
அதுவரை அவ்வளவு பிரியமாக வாழ்ந்த உறவுகளை எப்படியெல்லாம் பிரித்துப்போடுகிறது இந்த சாதி?
நான் தளிர்; நீ நெருப்பு சாம்பலாய்ப் போனது நந்தவனம் நான் படகு; நீ திசை தொலைந்து போனது பயணம் நான் அல்லி; நீ தண்ணீர் மூச்சுத் திணறியது பொய்கை நான் வண்ணம்; நீ தூரிகை ஊனமானது ஓவியம் நான் சொல்; நீ பொருள் அர்த்தமற்றுப் போனது காவியம் நான் மனுஷன்; நீ மனுஷி மலடாய்ப் போனது உறவு நான் சேரி; நீ ஊர் தூரமாய்ப் போனது மனிதம்!
- தய்.கந்தசாமியின் இந்தக் கவிதையைப் படித்துவிட்டுத் தூக்கமே இல்லை. நினைவுகள் தீப்பற்றிக்கொண்டன. 'ஸ்போர்ட்ஸ் ஸ்டார்’ புத்தகங்களுக்கு நடுவே ஒளித்துவைக்கப்பட்ட, தமிழரசியின் சிவப்பு மைக் கடிதங்கள் மனசில் படபடக்கின்றன. சென்னாக் குளத்தங்கரையில், அழிஞ்சி மரத்தடியில் அவள் கண்ணீரோடு நின்ற அந்தக் கணம் இப்போதுகூட இமை நுனியில் தளும்புகிறது. என்ன குறைச்சல் தமிழரசிக்கு? படிப்பில் க்ளாஸ் ஃபர்ஸ்ட்.
பார்க்கப் பழைய ஸ்ரீபிரியா மாதிரி ஒரு வசீகரம். வாத்தியார் பொண்ணு. துலங்கும் கண்களும் துடுக்குப் பேச்சுமாக அவளை சுந்தருக்குப் பிடித்ததில் ஆச்சர்யமே இல்லை. சொல்லப்போனால், தமிழோடு ஒப்பிடுகையில் அவன்தான் தரை டிக்கெட். ஆனாலும், காதல் ஒரு மாய மான் இல்லையா? இருவரும் அப்படிக் காதலித்தார்கள். சிவப்பு மையால் அவள் அனுப்பும் கடிதங்களால் அண்ணனின் அலமாரிப் புத்தகங்கள் புள்ளைத்தாச்சியாகின. ஊரைத் தாண்டிச் சந்தித்துக்கொண்டார்கள். தீ மிதித் திருவிழாவில் முஜிபுர்னிஸா வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் தமிழுக்காகத்தான் அவன் தீ மிதித்தான். அவன் வீட்டில் புத்தகங்கள் நோண்டும்போது, 'என்ன புள்ள வேணும் உனக்கு?’ என்ற சிவப்பு மையெழுத்துகளை நான்தான் முதலில் கண்டுபிடித்தேன். அப்புறம் ஒரு பங்காளிக்குத் தெரிந்ததில்தான் கலவரமானது. ஒரே பிரச்னை... சாதி. தமிழ் தாழ்த்தப்பட்ட சாதி. இவன் பிற்படுத்தப்பட்ட சாதி.
''தராதரம் வேணாமாரா..? இனிமே அவளப் பாத்த... ரெண்டு பேரையும் வெட்டிப்போட்டு வெட்டாத்துல கொளுத்திவுட்ருவோம்...'' என எகிறினார்கள் பங்காளிகள். பாலிடாயில் வாங்கிக்கொண்டு இலுப்பத் தோப்புக்கு ஓடிய சுந்தர் அண்ணனைப் பிடித்து இழுத்து வந்து வீட்டில் போட்டார்கள். ''அவ இல்லைன்னா செத்துருவேன்...'' என வைக்கப்போரில் உட்கார்ந்து அரற்றினான். தமிழரசிதான் அவ்வளவு பக்குவமாய் நின்றது. இப்போதுகூட என்னால் அவள் வலிக்குள் நுழைய முடியவில்லை. முஜிபுர்னிஸாவை விட்டு என்னைத்தான் கூப்பிட்டனுப்பியது தமிழ்.
அழிஞ்சி மரத்தடியில் நின்றபடி கண்களை எங்கோ அலையவிட்டு, தீர்க்கமான குரலில் பேசியது, ''ஒங்கண்ணன்ட்ட சொல்லு... இது நடக்காது. அடுத்த சென்மத்துலயாவது ஒரே சாதில பொறந்து வாழ்ந்துக்கலாம்னு... எங்கூட்லயும் வந்து தகராறு பண்ணிட்டுப் போயிருக்காக... என்னால அதுக்குத்தான் கஷ்டம். கல்யாணம் பண்ணிட்டுப் போனாலும் நிம்மதியாவா வாழ வுடுவாக? ஒண்ணும் வேணாம்னு சொன்னேன்னு சொல்லு. யாரும் ஒண்ணும் பயப்பட வேணாம்... நான் எங்க சித்தி ஊருக்குப் போறேன்...'' என்றபோது அது அறியாமல் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. அடுத்த நாளே அது நாகப்பட்டினம் தாண்டி ஏதோ ஓர் ஊருக்குப் போய்விட்டது. அதிலிருந்து மீள முடியாமல் சுந்தர் கொஞ்ச நாளைக்குக் கிறுக்குப் பிடித்து அலைந்தான்.
பத்து வருடங்களுக்குப் பிறகு வேளாங்கண்ணி போனபோது தமிழைப் பார்த்தேன். கையில் பிள்ளையோடு, கனிந்துவிட்ட கண்களோடு. சினேகாவுக்கும் விஜய்க்கும் ஓவியத்தில் மொட்டை போட்டிருந்த போர்டுக்குக் கீழே குடும்பத்தோடு நின்றிருந்தது. ''பிள்ளைக்கு மொட்ட போடலாம்னு வந்தேன்... அவுக சீட்டெடுக்கப் போயிருக்காக...'' என்றது சிரிப்பாய். ''ரொம்ப லேட்டாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... வூட்டாளுக தொந்தரவு இருக்குல்ல... அவுகளும் நல்ல மனுஷந்தான். எங்கூரு வழிலேயும் ஒரு இலுப்பத் தோப்பு இருக்கு... வண்டில போம்போது ஒரு வாசம் வரும்ல... அப்பெல்லாம் ஒங்கண்ணன் நெனப்பெல்லாம் வரும்... மாதா கும்புடு... யாருக்கு என்ன குடுத்துருக்கோ, அதான கெடைக்கும்... ங்க பாரு... அடுத்த பொறப்புலயாவது காலனித் தெருல பொறக்காம இருக்கணும்யா... மாதா கும்புடு...'' என அது சிரித்தபோது, எனக்கு அழுகைதான் வந்தது.
இதை எழுதக்கூட வேண்டாம் என்று நினைத்தேன். பெயர்களை மாற்றி எழுதுகிறேன். பெயரென்ன பெயர்..? காதலின் உப்பளத்தில் நடந்து திரும்புகையில் காலெல்லாம் வழிந்திருக்கும் உதிரம் ஒரே நிறம்தான். சாதியின் அதிகாரம் பிரித்துப் போட்ட உயிர்கள் எல்லாம் தமிழரசிகள்தான்... சுந்தர் அண்ணன்கள்தான்!
எத்தனை எத்தனை பேர் இப்படி எங்கெங்கோ கிடக்கிறார்கள் தெரியுமா? சாதியும் மதமும் கொன்று போட்ட ஆன்மாக்கள் எவ்வளவு? அன்பும் பிரியமும் வாழ்வதற்கான தகுதியும் இருந்தும் விலகி நிற்கும் உறவுகள் தரும் வலியோடு வாழ்க்கை முழுக்க வாழ்கிறவர்கள் எவ்வளவு பேர்? நண்பர் பச்சியப்பனின் ஒரு கவிதை சாணித் தரை சிம்னி போல் எனக்குள் எரிகிறது எப்போதும். சாதி மாறிக் காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விட்ட பிறகு, ஏதோ ஒரு விசேஷ நாளில் பிறந்த வீட்டுக்கு மனைவியை அழைத்து வருகிறான் அவன். அந்த நாளில் அவனது உணர்வுகளைச் சொல்கிற கவிதை...
ஆயிரம் முறை சொன்னேன் இவள்தான் கேட்கவேயில்லை நாங்கள் நுழைந்தபோது மனசு நெளிந்து சிரித்துவைத்தீர்கள் தம்பி குழந்தையை இடுப்பில் சுமந்தபடி கை நீட்டும் உங்களைப் போல சம்பிரதாயத்துக்குத் தாவத் தெரியவில்லை என் குழந்தைக்கு தண்ணீர்ப் பாம்புகளாய் எட்டிப் பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சீழ் பிதுக்குகிற அவஸ்தையோடு எதையோ கிசுகிசுக்கிறீர்கள் ஆள் பார்த்து உள் நுழையும் தெருநாய் கயிறறுத்துப் போகும் கன்றுக்குட்டி ஊர் சுற்றி வரும் தம்பி எல்லாமும் சாக்காகிறது எங்கள் காதல் மணத்தைத் தூற்றி முடிக்க விடைபெற்றுத் திரும்பும்போது நீங்கள் சாதாரணமாகத்தான் சொல்லியிருக்கக் கூடும் 'கண்ணு... எல்லாத்தையும் ஏறக்கட்டு வீட்டையெல்லாம் கழுவிவிடணும் என்று இருந்தும் கண்ணீரின்றி திரும்பிப் பார்க்க இயலவில்லை என்னால்!’

அதுவரை அவ்வளவு பிரியமாக வாழ்ந்த உறவுகளை எப்படியெல்லாம் பிரித்துப்போடுகிறது இந்த சாதி?
இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் போயிருந்தபோது, மார்க்கெட் ஏரியாவில் அன்புவுக்குக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏழெட்டு மாதங்களுக்கு முன்புதான் அன்பு கல்யாணம் செய்துகொண்டான். காதல் கல்யாணம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தான். பெண் வீட்டில் தெரிந்து பெரிய பிரச்னையாக, இருவரும் ஓடி வந்து சென்னையில் கல்யாணம் செய்துகொண்டார்கள். இப்போது அவனை இப்படிக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் பார்த்ததும் திடுக்கென்றது.
டிப்டாப் சலூனில் வைத்து அருணன்தான் சொன்னார், ''கொலகாரப் பாவிக... காத்திருந்து போட்டாய்ங்கப்பா. சென்னையில போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்ட பொறவு நல்லாத்தான் இருந்தாக. பொண்ணு வூட்லயும் பேசிச் சமாதானமாய்ட்டாய்ங்க. அந்தப் புள்ளைக்குக் கொழந்த பொறந்து இவிய்ங்களும் போய்ப் பாத்துட்டெல்லாம் வந்தாய்ங்க. இப்போ போன மாசம் 'கொழந்தைக்கு செயின் போடுறோம், வந்துட்டுப் போ’னு சொல்லி அன்பை வரவெச்சு, எங்கயோ கொண்டுபோயிக் கொன்னுப்புட்டாய்ங்க. கையில கொழந்தையோட அந்தப் புள்ள இப்போ ஒத்தையில நிக்குது. சாதி, மதம், சாமி எல்லாம் மனுஷன் உருவாக்குனதுதாண்டா மடப் பசங்களா... எந்த சாமிரா ஒங்களக் கொல பண்ணச் சொல்லுச்சு... நாய்ங்களா...'' என அருணன் இரைந்தபோது, கோபமாக இருந்தது. இப்போதும் சாதியின் பெயரால் பிரிக்கப்படுகிற, கொலையில் முடிகிற காதல்கள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. எந்தச் சுரணையும் இல்லாமல் அந்த மனிதர்களோடு உலவிக்கொண்டும் பழகிக்கொண்டும் இருக்கிறோம்.

விஜயனையும் வள்ளியையும் திருப்பூரின் ஓர் ஒண்டுக்குடித்தனத்தில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. ஆளுக்கு இரண்டு பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு குறுகலான மாடிப்படிகளில் நின்று சிரித்தார்கள். ''அண்ணே வாங்கண்ணே...'' என ஈரத்தோடு வந்து கையை இறுக்கினான் விஜயன். வள்ளி குழந்தையை அள்ளிக்கொண்டு, ''வாங்கண்ணே... ஊர்லாம் எப்பிடி இருக்கு? எங்க வூட்டுப் பக்கம்லாம் போவீங்களா?'' என்றது சிரிப்பாக. விஜயன் தாழ்த்தப்பட்ட பையன். வள்ளி பிற்படுத்தப்பட்ட பெண். இருவரும் காதலித்து பிரச்னை ஆக, ஊரை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கொண்டு திருப்பூரில் வசிக்கிறார்கள். கொஞ்ச நாள் பிரச்னை பண்ணிவிட்டு, 'ஒட்டும் இல்லை உறவும் இல்லை’ என எழுதி வாங்கிக்கொண்டு குடும்பங்கள் பிரிந்துவிட்டன. அதன் பிறகு இவர்கள் திருப்பூரின் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபடி வாழ்கிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரியும். இப்போது வேறு வேலையாக திருப்பூருக்கு வந்தபோதுதான் பார்க்கிறேன். வள்ளி டீ போட்டுத் தர, உட்கார்ந்து ஊரைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும்போதே, வள்ளியின் அப்பா உள்ளே வந்தார்.
''ஷிஃப்ட்டு முடிஞ்சுதா மாமா... முருகன் இப்பதான் வந்தாப்ல...'' என்றான் விஜயன். ''வாங்க... வாங்க... நெனப்பு வெச்சு வந்திருக்கீங்களே...'' என சாயம் படிந்த சட்டையைக் கழட்டியபடி சிரித்தார் வள்ளியின் அப்பா. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவர்கள் காதலுக்கு, 'செத்தாலும் ஏத்துக்க மாட்டேண்டா’ என அவ்வளவு பிரச்னை பண்ணிய அப்பாவா இவர்? சாதியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிவாரே? வெளியே வரும்போது, ''என்ன சமாதானம் ஆகிட்டாரா..?'' என்றேன் விஜயனிடம். ''ஆமாண்ணே... இவ அப்பப்போ பேசிட்டு இருந்தா. மொதல்ல முண்டிட்டுத்தான் இருந்தாரு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சமாதானமாகிட்டாரு. மாமியா செத்த பொறவு இப்போ இங்கயே வந்துட்டாரு. ஊர்ல வெவசாயம்லாம் அத்துப்போச்சுண்ணே. ஆண்ட அடிமைனு இருந்த காலம்லாம் போச்சுல்ல. நூறு வருஷமா கால்ல சாதிங்கிற குண்டைக் கட்டிக்கிட்டே கெடக்கம்ணே ஊர்ல. இங்க பனியன் கம்பெனில எல்லாரும் தொழிலாளிதான். மாமாவுக்கு என் கம்பெனிலயே வேல வாங்கிக் குடுத்துட்டேன்.
எம் பொண்டாட்டிய பதவுசாப் பாத்துக்குறேன். ஒரு நா சாயம்போட்ட கையோட எங் கையப் புடிச்சுக்கிட்டு, 'மன்னிச்சுக்கங்க மாப்ள...’ன்னாரு மாமா. ஆனா, ஊருக்குப் போனா இப்பமும் சாதி சொல்லித் தப்பாத்தான் பேசுவானுவ. அதனால ரெண்டு பேரும் போறதே இல்ல. சாதி என்னண்ணே சாதி... மனுஷந்தான் முக்கியம்னு மாமா மாரி எல்லாருக்கும் புரியணும்ணே...'' என்றான் புன்னகையோடு. மேலிருந்து வள்ளி அப்பா குரல் கொடுத்தார், ''மாப்ள... விருந்தாளி வேற வந்துருக்காப்ல. பார் கீருப் பக்கம் போனியன்னா, என்னையும் சேத்துக்கங்க!''
சமீபத்தில் என் முஸ்லிம் நண்பன் ஒருவன் சேஸிங் காதல் திருமணம் செய்துகொண்டான். பெண் இந்து. இரு வீட்டார் எதிர்ப்போடு இவர்கள் மதுரைக்கு ஓடிப்போய், ஒரு நண்பனின் உதவியோடு கல்யாணம் செய்துகொண்டார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்ட நண்பன், ''அண்ணே... ரெஜிஸ்டர் மேரேஜ்லாம் முடிஞ்சுதுண்ணே... ரெண்டு பேரும் தனியா வீடெடுத்து செட்டிலாகிட்டோம். ரெண்டு பேரும் வெவ்வேற மதம்கிறதால ஸ்பெஷல் ஆக்ட் சட்டப்படி சர்ட்டிஃபிகேட் வேணும். அப்போதான் எல்லாம் முறைப்படி செல்லுபடியாகும். ரேஷன் கார்டெல்லாம் அப்ளை பண்ண முடியும். அதுக்கு ஒரு ஹெல்ப் வேணும்ணே...'' என்றான்.
நான் திருவண்ணாமலை 'சாகசம்’ அமைப்பைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். ''அது பண்ணிக்கலாம் சார்... நிறையப் பேருக்கு நாங்க பண்ணிக் குடுத்துருக்கோம். ரெண்டு பேரும் உண்மையாக் காதலிச்சாப் போதும் சார். மத்ததெல்லாம் ஒரு விஷயமா? நீங்க அவரை அனுப்புங்க, விசாரிச்சுட்டு பண்ணிக்கலாம்...'' என்றார் ஹரிகிருஷ்ணன்.
சான்றிதழ் வாங்கிக்கொண்டு நண்பனோடு அவன் வீட்டுக்குப் போனேன். ஷெல்ஃபில் பிள்ளையார், முருகன் என சாமி படங்கள் இருந்தன. மேல் தட்டில் குர்-ஆன் இருந்தது. ''வெள்ளிக் கிழமைன்னா, அவளைக் கோயிலுக்கு அழைச்சுட்டுப் போய் விட்ருவேன். நான் கரெக்ட்டா மாஸ்க்குக்குப் போயிருவேன். அவ அவ சாமியக் கும்பிட்டுக்குவா, நான் எங்க சாமியத் தொழுதுக்குவேன். அதுல ஒரு சிக்கலும் இல்லண்ணே... வாழ்ற வாழ்க்கதாண்ணே முக்கியம்...'' என்ற நண்பனிடம், ''சரி... கொழந்த பொறந்தா எப்பிடி வளப்பீங்க..?'' என்றேன். சட்டென்று அவன் சிரித்தபடி சொன்னான், ''ஆம்பளப் புள்ளன்னா, மனுஷனா வளப்போம்... பொம்பளப் புள்ளன்னா மனுஷியா வளப்போம்ணே!''
- போட்டு வாங்குவோம்...