மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 84

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

கலைதான் என்னை மனிதனாக்கியது. இந்த நெடுவழி தனிமையையெல்லாம் தாய்மையாக்கியது. 'வட்டியும் முதலும்’ படித்துவிட்டு அதிகாலையில் அலைபேசித் ததும்பும் குரல்கள் என் பொழுதுகளை அர்த்தப்படுத்திவிட்டன.

சாலையில் வரும்போது மிஷ்கினின் புதுப் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போஸ்டர் பார்த்தேன்.

 அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு 'லோன் உல்ஃப்’ எனப் பெயரிட்டு இருக்கிறார். 'தனிமை ஓநாய்.’ ஒவ்வொரு மனமும் தனிமையில் இருக்கும் ஓநாய்தான். அதுவும் கலைஞர்கள், தனிமையின் கருப்பைச் சிசுக்கள். எல்லா ஒலி, ஒளிகளும் கடந்து எப்போதும் தனிமையின் தீராத இருளில் திரிகிறது மனம். சித்தம் கலங்கியதாகப் பாவிக்கும் ஒருவன், கடந்துபோகும் மனிதர்களையும் வாகனங் களையும் குறுஞ்சிரிப்போடு பார்த்தபடி, அழுக்குப் பிண்டமாக அமர்ந்திருக்கிறான் சாலையோரம்.

அவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட மூளையின் தனிமை என்னுடையது. கற்சரிவில் ஆடு, மாடுகள் மேயும் ஆள் இல்லாத ஒரு ரயில்வே கேட், யாருமற்ற நெடுஞ்சாலையில் தனித்திருக்கும் சின்ன முனி, கொடை நாளை எதிர்பார்த்து வனாந்தரத்தில் காத்திருக்கும் பிடாரி அம்மன், யாரும் இல்லா மலைப் பாதையில் தேநீர்க் கடை போட்டு அமர்ந்திருக்கும் ஒருவன், நள்ளிரவின் சாலையில் காரில் இருந்து கிட்டத்தட்ட தள்ளிவிடப்பட்டு போகும் ஒரு திருநங்கை, அஜந்தா டாக்கீஸ் போகிற வழியில் நின்றிருக்கும் ஒற்றைப் பனை, வெயில் கரிக்கும் தெருவில் அம்மிக் கொத்தத் திரியும் கால்கள், மனைவியின் உடல் கிடத்தப்பட்டு இருக்கும் திண்ணையில் அமர்ந்திருக்கும் முதிய முகம், மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடத்தில் தனியே அமர்ந்து சாப்பிடும் ஓர் அஸ்ஸாமிய முகம், பழையசீவரம் பேருந்து நிழற்குடையில் மடியில் குழந்தையைப் போட்டுக்கொண்டு அழுதபடி அமர்ந்திருந்த ஒரு தாய், பின்னிரவில் திரும்பும்போது ஒளிர்ந்து நிற்கும் தெருவிளக்கு, ஒரு கண்ணில் பச்சைத் துணி தொங்கியபடி பெரியாஸ்பத்திரி திண்டில் உட்கார்ந்திருந்த அம்மாச்சி, பிரிவின் வெம்மை எரிக்க எரிக்க... பெருங்கூட்டத்தில் தனித்திருக்கும் ஓர் இதயம், பிடிபடாத பிரியத்தின் மௌனம், கடைசிப் பேருந்தில் சண்டையிட்டுத் திரும்பும் அன்பு, எல்லோ ரும் திரும்பிவிட்ட சுடுகாட்டில் நெடுநேரம் நின்றிருக்கும் நிழல், அதிகாலையில் ஆலை யின் வராந்தாவில் திரியும் வாட்ச்மேன், கூட்டில் தொலைந்த குஞ்சைத் தேடி சக்கரங்களின் நடுவே அலையும் தாய்ப் பறவை, எஃப்.எம்மில் 'ஆசை முகம் மறந்துபோச்சே...’ பாடல் கேட்டபடி மண்டபம் அகதிகள் முகாம் படிக்கட்டில் சாய்ந்து இருக்கும் அக்கா... தனிமையின் நெடுவழியில் இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் இருக்கின்றன?

வட்டியும் முதலும் - 84

பகல் - இரவு, வெயில் - மழை, ஆண் - பெண் மாதிரி தனிமை - தாய்மை இரண்டும்தான் மனதின் இரு பக்கங்கள் எனத் தோன்றுகிறது. கிராமத்தில் இருந்து முதல் தலைமுறையாக ஏதேதோ கனவுகளோடு பெருநகரம் வந்தபோது... நானும் தனிமையின் பிள்ளைதான். பசி, துயரம், கூச்சம், காதல், காமம், சிநேகம், பிரிவு... துரத்தத் துரத்தத் தனிமை தாய்மையாகப் பூப்படைகிறது. அந்தத் தாய்மையை எனக்குக் கற்றுத்தந்தது ஏராளமான மனிதர்கள். ஒரு காதல்... தோல்வி... சரக்கு... இதுதானே சீன் ஆர்டர். என் தனிமையை எல்லாம் விரட்டியடித்த கீர்த்தனா ஒருநாள் என் ஏரியாவிலேயே இல்லாமல் போனாள். கண்ணெதிரே கல்யாணம் முடித்து, 11 மணி வெயிலில் கார் ஏறிப் போனாள். அப்போது கொன்று எடுத்த தனிமையைப் போக்கச் சாராயத்துக்குள் போனவனை மீட்டெடுத்தது அண்ணன்களின் தாய்மைதான்.

சக மனிதர்களின் ஆதூரம்தான். தனித்துக்கிடந்த தருணத்தில், ''தங்க பஸ்பத்தை எடுத்து எதுக்குடா மூக்குப் பொடி போடுறீங்க... அன்புங்கிறது எல்லோருக்குமானது. அதுவும் நீ கலைஞன்... உன் அன்பு இந்த மானுடத்துக்கானது. உன்னோட எழுத்தை... இலக்கியத்தை... சினிமாவை நிகழ்த்திக் காட்டுறா...'' எனச் சொன்ன அண்ணனை எப்படி மறப்பேன்? டெங்கு காய்ச்சலில் ஆஸ்பத்திரியில் கிடந்தபோது நாலு நாளும் எனக்கும் சேர்த்துச் சாப்பாடு எடுத்துவந்த பக்கத்து படுக்கைக்காரர் குடும்பமும் எனக்கு இதைத்தானே சொல்லித்தந்தது. விந்தி விந்தி நடந்தபடி, ''நான் இப்பிடியே இருந்துக்கறேன்னா... இதான் கேக்கல. 38 வயசு எனக்கு... இனிமே எதுக்குத் தொண..? டெலிபோன் பூத்துக்கே இப்பெல்லாம் யாரும் வர்றதில்ல. அத அப்பிடியே ரீசார்ஜ் கடையா மாத்திவுட்டா, நான் பொழச்சுக்குவேன். அதுக்குத்தான் அல்லாடுறேன். கல்யாணம் ஒரு கேடா? எவன் வருவான் எனக்கு?'' ஒரு சுயம்வரம் நிகழ்ச்சியில் அப்பாவோடு வந்திருந்த வான்மதி அக்கா அகலமாகச் சிரித்தபடி இப்படிச் சொன்னபோது, செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. காதல்... தோல்வி... தனிமை என்ற வார்த்தைகளைஎல்லாம் காமெடியாக்கியது இந்த மனிதர்களிடம் நான் கற்றுக்கொண்ட தாய்மைதான்!

வாழ்க்கையின் தினப்பாடுகளும் இலக்கின் போராட்டங்களும் தருகிற தனிமை. வேலையிலேயே இருந்திருந்தால் சொந்த வீடு, கார், வசதி வாய்ப்புகள் என லௌகீக வாழ்வின் தேவைகளை அடைந்திருப்பேன். 'மனசுக்குப் பிடித்த சினிமா பண்ண வேண்டும்’ என்கிற விருப்பம்தான் இன்று வரை அடிப்படைத் தேவைகளுக்கே அல்லுசில்லாக்கி அலையவைக்கிறது. சினிமா பிழைப்பு ஒரு மார்க்கமானது. வாய்ப்புக்காக அலைகிறபோது, காலையில் எழுந்தால் எங்கே போவதென்றே தெரியாது. நடிகருக்கோ, தயாரிப்பாளருக்கோ கதை சொல்லிவிட்டுக் காத்திருக்கும்போது, ஒவ்வொரு கணமும் யுகமாகித் தகிக்கும். ஒரு மாதம் இரவு, பகலாக வேலை துரத்தும்.

ஆறு மாசம் எதுவும் இல்லாமல் வெட்டி டிஸ்கஷன், வீதி லெமன் சாதம், வீட்டுக்கு விதவிதமான பொய்கள் என காலம் ஃப்ரீஸாகும். ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத தனிமை சுழட்டி அடிக்கும். கதைப் பேச்சு, பிடித்த சினிமாக்கள், இசை, புத்தகங்கள் என ரொப்பி ரொப்பியும் வழியும் தனிமை. ஆனாலும், எதற்காக இந்த வாழ்க்கை..? இந்தத் தனிமையெல்லாம் தாய்மையாகும் ஒரு தருணத்துக்காக. யாரோ ஒரு கடைக்கோடி மனிதனுக்கு நான் தரப்போகும் சின்ன சிரிப்புக்காகவும் கண்ணீருக்காகவும்.

வட்டியும் முதலும் - 84
கலைதான் என்னை மனிதனாக்கியது. இந்த நெடுவழி தனிமையையெல்லாம் தாய்மையாக்கியது. 'வட்டியும் முதலும்’ படித்துவிட்டு அதிகாலையில் அலைபேசித் ததும்பும் குரல்கள் என் பொழுதுகளை அர்த்தப்படுத்திவிட்டன.

'இந்த வாரம் படித்துவிட்டு, பிரிந்திருந்த என் மனைவியிடம் பேசிவிட்டேன்’ என்ற குறுஞ்செய்தி என் தனிமைக் குட்டையை மானுடச் சமுத்திரமாக்கிவிட்டது. ஒருவர் வெகுநேரம் கை பற்றியபடி அன்பளித்த ரமணர் புகைப்படமும் சாவேஸின் ஆட்டோபயோகிராஃபி புத்தகமும் என் தருணத்தைப் பெருமிதமாக்கிவிட்டன.

நேற்றுகூட அதிகாலை 4 மணிக்கு எழுந்து 'ரே’ படம் பார்த்தேன். நள்ளிரவுக்கு மேலும் ரயில் நிலையங்களிலும் சாலைகளிலும் ஹேண்டிகேமுடன் திரிந்தேன். இப்படி நான் இருந்ததுஇல்லை. இப்போதுதான் தனிமையை, தன்னுணர்ச்சியைத் துறக்கும் நிலையை அடைந்திருக்கிறேன். என் தனிமையின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் கலையும் மனிதர்களும் நுழைந்து நுழைந்து நிறைக்கிறார்கள். நம்மை நாமே சரி செய்துகொண்டே நடக்கும்போது எல்லா முகங் களும் பட்டாம்பூச்சிகளாகிவிடுகின்றன. ஒவ்வொரு மனிதனிடமும் கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது என உணரும்போது, தனிமையாவது வெறுமை யாவது. பாண்டியாஸ் வாசலில் பீடா கடை போட்டு இருக்கும் மனிதர், ''சார்... ஜெயிக்கறது தோக்கறதெல்லாம் இல்ல சார்... நீ நெனச்சத கன்வே பண்ணியா... அதான் வாழ்க்க. அன்போ அரசியலோ... ஜனத்துக்கு கன்வே பண்ணிட்டா, நீ கலைஞன்!'' என்றார். இவரெல்லாம் ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார் எனத் தோன்றியது.

எனக்கு இப்படி வழியெல்லாம் ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் எழுத்தாக, பேச்சாக, சினிமாவாக வந்துகொண்டே இருக்கிறார்கள். பசியையும் காமத்தையும் உணரும் தருணத்தைப் போல இந்த மனிதர்களை உணர்ந்துகொண்டே இருக்கிறேன். 'மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்ற வார்த்தைகளைத்தான் வெவ்வேறு உதடுகளில் இருந்து வாங்கிக்கொண்டே இருக்கிறேன். புதிய இலக் கியத்தை, சினிமாவை, அரசியலை எளிய மனிதர்கள்தான் நமக்குப் பிச்சையிடுகிறார்கள் என்பதை முழுதாக அறிந்துகொண்டுவிட்டேன். இனி, எல்லோருக்குமான எனது உலகில் தனிமை என்பதே இல்லை. என் கலை உங்க ளைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மற்றவர்களைக் கண்ணாடியாக்கிப் பார்க்கும்போது நம் தனிமை முழுமையாகிவிடுகிறது. ஒரு சொல்லை, புன்னகையை, கண்ணீரை உங்களிடம் கொடுக்கவோ, பெறவோ அது உங்களைப் பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது சொல்கிறேன்... தனிமை என்பது ஓநாய் அல்ல... அது ஆட்டுக்குட்டி. நாம்தான் நல்ல மேய்ப்பன்!

- போட்டு வாங்குவோம்...