மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 82

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

வீணை என்பது ஒரு குறியீடு. பயன்படுத்துவதற்கும் பயன்படுவதற்கும் அர்த்தம் அறியாமல் வாழும் இதயத்தின் குறியீடு. வீணையைப் பற்றிய இவ்வளவு நினைவுகளையும் கிளறிவிட்டது இப்படியான ஓர் இதயம்தான்.

வீணை வைத்த வீடுகள் எங்கள் சுற்றத்தில் இல்லை. சிறு வயதில் சரஸ்வதி படம் போட்ட காலண்டரில் வீணையைப் பார்த்து, ''இது என்ன தாத்தா?'' எனக் கேட்டதற்கு, ''இது வந்துரா... நல்ல பேருய்யா... செம்மங்குடி ரமணி வீட்ல பாத்துருக்கேனே... சைய்ய்... ஆங்... தம்புராவோ கம்புராவோடா...'' என எட்டு பல்டி அடித்தார் சுப்பிரமணி தாத்தா.

'சரஸ்வதி சபதம்’ படத்தில், சரஸ்வதி கையில்தான் முதன்முதலில் விஷ§வலாக வீணையைப் பார்த்தது என நினைக்கிறேன். ''தாத்தா... அது தம்புரா இல்ல... வீண...'' எனச் சொன்னதற்கு, ''என்ன எழவோ... நமக்குப் பீப்பிதாண்டா. குளிக்கர பிச்சப்பாவும் திருவெண்காடு சுப்பிரமணியும் எடுத்து ஊதுனா... க்காளி... ஒங்காத்தா வெச்ச பூண்டு ரசம் மாரி சுர்ருனு இருக்கும்...'' எனக் கழுத்தை உலுக்கிச் சிலிர்த்தார். அப்புறம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் தேவிகா பல ஆங்கிள்களில் வீணை மீட்டி விசும்பியபோது, 'வீண கத்துக்கிட்ட ஒரு பெண் குட்டிய பிரியப்படணும்’ என்ற கிரேஸ் வந்தது. 'சின்னப் புறா ஒன்று’ என தேங்காய் சீனிவாசன் கொடூர ரியாக்ஷன்களோடு பாடி வர, அந்த ஹீரோயின் வீணை மீட்டும்போது கிரேஸ் எகிறியது. மொட்டை மாடியில் கைலியோடு குத்தவைத்து, 'இளைய நிலா பொழிகிறது...’ என கிதார் வாசித்த மோகன்தான், 'ஓஹோ... பொண்ணுங்களுக்கு வீணை... பசங்களுக்கு கிதார்...’ எனப் பொது அறிவைப் புரியவைத்தார்.

கொஞ்ச நாளில் 'ஊமை விழிகள்’ படத்தில், 'கண்மணி நில்லு... காரணம் சொல்லு...’ என அருண் பாண்டியன் மவுத் ஆர்கன் சப்பிக்கொண்டு நடக்க, 'பார்றா...’ என ஆச்சர்யமாக இருந்தது. கீரந்தங்குடி திருவிழாவில் மவுத் ஆர்கன் வாங்கி கர்ண கடூரமாக வாசிக்க, ''கம்னாட்டிவோளா... தூங்கவிட்றியளா...'' என விரட்டி விரட்டி அடித்தது ஆத்தா. 'தென் மதுரை வைகை நதி’ பாட்டில் ரஜினி வாசிப்பது பியானோ என்ற தேவ செய்தியைச் சொன்னது சார்லஸ். ''வெள்ள பட்டன அழுத்துனா பிய்ங்ங்னு சொல்லுது... பிளாக் பட்டன அழுத்துனா சொய்ங்ங்னு சொல்லுதுரா...'' என்றான் மூலங்குடி சர்ச்சில் வைத்து. 'நிழல்கள்’ படத்தில்தான் அவ்வளவு வயலின்களை மொத்தமாகப் பார்த்தது. ஒரு பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் இளைய ராஜாவோடு உட்கார்ந்திருந்த ஆர்மோனியப் பெட்டியைப் பார்த்தேன்.

ஒருநாள் பார்த்தால், 'கண் போன போக்கிலே’ பாட்டில் அவ்வளவு பெரிய ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு விரித்து விரித்து மடக்கினார் எம்.ஜி.ஆர். ''என்னங்க இது... ஆர்மோனியப் பொட்டியை ஃபுல்அப்ஸ் மாதிரி யூஸ் பண்றாரு..?'' எனக் கேட்டதற்கு, ''அடேய்! ஜீரோ வாட்ஸு... அது பேக்பைப்பர்றா...'' என விளக்கினார் நட்டு மாம்ஸ். 'கோபுர வாசலிலே’ படத்தில் மோகன்லால் அந்தக் கருவியை மடக்கி விரித்தபடி ரோட்டில் ஓடியபோது, 'இதெல்லாம் இப்பிடி ஒடம்பு போட்ட ஆளுகளுக் கான இன்ஸ்ட்ரூமென்ட். நம்ம ரொமான்ஸுக்குத் தாங்காதுரா’ என்றார் மாம்ஸ். ''அது பேக்பைப்பர் இல்ல... அக்கார்டின்...'' என நான் சொன்னபோது, வியப்பாகப் பார்த்து நகம் பிய்த்தார் நட்டு மாம்ஸ்.

'சின்ன மணிக் குயிலே’ பாட்டில் விஜயகாந்த் ஆர்மோனியம் வாசிப்பதைப் பார்த்த பிறகுதான், 'நாம எது வேணும்னாலும் பண்ணிரலாம்ரா’ என்ற கான்ஃபிடென்ஸ் வந்தது எனக்கு. தப்பு, பறைக்கெல்லாம் தனிக் கதையே இல்லை. 'காதல் என்பது பொது உடமை’ என ஜனகராஜ் அடித்துக் காட்டுவதற்கு முன்பே, ஊர்க்காட்டில் அதுதான் நம்ம நட்பிசை. 'பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா’ பாட்டில் சின்னி ஜெயந்த் பரீட்சை பேடில் தாளம் போட்டதுதான் எனக்குப் படா ஆச்சர்யம். சாக்ஸபோனை எனக்கு இன்ட்ரோ கொடுத்தது இளைய திலகம்.

'வெற்றி விழா’, 'டூயட்’ என அடுத்தடுத்து அவர் கன்னம் பன்னாக ஃபீலிங்காக ஊதுவது, 'தில்லானா மோகனாம்பாள்’ சீனியருக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல. 'அபூர்வ ராகங்கள்’ படத்தின் 'கேள்வியின் நாயகனே’ பாட்டில் கமல் வெறிகொண்டு அடித்தபோதுதான், என் கவனத்துக்கு வந்தது மிருதங்கம். சில பல வருடங்களுக்குப் பிறகு ஒய்.ஜி.மகேந்திரனை விகடனுக்காகப் பார்க்கப் போனபோது, முட்டியில் மிருதங்கத்தை அண்டக்கொடுத்து மினி கச்சேரியே நடத்திக்காட்டினார். 'நீங்கள் கேட்டவை’ தியாகராஜன் டிரம்ஸில் பின்னியெடுத்ததை, பல மடங்காக நேரில் சிவமணி நிகழ்த்திக் காட்டியது இன்னொரு நாள். கிருஷ்ணர் போட்டோவில் அறிமுகமாகி, பாரதிராஜா படங்களில் உருவேற்றிய புல்லாங்குழலை மெரினா பீச்சில் 10 ரூபாய்க்கு வாங்கி வந்து 'வினாயகா’ மேன்ஷன் மொட்டை மாடியில் டிரையல் பார்த்தேன். ''நார்மலா ஊதுனாதான் ஃப்ளூட்... ஆஃப் போட்டு ஊதுனா சங்கு...'' என்றபடி கடுப்பில் பிடுங்கி பெல்ஸ் ரோட்டில் வீசினான் சகா!

இவ்வளவிலும் வீணை மேல் எனக்கு இருந்த காதல்தான் குறையவே இல்லை. 'வீணையடி நீ எனக்கு’ என்றும் 'நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’ என்றும் பாட்டினை ஓப்பன் பண்ணியது பாரதிதான். சென்னை வந்த பிறகு சில வீடுகளில் ஷோகேஸிலும் அறை மூலைகளிலும் உறங்கும் வீணைகளைப் பார்த்திருக்கிறேன். பார்த்த கணமே நம்மை அதிரவைப்பவை, மௌனமாக அமர்ந்திருக்கும் வீணைகள்தான். எடுத்ததும் கொடுத்ததும் எவ்வளவு எனத் தெரியாமல், யுகங்களின் இசையையும் மௌனத்தையும் வைத்துக்கொண்டு உர்ர்ரென்று முறைக்கும் வீணைகள்... நம் தாய்களைப் போல!

வீணை என்பது ஒரு குறியீடு. பயன்படுத்துவதற்கும் பயன்படுவதற்கும் அர்த்தம் அறியாமல் வாழும் இதயத்தின் குறியீடு. வீணையைப் பற்றிய இவ்வளவு நினைவுகளையும் கிளறிவிட்டது இப்படியான ஓர் இதயம்தான்.

சமீபத் தில்தான் ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன்.

தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா பக்கத்தில், 'இங்கு புதிய வீணைகள் செய்து தரப்படும். பழைய வீணைகள் பழுதுபார்த்துத் தரப்படும்’ என்று எழுதப்பட்ட பலகையின் கீழ் நின்றிருந்தார். பக்கத்தில் மரத்தை அறுத்து பாதி செய்யப்பட்ட சில வீணைகள் கிடந்தன. முடிவடையாமல் கிடக்கும் வீணைகளைப் பார்க்கும்போது மனதுக் குள் ஏதேதோ நினைவுகள் சுழன்று கிளம்பின. கம்பிகள் அறுந்த இரண்டு பழைய வீணைகள் வேறு மனநிலைக்குக் கொண்டுசென்றன.பழைய வேட்டியும் மடித்துவிட்ட ஜிப்பாவுமாகச் சிரித்தபடி நின்றிருந்தார் ராமகிருஷ்ணன். ''இருவது ரூவா குடுங்க... கறிகாய் வாங்கணும்...'' என்றபடி பின்னால் இருந்து ஒரு பெண்மணி வந்தார்.

''பத்து ரூபாதாண்டி இருக்கு... சொல்லிட்டு வாங்கிக்க... சாயங்காலம் குடுத்துருவோம்...'' என்றார் வேட்டி மடிப்பில் இருந்து கசங்கிய 10 ரூபாயை எடுத்துத் தந்தபடி. அந்தம்மா மின்னல் நொடிப் பார்வையில் 40 வருடங்களை வாழ்ந்துவிட்டுப்போனார். ''இது ஒரு அண்டர்ஸ்டாண்டிங்... பெருமாளுக்கும் நமக்கும் இருக்கற மாதிரி. இந்தா கெடக்கே பழைய வீணைங்க... அது மாதிரிதான் நான். ஒவ்வொரு முறையும் கம்பிய இழுத்துக்கட்டி வாசிச்சு என்னை உயிர்ப்பா வெச்சிருக்கறது இவ அன்புதான்...'' எனச் சிரித் தார் ராமகிருஷ்ணன். அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்பட்டபடி அவர் அப்படி ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

வட்டியும் முதலும் - 82

''நாலணா காசுக்குப் பிரயோஜனம் இருக்கா... இன்னமும் எதுக்கு இந்த வேலையப் பாத்துக்கிட்டு கெடக்கறதுன்னேன்... இதையெல்லாம் ஏறக்கட்டிட்டு சும்மாவாவது இருக்கலாம்ல...'' எனப் பின் பக்கம் யாரோ பேசுகிற சத்தமும் கேட்டது. ''தம்பி... நானே இசைக் கலைஞன்தான். இருவது வருஷமாச்சு... வீணை வாசிக்கறதை நிறுத்தி. நடுவுல ஒண்ணு... ரெண்டு... ஆங்... ஒரு மூணு மொற வாசிச்சேன்... அவளுக்காக மட்டும். ஒரு விஷயத்துல கோபம் வந்து விட்டுட்டேன். இது எனக்குக் காசு பணத்தையும் தரல. ஆனா, இப்பிடி வீணை செய்றதை விட முடியலை. இதுனால பெருசா வருமானம் இல்லைதான்.

ஆனா, காதல் தம்பி... ஆத்மார்த்தம். ஒரு வீணை யைச் செய்யும்போது ஏதோ நான் சாமி மாதிரி தோணுது. யாருக்கு என்ன யூஸ்னு எல்லாம் தெரியல... விக்காமக்கூடக் கெடக்கு. ஆனா, என்னால விட முடியல. பிள்ளைங்கள்லாம் விட்டுப்போயிட்டாங்க. இவளுக்கு நான்... எனக்கு இவனு வாழுறமே... இது பயன்பாடு பாத்தா வந்துச்சு? அப்பிடித்தான் எனக்கும் இந்த வீணைங் களுக்குமான ஒறவும்...'' என்றபடியே முடிக்கப்படாத ஒரு வீணையை எடுத்துச் செதுக்க ஆரம் பித்தார். தெருமுனை திரும்பும்போது காய்கறி வாங்கிக்கொண்டு எதிரே வந்த அந்தம்மா, ''சாப்ட்டுப் போவலாங்களே...'' எனச் சிரித்தபோது ஒரு வீணை அதிர்ந்தது.

போன வாரம், ''தோழர் எனக்குக் கல்யாணம்... காலைல நம்ம சமூக நலக் கூடத்துல...'' என போன் பண்ணினார் ஒரு நண்பர். எனக்கு ஆச்சர்யம். நண்பருக்கு 48 வயசு. ஏற்கெனவே கல்யாணம் ஆகி விவாகரத்தானவர். இப்போது திடுதிப்பென்று போன் பண்ணி காலையில் கல்யாணம் என்கிறார். மறுநாள் போனால், மொத்தமே 15 பேர்தான் இருந்தோம். அதில் அவர் மனைவியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார் கள். மாலை மாற்றி, உறுதிமொழி எடுத்து மிக எளிமையாகக் கல்யாணம் முடிந்தது. எதிர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, என்னை பஸ் ஏற்றிவிட வந்தபோதுதான் நண்பர் சொன்னார், ''ஊர்ல எங்க சொந்தத்துல பணக்காரப் பொண்ண எனக்குக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. அவங்க மலேசியா.

மலேசியாவுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டேன். அவங்க எந்திரின்னா எந்திரிக்கணும்... உக்காருன்னா உக்காரணும். ஒரு வருஷத்துல மகன் பொறந்தான். கால் ஊனமா... நரம்புக் கோளாறோட. எனக்கு அங்க இருக்கப் பிடிக்கலை. மகனுக்குச் சித்த வைத்தியம் பார்க்கணும்னு அவளையும் கூட்டிட்டு சித்தூர் வந்துட்டேன். அங்க சொந்தமா சின்ன ஹோட்டல் கடை போட்டு, 'ஒன்னைய நான் பாத்துக்கறேன்’னு உக்காந்துட்டேன். நாலஞ்சு மாசந்தான். பணக்கார வாழ்க்க வாழ்ந்தவள்ல... அப்பாவப் பாத்துட்டு வர்றேன்னு பிள்ளையத் தூக்கிட்டு மலேசியா போனவ வரவே இல்ல. டைவர்ஸ் நோட்டீஸ்தான் வந்துச்சு. என்னென்னவோ கெஞ்சிப் பாத்தேன். அங்க வந்து இருந் துக்கறேன்னுகூடச் சொன்னேன். அவ கேக்காமத் தூக்கிப் போட்டுட்டா. தனியாக் கெடந்து அந்த ஹோட்டல் கட நடத்திட்டு இருந் தப்பதான் இவ... இந்தா இப்ப கட்டிக்கிட்டேனே... இவ ஹோட்டல்ல சமையல் வேலைக்கு வந்தா. அவ புருஷன் இறந்துட்டாரு. ரெண்டு பிள்ளைகளோட தனியா நின்னா. ஆறு மாசம் நான் வாழ்க்க வெறுத்து ஊர் ஊராச் சுத்தினப்ப, இவதான் கடையப் பாத்துக்கிட்டா. கடன் ஏறிப்போயி ஒருநா கடைய வித்துட்டு இங்க வந்துட்டேன். அப்புறம் அப்பப்ப போன் பண்ணிப் பேசுவா. என்னமோ ஒரு வேவ்லெங்த். மூணு வருஷம் கழிச்சு போன் பண்ணி, 'நீங்க இருக்கிற எடத்துக்கு வந்துர்றேன்’னா. வான்னு சொல்லிட்டேன். பிள்ளைங்களோட வந்து இங்க ஒரு ஹோட்டல் கடையில சமையல் வேலை தேடிக்கிட்டா. ஒரே வீட்ல தனித் தனியா ஆறு மாசம் இருந்தோம். இப்போதான் தோழர்... ஒரு வாரத் துக்கு முன்னாடி தோணுச்சு.

'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு கேட்டேன். உடனே சரின் னுட்டா... இந்தா பண்ணிக்கிட்டோம்'' என்றவர் கொஞ்சம் நிறுத்தி லேசாகக் கண் கலங்கியபடி, ''யாருக்கும் பயன்படாத மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி இருந்துச்சு... இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தோழர். இந்த வாழ்க்கைக்கு இது போதும் தோழர். இவ... இந்தப் புள்ளைங்க... இந்த ஒறவு என்னையக் கம்பீரமாக்கிருச்சு தோழர்!'' என்றார் இன்னொரு வீணையை அதிரவிட்டபடி.

ராணியை மறுபடி இப்படிப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. திண்டிவனம் ஹைவேஸில், கணபதி மெஸ் பக்கம் இரண்டு கால்களையும் தரையில் இழுத்துத் தேய்த்தபடி நகர்ந்து வந்தாள். எலும்பும் தோலுமாக ஒட்டி உலர்ந்து இப்படி ஊர்ந்து வருகிற ராணி ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாள் தெரியுமா..? ''ரூட்டு பிராத்தல்னா ராணிதான ஃபேமஸு...'' என்றான் என்னை அழைத்துப்போயிருந்த நண்பன்.

அப்போது ஒரு செய்திக் கட்டுரைக்காகப் போயிருந்தேன். ஹைவேஸில் புளிய மரங்களின் கீழ் நின்று பாலியல் தொழில் செய்பவர்களில் ராணி பிரபலம். லாரி டிரைவர்கள் மத்தியில் ராணிக்கு அவ்வளவு செல்வாக்கு. எப்போதும் மல்லிப்பூ பண்டல் மணக்க, கலகலவெனச் சிரித்தபடி அவ்வளவு கவர்ச்சியாக இருக்கும். ஒரு லாரி ஏறி இறங்கினால், ஏரியாவுக்கே பரோட்டா வாங்கிப் போடும். பேச்சும் காமெடி யுமாக ராணியிடம் பேசும்போதே ஒரு பாசம் வந்துவிட்டது. ''அய்யே... நான்லாம் பேட்டி குடுக்கவா சார்... என்னமோ இப்பிடி வந்தாச்சு. அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு... மனசுக்குக் கீழதான் சார் வயிறு... ஆம்பளையால பொம்பள கெட்டா... பொம்பளையால ஆம்பள கெட்டான். இதுல என்னா சார் பெரிய கத...'' எனப் பெரும் சித்தாந்தங்களைப் போகிற போக்கில் அடித்தது. மறக்க முடியாத மனுஷி.

இத்தனை வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. மெஸ் அண்ணன்தான் மிகச் சாதாரணமாகச் சொன்னார், ''ஐய்யோ... அத ஏன் கேக்கறீங்க... ஒரு லாரில ஏறிருக்கு... அந்த நாயி சோலிய முடிச்சுட்டுக் காசு கேட்டதும் போதைல பொடீர்னு ஓட்ற லாரிலேருந்து புடிச்சுத் தள்ளிவுட்டான். ரோட்ல வுழுந்து இடுப்பு முறிஞ்சு, ரெண்டு காலும் வெளங்காமப்போயிருச்சு. அப்புறம் இப்பிடித்தான் இழுத்துக்கிட்டு உசுரக் கைல வெச்சுக்கிட்டு வாழுது. இப்போதான் ஆறு மாசமா எங்கயோ போயி என்னவோ வேலையெல்லாம் பாக்குது.''

ராணி என்னிடம் சிரித்தபடி, ''சார்... எய்ட்ஸ் விழிப்பு உணர்ச்சிக்காக ஒரு அமைப்புல சேர்ந்து வேல பாக்குறேன். பஸ் ஸ்டாண்ட்ல குந்தினு நோட்டீஸ் போடுறது... பஜார்ல மைக் வெச்சுனு பாட்டு பாட்றதுலாம் பண்றேன் சார். சந்தோஷமாத்தான் இருக்குது...'' என்றது. அக்கணம் மனதில், 'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ...’ என்ற பாரதியின் வரிகளும் 'வீதியில் எறிந்தாலும் வீணைக்கு இசையுண்டு, வீணாகிப்போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு’ என்ற இளையராஜாவின் குரலும் எழுந்தது.

ராணி எதிரே இருந்தாள்... சிவசக்தியைப் போல!  

- போட்டு வாங்குவோம்...