ஸ்பெஷல்
FA பக்கங்கள்
Published:Updated:

கண்ணாடிப் புலி !

என்.ஸ்ரீதரன்,சூர்யா,

##~##

ராம்லால் முகம் பார்க்கும் கண்ணாடிகளை விற்பனை செய்பவன். அவனுக்கு சொந்தமாகக் கடை  இல்லை. பெரிய கண்ணாடிக் கடைகளில் இருந்து வாங்கிவந்து கிராமங்களில் விற்பான்.

ஒருமுறை அவன், காட்டு வழியாக ஒரு கிராமத்திற்குச் சென்றுகொண்டு இருந்தான். அந்தக் காட்டில் 18 புலிகள் நடமாடுவதாகப் பேச்சு உண்டு.  காட்டில் சற்று தூரம் வந்ததும் புலியின் உறுமல் சத்தம் கேட்டது.

ராம்லால் திடுக்கிட்டு, சத்தம் வந்த திசையைக் கவனித்தான். சற்றுத் தொலைவில் ஓர் அடர்ந்த புதர். அதன் நடுவில் ஒரு புலி. அதன் கண்கள் தகதக எனச் சிவந்து மின்னின. வேட்டைக்காரர்கள் அதற்குக் கொள்ளிக்கண் என்று பெயர் வைத்து இருந்தனர்.

கொள்ளிக்கண் புலி, ராம்லால் மீது பாயத் தயாரானது. ராம்லால் மூளை சுறுசுறுப்பானது.  அவன் ஜோல்னாப் பையில் இருந்த கண்ணாடிகளில் மிகப் பெரிய கண்ணாடியை எடுத்துப் புலியை நோக்கி நீட்டினான். ''வாடா கொள்ளி! உன்னை மாதிரியே ஒரு புலியைப் பிடிச்சு இதில் அடைச்சு இருக்கேன். உன்னையும் பிடிச்சு சர்க்கஸ்காரனுக்கு வித்திடுறேன்'' என்று கூச்சலிட்டான்.

கண்ணாடியில் உள்ள புலியைக் கொள்ளிக்கண் கவனித்தது. மனிதர்கள், புலிகளைப் பிடிப்பதைக் கொள்ளிக்கண் பார்த்து இருக்கிறது. 'இவனும் புலி பிடிக்கிறவன்’ என்று நினைத்து, வாலைச் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தது.

அது மற்ற புலிகளையும் சந்தித்து, புலி பிடிப்பவன்  வந்துள்ளதாக எச்சரித்தது. அவனிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓர்  ஆலோசனைக் கூட்டம் நடத்தப் புலிகள் திட்டமிட்டன.

அன்று இரவு. காட்டு விலங்குகளுக்காக அஞ்சி ராம்லால் ஓர் ஆலமரத்தில் ஏறி, ஒரு பெரிய கிளையில் சாய்ந்துக்கொண்டான். திடீரென்று பல இடிகள் இடிப்பதுபோல் கீழே சப்தம் கேட்டது.

கண்ணாடிப் புலி !

ராம்லால் இலைகளை விலக்கிக் கீழே பார்த்தான். அவனுக்கு மூச்சு நின்றுவிடும்போல் தோன்றியது. கீழே வட்ட வரிசையாகப் புலிகள். அந்த மரத்தின் கீழ்தான் புலிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மங்கிய நிலவு ஒளியில் ராம்லால் அவற்றை எண்ணிப் பார்த்தான். 18 புலிகள் உறுமியபடியும், முகத்தைத் தேய்த்தபடியும், வாலைச் சுழற்றியபடியும் சுற்றிச் சுற்றி வந்தன.

கொள்ளிக்கண் அன்று பகல் தனக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவத்தை நடுக்கத்துடன் விவரித்தது. ''நான் அவனிடம் இருந்து தப்பியது மகா அதிசயம்'' என்றது.

அதைக் கேட்டு மற்ற புலிகள் உடலைச் சிலுப்பிக்கொண்டன. கூட்டத்திற்குத் தலைமை வகித்த கிழட்டுப் புலி ''நீ பார்த்த புலி உன்னைப் பார்த்து உறுமியதா?'' என்று கேட்டது.

''இல்லை. என்னைப் பார்த்தபடியே இருந்தது.'' என்றது கொள்ளிக்கண் புலி.

''அப்படி வா வழிக்கு. அது வெறும் பொம்மைப் புலி. நம்ம உடம்பில் எவ்வளவு சதை இருக்கு. நம்மை ஒரு சின்ன சட்டத்தில் அடைச்சுட முடியுமா? அப்படி சுருங்குறதுக்கு நம்ம உடம்பு என்ன பஞ்சு மிட்டாயா?'' என்றது.

அப்போது இடைமறித்து இன்னொரு புலி ''தாத்தா, மனித வாடை அடிக்குது. பேச்சை நிறுத்திட்டு மோப்பம் பிடிங்க. இந்த மரத்தின் மேலே இருந்துதான் வாடை வருது. புலி பிடிக்க வந்த மனுசன் இந்த மரத்து மேலதான் இருக்கணும்'' என்றது.

கிழட்டுப் புலி ஆமோதித்தது. அது மற்ற புலிகளிடம் ''நாம் ராத்திரி பூரா இங்கேயே டேரா போடுவோம். அவன் எப்படியும் காலையில் மரத்தைவிட்டு இறங்கிவருவான். அப்போ அவனை பிடிச்சு காலை ஆகாரமா சாப்பிடலாம்'' என்றது.

கிழட்டுப் புலியின் பேச்சைக் கேட்டு ராம்லால் நடுங்கினான். 'ஒரு புலியை ஏமாற்றலாம். இத்தனை புலிகளை எப்படி சமாளிப்பது?’ என்று குழம்பினான்.

அப்போது காற்று பலமாக வீசியது. கிளைகள் வேகமாகக் குலுங்கின. அதனால் இன்னொரு கிளையில் தூங்கியபடி இருந்த ஒரு குரங்கு,

கண்ணாடிப் புலி !

தடுமாறிக் கீழ்நோக்கிச் விழத் தொடங்கியது. ராம்லாலின் மூளை சுறுசுறுப்பானது. அவன் புலிகளுக்குக் கேட்கும்படி கத்தினான்.

''குரங்கு நண்பா, கீழே நல்ல வேட்டை காத்திருக்கு. நீ நேத்திக்கு ஒரு புலியைப் பிடிச்சியே. அது மாதிரி நிறையப் புலிகள் கிழே இருக்கு. ஒரு குதி குதிச்சு ஒவ்வொரு புலியா பிடிச்சுக்கிட்டு வா. அதுகளை சட்டத்தில் அடைச்சுடறேன்'' என்றான்.

புலிகள் அவனது கர்ஜனையைக் கேட்டு நடுங்கின. அதே சமயம், குரங்கு கிழட்டுப் புலியின் மீது வந்து விழுந்தது. அது விழுந்த வேகம், கிழட்டுப் புலியைத் திக்குமுக்காடச் செய்தது. அது அதிர்ச்சியில் ஓடத் தொடங்கியது. தலைமைப் புலி ஓடியதைக் கண்டு மற்ற புலிகளும் நாலா பக்கமும் சிதறின.

காலையானதும் ராம்லால் தெம்பாக மரத்தில் இருந்து இறங்கி, கிராமம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.