
உயிர் மொழி - 20
வேட்டையாடு... விளையாடு!
##~## |
இப்படிப் பெண்கள் எல்லாம் பிள்ளைப் பராமரிப்புக்கு முதலிடம் கொடுத்து, ஒரே இடமாக இருக்க ஆரம்பிக்க... ஆண்களின் நிலை இதற்கு நேர்மாறாக இருந்தது. அவனுடைய கைகளுக்குப் புதிய நுணுக்கங்கள் சாத்தியமாகிவிட, அதை வைத்துக்கொண்டு அவனால் சும்மாவே இருக்க முடியவில்லை. அதனால் கை வேலைப்பாடுகள் பலவற்றைச் செய்ய ஆரம்பித்தான். சிப்பிகளையும் கற்க ளையும் தேய்த்து ஆயுதங்களை உருவாக்கி னான். அவை, சிறு சிறு வேட்டைகளுக்கு உகந்ததாக அமைந்துவிட, வேட்டை என்பது மனித ஆணின் இஷ்டப் பொழுதுபோக்காக மாற ஆரம்பித்தது. குரங்காக இருந்த வரை மனிதர்கள் அவ்வ ளவாக வேட்டையாடி இருக்க வில்லை. ஆனால், மனிதர்களாக மாற ஆரம்பித்தபோதோ, பெரி தாகிக்கொண்டே இருந்த அவர் களது மூளைக்குக் கூடுதல் போஷாக்கு தேவைப்பட்டது. அந்தச் சமயத்தில் உலகெங்கும் The Great Ice Age என்று சொல் லப்படும் கொடும் பனிக் காலம் பரவிவிட, தாவரங்கள் எல்லாம் பனியில் பட்டுப்போயின. தாவரப்பட்சிணியாக வாழ்வது சிரமமான காரியம் ஆனது. அதனால், மனிதர்களில் ஒரு பிரிவினர் மட்டும், மாமிசப் பட்சிணிகளாக மாறினார்கள்.
காய் கனிகளைப்போல, மாமிசம் மரத்தில் காய்த்துக்கொண்டு இருக்காதே, அவற்றை வேட்டையாடித்தானே கொண்டு வர வேண்டும்? கொடும் பனிக் காலத்தின் குளிர், பெரிதாகிக்கொண்டு இருந்த மனித மூளையின் எரிபொருள் தேவை, கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நெடு நேரத்துக்கு சக்தி கொடுக்கும் மாமிசப் புரதத்தின் fuel economics இவை எல்லாமுமாகச் சேர்ந்து மாமிசத்தின் மவுசை அதிகரித்தன.
இந்தக் காலத்தின் கட்டாயத்துக்கு ஏற்ப, மனிதப் பெண்களும் தங்கள் துணைத் தேர்வு விதிகளை உருமாற்றினார்கள். அது வரைஆணின் துணையை வெறும் சுகத்துக்காக மட்டுமேநாடிய பெண்களின் வரலாற்றில், முதல்முறையாக உண வுக்காக ஆண்களை அண்டிப் பிழைக்க ஆரம் பிக்க வேண்டிய அவசியம். இதனால், அதிக உணவை (மாமிசத்தை) வேட்டை ஆடத் தெரிந்த வனையே பெண்கள் விரும்பி உறவாட முயல, 'வேட்டுவ வீரியம்’ ஆணின் கலவியல் வெற்றியை நிர்ணயிக்க ஆரம்பித்தது.
இன்றும் அந்தமானில் வாழும் ஜாரவா பழங்குடியினரிடையே இந்த மரபு நடைமுறையில் இருக்கிறது. ஜாரவா பெண்களை மணக்க விரும் பும் ஆண், தானே போய் வேட்டையாடிய கறியைத் தன் கையாலேயே பக்குவமாகச் சமைத்து, பெண்ணுக்குக் கொடுப்பானாம். அவன் கொண்டுவந்த கறி பிடித்து இருந்தால்தான் பெண் அவனைத் தேர்ந்தெடுத்து, கூடி வாழ்வா ளாம். ஆனால், வேட்டை என்பது சாதாரணக் காரியம் இல்லையே... வெகு தூரம் நடந்து, தன்னைவிடப் பெரிய, வலிய மிருகங்களைக் கொன்று, அதன் கறியைச் சுமந்து, காடு, மேடு, மலைகளைக் கடந்து குகைக்குத் திரும்ப வேண்டும். இவ்வளவு கடுமையான உழைப்பைச் செய்ய வேண்டுமானால், அவனுக்கு விளையாட்டு வீரர்கள் மாதிரி கட்டுமஸ்தான உடல் தேவை. இந்தத் தேவைக்கு ஈடு கொடுத்து, மனித ஆணின் மரபணுக்கள் மாறிக்கொண்டே இருக்க, அவன் உடல் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் இன ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம் பித்தது.
இந்த டெஸ்டோஸ்டீரான் இருக்கிறதே, அது ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்கே காரணம். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்... ஜனிக்கும்போது, எல்லாக் கருக்களுமே பெண்ணாகத்தான் உருவாகின்றன. இன்றும் மனிதக் கருக்கள் அனைத்துமே ஆரம்ப காலத்தில் பெண் வடிவாகத்தான் இருக்கின்றன. ஆறு வாரங்கள் இப்படிப் பெண்ணாகக் கருவறை வாசம் செய்த பிறகுதான், Y குரோமோசோம் இருக்கும் கருக்கள், டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இந்த டெஸ்டோஸ்டீரான் அந்தக் கருவின் உடல் முழுக்கப் பரவி, ஏற்கெனவே பெண்ணாக இருக்கும் இந்தக் கருவை, வேரில் இருந்து நுனி வரை rewiring செய்து ஆண்மைப்படுத்திவிடுகிறது. இப்படி masculinize செய்யப்படுவதால்தான் ஆண் உறுப்புக்கள், ஆண்மைத்தனமான உடல் அமைப்பு, ஆண் என்கிற பாலியல் அடையாளம் எல்லாம் ஏற்படுகின்றன.
இப்பேர்ப்பட்ட மகிமைகள் வாய்ந்த இந்த டெஸ்டோஸ்டீரானைத்தான் ஆதிகால ஆண்களின் உடல்கள் மிகவும் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்தன. இதனால் மனித ஆண், மனிதப் பெண்ணைவிட மிக உயரமாக, வலிமையாக, தேக உறுதிகொண்டவனாக மாற ஆரம்பித்தான். அதிக டெஸ்டோஸ்டீரான் ததும்பும் ஆணைத் தேர்ந்தெடுத்தால்தான் தனக்கும் தன் குட்டி களுக்கும் உணவு, பாதுகாப்பு, எல்லாம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல்,அதிக டெஸ்டோஸ்டீரான் இருக்கும் ஆணோடு கூடினால்தானே அதற்கு உண்டான மரபணுக்களை இவள் குழந்தைகள் பெற முடியும்? அப்போதுதானே அடுத்த தலைமுறையும் சுபிட்சமாக வாழ முடியும்?
ஆக, உணவு என்கிற அண்மைக் கால அனுகூலத்தைவிட, அடுத்த தலைமுறைக்கான மரபணுத் தேர்வு என்ற தொலைநோக்கு அனுகூலமும் இதில் ஒளிந்து இருந் ததால், பெண்கள் அதிகபட்ச டெஸ்டோஸ்டீரான் சுரக்கும் ஆண்களை தங்கள் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார்கள். இதனால், ஆண்களுக்குள் ஒரு டெஸ்டோஸ்டீரான் போட்டி தலையெடுக்க ஆரம்பித்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதற்குச் சில பக்க விளைவுகள் ஏற்பட, அதனால் மனித வரலாற்றில் பல புதுத் திருப்பங்கள் உருவாகின. அதுபற்றி...
(காத்திருங்கள்...)