
புதிய தொடர்
அப்பா
என் தகப்பன் எனக்கு இதைத்தான் சொல்லிக் கொடுத்தான். முதிர்ந்த மரத்தின் வேர்களைப்போல் மண்ணில் ஊன்றவும்... பெருத்த பறவையின் சிறகுகள்போல் விண்ணில் அலையவும்...ஆப்பிரிக்கப் பழங்குடிப் பாடல்
அன்புள்ள அப்பாவுக்கு...
உங்களுக்கு நான் நிறையக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். பெரும்பாலும் 'அன்புள்ள’ எனத் தொடங்கி, 'இப்படிக்கு’ என முடியும் மிகச் சிறிய கடிதங்கள்.
முதன் முறையாக என் மனதின் ஆழத்தில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை நான், நீங்கள் உயிருடன் இருந்தபோதே எழுதி இருக்கலாம். படித்துப் பார்த்து, ஒரு புன்னகையோ; ஒரு துளிக் கண்ணீரோ பதிலாகக் கொடுத்திருப்பீர்கள்.

நிச்சயம் புன்னகைதான் உங்கள் பதிலாக இருந்திருக்கும். அப்படி எல்லாம் அழுகிற மனிதர் இல்லை நீங்கள். இப்போது யோசித்துப் பார்க்கும்போது, என்றுமே நீங்கள் அழுது நான் பார்த்தது இல்லை. எந்த அப்பாக்கள், பிள்ளைகள் முன்பு அழுது இருக்கிறார்கள்?
நள்ளிரவில் வீடு வந்தாலும், தான் வாங்கி வந்த தின்பண்டங்களை மனைவி திட்டத் திட்ட... உறங்கிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளை எழுப்பி, அப்போதே ஊட்டிவிட்டு ரசிக்கும் பாசமான அப்பாவின் முகம்; உறவினர்கள் ஒன்று கூடும் திருமணங்களில் முன் இரவு நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டு இருக்கும்போது மடியில் சென்று அமர்ந்தால், சட்டென்று கடுமை காட்டித் துரத்திவிடும் கோபமான அப்பாவின் முகம்; மாதக் கடைசியில் யாரிடம் கடன் வாங்கலாம் என யோசித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பணம் கேட்டால், பதற்றமாகும் அப்பாவின் முகம் என... அப்பாக்களுக்குப் பல முகங்கள் உண்டு.அழுதுகொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை... அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம்.
அப்பா... நீங்கள் உயிருடன் இருந்தபோது, பல முறை பேச நினைத்து, எழுத நினைத்து, முடியாமல் போனதைத்தான் இந்தக் கடிதத்தில் எழுதப்போகிறேன். கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா? காலத்தின் காற்று எப்போதும் தாமதமாகத்தான் வீசும்போல.
எல்லாப் பிள்ளைகளுக்கும் அப்பாதான் முதல் கதாநாயகன் என்பார்கள். அப்பா என்றால் அறிவு. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நீங்கள் இறந்த 18-ம் நாள், பரணில் இருந்த உங்கள் பழைய டிரங்குப் பெட்டியைக் கிளறியதில், உங்கள் நாட்குறிப்புகளைப் படிக்கும் பெரும் பேறு கிடைத்தது. யாரோ, எப்போதோ படிக்கப்போகிறார்கள் என்று தெரிந்தே எழுதப்படுபவைதானே நாட்குறிப்புகள்.
பல வருடத்து நாட்குறிப்புகளில், நான் பிறந்த 1975-ம் ஆண்டு ஜூலை 12-ம் நாளை முதலில் புரட்டி, என்ன எழுதி இருக்கிறீர்கள் என்று ஆர்வத்துடன் பார்த்தேன். சற்றே சாய்ந்த கையெழுத்தில் பேருவகையுடன் ஒரே ஒரு வரி எழுதி இருந்தீர்கள். 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல், அப்பா, உங்கள் அதிகப்படியான தன்னம்பிக்கைதான் என் நம்பிக்கை என்று அப்போது புலனானது. இன்று வரை உலகை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் முகத்தில் இருந்தே எனக்கான உணர்ச்சியைக் கடன் வாங்கிக்கொள்கிறேன். இதை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நொடியில், உலகின் மூன்றாவது அறிவாளி என் கையைப் பிடித்து இழுத்து விளையாட அழைக்கிறான். அவனுக்கும் உங்கள் பெயரைத்தான் வைத்து இருக்கிறேன். பெயரை உடையவன்தானே பேரன்.

உங்களுக்குப் புத்தகங்கள் மீது அலாதியான பிரியம் இருந்தது. தமிழாசிரியர் ஆக சொற்ப சம்பளம் வாங்கிக்கொண்டு, வீடு முழுக்க ஒரு லட்சம் புத்தகங்களை நீங்கள் சேகரித்துவைத்திருந்தது... இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சுற்றி இருந்த இருபதுக்கும் மேற்பட்ட கிளை நூலகங்களில் உறுப்பினராகி, புத்தகங்களின் முடிவில்லா உலகுக்குள் என்னையும் கூட்டிச் சென்றீர்கள்.
நீங்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் 'எனக்குத் தமிழ் மட்டும் தெரிஞ்சதாலதான், தமிழ்ப் புத்தகம் மட்டும் வாங்கினேன். அதனால, கடனாளியா மட்டும் இருக்கேன். ஆங்கிலமும் தெரிஞ்சிருந்தா... நாம எல்லாம் நடுத்தெருவுல தான் நின்னிருப்போம்.’
நான் உங்களைப்பற்றி ஒரு கவிதையில் இப்படி எழுதி இருந்தேன்...
'என் அப்பா ஒரு மூட்டை புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்!’
புத்தகங்கள் படிக்கும்போது உங்களுக்குப் பிடித்த வரிகளின் கீழே சிவப்பு மையால் அடிக்கோடு இடுவீர்கள். அது எனக்கு எரிச்சலாக இருக்கும். 'உங்கள் கருத்தை என் மீது திணிக் காதீர்கள். உங்களுக்குப் பிடித்த வரி எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எதற்கு அடிக்கோடு இடுகிறீர்கள்?’ என்று கோபிப்பேன். அமைதி யாகச் சொல்வீர்கள். 'அது அப்படி அல்ல. எங்கோ இருக்கும் இதை எழுதிய எழுத்தாளனுக்கு நான் இங்கு இருந்தே கை குலுக்குகிறேன்.’
உங்களைப் பிடித்தாட்டிய புத்தக வேதாளம் என்னைப் பிடித்து, இப்போது என் பிள்ளையையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறது. மொழி அறியா இந்த மூன்றரை வயதில், ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு, அவனுக் குத் தெரிந்த ஏதோ ஒரு மொழியில் படித்து, புதிதாக ஒரு கதை சொல்கிறான். சிங்கத்தின் தலையும் யானையின் உடலும்கொண்ட அந்த மிருகத்தைப்பற்றி அவன் சொல்லும்போது பயப்படுவதைப்போல நடிப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்று ஒரு சிறுகதையில் எழுத்தாளர் மௌனி எழுதியிருந்தார். 36 வயதில் அந்த வரிகளுக்கு அர்த்தம் புரிந்த மாதிரி இருக்கிறது.
புத்தகங்கள் வாங்குவதற்காக நீங்கள் கடன் வாங்குவீர்கள். கடனை அடைக்கக் கடன். அதை அடைக்க மீண்டும் கடன். கடன்பட்ட உங்கள் உள்ளம் கலங்கியதே இல்லை.
கடன்காரர்கள் எதிர்ப்பட்டால், அவர்கள் தயங்கியபடி தள்ளிச் சென்றாலும், நீங்களாகவே அவர்கள் முன் சென்று 'அடுத்த மாதம் கொடுத்து விடுகிறேன் சார்’ என்று சொல்லிவிட்டு, 'அவர் கள் பரவாயில்லை சார்’ என்று புறப்பட்டதும் என்னிடம் திரும்பி, 'கடன் கொடுத்தவர்களைப் பார்த்துப் பயப்படக் கூடாது’ என்பீர்கள். அப்பா... இப்போது சொல்கிறேன் நான் படித்த புத்தகங்களிலேயே... உங்கள் அனுபவங்கள்தான் சிறந்த புத்தகம்!
இன்று எத்தனையோ திரைப்படங்களுக்கு நான் பாடல் எழுதிக்கொண்டு இருந்தாலும், உங்களுடன் பார்த்த திரைப்படங்களை மறக்க முடியுமா? பெரும்பாலும், நள்ளிரவு இரண்டாம் காட்சிக்குத்தான் நீங்கள் கூட்டிச் செல்வீர்கள். தண்டவாளத்தில் கை வைக்கும் சூப்பர் மேன்; மூங்கில் குச்சிகளில் உணவு உண்ணும் தர்ட்டி சிக்ஸ் சேம்பர் ஆஃப் ஷாலின்; கழுகுகள் வட்டமிடும் மெக்னாஸ் கோல்டு; வெள்ளைக்காரிகள் பப்பி ஷேமில் வரும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் என எனக்கான படங்களை நீங்கள் முன்பே பார்த்து அழைத்துச் செல்வீர்கள்.
நன்றாக நினைவு இருக்கிறது... கல்லூரியில் படிக்கும்போது வகுப்பைக் கட்டடித்துவிட்டு, நண்பர்களுடன் நான் 'அவளோட ராவுகள்’ மலையாளப் படத்துக்குச் சென்றிருந்தேன். அது பிட்டுக்குப் பேர் போன திரையரங்கம். வழக்கமாகக் கட்டடித்துவிட்டு பிட் படம் பார்க்க வரும் மாணவர்கள், கடைசி ஸீட்டில் இருட்டில் இடம் பிடிப்போம். இடைவேளையின்போது கூட வெளியே வர மாட்டோம். படம் முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகே வாசலுக்கு வருவோம். நானும் நண்பர்களும் திரையரங்கை விட்டு வெளி வரும்போது, ஒரு நண்பன் என் தோளைப் பிடித்து, 'டேய்... உங்க அப்பாடா’ என்று சொல்கிறான். அவன் காட்டிய திசையில் எதிரில் இருந்த டீக்கடையில் நீங்கள் நின்றுகொண்டு இருக்கிறீர்கள். ஒரு கணம் உங்கள் கண்களும் என் கண்களும் சந்தித்தன. உண்மை யில் சந்தித்தனவா? நான் வேகமாக என் மிதி வண்டியை மிதிக்கிறேன். அந்த நேரம் பார்த்து செயின் கழன்றுவிடுகிறது. உங்கள் பார்வைக்குத் தப்பும் தூரம் வரை என் மிதிவண்டியைத் தள்ளிச் சென்று அப்புறம் செயின் மாட்டுகிறேன்.
வழக்கமாக, இரவு உறங்கும்போது நாம் பேசிக்கொண்டு இருப்போம். அன்று நீங்கள் வருவதற்கு முன்பாகவே சாப்பிட்டுவிட்டு, நான் உறங்குவதைப்போல் நடித்துக்கொண்டு இருந்தேன்.
அடுத்த நாள் என்னிடம் நீங்கள் எதுவும் கேட்கவில்லை. தினமும் எனக்கு கைச் செலவுக்காக ஐந்து ரூபாய் தருவீர்கள். அன்று 10 ரூபாய் கொடுத்தீர்கள். நான் 'அப்பா இது 10 ரூபாய்’ என்கிறேன். 'இருக்கட்டும் சினிமா கினிமா பார்க்கணும்னா தேவைப்படும்’ என்றீர்கள். குற்ற உணர்ச்சியின் படிக்கட்டில் அன்று வைத்த என் கால்கள் இன்று வரை மீளவே இல்லை.
இப்படித்தான் முன்பொரு முறை 10-ம் வகுப்பு தேர்வுக்குப் படித்துக்கொண்டு இருந்தேன். நீங்கள் என் முன்பு நிற்கிறீர்கள். 'சும்மா படிச்சுக்கிட்டே இருக்காதடா. டெண்டு கொட்டாயில 'ரத்தக் கண்ணீர்’ படம் போட்டு இருக்கான். போய்ப் பாரு’ என்று காசு கொடுக்கிறீர்கள். நான் மறுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்குகிறேன்.
உண்மையில் இதற்கு நேர் மாறாக அன்று நீங்கள் 'பப்ளிக் எக்ஸாம் ஒழுங்காப் படி’ என்று சொல்லி இருந்தால், நான் நிச்சயம் 'ரத்தக் கண்ணீர்’ படம் பார்க்கச் சென்று இருப்பேன்.

அப்பா... புத்தகங்களுக்கு அடுத்து உங்கள் காதல், மிதிவண்டி மீதுதான் இருந்தது. நீங்கள் பணியாற்றிய பள்ளி, நம் வீட்டில் இருந்து 20 மைல் தொலைவில் இருந்தது. தினமும் 40 மைல் சைக்கிளில் செல்வீர்கள். காஞ்சிபுரத்தில் நடக்கும் சைக்கிள் போட்டிகளில் முதன் மூன்று கோப்பைகளில் வருடந்தோறும் உங்கள் பெயரும் பொறிக்கப்பட்டு இருக்கும்.
நீங்கள் இறக்கும் வரை என்னை உங்கள் சைக்கிளின் பின் இருக்கையில் அமரவைத்து மிதித்துச் சென்றீர்கள். ஒரு முறைகூட நான் உங்களைச் சுமந்தது இல்லை. ஒரு முறை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து மகாபலிபுரம் வரை மிதிவண்டியில் சென்று வரலாம் என்று முடிவு எடுத்தோம். வீட்டில் எதிர்த்தும் நீங்கள் என்னை அனுப்பிவைத்தீர்கள். காஞ்சிபுரத்தில் இருந்து 70 கிலோ மீட்டர்கள். காலை 5 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு மகாபலிபுரம் வந்தடைந்தோம். கடற்கரையைச் சுற்றிப்பார்த்துத் திரும்பினால், எதிரில் நீங்கள் நின்றுகொண்டு இருக்கிறீர்கள். என்னை அனுப்பிவிட்டு, மனசு கேட்காமல் பேருந்தில் புறப்பட்டு வந்ததாகச் சொன்னீர்கள். பௌர்ணமி நிலா தொடர்ந்து வர, என்னைப் பின் இருக்கையில் அமரவைத்து, என் நண்பர் களுடன் அரட்டையடித்தபடி காஞ்சி புரம் வரை கூட்டி வந்தீர்கள்.
நீங்கள் இறந்த பிறகு உங்கள் அஸ்தியைக் கரைக்க மகாபலிபுரம் கடலுக்கு தான் வந்தேன். வழி முழுக்க அன்று நாம் கடந்து வந்த பாதைகள். என் வாழ்வில் என்றும் நான் கடக்க முடியாத பாதைகள். முதன்முதலாக உங்கள் கைப்பிடித்து பள்ளிக்குச் சென்றது; சலூனுக்குச் சென்றது; கடற்கரைக்குச் சென்றது என எத்தனையோ நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் போது என் இடுப்பைப் பிடித்துக் கொண்டே வந்து, சட்டென்று ஒரு கணத் தில் பிடியைவிட்டீர்கள். நீங்கள் பிடித்துக் கொண்டு இருப்பதாக நினைத்து, சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்தேன். இப்போதும் அப்படித்தான் நீங்கள் பிடித்துக்கொண்டு இருப்பதாக நினைத்து ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
அப்பா... உங்கள் உயிரின் ஒரு துளியில் இருந்து என் உலகம் தொடங்கியது. இன்று, இவ்வேளையில் அளவில்லா அன்புடன் என் கண்ணீரில் சில துளிகளை உங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்!
இப்படிக்கு, உங்கள் மகன்.
- அணிலாடும்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan