மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 81

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

''தங்க ராணி... நீயும் போயிட்டியே... இங்க நான் தனியா எப்பிட்றி கெடப்பேன்'' எனக் கதறியது முதுமையின் தனிமைக் குகையில் பட்டு எதிரொலிக்கிறது இப்போதும்.

ண்பா... கார் வாங்கிருக்கேன்!'' - புது இண்டிகாவோடு வந்தார் செந்தில்.

வட்டியும் முதலும் - 81

''அப்பாவுக்காக நண்பா... ரெண்டு கிட்னியும் அவருக்குப் பழுதாகிருச்சு. வாரத்துக்கு ரெண்டு தடவை டயாலிசிஸ் பண்ணணும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. வந்தவாசியில் இருந்து அடிக்கடி சென்னைக்கு வரணும்ல... அதான் கார் வாங்கிட்டேன். ஹார்பர்ல வேலை பாத்த மனுஷன்... காலம் பூரா லோடடிச்சு எங்களைக் காப்பாத்துனவர்... எம்பது வயசாகிப்போச்சு. இருக்குற வரைக்கும் அவரைத் தாங்கணும்ல!'' என்றபோதே ஆஸ்பத்திரி வந்துவிட்டது. பாதி இமைகள் பிரிக்கும்போதே, ''பேரனுங்க எங்க..?'' என்று தான் கேட்டார் செந்திலின் அப்பா.

''ஊர்ல கொண்டாந்துவிடேண்டா அவங்கள. ஒரு வாரம் லீவு போட்டா, கொறஞ்சாப் போயிரும்...'' எனக் காற்றில் துழாவினார். ''மேலப் பங்குக்குத் தண்ணி பாய்ச்சணும்... போணும்!'' எனச் சொல்லிக்கொண்டே கண்களை மூடினார். சட்டென்று கை உயர்த்தி, ''செந்திலு... எட்டு வெள்ளப் பேப்பர்ல கைநாட்டு வெச்சுக் குடுத்துட்டேண்டா. எட்டு வெள்ளப் பேப்பரு...'' என்றார். ''அதான் குடுத்துட்டியே... எத்தன தடவ சொல்லுவ'' என நண்பர் அதட்ட, ''பேரனுங்க எங்கடா..?'' என முணுமுணுத்தபடி ஒருக்களித்துப் படுத்தார். ''சொத்து பிரிக்கறதுக்காக எட்டு வெள்ளப் பேப்பர்ல கைநாட்டு போட்டுக் குடுத்துருக்காரு... எனக்கு ஒரு அண்ணன், ரெண்டு அக்கா, தங்கச்சிங்க. எல்லாத்துக்கும் சொத்து சமமாப் போய்ச் சேரணும்ல. நாலு பேரப் புள்ளைக... ஒண்ணும் வர முடியலே. எல்லாம் ஸ்கூலு கீலுனு கெடக்கு...'' என்றார். நண்பர் வெளியே வரும்போது, ''பேரனுங்க எங்க..?'' என்ற அந்த முதிய குரலும் என்னுடன் காரில் ஏறிக்கொண்டது.

போன வாரம் ப்ரியா வீட்டுக்குப் போயிருந்தபோது, ''பாப்பா எங்கே?'' என்று கேட்டதற்கு, ''ஊர்ல இருந்து அப்பா வந்துருக்காரு... ரெண்டு பேரும் வெளிய போயிருக்காங்க...'' என்றாள். வாசலில் வந்து பார்த்தபோது, கடைத் தெருவில் ப்ரியாவின் நாலு வயது குட்டிப் பாப்பா முன்னால் வர, அதன் கையைப் பிடித்தபடி பின்னால் வந்துகொண்டு இருந்தார் அந்தத் தாத்தா. சட்டென்று அவரைப் பார்க்கத்தான் குழந்தை மாதிரி இருந்தது. ''போ தாத்தா... ஒனக்கு ஒண்ணுமே தெரியல...'' என்கிற பேரன், பேத்திகளை அள்ளி வைத்துக்கொண்டு கொஞ்சும்போது, எல்லா தாத்தா, பாட்டிகளும் குழந்தைகளாகிவிடுகிறார்கள்.

அவர்களுடைய முதுமை, தனிமை எல்லாவற்றையும் அந்தப் பிள்ளைகள்தான் நிறைக்கின்றன. மடியில் இருந்து உதறிக் குதித்து விளையாட ஓடும் பேரப் பிள்ளைகளைப் பார்க்கும் தாத்தா, பாட்டிகளின் கண்களில் மறுபடி தாய் முலை தேடும் தவிப்பு கனல்வதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? மிகச் சாதாரணமான ஒரு வார்த்தை, விசாரிப்பு, தொடுதல், பொருள் அவர்களை எவ்வளவு சந்தோ ஷம் அடையவைக்கிறது என்பதை எவ்வளவு பேர் உணர்வோம்? அலைபேசியில் இழுத்து... இழுத்து, ''பார்வ முக்காவாசி மங்கிப் போச்சுய்யா... பொகையாத்தான் தெரியுது. வந்து ஒரு எட்டு பாரேன்யா...'' எனப் பேசிக்கொண்டு இருக்கும்போதே, ''அப்புறம் கூப்பிடறேன்த்தா...'' என கட் பண்ணுகிறவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம்.

''இந்தாளு அநாவசியமாக் கெடந்து என்னென்னமோ கத்திட்டுக் கெடக்காரு... இது சரிப்பட்டு வராது'' என அப்பா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே... எங்கிருந்தோ வந்து நின்று, கைத்தடியைத் தூக்கி வீசி, ''நா போறேண்டா... இங்க இருந்தாத்தான உங்களுக்குப் பிரச்னை... நா எங்கயாவது போறேன்...'' என இரைந்த ஜம்புத் தாத்தாவைப் புரிந்துகொள்ள எத்தனை வருஷம் ஆயிற்று? கற்பூரம் ஆத்தா இறந்து உடல் கிடத்தப்பட்டு இருக்க, காலடியில் மௌனமாகத் தலை குனிந்து உட்கார்ந்திருந்த ரகு தாத்தா ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. கல்லுளிமங்கன் மாதிரி அப்படியேதான் இருந்தார் சுடுகாடு வரைக்கும்.

எல்லாம் எடுத்து அடுக்கிச் சிதை வைக்கும்போது, படாரெனக் கீழே விழுந்து பொட்டேர் பொட்டேரென முகத்தில் அடித்தபடி,

''தங்க ராணி... நீயும் போயிட்டியே... இங்க நான் தனியா எப்பிட்றி கெடப்பேன்'' எனக் கதறியது முதுமையின் தனிமைக் குகையில் பட்டு எதிரொலிக்கிறது இப்போதும்.

எப்போது போனாலும் அரசூர் கல்யாணி ஆத்தா, ''ஒரு கிலோ பாற மீனு எடுத்து சமைச்சுருக்காவோ... எனக்கு ஒரு துண்டுக்கு மேலே போடல... வாய் நமநமனு கெடக்கு... கொஞ்சம் பூந்தி கேட்டேன்... குடுக்க மாட்றானுவ... காலைல ஒரு தேங்காத் தொவைய கூடவா குடுக்கக் கூடாது...'' எனச் சாப்பாட்டைப் பற்றியேதான் பேசிக்கொண்டு இருக்கும். ''பேசறதக் கேக்கக்கூட நாதி கெடையாது. அங்காளி பங்காளியா வாழ்ந்துட்டு பொடீர்னு தனியா உட்ட மாரி நிக்கறது கொடுமைப்பா. மவ, மருமவன்னு எதுவும் கேக்கறதில்ல... பேத்தியக் கொஞ்சுனாக்கூட குத்தம்னு பேச்சு வந்தப்பதான் கௌம்பி வந்துட்டேன். அந்தி மத்துல ஒறவு இல்லாம வாழறது இருக்கு பாருப்பா... அது சொல்லி ஒணத்த முடியாதுப்பா...'' என திருச்சி முதியோர் இல்லம் ஒன்றின் வராந்தாவில் நின்றபடி சொன்ன அந்த முதிய கண்கள் உள்ளே எரிகிறது இப்போதும்.

வட்டியும் முதலும் - 81

'டோக்யோ ஸ்டோரி’ என்ற படம் பார்த்து இருக்கிறீர்களா? ஒரு வயதான தம்பதி. நகரத்துக் குச் சென்று செட்டிலாகிவிட்ட தங்கள் பிள்ளை களைப் பார்க்கச் செல்வார்கள். ஒவ்வொரு பிள்ளையாகப் போய்ப் பார்த்து அவர்கள் அடைகிற நிராகரிப்பும், வசைகளும், முதியவர்களின் தனிமையையும் ஏக்கங்களையும் பேசுகிற படம். அதில் ஒரு காட்சியில் தன் பிள்ளையிடம் அந்தக் கிழவர், ''நீங்க எங்களுக்கு எதுவும் பண்ண வேணாம்டா... எங்களை எப்பவாவது நெனச்சுக்குவீங்களா?'' எனக் கேட்பார். பார்த் துக்கொண்டு இருந்த கணமே கண்ணீர் வந்துவிட்டது.

இந்த விதையைப் போட்டவர்களை, வளர்த்தவர்களை நாம் எவ்வளவு நினைத்துக்கொள்கிறோம் என்ற கேள்வி குடைந்தது. நமக்கான பெருவாழ்வை வாழ்ந்தவர்கள் குறுகி நின்று, 'எங்களை நினைச்சுக்குவீங்களா?’ எனக் கேட்பது எவ்வளவு துன்பம்? ஆனால், அந்தக் கேள்வி நிறைய முதியவர்களிடம் இருந்துகொண்டே இருக்கிறது.

ரகீம்பீ பாட்டி நாலைந்து வெள்ளாட்டுக் குட்டிகளை வளர்க்கிறது. என் நண்பனின் பாட்டி. எப்போது அந்த வீட்டுக்குப் போனாலும் அந்தக் குட்டிகளுக்குத் தழை போட்டுக்கொண்டோ, தண்ணி வைத்துக்கொண்டோதான் இருக்கும். தென்னந்தோப்பிலோ, பிடாரி கோயில் திடலிலோ மேயவிட்டு உட்கார்ந்திருக்கும். அதற்கு அந்த ஆட்டுக்குட்டிகள்தான் உலகம். ஒரு முறை நண்பனின் அப்பா அந்தக் குட்டிகளில் ஒன்றை பாட்டிக்குத் தெரியாமல் கொண்டுபோய் கசாப்புக் கடையில் விற்றுவிட்டார். இது தெரிந்ததும் ரகீம்பீ பாட்டி அழுத அழுகை அவ்வளவு பெருசு. விடாமல் நாளெல்லாம் ஒப்பாரி வைத்தது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், ''ஏய் கெழவி... எதுக்கு இப்படிக் கெடந்து அனத்துற? ஒரு ஆட்டுக்குட்டில என்ன வந்துச்சு ஒனக்கு?'' என நண்பனின் அம்மா கேட்டபோது உக்கிரமாகப் பார்த்தபடி பாட்டி சொன்னது, ''என்னப் பத்தி அந்த வெள்ளாட்டுக் குட்டிக்குத் தெரியறது ஒனக்குத் தெரியுமாடி... நாங்க பேசறத நீ காது குடுத்துக் கேட்டியா... போடி...''

ரகீம்பீ பாட்டிக்கு ஆட்டுக்குட்டி மாதிரி சரஸ்வதி பாட்டிக்கு கவர்மென்ட் டி.வி. எப்போது போனாலும் டி.வி-யில் ஏதாவது பார்த்துக்கொண்டே கிடக்கும். சீரியல் கதையை எல்லாம் இன்ச் இன்ச்சாகச் சொல்லும். ''ஐய்ய... இவனுக்கு நடிப்பே வரலடா. என்னடா இது கேமராவுல இருட்டா புடிச்சுருக்கானுவோ. மீசிக்கே சரியில்லடா....'' என டெக்னிக்கல் டீட்டெய்ல் வரை சொல்லும். ஏதோ ஒரு கோபத்தில் மாமா ஒருமுறை, 'ஒன்னோட சேத்து இந்த டி.வி-யையும் பொதைக்கணும் போலருக்கு... தூக்கிட்டுப் போயி காயலான் கடைல போட்டுட்டு வர்றேன்!’ எனக் கத்த, ''போடா... போடா... ஒன்னையப் பெத்ததுக்கு இந்த டி.வி. பொட்டியப் பெத்துருக்கலாம்டா...'' என்றபடியே டி.வி. பார்த்தது பாட்டி.

பிள்ளைகளிடம் சொல்வதற்கும் பெறுவதற் கும் எவ்வளவோ இருக்கிறது தாத்தாக்களுக் கும் பாட்டிகளுக்கும். பாதியைக்கூட அவர்கள் சொல்வதும் இல்லை... பெறுவதும் இல்லை. அதைப் பற்றி நமக்குத் தெரிவதுகூட இல்லை.

வட்டியும் முதலும் - 81

'அகாலத்தில் இருமும் பேரழகி பெருந்தேவி உன் நெஞ்சுச் சளியெல்லாம்| நெய்யாகி எரியுதடி என் உயிர்விளக்கு’

- என்ற கவிதை என் அம்மாவை நினைத்து நான் எழுதியது.

சமீபத்தில் வீஸிங் பிரச்னைக்காக சென்னையில் உள்ள மருத்துவரிடம் காண்பிக்க அம்மாவை வரச் சொன்னேன். இதயப் பரிசோதனைக்காக ஒருநாள் முழுக்க ஒரு கருவியை உடலில் கட்டிவிட்டார்கள். பரிசோதனை முடிவை வாங்கச் சென்றபோது,  அந்தப் பெண் மருத்துவர் சொன்னார், ''ஹார்ட்லாம் நார்மலா இருக்கு... ஒண்ணும் பிரச்னை இல்லை. அவங்க இதயத்துல இருக்கறதெல்லாம் ஏக்கம்தான். பிள்ளைகளைப் பத்தின ஏக்கம். உங்க அன்புதான் அவங்களுக்கு மருந்து.''

உண்மைதான். பள்ளிக்கூட வளாகத்தில் பேரன், பேத்திகளுக்காகக் காத்திருக்கும், வேறு வழி இல்லாமல் இன்னமும் உழைத்துக் கிடக் கும், கடற்கரை நடைபாதைகளில், கோயில் களில், பூங்காக்களில் தனித்திருக்கும் எல்லா முதியவர்களின் இதயங்களிலும் இந்த ஏக்கம் நிறைந்து இருக்கிறது. பேரன், பேத்திகள் உறங்கிவிட்ட பின்னிரவுகளில், அவர்களைத் தடவிக் கொடுத்தபடி விழித்திருக்கும் அந்த முதியவர்களின் இதயங்கள் நமக்காகவே துடிக்கின்றன. குழந்தைகளுக்கு வாட்டர் கலர் வாங்கிப் போவதைப் போல, அவர்களுக்கு அன்பை எடுத்துப்போனால்... அது போதும்!

- போட்டு வாங்குவோம்