மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 83

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

இந்த ஆட்டோக்காரர்கள் அசால்ட்டாக எழுதிவைக்கிற வாசகங்கள் சில நேரங்களில் நம் மனநிலையையே மாற்றிவிடும்.

போன ஞாயிறு தி.நகர் ரங்கநாதன் தெருவில், அவ்வளவு நெரிசலில் மயில்தோகை விற்றுக்கொண்டு இருந்தவனைப் பார்த்தேன்.

 அழுக்குச் சட்டையும் பேன்ட்டும் ரப்பர் செருப்புமாக பெரிய பெரிய மயில் பீலிகளைத் தூக்கி அசைத்த படியே கத்திப்போகிறான். மின்சார ரயிலில் பிளாஸ்டிக் பட்டாம்பூச்சிகள் விற்றுப்போனவனின் ஒடுங்கிய முகம் மனதில் அசைகிறது. பரபரப்பான கே.கே. நகர் சாலை பிளாட்ஃபார்மில் புத்தர் சிலைகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டு இருக்கிறான் ஒருவன். அன்றைக்குப் புகை மண்டிய அடையாறு சாலை ஓரம் மரத்தில் பொம்மைகள் செதுக்கிக்கொண்டு இருந்தவன் காணக்கிடைத்தான். பரமு கல்யாணத்துக்கு செங்கல்பட்டில் இருந்து 1,000 மரக்கன்றுகள் ஏற்றிக்கொண்டு வந்திருந்தவன், ''சார்... பிளாஸ்டிக் பையில குடுக்காத... பேப்பர் பையில குடு. கன்னுலாம் கொழந்தைங்க மாரி... பாத்துத் தூக்கு சார்...' என்றான் இலைகளை நீவியபடி.

மகாபலிபுரம் கடற்கரைப் பாதையில் யாரோ ஒரு வெள்ளைக்காரக் காதலர்களின் பெயரை அரிசியில் எழுதிக்கொண்டு இருக்கிறான் ஒரு சிறு கலைஞன். பூண்டி மாதா கோயில் திருவிழாவுக்குப் போனபோது, நட்சத்திரங்களும் பறவைகளும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டைகளை விற்றுக்கொண்டு இருந்தது ஒரு அக்கா. ''பேர் சொல்லிட்டுப் போங்க சார்... ஒன் ஹவர்ல எம்ப்ராய்டரி பண்ணித் தர்றேன்...' எனச் சிரித்த அதனிடம், நீல கலரில் அவ்வளவு அழகான நட்சத்திரங்கள் வாங்கி வந்தேன். பீச்சில் நீளமான பலூனை சடசடவென மடித்து சில நொடிகளில் இதயம் செய்து தந்துவிட்டுப் போய்விட்டான் ஒருவன்.

100 கிலோவுக்கு மேல் இருக்கும்... அவ்வளவு கனமான, பார்வை இல்லாத அம்மா. 'இளந்தளிர் விழிச் சவால் கலைக் குழு’ என எழுதப்பட்ட வேனில் உட்கார்ந்து, 'கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் ஒலகத்துல...’ என ஐஸ்க்ரீம் குரலில் பாடிக்கொண்டு இருந்தது. மட்ட மத்தியானம் ஆவடி ஸ்டேஷனில் நின்று கொஞ்சம் சில்லறைகளுக்கு, 'ஆரிரோ... ஆராரிரோ... இது தந்தையின் தாலாட்டு’ எனப் பாடுகிறவன் ஏன் சூப்பர் சிங்கருக்குப் போகவில்லை? 10 வருடங்களுக்கு முன்பு நடேசன் பார்க் எதிரே தினமும் ஓர் ஓவியனைப் பார்ப்பேன். சாலையில் வண்ண சாக்பீஸ்களால் எதாவது ஓர் உருவத்தை வரைந்துவிட்டு ஓரமாக உட்கார்ந்து இருப்பான். கிருஷ்ணர், இயேசு, தெரசா, காந்தி எனத் தினமும் புதிது புதிதாக வரைந்திருப்பான்.

நைந்த அழுக்குச் சட்டையும் பேன்ட்டுமாக எதுவும் பேசாமல் ஓவியத்தின் பக்கத்தில் உட்கார்ந்து, விழும் காசுகளைப் பார்த்துக்கொண்டு இருப்பான். லோக்கல் மார்க்கெட்டிங்கில் வேலை பார்க்கிற ரெப் அன்பர்கள், வேலை இல்லாத வருத்தப்படாத வாலிபர் சங்கப் பிரமுகர்கள், சிவபானப் பிரியர்கள், ஏர்வாடிக்கோ கீழ்ப்பாக்கத்துக்கோ ஆன்லைன் புக்கிங் பண்ணிவிட்டு வெயிட்டிங்கில் இருப்பவர்கள், காத்துல கதை பிடிக்கும் உதவி இயக்குநர் கள், செல்வராகவன் படத்தின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷனை முயற்சிக் கும் கள்ளக் காதலர்கள், மருமகள் களின் மாட்லாடல் தாங்க முடியாத 'பிக் பி’க்கள், டைவர்ஸுக்கு முந்தைய ஸ்டெப்பில் நின்று கால் வீங்கிய கணவர்கள், மேட்னி ஷோ வுக்கு ஆள் பிடிக்கும் அழகிகள், வெயில் சுமந்த திருநங்கைகள், செருப்பைத் தலையணை ஆக்கும் கும்பகர்ணர்கள்... என ஒவ்வொரு நாளும் ஓர் உலகம்.

தினமும் போய் வெட்டி வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து இருக்கும்போதுதான் அந்தச் சாலை ஓவியனைப் பார்த்தேன். அவன் இன்று என்ன ஓவியம் வரைந்திருப்பான் என வரும்போதே மனசு எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது. அவ்வளவு அழகான ஓவியம் ஒவ்வொரு நாளும் விழுந்துகிடக்கும். அதிகாலையில் வந்து ஓவியத்தை வரைந்துவிட்டுப் பக்கத்திலேயே உட்கார்ந்துகொள்வான். நடுநடுவே சைடு சந்தில் நுழைந்து தம் அடிப்பான். மதியம் பார்க் எதிரே இருக்கிற கையேந்திபவனில் கதம்ப சாதம் வாங்கிச் சாப்பிடும்போது, பக்கத்தில் சாப்பிடுபவர்களைப் பார்த்துப் பார்த்துப் புன்னகைப்பான். சாயங் காலம் சில்லறைகளை எல்லாம் சேர்த்து ஒரு துணிப் பையில் போட்டுக்கொண்டு எங்கோ போய்விடுவான். அவன் யாரிடமும் எதுவும் பேசிப் பார்த்ததே இல்லை.

ஒருநாள் போனபோது ஒரு குழந்தையின் ஓவியத்தை வரைந்திருந்தான். மண்டியிட்டுச் சிரிக்கிற அழகான குழந்தை. கடவுள்களையும் பிரபலங்களையும் மட்டுமே வரைபவன் அன்றைக்குக் குழந்தையை வரைந்திருந்தது என்னவோ சந்தோஷமாக இருந்தது. மதியம் கையேந்திபவனில் அவன் இருந்தபோது, நானும் சாப்பாடு வாங்கிக்கொண்டு பக்கத்தில் போய் நின்றேன். 'ஈஈஈ...’ எனப் புன்னகைத்தான். ''இன்னிக்கு பாப்பா படம் சூப்பரா இருக்கு தலைவா...' என்றதும் இன்னும் 'ஈஈஈ...’ எனச் சிரித்தான். பரபரவெனச் சாப்பிட்டு முடித்துக் கை கழுவியவன், போகும்போது என்னைப் பார்த்து நெஞ்சில் தட்டியபடி, ''எங்க பாப்பாதான்... எங்க பாப்பாதான்... ஈஈஈ...' என்றபடி போய் சாலையில் உட்கார்ந்துவிட்டான். எனக்குச் சட்டென்று என்னவோ போலாகி விட்டது. அவன் எவ்வளவு பெரிய படைப்பாளி... ரசனைக்காரன் என இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

வட்டியும் முதலும் - 83

இவ்வளவு ரசனையும் படைப்பும் எளிய மனிதர்களிடம்தான் கொட்டிக்கிடக்கின்றன. விஷால் பரத்வாஜ் இயக்கிய 'தி ப்ளூ அம்பர்லா’ என்ற படம் இருக்கிறது. ஓர் ஊரில் மணி விற்றுக்கொண்டு இருக்கிற சிறுமிக்கு, சுற்றுலா வந்திருக்கும் ஒரு தம்பதியிடம் இருந்து ஊதா நிறக் குடை கிடைக்கும். அப்படி ஒரு குடை அந்த ஊரில் யாரிடமும் இருக்காது. அவள் அந்தக் குடையை அதிசயம்போல் எல்லோரிடமும் காட்டித் திரிவாள். அதே ஊரில் இருக்கிற தாத்தா பங்கஜ் கபூருக்கு அந்தக் குடை மேல் பெரிய பிரியம் வந்துவிடும். சிறுமியிடம் பணம், பொருளெல்லாம் கொடுத்து ஏதேதோ பேசிக் கேட்டும் அவள் குடையைத் தர மாட்டாள். ஒரு கட்டத்தில் அந்தக் குடையைத் திருடி, வேறு வண்ணம் அடித்து வைத்துக்கொள்வார். சிறுமி குடையைத் தேடித் திரிவாள். பங்கஜ் கபூரிடம் எப்படி எப்படியோ விசாரித்தும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஒரு நாள் அவர் குடை பிடித்தபடி போகும்போது மழை வந்து, சாயம் எல்லாம் போய் உண்மை தெரிந்துவிடும். அதிலிருந்து அந்த ஊரே அவரை வெறுக்க ஆரம்பித்துவிடும். ஒரு நாள் அவர் விரக்தியாக நடந்துகொண்டு இருக்கும்போது ஓடிவருகிற சிறுமி, அந்தக் குடையை அவரிடம் தந்துவிட்டு, ''இது என்னுதில்ல... என்னுது மாரி இருக்கு...' எனச் சொல்லிவிட்டுப் போய்விடுவாள். அவர் நெகிழ்ந்து நிற்பதோடு படம் முடியும். படத்தில் ஓர் இடத்தில் பங்கஜ் கபூரிடம் ஒருவர், ''அதான் இவ்வளவு குடைங்க இருக்கே... நீ ஏன் அந்தக் குடை மேல இவ்வளவு ஆசப்படுற?' எனக் கேட்பார். அதற்கு பங்கஜ், ''உனக்கு வானவில் பிடிக்கும்ல... ஏன் பிடிக்கும்? இதுக்கெல்லாம் காரணம் இருக்கா?' என்பார். எளியவர்களின் ரசனையும் படைப்பும் இப்படித்தான் இருக்கிறது. எந்தக் காரண காரியமும் எதிர்பார்ப்பும் இல்லாததால், வானவில் மாதிரியும் ஊதாக் குடைபோலவும் அழகாக இருக்கிறது. அந்தச் சிறுமி வந்து ''இது என்னுது இல்ல... என்னுது மாரி இருக்கு' எனக் கொடுப்பது மாதிரிதான் அவர்கள் நம்மிடம் தங்கள் எளிய படைப்பை... ரசனையைத் தந்துவிட்டுப் போகிறார்கள்.

வட்டியும் முதலும் - 83
இந்த ஆட்டோக்காரர்கள் அசால்ட்டாக எழுதிவைக்கிற வாசகங்கள் சில நேரங்களில் நம் மனநிலையையே மாற்றிவிடும்.

'மழையில் அழுவது ஆம்பள... மழையாய் அழுவது பொம்பள’ என ஒரு ஆட்டோவின் பின்னால் பார்த்துவிட்டு, துரத்திப் போய் அவரைப் பிடித்து, ''தல... நீதாண்டா கவிஞன்...' என போன் நம்பர் வாங்கினேன் ஒருமுறை. இன்னொரு நாள் பூட்டு சாவி ரிப்பேர் பண்ண வந்த ஒருவரை இறக்கிவிட வண்டியில் அழைத்துப் போனேன். உதயம் தியேட்டர் பக்கம் சாலை ஓரம் ஸ்டவ் வைத்துக்கொண்டு வாழ்கிறார். சுவரோரம் துணிமணிகளை மூட்டையாகக் கட்டிப்போட்டு இருந்தார். சுவரில் கரியால் ஒரு வீடு படம் வரைந்து ஆணி அடித்து, அதில் பழைய சாவிக்கொத்துகளை எல்ல்லாம் தொங்கவிட்டு இருந்தார். பூட்டு சாவி ரிப்பேர் பண்ணுகிறவன் இப்படி பிளாட்ஃபார்மில் இருப்பதே நகைமுரணாக இருந்தது. கரியால் வரைந்த வீடு படத்தைக் காட்டி, ''எப்பிடி சார் நம்ம வீடு..? ஒரு பய தொறக்க முடியாது!'' என அவர் சிரித்தது காவியம்.

தண்டையார்பேட்டை பக்கம் கார்களிலும் பைக்குகளிலும் ஸ்டிக்கர் ஒட்டுகிறவர்கள் எவ்வளவு கலைநயத்தோடு செய்கிறார்கள்? ஃபுட்பால் அடித்துத் தெறிப்பது மாதிரி, பேயின் கைகள் நீள்வது மாதிரி கிரியேட்டிவ்வாக எதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். செருப்புத் தைப்பவர்கள், ''சார்... இங்க ஒரு காக்கி வார் வெச்சுத் தெச்சிருக்கேன்... காம்பினேஷன் கரெக்ட்டா இருக்குல்ல...'' என்கிறபோது எவ்வளவு கரிசனம் இருக்கிறது. முடி வெட்டி முடித்ததும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து லேசாகப் புன்னகைக்கும் சலூன்காரர்கள் எவ்வளவு ரசனைக்காரர்கள். வாசனை பார்த்துப் பார்த்து ஊதுபத்தி விற்பவனில் இருந்து தறியில் உட்கார்ந்து புடைவை முந்தியில் மயிலும் மாங்காவும் வரைபவர் வரை எவ்வளவு ரசனைக்காரர்கள், படைப்பாளிகள் இருக்கிறார்கள் நம்மைச் சுற்றி!

வட்டியும் முதலும் - 83

நாச்சியார் கோயில்தான் குத்து விளக்கு தயாரிப்பதில்  தமிழ்நாட்டிலேயே முக்கிய மான இடம். ஊர் முழுக்க விளக்குப் பட்டறைகளும் ஃபைனான்ஸ்களும்தான் இருக்கும். முருகேசன் - ரேவதி தம்பதியை ஒரு பட்டறையில்தான் பார்த் தேன். கந்தல் முண்டா பனியனோடு முருகேசனும் நைந்த புடைவையில் ரேவதியும் நெருப்புச் சூட்டில் உட்கார்ந்திருந்தார் கள். குத்துவிளக்கில் சாமி படங்களும் அழகழகான வேலைப்பாடுகளும் செய்வதில் அவர்கள் ஸ்பெஷலிஸ்ட். ''எதையும் சாமான்யமா தந்துரக் கூடாது சார்... ஒரு அழகு வேணாமா..? இப்பிடி நுணுக்கி நுணுக்கி வேலை பாக்குறதுல எங்களுக்கு ஒரு சந்தோஷம்.

அவ்வளவுதான்... இதெல்லாம் பண்ணது நாங்கன்னு பேரா எழுதியிருக்கு... யாருக்கும் தெரியப்போவுதா என்ன..? பாத்துட்டு நல்லா இருக்குனு சந்தோஷப்பட்டா, அதுதான் எங்களுக்குச் சந்தோஷம். வெளக்குன்னா வீட்ல அது அடையாளம் பாருங்க...' என்றார் முருகேசன். வெப்பம் தகிக்கும் பட்டறையில் அவர் அப்படிப் பேசியது அற்புதம்போல் இருந்தது.

ரொம்ப நாளைக்குப் பிறகு சுவாமிமலை அடிவாரத்தில் நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு, விளக்குக் கடை போட்டு ரேவதி மட்டும் உட்கார்ந்திருந்தார். ''அண்ணன் எங்க..?' என்றதும், ''ஒங்களுக்குத் தெரியாதா..? அவர் போய்ச் சேந்துட்டாரு...  தொழிலும் சரியா நடக்கல... அதான் இங்க வந்துட்டேன். இத விட முடியல... இங்கயே சின்னதா ஒரு பட்டறை போட்டேன். பின்னாலதான்... வாங்க தம்பி...' என அழைத்துப்போனார். அங்கே அப்படியே சின்ன வயசு ரேவதி மாதிரியே ஒரு பெண்ணும் அவர் அருகே ஒரு பையனும் உட்கார்ந்து விளக்கு வார்த்துக்கொண்டு இருந்தார்கள். ''எம் பொண்ணும் மருமவனும்... புதுசு புதுசா என்னென்னவோ சித்திரம்லாம் வார்க்குறாங்க...' எனச் சிரித்தார் ரேவதி. அழகழகான வேலைப்பாடுகளுடன் தகதகவெனச் சுடர்ந்துகொண்டிருந்தது ஒரு விளக்கு!

- போட்டு வாங்குவோம்...