வேணு சீனிவாசன், ஸ்யாம்
##~## |
கடைத்தெரு குறுகிய தெருவாக இருந்தது. கிழங்குகள், காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு இருந்தன. சோப்பு, சீப்பு, பலகாரங்களை விற்கும் கடைகள் காணப்பட்டன. தெருவில் இரண்டு பெண்கள் மஞ்சள் சேலை கட்டிக்கொண்டு நாக்கில் சிறிய வேல் அலகு குத்திக்கொண்டு உட்கார்ந்து இருந்தனர். குரங்காட்டி ஒருவன் குரங்கைவைத்து வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தான். வேப்ப மரத்தின் அடியில் கிளியைவைத்து ஒருவன் ஜோசியம் சொல்லிக்கொண்டு இருந்தான். மைதிலியும் வாசுவும் இதுபோன்ற காட்சிகளை இதுவரை பார்த்ததே இல்லை. ஆகவே, விழிகள் விரிய வேடிக்கை பார்த்தபடியே நடந்தனர்.
ஆறுமுகமும் தாத்தாவும் தேவைப்பட்ட பொருட்களை வாங்கிக்கொண்டனர். அடுத்த அரை மணியில் அவர்கள் காட்டு வழியில் மலை உச்சியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிவிட்டனர். ஆளுக்கு ஒரு பையை முதுகில் கட்டிக்கொண்டு மலையேறும் வீரர்களைப் போல உற்சாகத்தோடு நடந்தனர்.
நீண்ட தொலைவு நடந்து களைப்புடன் ஆற்றை ஒட்டிய மரத்தின் அடியில் உட்கார்ந்தனர். எதிரே பிரமாண்டமான ஒற்றை மலை. ''இதன் மீதுதான் நாம் ஏறிப்போக வேண்டும்'' என்றார் தாத்தா.
ஆற்றில் இறங்கிக் குளித்தனர். நல்ல மதிய வெயிலிலும் ஆற்று நீர் பனிக்கட்டியாகக் குளிர்ந்தது. களைப்பு போகும் வரை குளித்துவிட்டுக் கரையேறினர். மறுபடியும் ஒற்றையடிப்பாதைப் பயணம். ஒரு மரத்தின் தாழ்வான கிளையை விலக்கிக்கொண்டு ஆறுமுகம் முன்னால் நடந்தான். அவனைத் தொடர்ந்து தாத்தா போனார்.
எம்பிக் குதித்து, கிளையை எட்டிப் பிடித்து ஓர் உலுக்கு உலுக்கிவிட்டு நடந்தான் வாசு. அடுத்த நிமிடமே ''ஐயோ... சுரீல் சுரீல்னு எதுவோ கடிக்குது'' என்று கத்தினான்.
மைதிலியும் தாத்தாவும் அவனுடைய கைகளைக் கூர்ந்து கவனித்தனர். மிகச் சிறிய சிவப்பு எறும்புகள். மரத்தில் இருந்த எறும்புகள், வாசு கிளையை உலுக்கியதும் அவன் மீது விழுந்து கடிக்கத் தொடங்கிவிட்டன. அவன் கைகளிலும், கழுத்திலும் சிறிய சிறிய சிவப்புப் புள்ளிகள்.

''இது நெருப்பு எறும்புகள். கடிச்சா, நெருப்புப்பட்ட மாதிரி எரியும்'' என்றான் ஆறுமுகம்.
''இப்ப என்ன செய்றது?'' தம்பியின் அவஸ்தையைப் பார்த்து வருத்தப்பட்டாள் மைதிலி.
''மூசோ தாத்தா கொடுத்த விபூதி இருக்கு. எடுத்துத் தடவு, எல்லாம் சரியாப் போயிரும்'' என்றார் தாத்தா.
''விஷப்பூச்சிங்க தொல்லையில் இருந்து நம்மைக் காப்பாத்தத்தான் மூசோ விபூதியைக் கொடுத்து இருக்கார்'' என்ற ஆறுமுகம் வாசுவின் இரண்டு கைகளிலும் விபூதியை அள்ளி 'முருகா முருகா’ என்று சொல்லியபடி பூசினான்.
எல்லோரும் அப்படியே பூசிக்கொண்டனர். பிறகு மலையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர். அரை மணி நேரம் நடந்த பிறகு, மூங்கில் காடு ஒன்று வந்தது. அதற்குள் புகுந்து நடக்க ஆரம்பித்தனர். ''காடு ரொம்ப அடர்த்தியா இருக்கு. நடக்கவே முடியலை'' என்றான் வாசு எரிச்சலோடு.
''காடுகள் இருந்தாத்தான் மழை கிடைக்கும்'' என்றார் தாத்தா.
''மழை மட்டுமா? எறும்புக் கடியும் சேர்ந்து கிடைக்குது'' என்றான் வாசு கோபத்தோடு.
''இந்த உயிர்க்கோளமான பூமிக்குத்தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்வது உலகின் 13 நாடுகளில் உள்ள காடுகள்தான். அவற்றில் இந்தியாவும் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சிமலை மற்றும் இமயமலைக் காடுகள் ஆகியவை உலகின் உயிர்க் காற்றை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகிக்குது. இந்தக் காடுகளைக் காப்பாற்றுவதன் மூலமாகத்தான் நாம் வெப்பத்தைக் குறைத்து, உயிர்களையும் பயிர்களையும் காப்பாற்ற முடியுது'' என்று தான் படித்த விவரங்களைத் தெரிவித்தாள் மைதிலி.
அவர்கள் அன்று மாலையில் மலை உச்சியை அடைந்தனர். எங்கிருந்தோ ஓர் அருவி கொட்டிக் கொண்டு இருந்தது. அருவிக்கரையின் ஓரமாக சிறியதும் பெரியதுமாக பல குகைகள் இருந்தன. இரையைத் தேடி காலையில் வெளியே சென்ற பறவைகள், கூடுகளை நோக்கி வந்துகொண்டு இருந்தன.
''அநேகமாக மூசோ சொன்ன குகைகள் இவைதான். இப்போ ரெஸ்ட் எடுத்துக்கலாம், எனக்கு கால் வலிக்குது'' என்றவாறு ஒரு பாறை மீது உட்கார்ந்தான் வாசு.
ஆறுமுகம் தரையில் உட்கார்ந்து, ஒரு குச்சியால் மண்ணைக் கிளற ஆரம்பித்துவிட்டான். மைதிலி சற்று கீழே இறங்கி அருவித் தண்ணீரை பாட்டில்களில் பிடித்துவந்தாள்.

தரையில் புற்கள் அடர்த்தியாக வளர்ந்து இருந்தன. பெயர் தெரியாத காட்டு மரங்கள் நெருக்கமாக இருந்தன. அவற்றின் உச்சி எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை. குரங்குகள் கிளைகளில் தாவின. தரையில் கொட்டிக்கிடக்கும் வெள்ளை, மஞ்சள் பூக்களைத் தாய் மானும் அதன் இரண்டு குட்டிகளும் தின்றுகொண்டு இருந்தன. சற்றுத் தொலைவில் அருவிக்கரையில் ஆண் கடம்பை மான் ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தது.
''சூரியன் இன்னும் அரை மணியில் மறைஞ்சுரும். அப்புறமா இங்கே வெளிச்சம் இருக்காது. இருட்டுறதுக்குள்ளே பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கணும். அப்பத்தான் பயம் இல்லாம ராத்திரி தங்கவும், தூங்கவும் முடியும்'' என்றார் தாத்தா.
''நமக்கு இங்கே ரூமா கட்டிவெச்சு இருப்பாங்க. ஏதாவது ஒரு மரத்தடியில் தங்க வேண்டியதுதான்'' என்றான் ஆறுமுகம்.
''அதுதான் எந்த மரம்?'' என்றார் தாத்தா.
''இதோ இங்கே எத்தனை பெரிய மரங்கள் இருக்கு. அதில் ஒண்ணு கீழே துணியை விரிச்சிப் படுக்க வேண்டியதுதான்'' என்றான்.
அப்போது எங்கிருந்தோ ஓர் அம்பு சர் என்ற சத்தத்தோடு காற்றில் பறந்துவந்து ஆறுமுகத்துக்கு அருகே இருந்த மரத்தில் குத்தியது.
''ஐயோ!'' என்று அலறினான் ஆறுமுகம்.
(தொடரும்)