'விழி'ப்பு உணர்வுக்கு ஒரு புத்தகம்!
##~## |
'கண் அளக்காததையா கை அளக்கப் போகுது?’ என்பார்கள் கிராமப்புறங்களில். கண் மருத்துவச் சேவையில் சேவா ரத்னா வைத்ய ரத்னா பேராசிரியர் டாக்டர் என்.எஸ். சுந்தரம், தான் பெற்ற அறிவையும், அனுபவத்தையும் ஒருங்கிணைத்து 'கண் ஒளி’ என்கிற அற்புதமான நூலை எழுதி இருக்கிறார். கண்ணின் மகத்துவம், அமைப்பு, பரிசோதனை முறைகள், கண் புரை, கிளாக்கோமா எனக் கண் பாதிப்புகளைப் பற்றி நிறைய விஷயங்கள் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.
''அசைந்துகொண்டே ஒருவர் புத்தகம் படிக்கும்போது, விழித்திரையில் ஒளிக்கதிர்கள் நிலையாக ஒரே இடத்தில் விழாது. அத்தகைய நிலையை மாற்றிக் கண்கள் ஒரே இடத்தில் ஒளிக்கதிர்களைப் பதியச் செய்வதற்கு முயலும்போது, கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டுத் தலைவலி வரலாம். எனவே, பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் பயணம் செய்யும்போது புத்தகம் படிப்பது தவறு. அதனால், கண் நரம்புகள் பாதிக்கப்படும்.'' என்கிற டாக்டர் சுந்தரம், ''படிக்கும்போது முகத்தில் நேராக வெளிச்சம் படக் கூடாது. அதிக ஒளி இல்லாத அளவான வெளிச்சம் இருக்க வேண்டும்; புத்தகத்தைச் சாய்வாக வைத்துப் படிக்க வேண்டும்'' என்று படிக்கும் விதங்களையும் வகைப்படுத்துகிறார். கண் பாதுகாப்பு, எது சரி, எது தவறு என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள், சிகிச்சைமுறைகள், கண் தானத்தின் முக்கியத்துவம், மரபியல்ரீதியாக வரும் கண் நோய்கள், பார்வையற்றவர்களுக்கு உதவும் விதம் என இந்த நூலில் சமூக அக்கறையுடன் அலசப்பட்டிருக்கும் விஷயங்கள் அதிகம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், பல விஷயங்களையும் மிக எளிமையாகப் புரியவைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் சுந்தரம்.

மனதில் எழும் பொதுவான கேள்விகளுக்கும் தனித்தனி அத்தியாயங்களாகப் பிரித்து விரிவாகப் பதில் சொல்லி இருப்பது தனிச் சிறப்பு. கண் மருத்துவமனைகளில் கண் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் எழுத்து அட்டை இந்த நூலுடன் இணைக்கப்பட்டு இருப்பது பலருக்கும் பலன் அளிக்கும் வரம். இதன் மூலம் வீட்டிலேயே பார்வைக் குறைபாட்டின் அளவை அறிந்துகொள்ளலாம். கண்களைப் பரிசோதித்துக்கொள்ள கலர் விஷன் ஷார்ட், வெள்ளெழுத்துப் பரிசோதனைத் தாள் போன்றவையும் அளிக்கப்பட்டு உள்ளன.
பள்ளி, கல்லூரிகள் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு இல்லம்தோறும் படித்து விழிப்பு உணர்வு பெறவேண்டிய பொக்கிஷ நூல். கண் தானம், கண் பாதுகாப்புப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே பரவலாக்க வேண்டும் என்கிற நூல் ஆசிரியரின் கனவு இந்த நூலின் மூலம் நிச்சயம் நனவாகும்.