மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூங்கில் மூச்சு! - 08

Moongil Moochu series by Suga
பிரீமியம் ஸ்டோரி
News
Moongil Moochu series by Suga ( மூங்கில் மூச்சு - சுகா )

சுகா, படம் : என்.விவேக்

 ##~##
ரு சினிமாகூட எடுத்துவிடலாம். அதைவிடக் கடினமானது, அதன் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி வாய்ப்பு வாங்குவது. சினிமா பாஷையிலேயே சொல்வதாக இருந்தால், 'கதையை ஓ.கே பண்ணுவது’. அப்படி ஓ.கே பண்ணப்பட்ட கதைகள் படமாகுமா என்பது அடுத்த கேள்வி.

'வாத்தியார்’ பாலுமகேந்திராவிடம் இருந்து வந்த பின்னர், தனியாக ஒரு படம் இயக்க வாய்ப்பு தேடி அலைந்தபோது, முதன்முதலில் நான் போய் கதை சொன்னது ஒரு ஃபைனான்ஸியரிடம். ஆந்திரா கிளப்பில் இருந்த அவரிடம் என்னை அழைத்துச் சென்றவர், எடிட்டர் நண்பர் பீட்டர் ஃபாபியா. அதிகாலையிலேயே சென்றுவிட்டோம். ஃபைனான்ஸியர் சந்தனக் கலரில் முழுக்கைச் சட்டையும், பேன்ட்டும் அணிந்திருந்தார். அறை முழுவதும் ஜவ்வாது மணம். வீடியோவில் இயக்குநர் ஸ்ரீதரின் 'தில் ஏக் மந்திர்’ ஓடிக்கொண்டு இருந்தது. 'மொதல்ல டீ... அப்புறம் ஸ்டோரி’ என்றார். டீ வந்து குடிக்கும் வரை மனதுக்குள் மீண்டும் ஒருமுறை கதையைச் சொல்லிப் பார்த்துக்கொண்டேன். டீ குடித்து முடிக்கவும் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, 'இப்போ ஸ்டார்ட் பண்ணலாமா சார்?’ என்றார். 'யெஸ் சார்’ என்று நான் நிமிர்ந்து உட்கார்ந்து தயாரானேன்.

மூங்கில் மூச்சு! - 08

காலை டிபன், மதிய உணவு, மாலை டீ, பிஸ்கட் என அன்றைய பொழுது முழுதும் அவருடனேயே கழிந்தது. ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் மூன்று கதைகள். மூன்றாம் கதை முடியும்போது, இரவு 7 மணி. 'எப்படி சார் இருந்தது?’ என்று கேட்டார். காரணம், மூன்று கதைகளையும் சொன்னது அவர். 'சூப்பர் சார்’ என்று சொல்லிவிட்டு எழுந்தேன். 'நாம அவசியம் அடுத்து மீட் பண்ணுவோம் சார்’. கை குலுக்கி வழியனுப்பிவைத்தார். நண்பர் பீட்டர் ஃபாபியா என் கைகளுக்குச் சிக்காமல் தடதடவென மாடிப் படிகளில் இறங்கி ஓடிவிட்டார்.

தை சொல்லும் அனுபவத்தின் முதல் முயற்சியில் என்னால் கதையே சொல்ல முடியாமல் போனது குறித்து இன்றைக்கும் நண்பர்கள் என்னைக் கேலி செய்து சிரிப்பார்கள். பண்ணிய பாவத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணும் விதமாகத் தொடர்ந்து என்னைப் பல தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார் பீட்டர். அடுத்து, அவர் ஒரு வெள்ளி விழா தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் அவர். ரொம்ப மரியாதையாக நடந்துகொண்டார். 'நீங்க என்ன மாதிரி கதை சொல்லுவீங்க தம்பி?’ என்று கேட்டார். நான் என்ன மாதிரி கதை சொல்வேன் என்று எனக்கே தெரியாமல் முழித்தபடி, எனது முதல் அனுபவத்தைச் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்தார்.

பிறகு, நான் கதை சொல்ல ஆரம்பிக்கும் முன் சொன்னார்... 'தம்பி, இப்போ நான் படம் எடுக்கிறது இல்ல. நீங்க சொல்லப்போற கதை எனக்குப் பிடிச்சாலும், என்னால எதுவும் செய்ய முடியாது. டைம் வேஸ்ட்டுன்னு நீங்க நெனச்சீங்கன்னா, நீங்க சொல்லாமயே தவிர்க்கலாம்.’ இரண்டு காரணங்களுக்காக நிச்சயமாக இந்த மனிதரிடம் கதை சொல்லியே ஆக வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். ஒன்று, அவரது நேர்மை. இன்னொன்று, 'பிறகு, நான் யாரிடம்தான் கதை சொல்லிப் பழகுவதாம்?’

தை சொல்வது ஒரு பெரும் கலை. 'வாத்தியார்’ பாலுமகேந்திரா ஒரு தேர்ந்த கதைசொல்லி. அதற்கான அடிப்படை இலக்கணத்தை 'வாத்தியார்’ இப்படிச் சொல்வார். 'You must be a good listener’. ஒரு நல்ல listener ஆக இருப்பதன் மூலம், மற்றவர்கள் சொல்லும் முறையில் இருந்து பல விஷயங்களைக் கிரகித்துக்கொண்டு, அவர்களிடம் இருந்து நாம் மாறுபடலாம்’ என்பார்.

மூங்கில் மூச்சு! - 08

இது உண்மை. தமிழ் சினிமாவின் மிக நல்ல நல்ல கதை சொல்லிகளில் ஒருவரான நண்பர் சீமானிடம் இந்த இயல்பைப் பார்த்து இருக்கிறேன். நண்பர்கள் யார் கதை சொன்னாலும், கொஞ்சம்கூடக் குறுக்கிடாமல் பொறுமையாகக் கேட்பார். அதே சமயம், அவர் கதை சொல்லும்போது, கேட்போரை அசரடித்து விடுவார். சீமான் கதை சொல்லும்போது மழைக் காட்சி என்றால், நாம் நனைந்தே விடுவோம். திடும் திடும் என இடி இடித்து, அறைக்குள்ளேயே மழையைப் பொழியவைத்து விடுவார். கொலைக் காட்சி என்றால், நம் முகத்தில் ரத்தம் தெறிக்கும். ஒருமுறை நண்பர் சீமான், ஒரு கதையின் இடைவேளைப் பகுதியில் வரும் ஒரு குறிப்பிட்ட வன்முறைக் காட்சியை உணர்ச்சிபொங்க, கிட்டத்தட்ட அவர் நடித்தே காட்டியபோது, நண்பர் பாலாவும் நானும் பயந்து சுவரோடு சுவராக ஒடுங்கி நின்றுவிட்டோம்.

ழம்பெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனின் மகனும், 'நினைத்தாலே இனிக்கும்’ இயக்குநருமான குமரவேல் எனது நெருங்கிய நண்பன், அவனிடம் நான் சொல்லியிருந்த ஒரு கதையை 'பிதாமகன்’ ஒளிப்பதிவாளர் நண்பர் பாலசுப்ரமணியத்திடம் சொல்லி இருக்கிறான். 'ஏங்க, ஒங்க கத ஒண்ணு ரொம்ப நல்லா இருக்கிறதா குமார் சொன்னாரு. சொல்லுங்களேன். கேக்குறேன். நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்கன்னு நெறைய புரொடியூசர்ஸ் எங்கிட்டே கேக்கிறாங்க.’ ஒரு மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்திருந்தபோது பாலு கேட்டார். மொட்டை மாடியில் இரண்டு நாற்காலிகளைப் போட்டு டீ கப்புகளுடன் உட்கார்ந்தோம். கதை சொல்ல ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நாற்காலியின் நுனிக்கு வந்தார். என் முகத்தையே உற்றுப் பார்த்தபடி கதை கேட்டார். கண்கள் இரண்டும் அகல விரிந்திருந்தன. வழக்கமாக அவருக்குத் தூக்கம் வந்தால், இப்படித்தான் முழிப்பார் என்பது பின்னால்தான் தெரிய வந்தது. இருபதே நிமிடங்களில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். நண்பர் பாலசுப்ரமணியத்தினால் இப்படி முறைத்துப் பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில், நண்பர்கள் பாலா, சீமான், கே.வி.ஆனந்த், விக்ரமன் எனப் பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.

ன்மானத்தையும் சுயகௌரவத்தையும் சோதிக்கும் பல சம்பவங்கள் நான் கதை சொன்னபோது நடந்துள்ளன. ஒரு நடிகர்... அவரது தகப்பனாரும் முன்னாள் நடிகர்தான். என்னிடம் கதை கேட்க ஒப்புக்கொண்டு நேரம் ஒதுக்கினார். அவர் சொன்ன நேரத்துக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்றுவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி காரில் ஏறிக்கொண்டு இருந்தவர், என்னைப் பார்த்ததும் 'ஸாரி சார். An unexcepted call from my dad. நாம நாளைக்கு மீட் பண்ணலாமா?’ என்றார். 'நாளைக்கும் உங்க dadகிட்ட இருந்து unexcepted call வந்துடாதுன்னா ஓ.கே’ என்றேன். மறுநாள் நான் போகும்போதே தயாராக உட்கார்ந்திருந்தார். கதை சொல்ல ஆரம்பித்தேன். என் முதுக்குப் பின்னால் அவரது நண்பர் ஒருவர், அங்கே இருந்தபடியே கதை கேட்டுக்கொண்டு இருந்த அந்த நடிகரின் செல்போனுக்குத் தொடர்ந்து, எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டு இருந்தார். நான்கைந்து எஸ்.எம்.எஸ் களுக்குப் பிறகுதான் அது எனக்குப் புரிய வந்தது. எழுந்து வந்துவிட்டேன்.

ன்னொரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேரம் கேட்டபோது, காலை 9 மணிக்கு வரச் சொன்னார். எட்டே முக்காலுக்கு அலுவலகம் சென்றுவிட்டேன். 9.30-க்கு மேல் ஆபீஸ் பாய் வந்து அலுவலகத்தைத் திறந்தான். உட்காரவைத்து ஃபேனைப் போட்டுவிட்டுப் போய்விட்டான். சற்று நேரம் கழித்து வந்து, 'சார் உங்கள வெயிட் பண்ணச் சொன்னாங்க’ என்று சொல்லிவிட்டு, தினத்தந்தி படிக்க ஆரம்பித்தான். அந்த வரவேற்பறையில் இருந்த பழைய நாளிதழ்களில் உள்ள வரி விளம்பரங்கள் வரை படித்து முடித்துவிட்டுக் காத்திருந்தேன். சரியாக, மதிய உணவு நேரத்தில் தயாரிப்பாளர் வந்தார். நேரே தன் அறைக்குச் சென்றார். எழுந்து நின்ற என்னைக் கவனிக்கவே இல்லை.

15 நிமிடங்கள் கழித்து அழைத்தார். அத்தனை நேரம் காத்திருந்த மனச்சோர்வுடன், பசியும் சேர்ந்துகொள்ள அவருக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தேன். 'ம்ம்ம், சொல்லுங்க’ என்று என்னிடம் சொல்லிவிட்டு, ஆபீஸ் பாய் கொண்டு வந்து வைத்த அன்றைய தினத்தந்தியைப் பிரித்து முகத்தை மறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டார். எப்படியும் படித்து முடித்த பின், அவருக்கு எதிரே இருந்த காலி இருக்கையைப் பார்த்திருப்பார்தான்.

னதுக்கு இதமாக நடந்துகொண்ட தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். அடிப்படை நாகரிகமும், நல்ல ரசனையும்கொண்ட மனிதர்கள் சினிமா தயாரிப்பாளர்களாக வரும்போதுதான் நல்ல கலைஞர்கள் கண்டுகொள்ளப்படுகிறார்கள். அப்படி ஒரு மனிதரிடம் சுந்தரராஜன் மாமா என்னை அழைத்துச் சென்றார். முன் பின் அறிமுகம் இல்லாத அந்த மனிதரிடம் நான் கதை சொல்ல ஆரம்பித்தபோது, முதலில் தன் மொபைல் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தார். 'உடனே, சொல்ல ஆரம்பிக்கணும்னு அவசியம் இல்ல. நீங்க comfortable ஆ எப்போ feel பண்றீங் களோ, அப்போ சொல்லுங்க, போதும்’ என்றார். உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தேன். கதை யையும் என்னையும் அவருக்குப் பிடித்துப்போய் விட்டது. சொல்லி முடித்தவுடன், ஒரு பேப்பரில் மளமளவென நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலை எழுத ஆரம்பித்தார்.

மறுநாளே காரில் என்னை ஏற்றிக்கொண்டு ஒரு நடிகரிடம் அழைத்துச் சென்றார். ஒரு டப்பிங் தியேட்டரில் இருந்த அந்த நடிகரிடம் சென்று ஒரு சில நிமிடங்கள் பேசியவர், முகம் சிவந்து வெளியே வந்தார். காரில் போகும்போது, 'என்ன சார் ஆச்சு?’ என்றேன். 'ஏங்க, ஒங்களவெச்சுப் படம் பண்ணணும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். அந்தாளு வேற ஒரு டைரக்டர் பேரச் சொல்றாரு. இவரு வேண்டாம் வாங்க’ என்றார். துரதிர்ஷ்டவசமாக அவரால் எனக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. நல்ல இலக்கிய வாசிப்பும், தேர்ந்த ரசனையும் உள்ள அந்த மனிதர், அடிப்படையில் ஒரு கலை இயக்குநர். இயக்குநர் சுந்தர்.சி இயக்கிய 'அழகான நாட்கள்’ என்ற படத்தைத் தயாரித்த அவரது பெயர் செல்வம்.

சாலிகிராமத்தின் பூங்காக்களில், தேநீர் விடுதிகளில் யாரேனும் ஒரு நண்பரிடம், 'கட் பண்ணினா... நெக்ஸ்ட் ஷாட் ஹாஸ்பிட்டல் இன்டீரியர்ல ஓப்பன் பண்றோம்’ என்று கதை சொல்லிப் பழகிக்கொண்டு இருக்கும் உதவி இயக்குநர்களைத் தினமும் பார்க்கிறேன். கதை சொல்பவர்களைவிட, அதைக் கேட்பவர்களின் முகபாவங்களைக் கவனிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். இதற்கும் எங்கள் 'வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்கள்தான் காரணம். 'Choosing a listener is much important’ என்பார்.

வி.ஜி.பி. கடற்கரைக் காவலாளி போன்ற முகபாவத்துடன் கதை கேட்பவர்களிடமும் கதை சொல்லிப் பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையாகவே இருந்தாலும் சரி... எந்தச் சலனமும் இல்லாமல் 'வந்து பார்’ என்பார்கள்.

இதுபோன்ற தொடர் சம்பவங்களால் மனம் வெறுத்துப்போய் திருநெல்வேலிக்குப் போயிருந்த சமயம், நண்பன் குஞ்சு வந்தான். 'எல, ஒரு பெரிய பிசினஸ்மேன்கிட்ட பேசியிருக்கேன். வெளிநாட்டுல நெறைய சம்பாத்தியம். பயங்கர சினிமாக் கோட்டி. வா, வந்து கத சொல்லு’ என்று அழைத்து சென்றான்.

குற்றாலத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தார் அந்த மனிதர். வெளியே விலை உயர்ந்த இரண்டு கார்கள் நின்று இருந்தன. யார் யாரோ வருவதும், போவதுமாக ஏகக் களேபரமாக இருந்தது. ஒன்றிரண்டு கரை வேஷ்டிகள் அவரைப் பார்த்துவிட்டு வெளியே சென்றன. எங்களுக்கான அழைப்பு வந்தது. 'நெறைய விஷயம் தெரிஞ்ச ஆளு. அவரப் பேசவிட்டுட்டு, அப்புறமா நீ கத சொன்னாப் போதும்’. காதில் கிசுகிசுத்துக் கூட்டிப் போனான் குஞ்சு.

வெளியே தென்பட்ட பரபரப்புக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் அமைதியாக இருந்தார் அந்த மனிதர். சினிமாவில் வரும் பணக்கார அப்பாக்கள் போல ஃபுல் சூட்டில் இருந்தார். லேப்டாப்பில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார். 'என்ன சாப்பிடுறீங்க?’ முதலில் எங்களிடம் அவர் கேட்ட கேள்வியே இதுதான். வியாபாரரீதியாக சினிமாத் துறையில் உள்ள சகல விஷயங்களையும் தெரிந்துவைத்திருந்தார். ஒரு படம் வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும் சரியான முறையில் திட்டமிடாத காரணத்தினால்தான் என்றார். 'உப்போ, ஊறுகாயோ, எந்த பிசினஸ்ல நாம எறங்குனாலும் கரெக்டா பிளான் பண்ணுனோம்னா, நிச்சயம் சக்சஸ்தான்-’ தொடர்ந்து உற்சாகமாகவே பேசிக்கொண்டு இருந்தார். 'இப்போ சினிமா எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டோம்னு வைங்க. அதுல இருக்கிற வெவரமான ஆட்கள்கூட சேர்ந்துக்கிட்டுதான் எடுக்கணும்.

தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

திருக்குறள் படிச்சிருக்கீங்களா?’ என்றார். எனக்கு முழுத் தெம்பு வந்தது.

'சினிமால எத்தனையோ டிபார்ட்மென்ட் இருக்கு. ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமானவன். எப்பொவுமே ஒரு படத்தோட எடிட்டிங்கைத்தான் உன்னிப்பா கவனிப்பேன்’ என்றார். ஒரு தொழிலதிபரின் சினிமா ரசனை என்னை ஆச்சர்யப்படுத்தியது. 'எடிட்டர்ல ஒங்களுக்கு யாரை சார் ரொம்பப் பிடிக்கும்?’ என்று கேட்டேன். சற்றும் யோசிக்காமல் சொன்னார். 'வேற யாரு? தோட்டாதரணிதான்!’

- சுவாசிப்போம்...