விகடன் வரவேற்பறை
##~## |
வனசாட்சி - தமிழ்மகன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29. சுப்பிரமணியம்தெரு, அபிராமபுரம், சென்னை-18.
பக்கம்: 288
விலை:

225
'கங்கை கொண்டான், கடாரம் வென்றான்’ எனக் கடந்த காலத் தமிழ் வீரம் பேசிக்கொண்டு இருப்பதன் அபத்தம், சில சமயங்களில் பளிச்சென்று முகத்தில் அறையும். பிஜி தீவின் கரும்புத் தோட்டங்களில், தாய்லாந்தின் சயாம் ரயில் பாதைகளில், பர்மாவின் உடல் உழைப்புத் தொழில்களில், மலேசியாவின் தேயிலைத் தோட்டங்களில், தென் ஆப்பிரிக்காவின் உதிரி வேலைகளில், இலங்கையின் மலையகக் காடுகளில்... இங்கெல்லாம் தமிழர்கள் அரசாளச் செல்லவில்லை. அடிமைகளாக அழைத்துச் செல்லப் பட்டனர். நாம் வசதியாகப் பேச மறந்துவிடுகிற இந்த உண்மையின் ஒரு பகுதியைப் பேசுபொருளாகக்கொண்டு வெளிப்படுகிறது தமிழ்மகன் எழுதிய 'வனசாட்சி’ நாவல்.

'உலகிலேயே இலங்கைத் தேயிலைதான் தரம்மிக்கது’ என இன்று சொல்லப்படுகிறது. அந்தத் தரம்மிக்க தேயிலையின் ஒவ்வோர் இணுக்கும் தமிழனின் உழைப்பு. அடர்ந்து விரிந்த பிரமாண்ட மலைக் காடுகளைச் செப்பனிட்டு, செடிவைத்து, வளர்த்து, கொழுந்து பறித்து, கோடிகளாகப் பெருக்கியது தமிழன். இறுதியில் தெருக்கோடியில் வீசப்பட்டவனும் தமிழன்தான். அந்த வலியை உண்மைக்கு நெருக்கமாக ஒரு நாவலாகப் பதிவுசெய்த விதத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழ்மகன்.
வாட்டி வதைக்கும் வறுமை தமிழர்களை இலங்கைத் தீவை நோக்கித் தள்ளுகிறது. 'அடைவதற்கு ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாக’ நம்ப வைத்து அழைத்துச் செல்கிறார்கள் கங்காணிகள். ஆனால், அங்கே காத்திருப்பது பொன்னுலகம் அல்ல... பொல்லாத உலகம். கடல் காற்றின் உப்பு மேனி எங்கும் ஊசியாய்க் குத்த, கரையில் இறங்கிய கணம் முதல் துன்பம் மட்டுமே அவர்களுக்குப் பரிசு. கங்காணிகள், வெள்ளைக்காரர்களுக்கு ஆள்காட்டிகளாக இருந்து தமிழ்த் தொழிலாளர்களை வாட்டி வதைக்கின்றனர். உணவு இல்லை; ஓய்வு இல்லை; உறக்கம் இல்லை. நோய்கள் தின்ற உயிர்கள் போக எஞ்சியவர்கள் மலையகம் சென்று சேரும் வரையிலான நாவலின் முதல் பாகம், நம் நெஞ்சில் அழுத்தமாக அறைகிறது.
தமிழர்களை மிருகங்களைப் போல வேலை வாங்குவதும், எந்தவித வசதிகளும் அற்ற லைன் வீடுகளின் நரக வாழ்க்கையும், கங்காணிகளின் கொள்ளையும் துளித் துளியாக விவரிக்கப்பட்டுள்ளது. பண்டார நாயகா ஒப்பந்தத்துக்குப் பிறகு, மலையகத் தமிழர்கள் மறுபடியும் தமிழ்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்படும் பகுதி நாவலில் முக்கியமான கட்டம். இரண்டு தலைமுறைகளாக உழைத்துச் சீராக்கிய நிலத்தை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் தவிக்க, 'வெளியேறத்தான் வேண்டும்’ என்று இலங்கை அரசு கட்டாயப்படுத்த... அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்திருக்கும், மலையகத் தமிழர்களின் மன உணர்வு எவ்வகைப்பட்டது என்பதைத் துல்லியமாகப் பேசுகிறது நாவல்.
ஒட்டுமொத்தமாக நாவலின் உள்ளடக்கம் புதியதாக இருக்கிறது. அதுவே நம்மை ஈர்த்து, இழுத்துச் செல்கிறது. இதுவரை பேசப்படாத இலங்கை மலையகத் தமிழர்களின் பிரச்னைகளை உரக்கச் சொல்லியிருக்கும் வகையில், நிச்சயம் இது 'வனசாட்சி’தான்!
பாடம் கற்றது

இயக்கம்: தாமரைச் செல்வன்
வெளியீடு: தாமரை பிக்சர்ஸ்
குறும்படம் இயக்க ஆசைப்படும், ஆனால் வசதி இல்லாத மூன்று இளைஞர்களுக்கு உதவ முன்வருகிறார் சாலையில் புத்தகம் விற்கும் ஒருவர். நம்ப முடியாமல் அவரைப் பின்தொடர்ந்து அவரது கிராமத்துக்குச் செல்கிறார்கள். அங்கே அவர் வசதியாகவாழ்ந்ததும், குடிப்பழக்கத்தினால் மனைவி, மகளை இழந்து அநாதையாகத் திரிவதையும் தெரிந்துகொள்கிறார்கள். தன் கூடவே மது குடித்துத் திரிந்த நண்பனையும் திருத்துகிறார் அவர். ஒரு வருடம் கழித்து குறும்படத்துக்கு விருது பெற்ற உதவி இயக்குநர், திருந்திய நண்பன் அனைவரும் அவரைத் தேடி வருகிறார்கள். அவர் என்ன ஆனார் என்பது க்ளைமாக்ஸ். டீக்கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் உதவி இயக்குநர்களுக்கு 'கசகச’ என இருக்கும் ஒருவர் உதவி செய்ய முன்வரும் ஓப்பனிங் செம சர்ப்ரைஸ். அமெச்சூரான வசனங்கள் குறை எனினும், நல்ல விஷயம் சொல்ல வந்த ஆர்வத்துக்காக அவற்றைப் பொறுத்துக்கொள்ளலாம்.

இலங்கை இஸ்லாமியர்கள்

நமக்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்னை தெரியும். இலங்கை முஸ்லிம்களின் பிரச்னைகள் பற்றித் தெரியுமா? தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ற வரையறைக்குள் இஸ்லாமியர்களும் வருவார்கள். ஆனால், இலங்கையில் 'தமிழர்கள், இஸ்லாமியர்கள்’ என்ற பிரிவினை தெளிவாக இருக்கிறது. 'தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்றே அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இத்தகைய பின்னணியில் இலங்கையின் இஸ்லாமிய எழுத்தாளர் ஏ.பி.எம்.இத்ரீஸின் இந்த வலைதளம் முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல், தத்துவம், இலக்கியம், விமர்சனம் என பல தளங்களிலும் எழுதும் இத்ரீஸ், இலங்கை இஸ்லாமியர்களின் பிரச்னைகளை விரிவான கோணங்களில் அலசுகிறார். இஸ்லாமியப் பாரம்பரிய அரங்கு, புன்னகைக்கும் நபிகள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கும் இத்ரீஸ், காலமாற்றத்துக்கு ஏற்ப இஸ்லாம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்துத் திறந்த மனதுடன் விவாதிக்கிறார். இதுகுறித்து 'ரிஸானா நபீக்: மனசாட்சியின் படுகொலை’ என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்!
சேட்டை

இசை: எஸ்.எஸ்.தமன்
வெளியீடு: சோனி
விலை:

99
ஆரம்பம் முதல் இறுதி வரை மெல்லிய தாளம், சின்னச் சின்ன வார்த்தைகள்... இதுதான் 'அகலாதே’ பாடல். மதன் கார்க்கியின் 100- வது பாடல் மிக மென்மையாகக் கடக்கிறது. கானா பாலா குரலில் துள்ளத் துடிக்க வெடிக் கிறது 'நீதாண்டி ஒஸ்தி பொண்ணா?’ பாடல். 'அவளுக்கு ஃபர்ஸ்ட் ஓனர் நானுடா... ஆர்.சி. புக்கைப் பாருடா... இது எஃப்.சி. பண்ண காருடா!’ என்று பாலா வின் கானா முழுக்க 'சேட்டை’ வரிகள். தாமரையின் வருடல் வார்த்தைகளில், 'என் அர்ஜுனா... அர்ஜுனா...’ மெல்லிய மெலடி. 'தரையிலே மீனாய்க் கிடக்கிறேன் நானாய்... நீ எங்கே போனாய்?’ என்று கிறக்க க்ரீட்டிங் கொடுக் கிறது சுசித்ரா குரல். தமிழ் சினிமாவின் காதல் பாடல் எண்ணிக்கையில் ஒன்று சேர்கிறது 'போயும் போயும் இந்தக் காதலுக்குள்ளே’ பாடல்.
