெகு நாட்களுக்குப் பிறகு, குலசாமிக் கோயிலுக்குப் போகும்போது, ஓடிவந்து நிற்கிற பூசாரி முகத்தில் எவ்வளவு பூரிப்பு.
அரை மணி நேரத்தில், புதுப் புடவை சுற்றி, அலங்கரித்து நிற்கும் மகமாயி, நாளைக்கு வந்து பார்த்தால் வெறுமையில் வாடி நிற்பாள். ஆட்கள் அற்ற வனத்தில் காக்கா விரட்டிக்கொண்டு இருப்பார் இந்த பூசாரி.
ஜானவாசத்துக்கு கார் கொண்டுவந்தவனைப் பந்தியில் முதல் ஆளாக உட்காரவைப்பார்கள். ஊர்வலம் முடிந்ததும் காசு கேட்டு அவன் வரும்போது பார்க்க ஆள் இருக்காது. ''பெரியப்பாவ பாக்கலியா? சீனுக்குடி மச்சான் நின்னாரே!'' எனச் சுத்தலில் விடுவார்கள். சாவுக் குப் பறையடிப்பவரில் இருந்து கல்யாணப் புரோகிதர் வரை திருநாளிலும் ஒருநாளிலும் பார்ப்பவர்களின் மறுநாள் பற்றியே மனம் யோசிக்கிறது.
நான் மறுநாள்களின் காதலன். பட்டாசுக் காகிதங்கள் இறைந்து, புதுச் சட்டை அழுக்காகி, பலகாரங்கள் தீர்ந்துவிட்ட மறுநாள். கல்யாணம் முடிந்து, பந்தல் பிரித்து வண்டியில் ஏற்றிக்கொண்டு இருக்கும் மறுநாள். அழுகைகள் முடிந்து, 'சின்னவன் சாப்பிட்டானான்னு பாரு... நைட்டு கோழிங்க வந்து அடைஞ்சுதா’ எனத் துலங்கும் மரணத்தின் அடுத்த நாள். குடை ராட்டினத்தை மடக்கிவைத்த வண்டி போக, பிள்ளைகள் பள்ளிக்குத் திரும்பும் திருவிழாவுக்கு அடுத்த காலை.
முழக்கங்கள் முடிந்து மைக் செட்டுகளைக் கட்டிக்கொண்டு இருக்கிற கணம், பூத்துகளைப் பிரித்துக்கொண்டு இருக்க, காரில் வேட்பாளர் வரவு-செலவு பார்த்துக்கொண்டு இருக்கிற எலெக்ஷனுக்குப் பிந்தைய நாள், கிரிவலப் பாதை முழுக்க எரிந்த சூடங்கள் தளும்பாகிக்கிடக்க, ஊர்களுக்கு மனிதர்கள் திரும்பிக்கொண்டிருக்கிற விடியல், பாராட்டு விழா முடிந்து இறங்கும்போதே முடிக்காத வேலைக்கு அழைக்கும் அலைபேசி ஒலி, 'பிலேட்டட் விஷ்’ வரும் பிறந்த நாளின் மறுநாள், உறவின் பிரிவு பழகும் மறுநாள், சர்க்கஸ் முடிந்த திடல், பிள்ளையார் கரையும் கடல், தொழுகை முடிந்த கடற்கரை, நல்ல வெள்ளியின் மெழுகுகள் உருகிக்கிடக்கும் சனிக்கிழமை சர்ச், கொண்டாட்டங்களின் குப்பைகளை அள்ளிக்கொள்ளும் அடுத்த நாள்... நான் மறுநாள்களின் காதலன்!

நேற்று ஆஸ்திரேலியாவில் இருந்து ஈழத் தமிழ் நண்பர் மனோ போன் பண்ணினார். ''இலங்கையின் போர்க்குற்றத்தை நிறுவ, ஐ.நா-வில் சமர்ப்பிப்பதற்காகச் சில ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டு இருக்கிறோம். எல்லாத் திக்குகளில் இருந்தும் எங்கள் குரல்கள் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே அனுப்பிவைத்த விவரங்கள் ஓரளவுக்கு உதவி இருக்கின்றன. இப்போது ஒரு முக்கியமான முன்னெடுப்பைச் செய்ய இருக் கின்றோம். தமிழ்நாட்டில் இருந்து உங்கள் உதவிகள் நிச்சயமாகத் தேவை!'' என்றவர், நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியாக இப்படிச் சொன்னார், ''அறிவிக்கப்பட்ட யுத்தம் ஒருநாள் முடிந்துவிட்டது. தமிழ் மக்களின் துயரம் கொஞ்சமும் முடியவில்லை. மண்ணையும் மக்களையும் விட்டு வந்த மறுநாளின் துயரம் உங்களுக்குப் புரியும்தானே?''
- போட்டு வாங்குவோம்...